சுமந்திரன் மகனின் திருமணத்தில் வெடித்தது சர்ச்சை!

திருமண பந்தம் என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விவகாரம் என்கின்ற போதிலும், பிரபல்யங்களின் திருமணம் பொதுத் தளத்தின் தவிர்க்கமுடியாத பேசுபொருளாகிவிடுகின்றன. பிரித்தானிய மகாராணியின் புதல்வரின், பேரனின் திருமணங்கள் பற்றி உலகமே பேசிக்கொண்டது ஒரு உதாரணம்.

த.தே.கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது மருமகளாக ஒரு சிங்களப் பெண்ணை ஏற்றுக்கொண்டது அவர் தனது மகனின் அன்புக்கு கொடுத்த ஒரு கௌரவமாகவும், தமிழ் சிங்கள நல்லிணக்கத்தின் ஒரு வெளிப்பாடாகவும் சில தரப்புக்களால் பார்க்கப்பட்டுவருகின்ற அதேவேளை, அவரின் அந்தச் செயல் பொதுத்தளத்தில் ஒரு சிலரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வருகின்றது.

குறிப்பாக சுமந்திரனின் நெருங்கிய நன்பரும், முன்நாள் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரும், இலங்கை ஊடகவியலாளர் ஒன்றியத்தின் முன்நாள் தலைவரும், சிரேஸ்ட ஊடகவியலாளருமான இரா.துரைரெத்தினம் அவர்கள் அந்த திருமணம் தொடர்பாக வெளியிட்ட கருத்துக்கள் தற்பொழுது சமூக ஊடகப்பரப்பின் விவாதப் பொருளாக மாறிவிட்டுள்ளது.

இதுபோன்ற திருமணங்களை இனக் கலப்பின் ஒரு கருவியாக அடையாளப்படுத்தி திரு. துரைரெத்தினம் முகநூல் பதிவிட்டிருந்தார்.

தமிழர்கள் சிங்களவர்களையோ முஸ்லீம்களையோ திருமணம் செய்வது என்ன பிழை. திருமணம் என்பது அவர்களது விருப்பம் சார்ந்தது என வாதிடலாம். எப்போதும் பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்துடன் கலக்கும் போது சிறுபான்மை இனம் காலப்போக்கில் அழிந்து போய்விடும். இது பல நாடுகளில் சமூகங்களில் நடந்திருக்கிறது மூத்த ஊடகவியலாளர் இரா.துரைரெட்னம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து அவர் குறிப்பிடுகையில்,

மொழிகள் கூட அழிந்திருக்கிறது. உதாரணமாக சுவிட்சர்லாந்தில் நான்கு மொழிகள் பேசும் சமூகம் இருந்தது. இப்போதும் நான்கு மொழிகள் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கின்றன. ஆனால் ஜேர்மன், பிரென்ஸ், இத்தாலி, றொமானிஸ், மொழிகள் உத்தியோக பூர்வ மொழிகளாக இருக்கின்ற போதிலும் றோமானிஸ் பேச்சுவழக்கில் இப்போது இல்லை.

ஜேர்மன் மொழி பேசுபவர்களாக றோமானிஸ் மொழி பேசுபவர்கள் மாறிவிட்டார்கள். சிறுபான்மை இனம் பெரும்பான்மை இனத்துடன் கலக்கும் போது சிறுபான்மை இனம் அழிந்து போய்விடும். உதாரணமாக தமிழ் மக்களின் தலைவர் என சிலர் கொண்டாடிய விக்னேஸ்வரனின் இரு பிள்ளைகளும் சிங்களவர்களை தான் திருமணம் முடித்தார்கள்.

விக்னேஸ்வரின் பேரப்பிள்ளைகள் தமிழ் தெரியாத சிங்களவர்களாகத்தான் இருக்கிறார்கள். அது போல சுமந்திரனின் மகன் சிங்களத்தியை திருமணம் முடித்ததாக செய்திகள் வந்திருக்கிறது.

அவர்களின் அடுத்த சந்ததி தமிழ் தெரியாத சிங்களவர்களாகத்தான் இருப்பார்கள். இரு இனங்கள் வாழும் ஒரு நாட்டில் பெரும்பான்மையுடன் சிறுபான்மையாக இருக்கும் சமூகம் கலந்தால் சிறுபான்மை சமூகத்தின் மொழி கலாச்சாரம் அனைத்தும் இழந்து சிங்கள பெரும்பான்மை ஆதிக்கம் செலுத்தும்.

தமிழ் இன அழிப்புக்கு துணை போகும் விக்னேஸ்வரன் சுமந்திரன் போன்றவர்கள் எப்படி தமிழ் இனத்தின் தலைவர்களாக இருக்க முடியும்? தமிழ் இன அழிப்பை செய்யும் விக்னேஸ்வரன், சுமந்திரன் வாழ்க என தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். -jn.

Previous Story

2021:உலக சுற்றுலா அழகியாக  நலிஷா பானு

Next Story

சீனாவை தடுக்க இலங்கைக்கு 10 பில்லியன் கடன் கொடுங்கள்!