புதிய உள்ளூராட்சி சபைகள்! சட்டம்! குழறுபடிகள்! பல்டிகள்!

-நஜீப் பின் கபூர்-

( நன்றி ஞாயிறு தினக்குரல் -29/06/2025)

கூட்டணி  மேயரை  நிராகரித்து வந்த சஜித்!

கூட்டாச்சி சபைகளுக்கு தொடர்ந்தும் ஆபத்து!

கூட்டாச்சிக்கு என்பிபி கூறுகின்ற நியாயங்கள்!

உறுப்பினர்கள் தற்கொலைக்கு முனைவார்களா?

*****

‘கொழும்பில் இரகசிய வாக்கு வேண்டாம்
என்ற சஜித் அணி கொத்மலையில்
இரகசிய வாக்காளிப்புத்தான் வேண்டும்
என்று குதர்க்கம் பண்ணி இருக்கின்றார்கள்.
ஐயா இது என்ன அரசியல் நாகரீகம்’

*****

Ready to Lead a United Opposition - Sajith

ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் வெற்றி பெற்றிருந்தார். அதன் பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வரலாற்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை என்பிபி. எட்டி இருந்தது. இதற்கிடையில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலில் அனைத்து வட்டாரங்களையும் போல என்பிபி வெற்றி பெற்றாலும் உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கு ஐம்பது என்று அமைந்தது.

இது இந்தத் தேர்தலின் ஒழுங்கு முறையில் வருகின்ற இயல்பு நிலை என்பது எமது வாதம். எனவேதான் கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் எல்பிட்டிய தேர்தல் முடிவுக்கு சமமான ஒரு முடிவுதான் உள்ளாட்சி தேர்தலிலும் வரும் என்பதையும் நாம் அன்றே சொல்லி இருந்தோம்.

அது நூறு சதவீதம் அப்படித்தான் அமைந்தும் இருந்தது. இப்போது சபைகளை அமைக்கின்ற போது இந்த 339 சபைகளில் என்பிபி. தொன்நூறு சதவீதத்துக்கும் கிட்டிய தொகை சபைகளில் முன்னணியில் வந்தது. ஆனால் நாம் முன்பு சொன்னது போல அதில் ஏறக்குறைய அரைவாசி சபைகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்ற நிலை.

இருந்தும் முதல் சுற்றில் என்பிபி. 155 வரையிலான சபைகளைத் தனியாக அமைக்க முடிந்தது. ஏனைய சபைகளை அமைக்கின்ற போது யாருக்கும் பெரும்பான்மை இல்லாத ஒரு நிலை. ஆனால் இந்த சபைகளை அமைக்க முயன்ற போது பல முரண்பாடுகளும் நகைச்சுவைகளையும் நாம் பார்க்க முடிந்தது.

இந்த உள்ளாட்சி சபைகளில் கொழும்பு நகரசபைக்கு தேசிய மட்டத்தில் ஒரு முக்கியத்துவம்- முதலிடம் இருப்பது அனைவரும் அறிந்த செய்தியே. இதில் ஆளும் தரப்பு மேயர் வேட்பாளர் ராய் பல்தசார் என்ற பறங்கிய சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் அனைத்து முதன்மை வேட்பாளர்களிலும் கவர்ச்சி மிக்கவராக இருந்தார்.

தேசிய மக்கள் சக்தி முதன்மை வேட்பாளர் அனீப் முஹம்மட் ஒரு வைத்திய நிபுணராகவும் முன்னாள் அமைச்சர் எம்.எச். முஹம்மத் என்பவர் உறவுக்காரராகவும் இருந்தார். அவரை வைத்து சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி பெரிய பில்டப் கொடுத்துக் கொண்டிருந்தது. ஆனால் மனிதன் தனது வட்டாரத்திலே என்பிபி. யின் மிகவும் இளம் யுவதியிடம் படுதோல்வி அடைந்து மண்கவ்வியதும் தெரிந்ததே.

தேர்தல் முடிந்தவுடன் இதுவரை அந்த மனிதனை எங்கும் கண்டு பிடிக்கமுடியவில்லை. ஆள் இப்போது ஸ்கெப்பாகி இருக்கின்றார். இது இந்த தேர்தலில் சஜித்துக்குக் கிடைத்த மிகப்பெரிய பின்னடைவு-மூக்குடைவாக அமைந்திருந்தது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளையும் கொழும்பில் சுருட்டிக் கொள்ளும் நோக்கில்தான் சஜித்தும் முஜியும் சேர்ந்து டாக்டரைக் களத்தில் இறக்கினார்கள். ஆனால் அது பலிக்கவில்லை. முஸ்லிம் சமூகத்தின் கணிசமான வாக்குகள் என்பிபி. க்கே கிடைத்தது அதனால்தான் அங்கு கணிசமான முஸ்லிம் வேட்பாளர்கள் வெற்றிபெற முடிந்தது.

