-யூசுப் என் யூனுஸ்-
நன்றி ஞாயிறு தினக்குரல் –29/06/2025

பக்கத்தில் இருந்து எட்டிப்பார்த்தது போல வரும் கதைகள்!
உளவுத்துறையினர் தன்னை ஏமாற்றி விட்டார்கள் – ட்ரம்ப்!
உலக அமைதிக்கு பாலஸ்தீன மக்களுக்கு தீர்வு தேவை!
உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை நீக்க முடியாது!
இஸ்ரேல் வெற்றிகளில் மெசாட்டின் தீர்க்கமான பங்களிப்பு!

போர் செய்தி சொல்லும் முன்னர் சமகாலத்து செய்திப் பறிமாற்றங்கள் பற்றி சமூகத்துக்கு சில செய்திகள் சொல்லிவைப்பது ஆரோக்கியமாக இருக்கும் என்று தோன்றுகின்றது. இந்த டிஜிடல் உலகத்தில் அச்சு ஊடகங்கள் பெரும் சவால்களை எதிர் நோக்கி வருவது அதனுடன் தொடர்புடைய எம்மைப்போன்றவர்கள் ஜீரணித்துத்தான் ஆக வேண்டும்.
எனவே நாம் ஒரு தகவலை மக்களுக்கு கொடுக்கும் முன்னர் சமூக ஊடகங்கள் அவற்றை துரிதமாகக் பறிமாற்றிவிடுகின்றன. எனவே நாம் கொடுக்கின்ற தகவல்களை ஏற்கெனவே மக்கள் பல சமூக ஊடகங்களில் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன செய்திகளாக இருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.
சமூக ஊடகங்கள் நேரடியாக நொடிக்கு நொடி செய்திகளை சொல்லிக் கொண்டிருந்தாலும் அதில் நிறையவே குழறுபடிகளும் நம்பகத் தன்மை இல்லாத தகவல்களும் இருப்பதால் அச்சு ஊடகங்களுக்கு இன்னும் ஏதோ ஒருவகையில் மதிப்பும் மரியாதையும் நம்பகத் தன்மையும் இருந்து வருகின்றது என்பது நமது கருத்து.
அதனைத் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்வதும் நமது தார்மீகக் கடமை. அத்துடன் சமூக ஊடகங்களில் செய்தி சொல்லுகின்றவர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் ஊடகத் தார்மீகத்தை மதிப்பவர்களாகவோ நம்பகத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைப்பவர்களோ அல்ல.
தமது மதம் இனம் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு என்பவற்றை மனதில் வைத்துத்தான் அவர்கள் பெரும்பாலும் செய்திகள் சொல்ல வருகின்றார்கள். பணத்துக்காக தகவல்களை சொல்கின்றவர்களும் நிறையவே இருக்கின்றார்கள். இதில் சம்பளம் என்றும் இன்னும் பல வரப்பிரசாதங்கள்- நோக்கங்களுக்கு வரும் செய்திகள் என்றும் அவை அமைக்கின்றன.
எனவே சமூக ஊடகங்களில் நடுநிலை என்பது மிக மிக அரிது. இந்த ஈரான்-இஸ்ரேல் போரில் வந்த செய்திகளை ஒரு முறை எண்ணிப்பாருங்கள் அவை எத்துணை அபாண்டமாக இருந்து? கையடக்கத் தொலைபேசி வைத்திருப்பவர்கள் அனைவரும் ஊடகக்காரன்-செய்தி கடத்துபவர்கள் என்ற ஒரு நிலை இன்று உலகில் காணப்படுவது இதற்குக் காரணம். அதற்காக அவர்கள் தரும் செய்திகளை நாம் முற்றும் முழுதாக கொச்சைப்படுத்திவிடவும் முடியாது. இப்போது தலைப்புக்கு வருவோம்.
