காலவதியான கூட்டணி!

-நஜீப் பின் கபூர்-

நன்றி: 09.02.2025 ஞாயிறு தினக்குரல்

அடுத்து வரும் 17ம் திகதிக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அதிகமாக பேசப்பட இருக்கின்றது. அத்துடன் ஜனாதிபதி அனுர குமாரவின் அரபுலக விஜயம். அதனைத்  தொடர்ந்து வரும் நாட்களில் என்பிபி.-அனுர குமார அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் (மார்ச்17) என்பன பிரதான தலைப்புக்களாக எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றன.

அதற்கு முன்னர் இந்த வாரம் நாம் காலம் கடந்த கூட்டணி ஒன்று தொடர்பாக பேசலாம் என்று இருக்கின்றோம். நாம் இதற்குக் காலவதியான கூட்டணி என்று குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் இதற்கு முன்னர் நமது அரசியல் களத்தில் ஒரு மெகா கூட்டணி பற்றி பேசி இருந்தோம். அது நமது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.

President addresses another central challenge – The Island

ஆனால் நாம் அன்று குறிப்பிட்ட அந்த மெகா கூட்டணி அமையவில்லை. அதன் சேதாரங்களை குறிப்பிட தரப்பினர் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் குறிப்பிட்ட மெகா கூட்டணி அன்று சமைந்திருந்தால் சேதத்தை குறைத்திருக்கலாம். ஆனால் அனுர தரப்பு வெற்றியை அவர்களினால் ஒருபோதும் தடுத்து நிறுத்தி இருக்க முடியாது. இதனை நாம் அந்த மெகா கூட்டணி பற்றி பேசிய நாட்களிலே சொல்லியும் வந்தோம்.

இப்போது காலம் கடந்த கூட்டணி பற்றிப் பார்ப்போம். அதற்கு முன்னர் நாட்டில் நிலவுகின்ற அரசியல் பின்னணி எப்படி இருக்கின்றது என்று ஆராய்ந்தால் ஆளும் அனுர தரப்பு நாட்டில் வலுவான நிலையில் இருக்கின்றது. அதே நேரம் பிரதான எதிர்க்கட்சி உப்புச்சப்பில்லாது நடந்து கொள்கின்றது. ஆதனால்தான் இன்று சாமர சம்பத் போன்றவர்கள் ஹீரோக்களாக மிளிருகின்றார்கள்.

நாம் முன்பு ஒரு முறை சுட்டிக் காட்டியது போன்று ஜேவிபி.யில் மூன்று பேர் இருந்து அதிரடி ஆட்டம் போட்டார்கள். இன்று அவர்கள் தரப்பில் 159 பேர். சஜித் தரப்பில் 35-40 பேர் இருந்தாலும் மொன்டசூரி தரத்தில்  அவர்கள் செயல்பாடுகள்.

எதிர்க்கட்சித் தலைவர் வழக்கம் போல உப்புச் சப்பில்லாது பேசிக் கொண்டிருக்கின்றார். அவரது உரையில் ஏதும் பெரிதாக எடுத்துக் கொள்வதற்க்கில்லை. அடுத்து அதிகளவுள்ள நாடளுமன்ற உறுப்பினர்கள் அணி பற்றிப் பார்த்தால் தமிழரசுக் கட்சி அந்த அணியினரை பின்தள்ளிக் கொண்டு அர்ஜூனா ராமநாதன் மற்றுமொரு சாமர சம்பத் பணியில் செயல்பட்டுக் கொண்டு வருகின்றார்.

எனவே எதிர்க் கட்சிகள் என்று பார்க்கின்ற போது இந்த இருவரும்தான் இன்று மக்களின் நினைவுக்கு வருகின்றார்கள். அடுத்து மொட்டு அணியின் சார்பில் நாமல் ராஜபக்ஸவின் செயல்பாடுகளில் ஏதுமே பெரிதாக இல்லை. அவர் மீண்டும் நாட்டில் தமது குடும்ப அதிகாரத்தை எப்படி நிலை நிறுத்துவது என்ற சிந்தனையில்தான் செயல்படுகின்றார்.

