அமெரிக்காவுக்கு எதிராக பெரிய பிளான்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக சவுதி அரேபியாவில் 57 இஸ்லாமிய நாடுகள் ஒன்றாக இணைந்து அவசர மீட்டிங் நடத்தி வருவது சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அமெரிக்கா மற்றும் இஸ்லாமிய நாடுகள் இடையே கடும் மோதல் ஏற்பட்டு 3ம் உலகப்போர் வெடிக்கிறதா? என்ற பெரிய அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த அவசர மீட்டிங் ஏன்? இஸ்லாமிய நாடுகளின் திட்டம் என்ன? என்பது பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம். பாலஸ்தீனத்தின் காசா மீது இஸ்ரேல் போர் புரிந்து வந்தது. 15 மாதம் இந்த போர் நடந்தது.
தற்போது காசாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி தற்காலிகமாக போர் நிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் கடந்த பிப்ரவரி 4ம் தேதி வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். அப்போது டொனால்ட் டிரம்ப், ‛‛காசா அழிவின் விளிம்பில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்களை மீண்டும் மீண்டும் அங்கேயே வாழ வைக்க முடியாது. இதனால் காசாவை அமெரிக்கா கைப்பற்றி மறுகட்டமைப்பு செய்யும்.
வீடுகள் கட்டி கொடுத்து தொழில் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படும். இதற்காக காசாவில் இருப்பவர்கள் வெளியேற வேண்டும். அவர்களை ஜோர்டான், எகிப்து ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறினார். இதற்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
காசா மக்களை வெளியேற்றாமல் போரில் சேதமடைந்த கட்டட கழிவுகளை அகற்றி மறுகட்டமைப்பு செய்ய வேண்டும் என்று கூறின. அதுமட்டுமின்றி காசா மக்களை வெளியேற்றுவது என்பது இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா செயல்படும் வகையில் உள்ளது.
இதனால் இதனை கைவிட வேண்டும் என்று கூறின. ஆனால் டிரம்ப் செவிசாய்க்கவில்லை. காசா மக்களை வெளியேற்றி அந்த நகரை கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளார். இதனால் அமெரிக்காவுக்கு பதில் இஸ்லாமிய நாடுகளே காசாவை மறுகட்டமைப்பு செய்ய திட்டமிட்டு வருகின்றன.
அதன்படி சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் ஓஐசி எனும் இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு (Organistaion of Islamic cooperation) சார்பில் அவசர மீட்டிங் நடந்தது.
இந்த கூட்டமைப்பில் மொத்தம் 57 இஸ்லாமிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளை சேர்ந்த முக்கிய அமைச்சர்கள் இந்த மீட்டிங்கில் பங்கேற்றனர். மீட்டிங்கில் காசாவை அமெரிக்காவுக்கு பதில் இஸ்லாமிய நாடுகளே மறுகட்டமைப்பு செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும் காசா மறு உருவாக்கத்துக்கு எகிப்து முன்வைத்த திட்டம் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதுபற்றி எகிப்து வெளியுறவுத்துறை அமைச்சர் பத்ர் அப்தெலெட்டி கூறுகையில் ‛‛காசா விவகாரம் தொடர்பாக இஸ்லாமிய ஒத்துழைப்பு கூட்டமைப்பு சார்பில் அவசர அமைச்சரவை கூட்டம் நடந்தது.
இதில் காசாவை மறுகட்டமைப்பு செய்வதற்கான எகிப்து திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் காசாவை மறுகட்டமைப்பு செய்வதற்கான எகிப்து நாட்டின் திட்டம் என்பது இப்போது அரபு – இஸ்லாமிய நாடுகளின் திட்டமாக மாறி உள்ளது. இதுதொடர்பாக இன்னும் பிற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதனை சர்வதேச திட்டமாக மாற்றுவோம்” என்றார்.
காசாவை மறுகட்டமைப்பு செய்வதற்கான எகிப்தின் திட்டம் என்ன? என்ற கேள்வி வரலாம். அதற்கு விடை என்னவென்றால் தற்போதைய ஜெட்டா கூட்டத்துக்கு முன்பாக கடந்த 4ம் தேதி எகிப்து தலைநகர் கெய்ரோவில் இஸ்லாமிய-அரபு நாடுகளின் அவசர மீட்டிங் நடந்தது.
இதில் சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்பட பல்வேறு அரபு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி தான் இந்த மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தார்.
