சிரியா: செட்னயா சிறைச்சாலைக்குள் உறவுகளைத் தேடும் மக்கள்!

ஆட்சியை இழந்த சிரிய அதிபர் பஷர் அல் அசாத் மற்றும் அவரது குடும்பத்தினர், ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவை அடைந்துள்ளதாக, ‘கிரெம்ளின்’ வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு ஊடக நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அசாத் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரஷ்யா புகலிடம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை இதுவரை பிபிசியால் உறுதிசெய்ய முடியவில்லை.

‘இனி எதிர்காலம் நம்முடையதுதான்” என்று கூறியுள்ள `ஹயத் தஹ்ரிர் அல் ஷாம்’ தலைவர் பின்வாங்குவதற்கு “இடமில்லை” என்று கூறியுள்ளார்.

சிரியா: அசாத் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சமா? நாட்டில் கிளர்ச்சியாளர்கள் செய்வது என்ன?
அதிபர் வெளியேறியதை அடுத்து, டமாஸ்கஸில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இஸ்லாமிய ஆயுதக் குழுவான`ஹயத் தஹ்ரிர் அல் ஷாம்’ அமைப்பின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி சிரியாவின் அரசுத் தொலைக்காட்சியில் இதைக் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

‘மோசமான ஆட்சியாளர்’ அதிபர் பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் எனக் கூறியுள்ள கிளர்ச்சிப் படைகள், நாடு ‘விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளன.

சிரியாவில் அசாத் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதாகவும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் கிளர்ச்சிக் குழுவின் தலைவர்கள் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சி சேனல் மற்றும் வானொலியில் அறிவித்தனர்.

‘செட்னயா சிறைச்சாலைக்குள் உறவினர்களைத் தேடும் மக்கள்’

சிரியாவில், ஞாயிற்றுக்கிழமை அன்று (டிசம்பர் 8) கிளர்ச்சியாளர்கள் டமாஸ்கஸுக்குள் நுழைந்தபோது, இஸ்லாமிய ஆயுதக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் ‘செட்னயா சிறையின் கொடுங்கோன்மை சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது’ என்று அறிவித்தது.

பஷர் அல்-அசாத்தின் அரசியல் சகாப்தத்தின் கொடுமையான துஷ்பிரயோகங்களுக்கு, ‘செட்னயா சிறை’ ஒரு உதாரணமாகவே மாறிவிட்டது.

“உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் ‘செட்னயா சிறைச்சாலை’ ஒரு மரண முகாமாக மாறியது,” என்று 2022ஆம் ஆண்டு தனது அறிக்கையில் செட்னயா சிறைச்சாலையின் கைதிகள் மற்றும் காணாமல் போனோருக்கான அமைப்பு (ADMSP) கூறியது.

2011 மற்றும் 2018க்கு இடையில் சித்திரவதை, மருத்துவ கவனிப்பு இல்லாமை அல்லது பட்டினியின் விளைவாக 30,000க்கும் அதிகமான கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர் அல்லது இறந்துள்ளனர் என்று அது மதிப்பிட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட சில கைதிகளின் வாக்குமூலங்களை மேற்கோள் காட்டி, 2018 மற்றும் 2021க்கு இடையில் குறைந்தது 500 கைதிகள் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்று அது கூறியது.

கடந்த 2017ஆம் ஆண்டில், அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தனது அறிக்கையில், ‘செட்னயா சிறை- ஒரு மனித படுகொலைக் கூடம்’ என்று விவரித்தது. அசாத் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் மரண தண்டனைகளுக்கு ஒப்புதல் கொடுத்தனர் என்றும் அந்த அறிக்கை குற்றம்சாட்டியது.

ஆனால், அப்போது இருந்த சிரிய அரசாங்கம் அம்னெஸ்டியின் கூற்றுக்களை ‘ஆதாரமற்றது’ மற்றும் ‘உண்மைக்குப் புறம்பானவை’ என்று நிராகரித்தது, சிரியாவில் உரிய செயல்முறையைப் பின்பற்றியே, அனைத்து மரண தண்டனைகளும் நிறைவேற்றப்பட்டன என்று வலியுறுத்தியது.