![]()
நாம் போரும் சமாதானமும் என்ற தலைப்புடன் இந்த ஈரான்-இஸ்ரேல் போர் பற்றி பேச எதிர்பார்க்கின்றோம். இதற்கு இரண்டு காரணங்கள். நமக்கு நினைவில் இருக்கின்ற வரலாற்றுக் குறிப்புக்கள் சரியாக இருக்குமாக 1966ல் தயாரிக்கப்பட்ட ‘போரும் சமாதனம்’ என்ற சினிமாப் படம் தான் 1990 வரைக்கும் அதிகூடிய பணச் செலவில் உலகில் தயாரிக்கப்பட்ட சினிமாப் படம். இது ரஸ்யாவில் தயாரிக்கப்பட்டது. இதனை சேர்கய் போன்டர்சக் என்பவர் தயாரித்திருந்தார். ரஸ்யா, ஆங்கிலம், பிரேஞ். ஜேர்மன் மொழிகளில் வெளிவந்தது. எனவே என்னதான் சண்டைகள் வந்தாலும் மனிதன் சமாதானத்துக்கு வந்துதான் ஆக வேண்டும் என்பதுதான் நியதி.
அதே போன்றுதான் சில தினங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா சம்பந்தப்பட்ட போரும் இப்போது சமாதனத்துக்கு வந்திருக்கின்றது. இது நிலையானது என்று எவரும் எடுத்துக் கொள்ளவும் கூடாது. வரலாற்றுக் காலத்தில் மனிதன் வால் ஈட்டி அம்பு யானைப்படை குதிரைப்படை என்று வந்து அது தரைப்படை கடற்படை விமானப்படை என்று வளர்ச்சி பெற்றது இரண்டாம் உலகப்போரில் இதன் உச்சத்தையும் அழிவுகளையும் உலகம் பார்த்தது. ஆனால் இன்று இந்த போர் முறை முற்றிலும் மாற்றமடைந்திருக்கின்றது.

நேரடியாக சண்டைக்கே போகாது ஒரு மேசையில் இருந்து கொண்டு பட்டன்களை அழுத்துவதன் மூலம் போரின் போக்கையே மாற்றலாம் என்ற நிலை. இந்த நிலை இப்படியே தொடரும் என்று எதிர்பார்க்க முடியாது. காலமும் தொழிநுட்பமும் அதில் நிச்சயம் மாற்றங்களைக் கொண்டுவரும். இப்போது இந்த ஈரான்-இஸ்ரேல் போர் பற்றி நேரடியாகப் பார்ப்போம். மேலும் ஒரு காலத்தில் அமெரிக்க இஸ்ரேலுக்கு உற்ற நண்பனாக இருந்த இந்த ஈரான் அவர்களின் எதிரியாக எப்படி பிராந்திய அரசியலுக்குள் வருகின்றது என்பதனையும் நாம் இப்போது பார்ப்போம்.
ஈரானுக்கு மிகப் பெரிய வரலாற்றுப் பெருமையும் புகழ்ச்சிகளும் இருப்பதும் தெரிந்ததே. எனவேதான் ஈரானியத் தலைவர்கள் வரலாற்றைத் தெரிந்தவர்கள் எம்மைத் தொட்டிருக்க மாட்டார்கள் என்று அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கொடுத்ததுடன், சரண் அடைவு என்பது நமது அகரதியில் இல்லாத ஒரு வார்த்தை என்று சொல்லி இருந்ததையும் நாம் செய்திகளில் பார்க்க முடிந்தது.
1948 ல் மத்திய கிழக்கில் இஸ்ரேல் தோற்றம் பெற்ற நாள் முதல் அங்கு ஒரு ஒவ்வாமையும் கூடவே பிறந்தது. இதற்குப் பிரதான காரணம் அந்தப்பிராந்தியத்தில் அனைத்து நாடுகளும் போல அரபு-முஸ்லிம் நாடுகளாக இருக்கும் போது இஸ்லாமியர்கள் அல்லாத யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இஸ்ரேலியர்களாக இருப்பதுதான் இதற்கு பிரதான காரணம்.