கொழும்பில் உள்ள வாக்காளர்களை இன ரீதியாக பார்த்தால் பௌத்தர் -126259 (32ச.வீ) முஸ்லிம் -126050 (32 ச.வீ) இந்து -078902 (20ச.வீ) கிருஸ்தவர் -059377 (15 ச.வீ) ஏனைய -003945 (1 ச.வீ) பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்- 394533 என்று அமைகின்றது. (இப்படியான புள்ளிவிபரங்கள் அபூர்வமாகத்தான் வாசகர்களுக்கு கிடைக்கும்) உள்ளாட்சித் தேர்தலில் இன மற்றும் உறவு ரீதியான தாக்கங்கள் அதிகம் இருப்பதால் நாம் அதனை இங்கு பதிகின்றோம்.

தேர்தல் நடந்து முடிவு வந்தபோது என்பிபி-48 எஸ்ஜேபி-28  ஐதேக-12  என்று பிரதான கட்சிகளுக்கு உறுப்பினர்கள் தெரிவாகி இருந்தனர். கொழும்பு நகர சபையில் 117 உறுப்பிகள் என்ற நிலையில் 59 உறுப்பினர்கள் மேயராக வருபவருக்கு அவசியம். இந்த நேரத்தில் ஆளும் என்பிபி.யை மக்கள் நிராகரித்திது விட்டனர் என்று பிரதான எதிரணிகள் பரப்புரை செய்து கொண்டு வந்தனர். எனவே எதிரணி அனைத்தும் ஒன்றிணைந்து கொழும்பு நகரசபையைக் கைப்பற்ற வேண்டும்.

இது தான் மக்கள் எதிர்பார்ப்பு என்று பல மட்டங்களில் எதிரணியினர் பேச்சு வார்த்தைகளை நடாத்திக் கொண்டிருந்தனர். இதற்காக அங்கு பிரதான எதிரணியான சஜித் மற்றும் ரணில் தரப்புக்களுக்கிடையில் பேச்சு வார்த்தைகள். முதலில் சாகல ரத்தநாயக்க மேயர் என்று ஐதேக. பரப்புரைகளை செய்து கொண்டிருந்தது.

எடுத்த எடுப்பிலே இதனை சஜித் நிராகரிக்க கதை மாறியது. ஐதேக. கொழும்பு மாவட்ட முக்கியஸ்தர் முஜிபுர் ரஹ்மான் தடியை கையில் எடுத்து தனது மேயர் வேட்பாளர் ரீஸாவை முன்நிறுத்தி பெரும் பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் கட்சிக்குள் ஈகோ பிரச்சினை. முற்றுமொரு கொழும்பு மாவட்ட முக்கியஸ்தர் மரிக்கார் பகிரங்கமாகவே முஜீபர் நடவடிக்கை விமர்சிக்கத்துவங்கியதுடன் தன்னை ஓரம் கட்டி விட்டு  மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்றும் இது பற்றித் தனக்கு எதுவுமே தெரியாது என்று அவர் குறைபட்டுக் கொண்டார்.

அதே பாணியில் அர்ஷத டி சில்வாவும் பகிரங்கமாகவே குற்றம் சட்டிக் கொண்டிருந்தார். அத்துடன் சஜித் கட்சிக்குள்ளே பலர் முஜிபர் நடவடிக்கைகளை விமர்சித்துக் கொண்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. இவர்கள்  அந்த ஏற்பாடுகளுடன் முரண்பட்டார். கொண்டிருந்ததும் அனைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் ஆளும் என்பிபி. நிச்சயமாக நாம்தான் கொழும்பில் ஆட்சி அமைக்கும் என்று இது வயிற்றில் இருக்கும் சோறு போன்றது என்று நம்பிக்கையுடன் ஒரு கட்டத்தில் என்பிபி முக்கியஸ்தர் சுனில் வட்டகல அடித்துக் கூறிக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட நாளும் வந்து எதிர் அணியினர் 60 பேரின் கையெழுத்துடன் தமது மேயர் வேட்பாளரை ஆணையாளருக்கு கொடுத்து.

தேர்தல் தேவையில்லை என்றும் கடும் வாதப் பிரதிவாதம் நடக்க எதிரணி சிரேஸ்ட உறுப்பினர் ஒருவரே நேரடியாக இரகசிய வாக்கொடுப்பு நடாத்தி மேயரை தெரிவு செய்யுமாறு ஆளுனருக்கு பிரேரணை கொண்டுவர என்பிபி உறுப்பினர்கள் அந்தக் கோரிக்கைக்கு ஏகமனதான ஆதரவு கொடுக்க இரகசிய வாக்கொடுப்பு நடாது ராய் பல்தசார் 61 க்கு 54 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற 2 பேர் தமது வாக்குகளை இரத்துச் செய்திருந்தனர்.