ஏஎஃப்பி செய்தி முகமையால் சரிபார்க்கப்பட்ட காணொளி ஒன்றில், செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் தங்கள் உறவினர்கள் இருக்கிறார்களா என்று பார்க்க சிரிய மக்கள் விரைவதைக் காண முடிந்தது.

அசாத் ஆட்சியின் கீழ் இந்தச் சிறையில், ஆயிரக்கணக்கான எதிர்தரப்பு ஆதரவாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தங்கள் உறவினர்களைத் தேடி மக்கள் இங்கு செல்கின்றனர்.

செட்னயா சிறை
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தனது அறிக்கையில் ‘செட்னயா சிறை- ஒரு மனித படுகொலைக் கூடம்’ என்று விவரித்தது (சிறையின் செயற்கைகோள் புகைப்படம்)

சிரியாவின் நிலைமை குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் அவசர கூட்டத்தை நடத்த ரஷ்யா கோரிக்கை விடுத்துள்ளதாக, அதன் பிரதிநிதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா.வுக்கான ரஷ்யாவின் முதல் நிரந்தர துணை பிரதிநிதியான டிமிட்ரி போலன்ஸ்கி, திங்களன்று (டிசம்பர் 09) இந்தக் கூட்டம் நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

அப்போது ஒரு கூட்டம் நடத்தப்படும் என்று ராஜ்ஜிய வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஏஎஃப்பி செய்தி முகமை தெரிவித்துள்ளது.

அசாத் ஆட்சியின் வீழ்ச்சி, ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் என்ன மாதிரியான தாக்கம் அல்லது விளைவை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று போலன்ஸ்கி கூறுகிறார்.

குறிப்பாக, கோலன் குன்று பகுதிகளில் ஐ.நா படைகள் ரோந்து செல்லக்கூடிய பஃபர் பகுதியை (Buffer Zone) இஸ்ரேல் தற்காலிகமாக கைப்பற்றியுள்ளது குறித்தும் விவாதிப்பது முக்கியம் என்று அவர் கூறுகிறார்.

புதிய சிரியாவில் அனைவரும் நிம்மதியாக வாழ்வார்கள் என கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது
புதிய சிரியாவில் அனைவரும் நிம்மதியாக வாழ்வார்கள் என கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது

அசாத்தின் சர்வாதிகாரத்தால் கடந்த 50 ஆண்டுகளாக இடம்பெயர்ந்து சிறைகளில் அடைக்கப்பட்ட மக்கள் தற்போது தாயகம் திரும்ப முடியும், புதிய சிரியாவில் அனைவரும் நிம்மதியாக வாழ்வார்கள் என கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.

”ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம்” என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது.

ஹயத் தஹ்ரிர் அல் ஷாம், அதன் தாக்குதலை ஒன்றரை வாரத்திற்கு முன்பு தொடங்கியதில் இருந்து, அவர்கள் சிரியாவின் முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள் கொண்டாட்டம்

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்படும் தலைநகர் டமாஸ்கஸின் மையப் பகுதியில் உள்ள உமையாத் சதுக்கத்தில் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

”அசாத்தின் அரை நூற்றாண்டு ஆட்சியில் சிரியாவில் இருந்து இடம்பெயர்ந்த அல்லது சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் இப்போது தாயகத்திற்கு மீண்டும் வரலாம். இது ஒரு புதிய சிரியாவாக இருக்கும், இங்கு அனைவருக்கும் அமைதி மற்றும் நீதியும் கிடைக்கப்பெறும்” என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியா: 'எதிர்காலம் நம்முடையது' - டமாஸ்கஸில் பேசிய கிளர்ச்சிக்குழு தலைவர்

பிரதமரின் மேற்பார்வையில்

1970களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வந்தது.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அபு முகமது அல்-ஜவ்லானி, ஆட்சி மாற்றம் நடைபெறும் வரை அனைத்து அரசு துறைகளும் பிரதமரின் மேற்பார்வையில் இருக்குமென தெரிவித்துள்ளார்.