ஆனால் இந்தப் பிராந்தியத்தில் யூதம் இஸ்லாம் கிருஸ்தவம் என்பன அண்ணன் தம்பி போல ஒரு உறவும் இருக்கின்றது. என்றாலும் இஸ்ரேல் தோற்றம் பெற்ற போதும், அதற்குப் பின்னரும் 1967, 1973 களில் பக்கத்தில் இருந்த அரபு நாடுகளுடன் குறிப்பாக எகிப்து ஜோர்டான் சிரியா லெபனான் என்பவற்றுடன் பல போர்களை நடாத்தி இருந்தது. அப்போது முழு அரபு-முஸ்லிம் நாடுகளும் ஓரணியில் இருந்தன. ஆனாலும் தனியாக நின்ற இஸ்ரேல் போரில் வெற்றிவாகை சூடியது.
இந்த இஸ்ரேலியர்கள் பிராந்தியத்தில் ஒரு சிறு எண்ணிக்கையாக இருந்தாலும் அவர்கள் திறமைசாலிகளாக இருந்ததானால் அனைத்துப் போர்களில் யூதர்களே வெற்றி பெற்று வந்தார்கள். அவர்களுக்கு தொடர்ச்சியாக அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் பக்கதுணையாக இருந்து வந்திருக்கின்றன.
இதனால் பக்கத்தில் இருந்த அரபு நாடுகள் இஸ்ரேலுக்கு அஞ்சிக் கொண்டே அங்கு வாழ வேண்டி வந்தது. அத்துடன் அவர்கள் சிறந்த அறிவாளிகளாகவும் போர் தளபாடங்களையும் உற்பத்தி செய்து தம்மை பிராந்தியத்தில் மட்டுமல்ல உலகிலே ஒரு பெரும் ஜாம்பவானாக வளர்த்துக் கொண்டார்கள்.
இதற்கு அவர்களுக்கு மொசாட் உளவு அமைப்பும் உறுதுணையாக இருந்தது. உலகம் பூராவிலும் மிகவும் பலம் வாய்ந்த அவர்களது ஏஜெண்டுகள் பல்லாயிரக்கணக்கானவர்கள் வேலை பார்க்கின்றார்கள். இவர்களில் யூதர்கள் அல்லாதவர்களும் அரபுகளும் அரபுகள் அல்லாத முஸ்லிம்களும் நிறையவே தொழில்பார்க்கின்றார்கள் என்பதுதான் சிறப்பம்சமாக இருக்கின்றது.
பிராந்தியத்தில் இருந்த அரபு நாடுகள் தமக்கு பெற்றோலில் இருந்து கிடைக்கின்ற வருமானத்தால் சொகுசு வாழ்க்கைக்குத் தம்மைப் பழக்கப்படுத்திக் கொண்டு மேற்கு நாடுகளின் உற்பத்திகளை இறக்குமதி செய்து வாழ்ந்து வந்தனர். இது அமெரிக்க போன்ற நாடுகளக்கு நல்ல சந்தையாகவும் வருமானத்தையும் கொடுத்துக் கொண்டு வந்தது. இஸ்ரேலை அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் ஆதரிப்பதால் அண்மைக்காலம் வரை அரபு நாடுகள் ரஸ்யா பக்கம் இருந்தது வந்தது.
அதனால் அவர்களுக்கு ரஸ்யா தொடர்ந்தும் ஆதரவு கொடுத்து வந்தது. பனிப்போர் காலத்தில் இது ஒரு சமநிலையாகத் தெரிந்தாலும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிராந்தியத்தில் இஸ்ரேலை சுற்றி இருந்த அரபு நாடுகளால் இஸ்ரேலை வெற்றி கொள்ள முடியவில்லை.
பின்னர் சோவியத் ஒண்றியம் பிளவுபட்டு அது பல தேசங்களாக பிரிந்துபோனாதால் முழு உலக தலைமைத்தவமும் முற்றும் முழுதாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது. அந்த சூழ்நிலையில் இஸ்ரேலைச் சுற்றி இருந்த அரபு நாடுகளிலும் அமெரிக்காவின் செல்வாக்கு கொடிகட்டிப் பறக்கத்துவங்கியது.