இந்த நிலையில் ஆணையாளர் நடவடிக்கைகள் தொடர்ப்பில் தமது கடும் எதிரிப்பை எதிர் கட்சிகள் நடாத்திக் கொண்டிருந்தாலும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய போன்ற முக்கிஸ்தர்கள் ஆணையாளர் நடவடிக்கைகளில் எந்தத் தவறும் கிடையாது என்று அடித்துக் கூறிக்கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியானால் ஆணையாளருக்கு எதிராக நீதிமன்றம் போகலாமே என்று வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டாலும் அதனை இந்த எதிரணியினர் கண்டு கொள்ளவில்லை. அப்படிப்போனாலும் அது பூச்சாண்டி வேலையாகத்தான் இருக்கும். எனவே ஆவமானத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் ஒரு முயற்சிதான் இது என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பாக சஜித் பெரிய ஆர்வம் காட்டாத போதும் விமர்சனங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காகவும் முஜிபர் ரஹ்மானுக்கு அஞ்சியுமே அவர் இதற்கு ஒத்துழைப்பது போல நடந்து கொண்டார். கூட்டணி அமைத்து மேயர் வேட்பாளரை வென்றெடுத்தாலும் ரணிலின் தொந்தரவுக்கு தான் தொடர்ந்தும்  ஆளாகவேண்டி வரும் என்பதனை சஜித் அறிந்து வைத்திருக்கின்றார். இதில் நியாம் இருக்கின்றது என்பதுதான் நமது நிலைப்பாடும் கூட. அப்படி எதிரணி ஆட்சி அமைத்தாலும் அதனைத் தொடர்ந்து பாதுகாக்க முடியாது என்பதனை சஜித் கட்சி முக்கியஸ்தாகள் முகத்திற்கே அவர் கூறியும் இருந்தார்.

கொழும்புக் கதை அப்படி போக நாடுபூராவிலும் எஞ்சி இருந்த சபைகளை அமைக்கப் போன இடத்தில் சபைக்கு சபை முரண்பாடான நிகழ்வுகளும் சட்டச் சிக்கல்களும் பல்டிகளும் நடந்து வந்ததை தொடர்ச்சியாக நாம் கடந்த வாரம் பார்க்க முடிந்தது. அதன்படி உறுப்பினர்களின் பெரும்பான்மையை கண்டு கொள்வதற்கு ஆணையாளர்கள் மற்றும் கட்சிகள் முரண்பாடான நிலைப்பாடுகளை எடுத்திருந்ததும் தெரிந்திருந்தது.

‘கண்டவுனேத் கபரகொய்யத் தலகொய வெனவ’ -சாப்பிட வேண்டுமாக இருந்தால் கபரகொய்யாவும் உடும்பாகும், என்று சிங்கள பழமொழி இதற்கு மிகப் பொருத்தமான வார்த்தையாக நமக்குத் தெரிகின்றது. எனவே கட்சிகள் முதலில் ஒரு தெளிவான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும்.

சில இடங்களில் சஜித் அணி தனக்குள்ளேயே பல தவிசாளர் அல்லது மேயர் வேட்பாளர்களை சபைகளுக்கு களமிறக்கி இருந்தனர். இப்படி ஒரு நிலை சஜித் அணியில் தம்புள்ளையில் நடந்தது. இது தவிர உறுப்பினர்களும் கட்சி கொள்ளைகள் கட்டுப்பாடுகள் அறிவுறுத்தல்களுக்கு முரணான முடிவுகளை எடுத்த தமது விருப்பங்களை காட்சிப்படுத்தியதால் தனிப் பெரும்பானை இல்லாத பல சபைகளையும் என்பிபி. கைப்பற்ற முடிந்தது.

ஆனால் எந்த ஒரு என்பிபி. உறுப்பினரும் இப்படி கட்டுப்பாடுகளை மீறி நடந்து கொண்டதை நாம் நாட்டில் எங்கும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை கடுமையாகப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

அதே நேரம் சஜீத், ரணில், நாமல், திலித் போன்ற தலைவர்களின் உறுப்பினர்கள் என்பிபி சபைகளை அமைப்பதற்குத் தங்களது ஆதரவை வழங்கி தமது தலைவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கின்றார்கள். ஊழல் கட்சிக் காரர்களுடன் கூட்டணி போட மாட்டோம் என்று சொன்னீர்களே இப்போது மட்டும் என்ன பல இடங்களில் அவர்களின் துணையுடன்தானே சபைகளை அமைத்திருக்கின்றீர்கள் என்று கேட்டால் என்பிபி தலைவர்களைக் கேட்டால் கட்சிகளுடன் எமக்கு எந்த கூட்டும் கிடையாது.