நாடாளுமன்றத்துக்கு வெளியில் பார்க்கும் போது கடந்த ஆட்சிக்காலங்களில் நடந்த படுகொலைகள் அது தொடர்பாக மூடி மறைக்கப்பட்ட குற்றவாளிகளை கண்டு பிடித்தல் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற சலுகைகள் தொடர்பான கதைகள்தான் பிரதான பேசுபொருளாகி வருகின்றன.

ஆளும் அனுர தரப்பு உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தன்மீதான நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் இதனை ஜீரணித்துக் கொள்ளாத ஒரு சிறு கூட்டமும் சில ஊடகங்களும் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றது. அவர்கள் தொடர்பான பெரும்பாலான மக்கள் மத்தியில் நம்பிக்கை கிடையாது என்பதும் அவதானிக்ககூடியதாக இருக்கின்றது.

The Party of Davos is the biggest loser in Britain's election

இந்த நிலையில்தான் காலம் கடந்த கூட்டணி பேசு பொருளாகி வருகின்றது. இதற்குப் முக்கிய காரணம் இன்னும் சில வாரங்களில் அல்லது நாட்களில் உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வர இருக்கின்றது. அதற்கு முகம்கொடுக்க ஆளும் தரப்பு தனித்துவக் கூட்டாணியாக களத்தில் வலுவாக இருக்கின்றது.

அவர்களுடன் மோதுவதாக இருந்தால் தமக்குள் முட்டி மோதியவர்கள் இன்று எதிரியின் எதிரி நண்பன் என்ற நியதியில் கூட்டணிகள் பற்றிப் பேசி வருகின்றனர். அப்படியான கூட்டணிகளை வரிசைப்படுத்தினால் சஜித்-ரணில் கூட்டணி பிராதான ஒரு சக்தியாக பார்க்கப்படுகின்றது.

அடுத்து மொட்டுக் கட்சி பறிபோன தனது பலத்தை கட்டி எழுப்பும் ஒரு முயற்சியில் இறங்கி இருக்கின்றது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பின்னணியாகக் கொண்ட மற்றுமொரு அணியும் தனது பலத்தை காட்சிப்படுத்தும் ஒரு முயற்சியில் இறங்கி இருப்பதை அவதானிக்க முடிகின்றது.

வடக்குக் கிழக்கு அரசியல் சக்திகள் ஆளும் அனுர தரப்பு செல்வாக்கை எப்படி தமது பிரதேசங்களில் கட்டுப்படுத்துவது என்று சிந்திக்கின்றன. முஸ்லிம் தனித்துவக் கட்சிகளும் மலையக அரசியல் சக்திகளும்  வித்தியாசமான ஒரு விளையாட்டை உள்ளூராட்சித் தேர்தலில் ஆட எதிர்பார்ப்பதாகத் தெரிகின்றது.

ரணில்-சஜித் கூட்டணி

இப்போது நாம் துவக்கத்தில் குறிப்பிட்ட ரணிலின் ஐதேக. சஜித்தின் ஐமச. கூட்டணி பற்றிப் பார்ப்போம். இந்தக் கூட்டணியை  ஆராய்ந்தால் அதன் தலைவர்களான ரணில் சஜித் ஒருவரை ஒருவர் தமது எதிரிகளாக கருதும் நிலை இன்றும் காணப்படுகின்றது. இந்த கூட்டணி விடயத்தில் மிகவும் எச்சரிக்கையாக செயலாற்றுகின்ற ஒரு மனிதன் சஜித்.

ரணிலின் சகுனி விளையாட்டுக்குத் தான் பலியாகி  எதிர்க் கட்சித் தலைமைப் பதவி கூட இந்தக் கூட்டணியால் பறிபோகலாம் என்று அவர் அச்சப்படுகின்றார். சஜித்தின் அந்த எதிர்பார்ப்புக்களுடன் நமக்கு நூறுவீத உடன்பாடு.

அதே நேரம் இந்த இரு கட்சி ஆதரவாளர்களை எடுத்துக் கொண்டால் (ஐதேக.-ஐமச.) இந்தக் கூட்டணியில் அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றார்கள். அத்துடன் அவர்கள் தேர்தலில் தாம் யானை சின்னத்தில் நிற்க வேண்டும் என்பது அவர்களது விருப்பமாக இருக்கின்றது.

ஆனால் சஜித்துக்கு நெருக்கமானவர்கள் எக்காரணம் கொண்டும் யானை சின்னத்தில் தேர்தலுக்கு வருவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அப்படியாக இருந்தால் கட்சியும் யானை சின்னமும் சஜித் தலைமையிலான அணியினருக்கு விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. ஆனால் ரணில் அணியில் இருக்கின்ற வஜிர சாகல போன்றவர்கள் அதற்குத் தயாராக இல்லை.

Daily Mirror - Sri Lanka Latest Breaking News and Headlines - Print Edition Be a statesman Ranil, take one step at a time

ரணில் கூட அதற்கு ஒரு போதும் தயாராக இல்லை. எனவே நாட்டில் இன்றைய அரசியல் கட்சிகள் மத்தியில் ரணிலும் அவரது ஐதேக.வும் ஒரு வங்குரோத்து சக்தி அதற்காக நாம் எதனையுமே விட்டுக் கொடுக்கத் தோவையில்லை என்பது சஜித் அணியினரின் நிலைப்பாடாக இருக்கின்றது. ஆனால் சஜித் கட்சியில் இருக்கின்ற கபீர் அர்ஷ த சில்வா போன்றவர்கள் ரணில் அணியுடன் கட்சியை இணைப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றார்கள்.

தற்போதய ஐதேக. செயலாளர் தலதா  சஜித் அணியில் இருக்கின்ற ரணில் விசுவாசிகளுக்கு நெருக்கமான ஒரு உறவு இருப்பதால் இன்று இந்த ஐதேக.-ஐமச கூட்டணி தொடர்பாக ஒரு நம்பிக்கை ஏற்பட்டு சந்திப்புக்கள் தொடர்கின்றன.

இந்தக் கூட்டணி ஆளும் அனுர அணிக்கு எந்தவகையிலும் ஈடுகொடுக்கும் ஒரு சக்தியாக இல்லை. கூட்டணி பிறப்பிலே குறைபாடுகளுடன்  இருக்கின்றது. அப்படி அது உயிர் பிழைத்தாலும்   குறைபாடுகள் நிறைந்த ஒரு குழந்தையின் நிலையில்தான் நமது அரசியல் அரங்கில் வலம்வரும். ஐதேக.வின் தொன்நூறு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் இன்று சஜித்துடன்தான். கூட்டணி அமைந்தாலும் சஜித் தரப்பினர் ஐதேக. வுக்குப் பெரிதாக எதையும் விட்டுக் கொடுக்க வேண்டி இருக்காது.

இவர்கள் உள்ளூராட்சித் தேர்தலுக்கு கூட்டணி சமைத்து களத்துக்கு வருவார்களாக இருந்தால் ஒரு பிரதேச சபைக்கு அவர்களுக்கு விட்டுக் கொடுப்பதற்கு என்று பெரிதாக எந்தப் பங்கும் இருக்காது. ஆனால் இங்கு ஐதேக.-ரணில் நாமங்கள்தான் பெரிதாக தெரிகின்றது. நம்மைப் பொருத்த வரை இலங்கை அரசியல் களத்தில் மேற்சொன்ன இரண்டும் வெறும் மாயைகளே.!

சஜித் அணி ஒரு மாயையுடன் கூட்டணி அமைக்க முயல்கின்ற அதே வேளை அந்த அணியில் இருக்கின்ற ஏறக்குறைய அனேகமான முஸ்லிம் தனித்துவக் கட்சிகளும் மலையகச் கட்சிகளும் இந்தத் தேர்தலில் தனித்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வரும் நிலை. அதனை அந்த தரப்பில் உள்ள பல தலைவர்கள் ஏற்கெனவே பகிரங்கமாக அறிவித்தும் இருக்கின்றார்கள்.

அப்படிப் பார்க்கும் போது சஜித் கூட்டணியில் இருந்து விலகிப் போக இருப்பவர்கள் ரணில் தரப்பினரை விட செல்வாக்கானவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போது உத்தேச இந்த ரணில்-சஜித் கூட்டணி பற்றி மக்கள் தமக்குல் ஒரு மதிப்பீடடை செய்து கொள்ள முடியும்.

மொட்டும் கையும்

கடந்த ஆட்சிக் காலத்தில் செல்வாக்குடன் இருந்த மொட்டுக் கட்சி சமகால அரசியலில் காணாமல் போய் இருக்கின்றது. அவர்களுக்கு தெற்கில் ஒரு ஆசனத்தை வெற்றி கொள்ள முடிந்தது. கட்சிக்குக் கிடைத்த மொத்த வாக்குகளை வைத்து ராஜபக்ஸாக்களின் அரசியல் வாரிசு நாமல் கரை சேர்ந்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு வந்த பின்னடைவால் மொட்டுக் கட்சியில் இருந்த பெரும்பாலானோர் ரணிலுடன் நின்றால்தான் தலை தப்பும் என்று கருதி  அவர் கூட்டணியில் பொதுத் தேர்தலில் நின்றனர்.

Malinda Words: The Pied Piper from Polonnaruwa

பொதுத் தேர்தலில் ரணில் எதிர்பார்த்த அருவடை கிடைக்காததால் அவர்கள் வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் மீண்டும் தமது தாய்க் கட்சியான மொட்டுக் கட்சியுடன் இணைந்து கொள்ளும் மனநிலையில் இருக்கின்றார்கள்.

இதனால் அந்தக் கட்சியின் தற்போதய தலைவராக இருக்கும் நாமல் ராஜபக்ஸவுக்கு ஒரு சின்ன நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது. அவர்களுடன் கம்மன் பில போன்றவர் இனவாதிகளும் இணைந்து ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்கலாம்.

அதே நேரம் சஜித் ரணில் நாமல் அனைவரும் ஓரணியில் இணைந்து நாம் சொல்கின்ற காலங் கடந்த கூட்டணி பற்றிய ஒரு கருத்தும் இருக்கின்றது. மொட்டுக் கட்சியுடன் சஜித் தரப்பு ஏதாவது இணக்கப்பாட்டுக்கு வருவார்களானால் அது ஒரு தற்கொலை முயற்சியாகத்தான் இருக்கும்.

ரணில் தரப்பு எவருடன் வேண்டுமானாலும் கூட்டணி பற்றி சிந்திக்கலாம். அவர்கள் இதே அணியில் அரசியல் செய்து ஏற்கெனவே மூக்குடைபட்டவர்கள் என்பதால் அவர்களுக்கு இழப்பதற்கு ஏதும் கிடையாது.

சஜித் அணி அமைக்கின்ற கூட்டணிக்கு வருகின்ற உள்ளூராட்சித் தேர்தலில் எத்தனை சபைகளை வெற்றி கொள்ள முடியும் என்பதும் கேள்விக்குறியாக இருக்கின்றது. இந்த உள்ளூராட்சித் தேர்தலில் ரணில் அணி தனித்து நின்றார் எத்தனை சபைகளை வெல்ல முடியும் என்பதை விட மொத்தமாக எத்தனை உறுப்பினர்களைத்தான் வெற்றி கொள்ளும் என்பது குதிரைக் கொம்பு எண்ணிக்கையில்தான் அமையலாம்.