மேலும் டமாஸ்கஸில் உள்ள அரசு துறைகளுக்கு ராணுவம் செல்ல தடை விதிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

இதற்கிடையே சிரியாவின் பிரதமர் மொஹமத் காஸி அல்-ஜலாலி தான் டமாஸ்கஸில் இருப்பதாகவும், மக்களுக்கு உதவ தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிரியா

அசாத் அரசு விரைவாக வீழ்ந்தது எப்படி?

syria latest news | Udaipur Kiran

சிரியாவில் அசாத்தின் ஆட்சி வெறும் சில நாட்களில் வீழ்ந்தாலும், அதன் பின்னணியில் பல முக்கிய காரணிகள் உள்ளன.

பல ஆண்டுகளாக நடக்கும் உள்நாட்டு போரில் அதிபர் அசாத்தின் ராணுவம், மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளது என மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானி டாரா கான்ட்யூட் கூறுகிறார். இவர் சிரியா விவகாரங்களின் நிபுணர்.

அசாத்தின் முக்கிய கூட்டாளிகளான ரஷ்யா, இரான் மற்றும் ஹெஸ்பொலா ஆகியவை தங்களது சொந்த மோதல்களில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன என்கிறார் டாரா.

”அசாத் தற்போது பலவீனமான நிலையில் உள்ளார்” என்கிறார் அவர்.

நேற்று இரவு நடந்தது அசாத்தியமான செயல் என்றும் அவர் கூறினார்.

சிரியா: 'எதிர்காலம் நம்முடையது' - டமாஸ்கஸில் பேசிய கிளர்ச்சிக்குழு தலைவர்

அசாத் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சமா?

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் ராஜதந்திர ஆலோசகர் அன்வர் கர்காஷ், சிரிய அதிபர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருக்கிறாரா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் மரியாதைக்குரிய ராஜதந்திரிகளில் ஒருவரான கர்காஷ், லண்டனில் இருந்து இயங்கும் ஒரு சிந்தனைக் குழுவால் பஹ்ரைனில் ஏற்பாடு செய்யப்பட்ட `மனமா பாதுகாப்பு மாநாட்டில்’ (Manama Dialogue security conference) உரையாற்றினார்.

சிரியாவில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கவலை கொண்டுள்ளதாகக் கூறிய அவர், அசாத் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தஞ்சம் கோரக்கூடும் என்ற ஊகங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

மேலும் சிரியா ஆபத்தில் இருந்து மீளவில்லை என்றும் பயங்கரவாத அச்சுறுத்தல் நீடிப்பதாகவும் கர்காஷ் கூறினார்.

அசாத்

வெளியேறிய அதிபர்

முன்னதாக சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் நுழைவதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

“எங்கள் படைகள் டமாஸ்கஸுக்குள் நுழைய தொடங்கிவிட்டன”, என்று தங்களின் டெலிகிராம் செயலி கணக்கில் கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

“ஒவ்வொரு பகுதியாக டமாஸ்கஸ் நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிக்கொண்டு வருகின்றனர்”, என்று பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமாக சிபிஎஸ்ஸிடம் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

ஹோம்ஸ் நகரை “முழுமையாக விடுவித்த” பிறகு டமாஸ்கஸ் நகரை நோக்கி கிளர்ச்சியாளர்கள் வந்தனர்.

சிரியா: வங்கியை கொள்ளையடித்த கும்பல் – கிளர்ச்சியாளர்கள் செய்தது என்ன?

இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவான ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் இதனை ஒரு “வரலாற்று சிறப்பு மிக்க தருணம்” என்று விவரித்துள்ளது.