எனவேதான் அரபு-இஸ்ரேல் உடன்பாடு பலஸ்தீன-இஸ்ரேல் சமாதானம். (பலஸ்தீன் அரபாத் – இஸ்ரேல் பெகீன்) நோபல் பரிசுகள் என்பன அங்கு வழங்கப்பட்டது. உண்மையான சமாதனம் இன்று அங்கு காணப்படுகின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது. என்னதான் இஸ்ரரேலுடன் நல்லுறவுகள் என்று அரபுகள் வந்தாலும் ஒரு அடிமை வாழ்வுக்கு அரபு நாட்டுத் தலைவர்கள் அடிபணிந்து உடன்பாடுகள் போட்டாலும், இஸ்ரேல் அவர்கள் மீதான ஆக்கிரமிப்பையும் அடாவடித்தனங்களையும் கைவிடவில்லை.
இதனால் அங்கு ஒரு முரண்பாடு தொடர்ச்சியாக இருந்து வந்தது. இதற்கிடையில் அயாதுல்லாஹ் அலி கொமெய்னி தலைமையில் 1979ல் ஈரானில் புரட்சி வெடித்து. அதுவரை அமெரிக்காவின் கைப்பொம்மையாக இருந்த ரீஸா பலாவி குடும்பத்தினர் துரத்தி அடிக்கப்பட்டார்கள்.
அன்று முதல் பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு எதிரான ஒரு அரசாங்கம் அங்கு தோன்றியது. இதற்கு முன்னர் ஈராக்கில் சதாம் ஹூசைன் லிபியாவில் முவம்மர் கடாபி போன்றவர்கள் அமெரிக்காவுக்கு எதிரான போக்கைக் கடைப்பிடித்தாலும் பெரும்பாலும் அவர்கள் தங்களை அரபுத் தலைவர்கள் என்று காட்டிக் கொண்டார்கள். இவர்கள் வெரும் வாய்வீச்சுக்காரர்கள் மட்டுமே என்பதே எமது நிலைப்பாடு.
ஒரு சமயம் ஈரான்-ஈராக் போர் நடந்த போது சதாம் ஹூசைனுக்கு அமெரிக்கா பக்கதுணையாக வந்து பிராந்தியத்தில் தனக்கு எதிரான ஈரானை விரட்டியக்க அமெரிக்க முயன்றாலும் போரில் துவக்கத்தில் ஈரான் சில பின்னடைவுகளைச் சந்தித்தாலும். இறுதியில் அந்தப்போரில் அது வெற்றி பெற்றது.
வேடிக்கை என்னவென்றால் பிற்காலத்தில் சதாம் ஹூசைனுடன் அமெரிக்கா முரண்பட அவரை பதவியில் இருந்து விரட்டியக்க அமெரிக்கா நடவடிக்கைகளை மேற்கொண்டது. அன்றும் சதாம் மீது அணுவாயுதம் தயாரிப்புக் கதைதான் சொல்லப்பட்டது.
தனது ஆட்சி வீழச்சியடையப் போகின்றது என்று அறிந்நு கொண்ட சதாம் தன்னிடம் இருந்த பெரும் தொகையான ஆயுதங்களை-குறிப்பாக நூற்றுக் கணக்கான விமானங்களை ஈரானுக்கு பாதுகாப்புக்காக அனுப்பிவிட்டது.
பின்னர் அவை ஈரான் உடமையாக மாறியது. அரபுலக ஹீரோவாக தன்னைக் காட்டிக் கொண்டிருந்த சதாம் ஹூசைன் பொந்துக்குள் இருந்து எப்படி இழுத்து எடுக்கப்பட்டார் என்பது அரசியல் ஆர்வமுள்ளவர்கள் இன்றும் அந்தக் காட்சிகளை மறந்திருக்க மாட்டார்கள். அதேபோன்ற ஒரு நிலை லிபியா அதிபர் கடாபிக்கும் ஏற்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த அரசியல் பின்னணியில் ஒட்டு மொத்த அரபு நாடுகளையும் தமது கைப்பொம்மையாக வளைத்துப் போட்டுக் கொண்ட அமெரிக்காவுக்கு இஸ்லாமிய உலகில் தனிப் பெரும் எதிரி ஈரான் மட்டுமே என்ற நிலை. எனவே அங்கிருக்கிற ஆட்சியை மாற்றி தமக்கு சார்பான அரசாங்கம் ஒன்றை அமைத்துக் கொள்ள அமெரிக்க பில்லியன் கணக்கான டொலர்களை இதுவரை செலவு செய்தாலும் அது எதிர்பார்த்த அறுவடையை இதுவரை அவர்களுக்குக் கொடுக்கவில்லை. அமெரிக்காவின் இந்த இலக்கை அடைய இஸ்ரேல் அவர்களுக்குப் பக்க துணையாக செயல்பட்டுக் கொண்டு வருகின்றது.
