ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் – சௌதி பயணத்தை பாதியில் முடித்த மோதி

ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் காரணமாக, சௌதி அரேபியா பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு பிரதமர் மோதி அவசரஅவசரமாக டெல்லி திரும்பியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் நடந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகளுடன் அவர் உடனடியாக முக்கிய ஆலோசனை நடத்தினார் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்ரல் 22) தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. ஆயுததாரிகள் நடத்திய இந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்தனர். மருத்துவக் குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.

இந்த தீவிரவாத தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில், டாக்டர் பரமேஸ்வரம் மற்றும் 83 வயது சந்துரு ஆகியோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனந்த்நாக் மருத்துவமனையில் அனந்த்நாக் சிகிச்சை பெற்று வருகிறார். இது தவிர சம்பவ இடத்திலிருந்த 57 வயது பாலச்சந்திராவுக்கு மன அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும் முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு காஷ்மீர்

சம்பவ இடத்திற்கு ராணுவமும் காவல்துறையும் அனுப்பப்பட்டுள்ளதாக பிராந்தியத்தின் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா ​​தெரிவித்தார்.

“இது சுற்றுலாப் பயணிகள் மீதான கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல். இதற்கு காரணமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்”, என்றும் மனோஜ் சின்ஹா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

உயிரிழப்புகள் குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும் காயமடைந்தவர்களில் சிலர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பிபிசி செய்தியாளர் மாஜித் ஜஹாங்கீர் ஜம்மு காஷ்மீரில் இருந்து தெரிவிக்கின்றார்.

திடீர் துப்பாக்கிச் சூடு காரணமாக, குழப்பம் ஏற்பட்டதாகவும், அனைவரும் அழுது கூச்சலிட்டபடி அங்கும் இங்கும் ஓடத் தொடங்கினர் என்று குஜராத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுலாப் பயணி பிபிசியிடம் தெரிவித்தார்.

பிரதமர் மோதி அவசர ஆலோசனை

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் தீவிரவாத தாக்குதல்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோதி நடத்திய ஆலோசனை கூட்டம்

பிரதமர் மோதி 2 நாள் அரசு முறை பயணமாக சௌதி அரேபியா நேற்று (ஏப்ரல் 22) சென்றிருந்தார். இன்றிரவு (ஏப்ரல் 23) அவர் டெல்லி திரும்புவதாக இருந்தது. ஆனால் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக தனது சௌதி பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு, இன்று காலை டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோதி.

அதன் பின்னர், ஜம்மு காஷ்மீர் தாக்குதல் தொடர்பான விவரங்களை அதிகாரிகளிடம் பிரதமர் மோதி கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் என ஏஎன்ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்

மருத்துவமனையில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது

பஹல்காமில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலை உச்சியில் உள்ள புல்வெளியான பைசரனில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பருவம் உச்சத்தில் இருக்கும் சமயத்தில் இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

பஹல்காம் பகுதி, சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது. அதன் பசுமையான புல்வெளிகள் மற்றும் ஏரிகள் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகிறார்கள்

“இந்தியாவின் சுவிட்சர்லாந்து” என்று பஹல்காம் அழைக்கப்படுகின்றது.

இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் 1989 ஆம் ஆண்டு முதல் நீண்டகாலமாக கிளர்ச்சி நடந்து வருகிறது. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் வன்முறை குறைந்துள்ளது.

ஊடகங்களில் வெளியான வீடியோ காட்சிகளில், தாக்குதல் நடந்த இடத்தை நோக்கி இந்திய படையினர் ஓடுவதைக் காட்டுகின்றன. வேறொரு வீடியோவில், துப்பாக்கி ஏந்தியவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களை மட்டும் குறிவைத்து தாக்குவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுவதை கேட்க முடிந்தது.

டெல்லியிலும் பலத்த பாதுகாப்பு

ஜம்மு காஷ்மீர்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனமான பிடிஐ தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு டெல்லி போலீசார் நகரம் முழுவதும் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர்.