உறுப்பினர்கள் தாமாக வந்து நாமக்கு ஆதரவு தருகின்ற போது நாம் இந்த தேர்தல் முறையில் உள்ள யதார்த்தத்தை புரிந்து கொண்டு அதற்காக ஏற்ற வைத்தயம் செய்ய வேண்டி இருக்கின்றது என்று கதை சொல்கின்றார்கள். அதிலும் நியாயங்கள் இருக்கத்தான் செய்கின்றது.

பொதுவாக இந்த தேர்தல் முறையில் நிறையவே குறைபாடுகள் இருப்பதை இப்பபோது ஆளும் தரப்பினரும் எதிரணியினரும் பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார்கள். இது ரணில்-தினேஸ் தேர்தல் முறை இதற்கு அன்று நாடாளுமன்றத்தில் இருந்த அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுத்து சட்டத்தை நிறைவேற்றி இருந்தது என்பதும் தெரிந்ததே. எதிரணியில் இருந்தவர்கள் அப்போது இதுதான் நல்ல தேர்தல் முறை என்று புகழாரம் சொன்னவர்கள். இன்று இது என்ன தேர்தல் முறை என்று ஏலனம் செய்கின்ற ஒரு நிலையும் இப்போது பரவலாக காணப்படுகின்றது.

தேசிய மட்டத்தில் பிரதான கட்சிகள் பெற்றுக் கொண்ட மொத்த உளூராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை பின்வருமாறு அமைக்கின்றது.

NPP-3927

SJB -1767

SLPP -742 

UNP-381

TAK –377

PP -300

JBW-226

என அமைந்திருக்கின்றது.

இன்னும் கல்முனை மா நகரசபைக்கு மட்டும் தேர்தல் நடக்க வேண்டி இருக்கின்றது. எல்லாமாக 341 உள்ளாட்சி சபைகள் நாட்டில் காணப்படுக்கின்றன.

தெற்கில் மட்டுமல்ல வடக்குக் கிழக்கிலும் கீரியும் பாம்புமாக இருந்தவர்களும் கூட்டணி சபைத்து சபைகளை நிறுவி இருக்கின்றார்கள். தமிழ் தரப்புக்கள் முஸ்லிம் தரப்புக்களுடனும் சிறுபான்மை சமூகங்கள் பேரிக் கட்சிகளுடனும் இணக்கப்பாட்டுக்கு வந்து உள்ளாட்சி சபைகளை அமைத்திருக்கின்றனர்.

ஒரு இனத்துரோகி என்று விமர்சிக்கப்பட்ட டக்லஸ் தேவானந்தவுடன் தமிழரசுக் கட்சி கூட்டணி அமைத்து சபைகளை அமைத்தது தொடர்பாக கடும் விமர்சனங்கள் அங்கு காணப்படுக்கின்றன. இதில் சிரிதரனுக்கும் சுமந்திரனுக்குமிடையில் ஒரு பனிப்போரே இப்போதும் நடந்து வருகின்றது. இந்த எதிரும் புதிருமான கூட்டணிகள் எவ்வளவு காலத்துக்குத்தான் குடித்தனம் நடத்தப் போகின்றார்களோ தெரியாது.

பல உறுப்பினர் பணத்துக்கு விலை போய் இருப்பதாவும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. ஆனால் கட்சி கட்டுப்பாட்டை மீறியவர்கள் நாங்கள் புனிதமான உள்ளாட்சி சபையை உருவாக்கத்தான் இந்த பல்டியை அடித்தோம் என்று வேறு சமாதானம் கூறிக் கொண்டிருக்கின்றார்கள்.

அப்படியானால் ஒவ்வொரு வரவு செலவுத் திட்டங்களையும் சபையில் நிறைவேற்றிக் கொள்ள இவர்களுக்கு காசு அல்லது சலுகைகளைக் கொடுக்க வேண்டி இருக்கும். அப்படி ஒரு குழப்ப நிலை தொடருமானால் அந்த சபைகளை ஆணையாளர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கும் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. இதும் ஆளும் தரப்புக்கு வாய்ப்பாகவே அமையும்.

எனவே உறுப்பினர்கள் தமது பதவிகளை பறிகொடுக்கின்ற தற்கொலை முயற்ச்சிகளில் இறங்குவார்கள் என்று நாம் நம்பவில்லை. எதிரணிகள் ஒன்ற சேர்ந்து அமைந்திருக்கின்ற கூட்டாச்சி சபைகளில் ஆயுள் தொடர்ப்பில் நிச்சமற்றநிலையும் நெருக்கடிகளும் தொடரத்தான் போகின்றது.

Previous Story

ஈரான்:துரோகிகளுக்கு தூக்கு!

Next Story

මාලිමා ඇමති අතින් සම්මාන ගන්න වරම් නැත්තෙ ඇයි?