இந்த நிலையில்தான் பலஸ்தீனப் பிரச்சினையில் இருந்து அரபு நாடுகள் ஒதுங்கி இருக்க ஈரான் தடியைக் கையில் எடுத்தது. குறிப்பாக சுன்னிகளை பெரும்பான்மையாகக் கொண்ட பாலஸ்தீன குழுவான ஹமாசுடன் ஈரான் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டது. அதே போன்று லெபனானில் ஹிஸ்புல்லாக்களையும் ஈரான் பலப்படுத்திக் கொண்டிருந்தது.
யேமனில் ஹவுதிகளும் இன்னும் டசன் கணக்கான சிறு குழுக்களும் ஈரானுக்குப் பக்கதுணையாக வந்தது. இதன் மூலம் இஸ்ரேல் ஏறக்குறைய ஈரானின் ஆயுதக்குழுக்களினால் சுற்றி வளைக்கப்பட்டு அச்சுறுத்தல்களுக்கு இலக்காகி இருந்தது என்பதனையும் நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
இந்த பின்னணியில்தான் அதிரடியாக பாலஸ்தீனப் போராளிகள் இஸ்ரேலுக்குள் புகுந்து 1200 பேரைக் கொன்று குவித்ததுடன் 250 பேர்வரையிலானவர்களை பிடித்துக் கொண்டும் சென்று பணயக்கைதிகளாக வைத்திருக்கின்றார்கள். இதன் பின்னணயில் ஈரான்தான் இருக்கின்றது என்பது இஸ்ரேல் வாதம்.
நடுநிலையாக செய்தி சொல்வதானால் அதில் எமக்கும் உடன்பாடு இருக்கின்றது. இதனால் இஸ்ரேல் பாலஸ்தீன் மீது பலி தீர்க்கும் படலத்தை துவங்கியது. பொது மக்கள் யார் போராட்டக்காரர்கள் என்று இனம் பிரிக்க முடியாத நிலையில் ஒட்டு மொத்த பாலஸ்தீன் மக்கள் மீதும் குண்டு மழை பொழியத் துவங்கியது இஸ்ரேல்.
இது முற்றிலும் ஒரு இன அழிப்பு குறிப்பாக முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குச் சமமானது என்பதிலும் மாற்றுக் கருத்துக்கள் நமக்கில்லை.
இதற்குச் சமாந்திரமாக தன்னை சுற்றி வளைத்திருக்கின்ற ஈரான் ஆதரவுக் குழுக்கள் மீது இஸ்ரேல் உத்தியோகப்பற்றற்ற ஒரு போரை துவங்கி இருந்தது. அதில் இஸ்ரேல் கனிசமான வெற்றிகளையும் பெற்றிருந்தது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஈரானுக்கும் ரஸ்யாவுக்கும் நெருக்கமான சீரியாவில் அமைந்திருந்த ஆபிஸ் அல் ஆசாத் அரசை அகற்றிவிட்டு அங்கு அமெரிக்காவின் கைப் பொம்மை அரசை அவர்கள் நிரூவிக் கொண்டார்கள்.
எனவே மேற்சொன்ன ஈரான் சார்பு குழுக்கள் அங்கு வலுவாக நின்றிருந்தால் இன்று நிலமை தனக்கு எவ்வளவு தூரம் ஆபத்தாக இருந்திருக்கும் என்பதானால்தான் இஸ்ரேல் இந்த நடவடிக்கைகளை முன் கூட்டியே மேற்கொண்டது.