குறிப்பாக சுற்றுலா தலங்கள் மற்றும் நகர எல்லைகளில், சந்தேகத்திற்கிடமான எந்தவொரு செயலையும் உடனடியாகக் கண்டறியும் வகையில் கடுமையான சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

மறுபுறம், ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் பணியாளர்கள் பல்வேறு இடங்களில் வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர், மேலும் சாலைகளில் விரிவான தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் இருந்து இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான போராட்டங்களின் படங்கள் மற்றும் காணொளிகள் வெளியாகி வருகின்றன. பஹல்காமில் உள்ள சிலரும் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்று, தாக்குதல் குறித்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரதமர் மோதி என்ன சொன்னார்?

காஷ்மீர்

இந்த சம்பவம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

“இந்த கொடூரமான சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்’, என்று குறிப்பிட்ட அவர், “இந்த பயங்கரவாத தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு நான் இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய நான் பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்க வழிவகை செய்யப்படும்”, என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

டிரம்ப் கூறியது என்ன?

டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் மிகவும் கவலையளிக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மாவுக்காகவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோதிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும், ஆழ்ந்த அனுதாபங்களும் உண்டு.” என்று கூறியுள்ளார்.

புதின் கூறியது என்ன?

புதின்

ஜம்மு காஷ்மீர், பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபர் புதின், “இந்த கொடூரமான குற்றத்தை நியாயப்படுத்த முடியாது. குற்றவாளிகள் தக்க தண்டனையை எதிர்கொள்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில், இந்தியாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த தயார் நிலையில் உள்ளோம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.

‘நான் அதிர்ச்சியடைந்தேன்’ – முதல்வர் உமர் அப்துல்லா

காஷ்மீர்

இந்த சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.

“நான் அதிர்ச்சியடைந்தேன். இறந்தவர்களின் எண்ணிக்கை பற்றி உறுதியாக தெரியவில்லை. அங்குள்ள நிலைமை பற்றி தெளிவாக தெரிய வந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் இது மிகப் பெரியது”, என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சர் கூறியதென்ன?

அமித்ஷா

“பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீதான பயங்கரவாதத் தாக்குதலால் நான் வருத்தமடைந்தேன். இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்”, என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்ப முடியாது என்றும், முழு பலத்துடன் பதிலடி கொடுக்கப்படும் என்றும் அமித் ஷா கூறியுள்ளார்.

“இந்த சம்பவம் குறித்து வீடியோ அழைப்பு மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரதமர் மோதி ஒரு கூட்டம் நடத்த இருக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜம்மு காஷ்மீர்

அனந்த்நாக்கில் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரும் அரசு மருத்துவமனைக்கு வெளியே பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்

“பாதிக்கப்பட்டோரில் தமிழர்கள்”

காஷ்மீர்

“அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல், விலைமதிப்பற்ற பல உயிர்களை பலியாக்கியது. இது மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு காட்டுமிராண்டித்தனமான செயலாகும். இது மிகவும் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

பாதிக்கப்பட்டவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடங்குவர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். ஜம்மு காஷ்மீர் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்யுமாறு டெல்லியில் உள்ள உள்ளுறை ஆணையருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்”, என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை பாதுகாக்கும் வகையில் முதற்கட்டமாக புது டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு உதவி மையம் தொடங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த உதவி மையத்தை தொடர்புகொள்ள தமிழ்நாடு அரசு சார்பாக 011-24193300, 9289516712 என்ற உதவி எண்களும் வழங்கப்பட்டுள்ளன.

புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் ஆட்சியரான அப்தாப் ரசூலை, ஜம்மு-காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதிக்கு நேரடியாக சென்று ஒருங்கிணைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளவும் தேவையான மருத்துவ வசதிகளை வழங்கவும் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

“பஹல்காமில் நடந்த இந்த கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த வகையான வன்முறை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வரலாற்று ரீதியாக, காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளை அன்புடன் வரவேற்றுள்ளது. ஆனால் இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மிகவும் கவலையளிக்கின்றன”, என்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெஹபூபா முஃப்தி இந்த தாக்குதலை கண்டித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் இறந்தது மற்றும் பலர் காயமடைந்தது பற்றிய செய்திகள் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் மனதை உடைக்கிறது” என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

Previous Story

டேன் பிரியசாத் உயிரிழப்பு உறுதி- பொலிஸார்

Next Story

டேன் பிரியசாத் கொலை வெளியாகும் சர்ச்சைகள்!