-நஜீப் பின் கபூர்-
நன்றி: 16.02.2025 ஞாயிறு தினக்குரல்
கருத்துக்களும் கணிப்பீடுகளும் மட்டுமல்ல ஒரு தனிமனிதன் மீதான நல்லெண்ணங்கள் கூட ஒரு நொடிப் பொழுதில் மாறுகின்றன. ஆண்டாண்டு காலம் நீடித்த நட்புக்கூட அதே வேகத்தில் சிதைந்து போன கதைகள்-வரலாறுகள் பற்றி நாம் கேட்டும் பார்த்தும் வந்திருக்கின்றோம்.
தமது விருப்பங்களில் பேரில் பதவிக்குக் கொண்டு வந்த நிருவாகிகள் நிலமைகளும் சலிப்புத்தட்டி விடுவதுண்டு. இன்று மக்களின் அதிகூடிய நல்லெண்ணத்தில் தெரிவாகி இருக்கின்ற அரசாங்கத்தின் மீதான ஒரு கருத்துக் கணிப்பு மிக விரைவில் நடக்க இருக்கின்றது. இதனை நாம் ஜனாதிபதி அனுர குமார மீதான ஒரு கணிப்பாகவும் எடுத்துக் கொள்ள முடியும்.
கடவுளால் கூட மனிதர்களை ஒரு போதும் திருப்திப்படுத்த முடியாது என்பது நாமக்குத் தெரிந்த கதைதான். அதற்கான உதாரணங்களை நாம் இங்கு சுட்டிக்காட்ட தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி கோட்டா வந்த வேகமும் அவர் தலைதெரிக்கத் தப்பியோடிய வேகமும் நமக்கு இப்போது கண்முன்னே தெரிகின்றது.
பந்து சுவரில் பட்டுத் தெறித்த வேகம் என்று கூட இதனை நாம் எடுத்துக் கொள்ள முடியும். அதே போன்று மிகப் பெரிய மக்கள் ஆணையுடன் அதிகாரக் கதிரையில் அமர்ந்திருக்கின்ற அனுர தலைமையிலான அரசு மீதான மக்கள் கருத்தை அறிகின்ற மதிப்பீடாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அமைய இருக்கின்றன.
விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த இந்த உள்ளாட்சித் தேர்தலை ரணில் நடத்தாமல் இருப்பதற்கு தன்னாலான அனைத்துக் காரியங்கயையும் செய்தார். அதற்கான அவர் தனது உச்ச அதிகாரத்தை சட்ட விரோதமாகப் பாவித்தை நீதி மன்றம் உறுதி செய்திருக்கின்றது. இன்று அந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை நீதி மன்றம் கட்டாயப்படுத்தி தீர்ப்புச் சொல்லி இருக்கின்றது.
அந்தத் தேர்தலுக்கு வேட்புமனுத் தாக்கல் செய்யத பெரும் எண்ணிக்கையானோர் இன்று கட்சி தாவி இருக்கின்றார்கள். இன்னும் டசன் கணக்கானவர்கள் மரணித்திருக்கின்றார்கள.; பல நூற்றுக்கணக்கானவர்கள் வெளி நாட்டுக்குப் போய் இருக்கின்றார்கள். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நாடாளுமன்றத்துக்கும் வந்து விட்டார்கள்.
எனவே முன்னய வேட்பு மனுவுக்குத் தேர்தல் நடாத்துவது எந்தவகையிலும் சாத்தியம் இல்லை. அதனால் அனைத்துக் கட்சிகளும் புதிதாக வேட்பு மனுவைக் கோரி தேர்தலுக்குச் செல்ல தமது விருப்பங்களைத் தெரிவிக்கின்றன.
அதனால் நாடாளுமன்றத்தில் ஒரு பிரேரணை மூலம் புதிய வேட்பு மனுக்களுடன் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்ய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதற்கு நீதி மன்றம் தனது ஒப்புதலை வழங்க வேண்டி இருக்கின்றது. அது சபாநாயகருக்குக் கிடைத்துவிட்டது இல்லை என்ற குழப்பங்களும் இருக்கின்றன.
ஏற்கெனவே தேர்தல் திணைக்களம் வேட்பு மனுக்களுக்குப் பெற்ற காசைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். இதற்கிடையில் எவராவது ஒரு வம்பன் அதற்கு எதிராக ஒரு வழக்கை தாக்கல் செய்து காலதாமத்தை ஏற்படுத்தவும் இடம் இருக்கின்றது.