நமது பார்வையில் ஈரான் மீதான ஒரு தாக்குதலுக்கான முன்னேற்பாடுகள்தான் இவை. இது பற்றி சில மாதங்களுக்கு முன்னர் நாம் சொல்லி இருந்தோம்.
தனக்கு எதிரான தாக்குதலுக்கு அமெரிக்கா-இஸ்ரேல் தயாராகி வருவதை ஈரானும் நன்கு அறிந்துதான் வைத்திருந்தது. இதனால்தான் ரஸ்யா சீனா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளுடன் அது வலுவான உடன்பாடுகளுக்கு வந்திருந்தது. இஸ்ரேல்-யூதர்கள் எவ்வளவு தூரம் திறமைசாலிகளோ அதற்கு சற்றும் சலைத்தவர்கள் அல்லர் என்ற நிலையில் செயலாற்றுபவர்கள்தான் இந்த ஈரானியர்கள். அவர்களது வரலாறும் அப்படிப்பட்டதுதான்.
ஈரான் உலக வரைபடத்தில் இருந்து இஸ்ரேலை அழித்துவிடுவோம் என்று இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமெரிக்காவுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது. மேலும் தனக்கு என்னதான் பொருளாதார தடைகளை விதித்திருந்தாலும் தனது அறிவாளிகளை தொழிநுட்ப வல்லுணர்களை வைத்து அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து வருவதுடன் நவீன ஆயுதங்களையும் கண்டுபிடித்து உற்பத்தி செய்து குவித்து வந்தது.
இதனை இஸ்ரேல் தெரிந்து வைத்திருந்தது. இன்னும் சில நாட்கள் விட்டு வைத்தால் ஈரான் அணுகுண்டுகளை உற்பத்தி செய்து விடும் என்று அஞ்சி அமெரிக்கா மூலம் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதலை நடத்த எதிர்பார்த்தது.
அமெரிக்க இதற்கு காலத்தை கடத்திக் கொண்டிருந்த நிலையில் இஸ்ரேல் ஈரான் மீது கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனித்து தாக்குதலை ஆரம்பித்தது. ஈரானும் அதற்குத் தயாராகத்தான் இருந்தது. இரு தரப்பினரும் கடும் மோதல்களில் ஈடுபட போரில் ஒரு சமபல நிலை. இதனை இஸ்ரேலும் அமெரிக்கவும் கூட சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இந்த பின்னணியியில் ரஸ்யா, சீனா, வடகொரியா என்பன தமது ஆதரவு முற்றும் முழுவதும் ஈரானுக்குத்தான் என்று அடித்துச் சொல்லிவிட்டது. சீனா தனது அதி நவீன உளவுக் கப்பல் இஸ்ரேலுக்கு மிகவும் அண்மையிலே கொண்டு போய் நிறுத்திவிட்டது.
இப்படி ஒரு நிலையை அமெரிக்க சற்றும் எதிர்பார்க்கவில்லை. அமெரிக்காவின் பொருளாதாரம் மிகவும் பலயீனமான நிலையில் இருக்கின்றது. எனவே ஒரு நீண்ட போருக்கு அவர்கள் தயாராக இல்லை.
இந்த நிலையில் செய்வது என்னவென்று அறியாது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனநிலை பாதிக்கப்பட் ஒருவனைப் போல முன்னுக்குப் பின் முரணாக வார்த்தைகளை ஊடகங்களில் பேசிக் கொண்டிருந்தார். சில நேரங்களில் தூசன வார்த்தைகளைக் கூட அவர் பேசியதும் தெரிந்தது.
மற்றும் ஒரு சந்தர்ப்பத்தில் ஈரானின் உண்மையான பலத்தை தனது உளவுத்துறை குறைவாக மதிபீடு செய்து தனக்குத் தகவல்களை வழங்கியதாகவும் ட்ரம்ப் குற்றம் சாட்டி இருந்ததுடன் சமாதானம் என்று வந்த போது ஈரான் போர் வல்லமையை ட்ரம்ப் புகழ்ந்து பாராட்டியும் இருந்தார். இப்படியான காட்சிகளை நாம் இதுவரை உலக வரலாற்றில் எங்குமே பார்த்திருக்கவில்லை.
நெருக்கடியான கட்டம் வந்து ஈரான் போரைத் தொடரும் நிலையில் உறுதியாக இருந்தபோது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஸ்யா அதிபர் புட்டினிடம் தொலைபேசியில் கெஞ்சித்தான் ஈரானை சமாதானத்துக்குக் கொண்டு வரவேண்டி இருந்தது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.?
வரலாற்றில் எப்போதும் சண்டைகள் நடைபெறுகின்ற இடத்தில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடுகள்-உடன்பாடுகள் என்ற அம்சங்களும்; அதற்காக வாசகங்கள் என பல விடயங்கள் கையொப்பம் சாட்சிகள் என்ற அம்சங்கள் இருக்க வேண்டும் ஆனால் இங்கு இவை எதுவுமே இல்லாமல் போர் நிறுத்தம் ஒரு அதிரடி – அவசரமாகத்தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.
இன்னும் சில நாட்களில் உடன்படிக்கை என்று சொல்லப்பட்டாலும் அற்கு வாய்ப்புக்கள் மிகவும் குறைவு எனவே போருக்கு முன்னைய ஆதங்கங்கள் வைராக்கியங்களுடன்தான் இது நகரும் என்று நாம் நம்புகின்றோம்.
உடன்பாடு என்று வரும் போது ஈரான் மிகப் பெரிய கோரிக்கைகளை முன்வைக்கும் இதில் தனது அணுச் செறிவூட்டல், பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு, இஸ்ரேலின் தொடர்ச்சியான சீண்டல்கள் என்று நிறையவே உத்தரவாதங்களை எதிர்பார்க்கும். அதே நேரம் இஸ்ரேல் அந்தக் கோரிக்கைகளுக்கு இணங்கும்-விட்டுக் கொடுக்கும் என்று நாம் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
எனவே பிராந்திய ஈரான்-இஸ்ரேல் குடித்தனம் கைபட்டாலும் குற்றம் கால்பட்டாலும் குற்றம் என்று வலிகளுடன்தான் பயணிக்க வேண்டி வரும்.
இப்போது அமெரிக்க தாக்குதல்கள் வெற்றி பெறவில்லை என்று அங்குள்ள போர் வல்லுணர்கள் சொல்லி இருப்பதாக நியூயோர் செய்தி சொல்லி இருக்கின்றது. அதே நேரம் தனக்கு வேண்டிய நேரத்தில் ஈரான் அணுப் பரீசோதனைகளை மேற் கொள்ளவும் அதிகமான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் அதே செய்தியில் சொல்லப்பட்டிருக்கின்றது.
இரண்டாம் உலப்போருக்குப் பின்னர் இதுவரை அமெரிக்க தளங்கள் மீது எவரும் குறிப்பாக ரஸ்யா சீனாகூட கை வைத்திருக்கவில்லை. ஆனால் மத்திய கிழக்கில்-கட்டாரில் மிகப் பெரிய படைத் தளத்தை ஈரான் தாக்கி இருக்கின்றது.
இதனால் ஈரான் ஆட்சியாளர்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை இது ஏற்படுத்தி இருக்கின்றது. அதே நேரம் அரபுலக ஆட்சியாளர்கள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பக்கச்சார்பாக இருந்தாலும் அங்குள்ள குடிமக்கள் ஈரானுக்கு சார்பாகவே இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
எப்படியும் இந்த போருக்குப் பின்னரான உலக ஒழுங்கு அமெரிக்காவுக்கு ஒரு சரிவைத்தான் கொண்டு வரும் அதன் தாக்கம் இஸ்ரேலிலும் தெரியும். அதே போன்று ரஸ்யா சீன போன்ற நாடுகளுக்கு இது சற்றுச் சாதகமாக அமைய இடமிருக்கின்றது.
பொருளாதார ரீதியில் இந்தப் போரும் சமாதானமும் இந்திய போன்ற நாடுகளுக்கு நல்லதொரு படிப்பினையையும் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு களத்தை சமைத்துக் கொடுத்திருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.