இதனையடுத்து, சிரிய அதிபர் பஷார் அல் அசாத் டமாஸ்கஸ் நகரை விட்டு விமானத்தின் மூலம் புறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இரண்டு சிரிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் விமானத்தில் அதிபர் அசாத் ஏறி சென்றிருக்கலாம் என்றும் விமானம் புறப்பட்ட பின்னர், விமான நிலையத்தில் இருந்த சிரிய அரசின் பாதுகாப்புப் படைகள் வெளியேறினர் என்றும் தி சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் தெரிவித்தது.

சிரியா: டாமஸ்கஸ்
சிரிய அதிபர் பஷார் அல் அசாத் டமாஸ்கஸ் நகரை விட்டு புறப்பட்டுவிட்டதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது

மேலும் டமாஸ்கஸ் நகரின் மையப்பகுதியில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியானது.

கிளர்ச்சியாளர்களின் படைகள், பார்சேவுக்கு அருகே இருப்பதாகவும், அங்கு மோதல்கள் நடைபெறுவதாகவும் அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, இணைய சேவை மிகவும் குறைவாக உள்ளது, மக்கள் தங்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்”, என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

“மிகவும் சத்தமாக துப்பாக்கிச் சூடு நடந்தது அது எங்கிருந்து வருகிறது என்பது உடனடியாகத் தெரியவில்லை”, என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அப்பகுதியில் வசிக்கும் இருவரை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.

சிரியா: டமாஸ்கஸ்

டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகம் மீது தாக்குதல்

டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகம் தாக்கப்பட்டதாக இரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

`அல் அரேபியா’ என்ற அரபு செய்தி நிறுவனத்தால் பகிரப்பட்ட காணொளியில், கட்டடத்தின் வெளிப்புறத்தில் சேதம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது.

அந்த கட்டடத்தின் மீதிருந்த இரானிய ஜெனரல் காசிம் சுலைமானி மற்றும் ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோரின் புகைப்படங்களைக் கொண்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன. மக்கள் கூட்டம் அவற்றைக் கிழித்ததாக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கீழே உள்ள படம், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை வெளியிட்ட செய்தியில் இடம் பெற்றிருந்தது. இரான் தூதரக கட்டடத்தின் முன்புறம், நஸ்ரல்லா மற்றும் சுலைமானியின் படம் கிழிக்கப்ப்பட்டது தெளிவாகத் தெரிகிறது.

டமாஸ்கஸில் உள்ள இராக்கிய தூதரகம் வெளியேற்றப்பட்டுள்ளதாக சில ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டமாஸ்கஸில் உள்ள இராக் தூதரக கட்டடம் காலி செய்யப்பட்டுள்ளதாக இராக் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ராஜ்ஜீய அதிகாரிகளை மேற்கோள் காட்டி ஏ.எஃப்.பி செய்தி நிறுவனமும் இதைத் தெரிவித்துள்ளது.

சிரியாவில் இருக்கும் இந்தியர்களின் நிலை?

 இரான் தூதரகம்

சிரியாவின் நிலைமையைக் கருத்தில் கொண்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை இரவு பயண ஆலோசனையை வெளியிட்டது. சிரியாவில் வசிக்கும் இந்திய குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியது. அதே நேரம், இந்திய குடிமக்கள் சிரியா செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் வசிக்கும் இந்தியர்கள் டமாஸ்கஸில் உள்ள இந்திய தூதரகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளியுறவு அமைச்சகம் அவசர உதவி எண்ணை (+963 993385973) வெளியிட்டுள்ளது. இது தவிர, hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், சிரியாவில் சுமார் 90 இந்திய குடிமக்கள் இருப்பதாகக் கூறினார்.

“வடக்கு சிரியாவில் சமீப காலமாக சண்டை அதிகரித்து வருகிறது. நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அங்கு சுமார் 90 இந்திய குடிமக்கள் உள்ளனர். அங்கு இருக்கும் இந்தியர்கள் பல நிறுவனங்களில் பணிபுரிகின்றனர். எங்கள் தூதரகம் அந்த இந்திய குடிமக்களுடன் அவர்களின் பாதுகாப்பிற்காகத் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்” என்று ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

சிரியா விவகாரத்தில் அறிக்கை வெளியிட்ட ரஷ்யா

பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிய செய்தி குறித்து ரஷ்யா அறிக்கை வெளியிட்டுள்ளது.