ஒரு காலத்தில் பெரும் அரசியல் கட்சியாக இருந்த சுதந்திரக் கட்சியை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வங்குரோத்து நிலைக்குக் கொண்டு வந்து வைத்திருக்கின்றார். இப்போது அந்தக் கட்சியில் எத்தனைபேர் எஞ்சி இருக்கின்றார்கள் அவர்கள் எங்கெங்கு இருக்கின்றார்கள் என்பது கூட யாருக்கும் புரியாது. ஆனால் அந்த கட்சியில்  சாமர சம்பத் என்ற ஒருவர் பாராளுமனற்தில் இருப்பது பிரகாசமாகத் தெரிகின்றது.

நிமல் சிரிபால தயாசிரி அனுர யாப்பா மஹிந்த அமரவீர துமிந்த திசாநாயக்க இவர்கள் நிலைப்பாடுகளில் தெளிவில்லை. என்றாலும் சுதந்திரக் கட்சி தலைமையில் கதிரைச் சின்னத்தில் ஒரு அணி தேர்தலுக்கு வருவது உறுதி.

அவர்கள் இந்த மெகா கூட்டணியில் இணையும் சாத்தியம் மிகவும் குறைவு. இது தவிர இன்னும் பல சில்லறைகளும் சுயேட்சைகளும் கூட்டணி அமைத்துத் தேர்தலுக்கு வரும்.

வடக்குக் கிழக்கு

Political Cartoons of Sri Lanka على X: "Politics in North. Cartoon by Namal Amarasinghe #lka #SriLanka #TNA #Tamil #Jaffna #தமிழ் https://t.co/qS0kuB1tr9" / X

இன்று ஆளும் தரப்பு வடக்குக் கிழக்கில் பலமான நிலையில் இருக்கின்றது. அண்மையில் ஜனாதிபதி வடக்குக்குச் சென்ற போது இது உறுதியாகத் தெரிந்தது. எனவே வருகின்ற தேர்தலில் ஆளும் தரப்புக்கு எதிராக இன உணர்வுடன் ஒரு அணி களத்துக்கு வருவது பற்றி சிலர் பேசுகின்றார்கள்.

ஆனால் நமக்கு வடக்குக் கிழக்கில் இருந்து வரும் தகவல்களின் படி அப்படியான ஒரு பலமான கூட்டணிக்கு அங்கு வாய்ப்பில்லை. அதனால் அங்கும் ஆளும் தரப்பு கைதான் ஓங்கும்.

தனித்துவத்தார்

மலையகத்தில் இருக்கின்ற தமிழ் அரசியல் சக்திகளும் வடக்குக் கிழக்கை மையப்படுத்தி அரசியல் செய்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் குறிப்பாக ஹக்கீம் ரிசாட் மனோ போன்றவர்கள் ஏதோ வகையில் இன்று நாடாளுமன்றத்துக்குள் வந்துவிட்டார்கள்.! இப்போது அவர்கள் தமது பலத்தை உறுதிப்படுத்தி மாகாணசபைத் தேர்தலுக்கு பேரம் பேசுவதாக இருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் தமது அணிகளைத் தனித்துக் களம் இறக்குவார்கள்.

அப்படி தனித்து களமிறங்குவதான் மூலம் அவர்கள் ஆளும் அனுர தரப்புடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள முனைவார்கள். மு.கா.ஹிஸ்புல்லாஹ் வார்த்தையில் சொல்வதாக இருந்தால் நாங்கள் எப்போதுமே ஜனாதிபதியின் கட்சிதான். புரிகின்றதா அர்த்தம்?

மொத்தமாகப் பார்க்கின்ற போது காலவதியான கூட்டணி களத்துக்கு வந்தாலும் அது என்னதான் சாதிக்க போகின்றது. ஆனாலும் அவர்கள் சஜித் ரணில் நாமல் மெகா கூட்டணி போட்டு கூட்டுறவுத் தேர்தலில் பெற்ற ஓரிரு வெற்றியை வைத்து நடுத்தெருவில் பட்டாசு கொழுத்தி  ஆட்டம் போடுகின்றார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. ஓகே.!

Previous Story

சட்டத்தின் அதிரடி!

Next Story

டெல்லி: ஆம் ஆத்மி தோல்வி குறித்து அரவிந்த் கேஜ்ரிவால்