இந்த மீட்டிங்கில், ‛‛காசாவை 53 பில்லியன் அமெரிக்க டாலர் (IN.RS மதிப்பில் 4.61 லட்சம் கோடி, SR.RS மதிப்பில் 15.62 லட்சம் கோடி ) செலவில் 2030ம் ஆண்டுக்குள் மறுகட்டமைப்பு செய்ய வேண்டும்.
காசா மக்களை வெளியேற்றாமல் கட்டிட கழிவுகளை அகற்றி வீடுகள் கட்டி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி காசாவில் கடற்கரை உள்ளது. இதனால் மீன்பிடி துறைமுகம், வணிக துறைமுகம், விமான நிலையம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
இதனை அமெரிக்கா ஏற்றுக்கொண்டு உதவி செய்ய வேண்டும்” என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு காசாவின் மறுகட்டமைப்புக்கு அறக்கட்டளை உருவாக்கவும், அந்த அறக்கட்டளைக்கு இஸ்லாமிய நாடுகள் மட்டுமின்றி பிற நாடுகளிடம் இருந்து நிதி திரட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும் எகிப்து முன்மொழிந்த இந்த திட்டத்தை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் புறக்கணித்துள்ளன. இந்த திட்டத்துக்கு இருநாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இப்படியான சூழலில் தான் காசா மறுகட்டமைப்புக்கு எகிப்தின் திட்டத்துக்கு 57 இஸ்லாமிய நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்த திட்டத்தை மீண்டும் அமெரிக்க நிராகரிக்கலாம். அதேவேளையில் காசா மக்களை வெளியேற்றுவதில் இஸ்லாமிய நாடுகள் விடாது.
இதனால் இஸ்லாமிய நாடுகளுக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுக்கும் இடையே கடும் மோதல் உருவாகி 3ம் உலகப்போர் வருகிறதா? என்ற பெரிய அச்சம் எழுந்துள்ளது. ஏனென்றால் காசா விவகாரத்தில் தொடக்கம் முதலே பாலஸ்தீனத்தின் பக்கம் தான் இஸ்லாமிய நாடுகள் உள்ளன.
பாலஸ்தீனத்தின் ஒரு பகுதி தான் காசா என்பதில் உறுதியாக உள்ளனர். அதுமட்டுமின்றி பாலஸ்தீனத்தை இன்னும் சில நாடுகள் தேசமாக ஏற்கவில்லை. ஒரு பிரதேசம் என்ற அளவில் மட்டுமே வைத்துள்ளனர்.
இதற்கும் இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனத்தை நாடாக அறிவிக்க வேண்டும் என்று கூறி வருகின்றன. அதுமட்டுமின்றி கடந்த 1948ம் ஆண்டில் இஸ்ரேல் அதிகாரப்பூர்வ நாடாக அறிவிக்கப்பட்டது. அப்போது முதல் பாலஸ்தீனத்துக்கும், இஸ்ரேலுக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இருநாடுகள் இடையே போர் கூட ஏற்பட்டுள்ளது.
மேலும் இஸ்ரேல் என்பது யூதர்களின் நாடாக உள்ளது. பாலஸ்தீனம் என்பது இஸ்லாமியர்களின் நாடாக உள்ளது. இஸ்ரேல், பாலஸ்தீனம் இருக்கும் இடம் மத்திய கிழக்கு பிராந்தியமாகும். இந்த பிராந்தியத்தில் சுற்றி சுற்றி இஸ்லாமிய நாடுகள் தான் உள்ளன.
இஸ்ரேல் மட்டுமே தனியாக யூத நாடாக உள்ளது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் செல்வாக்கு உள்ளது. இருநாடுகளும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இதனால் காசா விவகாரத்தில் பிரச்சனை வரும் பட்சத்தில் இஸ்லாமிய நாடுகள் அனைத்து ஓரணியிலும், அமெரிக்கா-இஸ்ரேல் இன்னொரு அ்ணியாகவும் இருக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.
அதோடு இருதரப்புக்கும் இடையே ஏதேனும் மோதல் என்பது பயங்கரமானதாக இருக்கும் என்கின்றனர் சர்வதேச அரசியல் நோக்கர்கள். இதனால் காசா விவகாரம் சர்வதேச அரசியலில் 3ம் உலகப்போருக்கு அச்சாரமாக இருக்கிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.