எம்.ஜி.ஆரின் 34 வது நினைவு தினம்

மருதூர் கோபாலன் மேனன் இராமச்சந்திரன் -MGR

பிறப்பு: கண்டி நாவலப்பிட்டிஇலங்கை

1917 சனவரி 17

இறப்பு: 1987திசம்பர் 24, 1987

தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர். தமிழ் திரை உலகின் மன்னாதி மன்னனாக திகழ்ந்து தமிழ்நாட்டின் முதல்வராக 10 ஆண்டுகள் பதவி வகித்து மக்களின் மனதில் அன்றைக்கும் இன்றைக்கும் நீங்காத தனிப்பெரும் தலைவராக நிற்கும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 34வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.சினிமாவில் தனிப்பெரும் ஹீரோவாக திகழ்ந்த எம்ஜிஆர் உழைக்கும் மக்கள், விவசாயிகள், மீனவர்கள், காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் கதைக்களங்களைத் தேர்வு செய்தார்.

வயதானவர்கள்,பெண்கள் மீதான எம்ஜிஆரின் உயர்ந்த கருத்துக்கு, தாய்க்குலத்திடம் வரவேற்பு அதிகரித்தது.குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்ட எம்ஜிஆரின் படங்களுக்கு ரசிகர்களும் ஏராளம். நல்ல கருத்துக்களை, தன் படங்களில் அவர் சொல்லத் தவறியதில்லை. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்று தனது திரைப்படங்களில் பாடல்களின் மூலம் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

தனிப்பெரும் தலைவர்

எம்.ஜி.ஆரின் இயல்பிலும் சுபாவத்திலும் கருணை குணம், துணிச்சல், சிந்தனைத் தெளிவு போன்றவை தான் அரசியலுக்கு வர அடித்தளமாக அமைந்தது. அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக்கழக கட்சியில் இணைந்து பணியாற்றினார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு ஏற்படவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அ.தி. மு.க.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனிப்பெரும் வெற்றி பெற்றார். தமிழகத்தின் முதல்வராக பத்து ஆண்டுகள் பதவி வகித்தார். ஏழை மக்கள் மீது அவர் அதிக அக்கறை கொண்டிருந்த எம்ஜிஆர் அவர்களுக்காக பல நல திட்டங்களைக் கொண்டு வந்தார்.

1987 டிசம்பர் 24ல் மறைவு

பசியிலும் வறுமையிலும் தான் வாடியது போல், பிள்ளைகள் பசியோடிருக்கக் கூடாது என பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தினார். மக்களின் மனதில் நீங்காத தலைவராக இடம் பெற்றிருந்த எம்ஜிஆர் கடந்த 1987, டிசம்பர் 24ஆம் தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே வைக்கப்பட்டு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.

அதிமுகவினர் அஞ்சலி

மறைந்த முதல்வர் அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 34வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.
எம்ஜிஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட தலைவர்கள் அவரது நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனையொட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில் எம்.ஜி.ஆரின் 34வது ஆண்டு நினைவு நாளன்று காலை 9.30 மணிக்கு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

நினைவிடத்தில் உறுதிமொழி

அதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆருடைய நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Story

அரசியலமைப்பு கோட்பாடுகள் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் முன்மொழிவுகள்

Next Story

2022ல்  இலங்கையில் உணவுத் தட்டுப்பாடு- கடும் எச்சரிக்கை