ரணில் பாணியில் யார் என்ன செய்தாலும் உள்ளூராட்சித் தேர்தல் உறுதியாக வருகின்றது. அப்போது இன்று அதிகாரத்தில் இருக்கின்ற ஆளும் தரப்பு குறிப்பாக இந்தத் தேர்தல் ஜனாதிபதி அனுர-என்பிபி. தொடர்பாக மக்கள் ஒரு மதிப்பீட்டை செய்வார்கள் என்பதனை விட இது ஜனாதிபதி அனுர மீதான ஒரு கருத்தாகவும் இந்தத் தேர்தல் அமையும் என்பது உறுதி.
அதே நேரம் இன்று அரசாங்கத்தை விமர்சிக்கின்ற எதிரணி தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள இந்த நிமிடம் வரை எதையும் செய்யவில்லை. குறிப்பாக இன்று பிரதான எதிர்க் கட்சியாக இருக்கின்ற சஜித் தலைமையிலான அணிக்கு இந்தத் தேர்தலில் பெரிதாக ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.
அப்படி இருந்தால் இவர்கள் ஒருபோதும் நாமல் திலித் போன்ற எந்வொரு கூட்டணியையும் அமைத்திருக்கமாட்டார்கள். மேலும் பலயீனமான ரணில் தரப்புடன் கூட்டணி பற்றிப் பேசியும் இருக்க மாட்டார்கள்.
நாம் துவக்கத்தில் குறிப்பிட்டது போல இந்தக் கூட்டணியும் கைவிடப்பட்டு விட்டதாகத்தான் நமக்குத் தகவல். ரணில்-சஜித் கூட்டணிக்கு ஆதரவாகவும் எதிராகவும் சஜித் அணியில் எதிரும் புதிருமான குழுக்கள் என்பது அங்கு பகிரங்கமாகத் தெரிகின்றது.
தன்னிடம் இருக்கின்ற சில முக்கியஸ்தர்கள் ரணிலுக்கு விசுவாசமாக இருப்பதால் அவர்களுக்கு எதிரான அணியினரை சஜித் தனது கட்சிக்குள் ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றார். குறிப்பாக தனக்கு எதிரான அணியில் தனது கட்சியின் செயளாலர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இருப்பதாக இப்போது சஜித் சந்தேகிக்கத் துவங்கி இருக்கின்றார் என்று தெரிகின்றது.
ஏற்கெனவே அர்ஷ கபீர் இம்டியஸ் போன்றவர்கள் மீது சஜித் ஓரக்கண்ணால் பார்த்து வருவதும் தெரிந்ததே. அவர்கள் கட்சியில் நடக்கின்ற பல விடயங்கள் எமக்குத் தெரியாது என்று பகிரங்கமாக இன்றும் பேசி வருகின்றார்கள். இது அந்தக் கட்சிக்குள் இன்னும் குழப்பங்களும் சந்தேகங்களும் தொடர்வதையே காட்சிப்படுத்துகின்றன.
இந்தப் பின்னணியில் ரணிலின் ஐதேக. இன்று தெருவில் விடப்பட்டிருக்கின்றது. அதன் மூலம் சஜித் அணியைக் கைப்பற்றும் தனது திட்டத்தில் ரணிலுக்கு இன்று பின்னடைவு என்றுதான் தொரிகின்றது. ஐதேக. புதிய செயலாளர் தலத்த இந்த நாட்களில் மிகவும் மனம் உடைந்து போன நிலையில் இருக்கின்றார்.
வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் ரணிலின் ஐதேக. பாதாளத்துக்கே சென்றுவிடும் என்று நாம் நம்புகின்றோம். அவர்களுடன் கூட்டணிக்கு எந்த செல்வாக்கான கட்சிகளும் தயாராக இல்லை. நாம் கடந்த வாரம் குறிப்பிட்டது போல அங்கு யானைச் சின்னமும் ஐதேக. என்ற நாமமும்தான் பெரிதாகத் தெரிகின்றது. வேறு ஏதும் அங்கு கிடையாது.
வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ரணிலுடன் இருந்த மொட்டுக் கட்சி முக்கியஸதர்கள் பலர் மீண்டு அந்தக் கட்சிக்குள் வந்து மஹிந்த ராஜபக்ஸாவை முன்னிருத்தி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெறும் ஒரு உத்தியை இவர்கள் கையில் எடுக்க இருக்கின்றார்கள். அவர்களின் இந்த எதிர்பார்ப்பு எந்தளவுக்கு வெற்றி பெறும் என்று நமக்குத் தெரியாது.
மஹிந்த ராஜபக்ஸாவை முன்னிருத்தி மொட்டுக் கட்சி மேற்கொள்கின்ற தேர்தல் பரப்புரைகளில் ராஜபக்ஸாவை ஹீரோவாக்கி அவரை அனுர தரப்பு பலிவாங்குகின்றது என்றும் அவருக்கு உரிய கௌரவமும் பாதுகாப்பும் கொடுக்க தமக்கு மக்கள் அங்கிகாரம் தர வேண்டும் என்பது அவர்களது கோஷமாக இருக்கும்.
அதே நேரம் தமது பிரதான வாக்குறுதிகளுக்கு ஆளும் அனுர தரப்பு மீண்டும் ஒருமுறை மக்கள் ஆணையைக் கோருவார்கள் என்று எதிர்பார்க்க முடியும். மொட்டுக் கட்சியின் பிரதான துரும்பாக மஹிந்ததான் இருக்கப் போகின்றார் என்பதன் நாம் முன் கூட்டிச் சொல்லி வைக்க முடியும்.
இப்போது ஆளும் தரப்பு மீதான குடிகளின் கணிப்பு-மதிப்பீடு எப்படி அமையலாம் என்று பார்ப்போம். பொதுவாகப் பார்க்கின்ற போது ஜனாதிபதி அனுர மீதான நல்லெண்ணத்தில் எந்தப் பாதிப்புக்களும் இதுவரை ஏற்படவில்லை. ஆனாலும் பாமர மக்கள் மத்தியில் ஆளும் என்பிபி. அரசு மீது ஒரு அதிர்ப்தி நிலை எமது பார்வையில் தெரிகின்றது.
கடந்த எல்பிடிய தேர்தலுக்கு ஒத்தாக இந்த வீழ்ச்சி அமைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனாலும் நாட்டில் இருக்கின்ற அனைத்துப் பிரதேசங்களிலும் குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மலையகம் என்ற இடங்களிலும் இன ரீதியில் பார்க்கின்ற போதும் தமிழ் முஸ்லிம் என்ற பேதமின்றி ஆளும் அனுரத் தரப்பு கைமேலாங்கிக் காணப்படும்.
வருகின்ற வரவு செலவுத்திட்டத்தை ஆளும் அனுரத் தரப்பு தமக்கு வாய்ப்பாகப் பாவித்துக் கொள்ளலாம். இதற்கு எதிர்க் கட்சிகள் அஞ்சுகின்றது. மேல் ஆளும் தரப்புடன் இணைந்து தேர்தலுக்கு ஒத்துழைப்பு என்பதுதான் பொதுவாக மக்களின் மன நிலை அதுவும் இந்தத் தேர்தலில் செல்வாக்குச் செலுத்தலாம் இது கூட்டணி அல்ல ஆதரவு கொடுக்கும் ஒரு நிலை.
எதிரணிகள் குறிப்பாக சஜித் அணி தனியாக எந்த ஒரு பிரதேச சபையில் ஆதிக்கத்தைப் பிடிக்குமா என்பது பெரும் சந்தேகம். கூட்டுறவுத் தேர்தலில் ரணில் நாமல் இதர சில்லறைகள் அனைத்தையும் இணைத்துக் கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுத்த பாணியில் இவர்களுக்கு இந்த உள்ளூராட்சித் தேர்தலில் குதிப்பது மிகவும் சிக்கலாக இருக்கும்.
அது ஒரு போதும் அப்படி அமைய வாய்ப்பு இல்லை. ஆனாலும் தேர்தலுக்கு முன்னர் நாம் அனைத்து சபைகளையும் கைப்பற்றி விடுவோம் என்றுதான் சஜித் அணி தனது பரப்புரைகளை மேற்கொள்வார்கள். அவர்கள் அப்படி ஒரு கருத்தை மக்கள் மத்தியில் விதைக்க முனைவதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால் அறுவடை வரும் போதுதான் பலம் தெரியவரும்.
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக சில தினங்களுக்கு முன்னர் ரணில் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசிய ராஜித சேனாரத்ன பொது எதிரிக்கு எதிராக நாம் ஓராணியில் கூட்டுச் சேர வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று அவர் அங்கு குறிப்பிட்டார்.
இந்த சந்திப்பில் சுதந்திரக் கட்சி மொட்டுக் கட்சி கம்மன் பில போன்றவர்கள் கலந்து கொண்டிருந்தது தெரிய வருகின்றது.
இந்தக் கூட்டத்திற்கு சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கு அழைப்புக் கொடுக்கப்பட்டிருந்த போதும் அவர்கள் தரப்பில் எவரும் கலந்து கொள்ள முடியவில்லை. முன்பு இது போன்ற கூட்டங்களில் கலந்து கொள்ளப் போய் இப்போது சஜித்தால் ஓரம் கட்டப்படுகின்ற ஒரு நிலையும் அங்கு தோன்றி இருப்பதால் எவரும் கூட்டணிகள் பற்றிப் பேச அஞ்சுகின்றார்கள்.
இதற்கிடையில் ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடாத்த வேண்டாம் என்று சஜித் அணி சார்பில் தேர்தல் திணைக்களத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள். சில கட்சிகள் தமக்கு வேட்பு மனுதாக்கல் செய்யக் காசு கையில் இல்லை. நமது முன்னைய கட்டுப்பணத்தை எமக்குத் திருப்பிச் செலுத்தினால்தான் எம்மால் புதிய வேட்புமனுக்களை கட்ட முடியும் என்று வதிடுகின்றார்கள். அதில் ஒரு நியாயமும் இருக்கின்றது. இந்தக் கதைகளைப் பார்க்கின்ற போது பொதுவாக எதிரணிகள் அனைத்தும் போல் தேர்தலுக்கு அஞ்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.
கடந்த கால படுகொலைகள் ஊழல் மோசடி அதிகார துஸ்பிரயோகம் என்பவற்றில் ஆளும் அனுர தரப்பு தனது இருக்கமான பிடியை துவங்கி இருக்கின்றது. அதனைத்தான் மக்களும் எதிர்பார்க்கின்றார்கள். இதில் லசந்த விக்ரமதுங்ஹ மீதான குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுவிக்க எடுத்த தனது நடவடிக்கைளில் இருந்து சட்ட மா அதிபர் விரும்பியோ விரும்பாமலோ பின்வாங்க வேண்டி வந்திருகின்றது. இதற்கு சிஐடி செயல்பாடுகள் காரணம் என்று தெரிகின்றது.
எனவே இதன் பின்னர் சட்ட மா அதிபர் தன்னிஸ்டத்துக்கு செயலாற்ற முடியாத ஒரு நிலை தோன்றி இருக்கின்றது. பொதுவாக இந்தப் படுகொலைகள் ஊழல் அதிகாரத் துஸ்பிரயோகம் போன்ற விடயங்களில் என்பிபி. நடடிக்கை எடுக்கத் தாமதிப்பது அரசு மீதான விமர்சனங்களுக்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்து வருகின்றது. இதனை சரி செய்கின்ற காய் நகர்த்தல்களையே அரசு இப்போது முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றது. இது கூட தேர்தலில் அரசுக்கு ஒரு வாய்ப்பாக அமையலாம்.
முன்பு ஊடகங்களே தமது கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு நிலையில் சமூக ஊடகங்களை வைத்து அனுர தரப்பினர் அதிரடி காட்டிக் கொண்டிருந்தனர் இப்போது அரசு சார்பு ஊடகங்கள் ஆளும் தரப்பு தகவல்களை மக்கள் மத்தியில் தனக்குத் தேவையான விதத்தில் சந்தைப்படுத்த ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. அத்துடன் கடந்த காலங்களில் தனியார் ஊடகங்கள் அனுர மற்றும் என்பிபிக்கு எதிராக மேற்கொண்ட போலிப் பிரச்சாரங்களை இப்போது அதே பாணியில் முன்னெடுக்க முடியாத ஒரு நிலை. இதுகூட ஆளும் தரப்புக்கு வாய்ப்பான ஒரு களநிலை என்று எடுத்துக் கொள்ள முடியும்.