தலைநகர் டமாஸ்கஸை கிளர்ச்சிப் படைகள் கைப்பற்றிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பஷார் அல்-அசாத் அதிபர் பதவியில் இருந்து விலகி சிரியாவில் இருந்து வெளியேறினார் என்று அவரது நட்பு நாடான ரஷ்யா அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், அசாத் இருக்கும் இடம் பற்றி கூடுதல் விவரங்கள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று அது கூறிய முதல் அதிகாரப்பூர்வ அறிக்கை இதுவாகும்.

சிரியா: 'எதிர்காலம் நம்முடையது' - டமாஸ்கஸில் பேசிய கிளர்ச்சிக்குழு தலைவர்

சிரியாவில் என்ன நடக்கிறது?

சிரியா அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலை கிளர்ச்சிக்குழுக்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கின.

சிரியாவில் நடக்கும் மோதலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும், இஸ்லாமிய ஆயுதக் குழுவான ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham- HTS)’ தலைமையில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.

ஏற்கனவே கடும் பதற்றம் நிலவி வந்த சூழலில், கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ மற்றும் இட்லிப் பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அலெப்போ மற்றும் தலைநகர் டமாஸ்கஸுக்கும் நடுவே ஹமா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியினை டிசம்பர் 5-ஆம் தேதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

இது அதிபர் அசாத்திற்கு இரண்டாவது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது.

மேலும் கிளர்ச்சி படைகள் ஹோம்ஸ் நகரையும், தெற்கு சிரியாவின் டெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து அவர்கள் இன்று (டிசம்பர் 8) தலைநகர் டாமஸ்கஸையும் கைப்பற்றியுள்ளனர்.

2011 இல் அசாத்தின் ஆட்சிக்கு எதிராக தெற்கில் கிளர்ச்சி தொடங்கியது. அதைத் தொடந்து, அங்கு அமைதியின்மை நிலவத் தொடங்கியது.

சிரியா: டாமஸ்கஸ்
ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் இரண்டு வாரங்களுக்கு முன்பு தாக்குதலை தொடங்கியதில் இருந்து, சிரியாவின் முக்கிய நகரங்களை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் குழு யார்?

2011 இல் அல் கொய்தாவின் நேரடி இணைப்பாக ‘ஜபத் அல்-நுஸ்ரா’ (Jabhat al-Nusra) என்ற வேறு பெயரில் ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ அமைக்கப்பட்டது.

இஸ்லாமிய அரசு (IS) என தன்னை தானே அழைத்துக்கொள்ளும் குழுவின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதியும் ஜபத் அல்-நுஸ்ராவின் உருவாக்கத்தில் ஈடுபட்டார்.

சிரியா அதிபர் அசாத்துக்கு எதிரான குழுக்களில், தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கொடிய குழுவாக இது கருதப்பட்டது.

ஆனால் அதன் புரட்சிகரக் கொள்கையை விட, ‘ஜிஹாதி சித்தாந்தம்’ அக்குழுவின் உந்து சக்தியாக கருதப்படுகிறது.

2016-ஆம் ஆண்டில், இக்குழுவின் தலைவரான அபு முகமது அல்-ஜவ்லானி, அல் கொய்தாவுடன் உள்ள தொடர்பைப் பகிரங்கமாகப் பிரிந்து, ஜபத் அல்-நுஸ்ராவை கலைத்தார். பின்னர் ஒரு புதிய அமைப்பை நிறுவினார்.

ஒரு வருடம் கழித்து, இதே போன்ற பிற குழுக்களுடன் இணைந்தபோது ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம்’ என்ற பெயரை இக்குழுப் பெற்றது.

Previous Story

RANIL: BAR LIST 2024 பெயர் முகவரி சகிதம்!

Next Story

சிரியா அதிபர் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம்