வங்கதேசத்திற்கும் இந்தியாவிற்கும் இடையில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு சம்பவம் நடக்கிறது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருகிறது.
திங்கள்கிழமை இரவு டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தியாவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பல்வேறு மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
திங்களன்று, ‘அகர்தலாவில் உள்ள வங்கதேச துணை உயர் ஆணையரக வளாகத்தில் உள்ள தேசியக் கொடியை இறக்கியதற்கு எதிராக’ மாணவர்கள் தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்கா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
“டாக்கா பல்கலைக்கழகத்தில் ‘தீண்டாமை எதிர்ப்பு மாணவர் இயக்கம்’ மற்றும் ‘வங்கதேச மாணவர் உரிமைகள் கவுன்சில்’ அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் நள்ளிரவில் கூடினர்” என்று வங்கதேசத்தின் ஆங்கில நாளிதழான “தி டெய்லி ஸ்டார்” குறிப்பிட்டுள்ளது.
“இந்திய அரசாங்கம் ஷேக் ஹசீனாவுடன் உறவுகளை மேம்படுத்திக் கொண்டது, ஆனால் வங்கதேச மக்களுடன் அல்ல” என்று டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளனர்.
மேலும் “ஷேக் ஹசீனா ஆட்சியிலிருந்து வெளியேறியதில் இந்தியா மகிழ்ச்சியடையவில்லை” என்றும் இந்த மாணவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தியா மீதான கோபம்
“எங்களது உயர் ஆணையரகத்திற்கு பாதுகாப்பு வழங்க இந்தியா தவறினால், ஐநா அமைதிப்படையின் உதவியை நாட வேண்டும். மேலும், ஐநா அமைதிப்படையில் வங்கதேசம் தனது பங்கை அதிகரிக்க முடியும்” என, அகர்தலா விவகாரம் குறித்து வங்கதேசத்தின் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் ஆலோசகர் ஆசிப் மஹ்மூத் ஷோஜிப் பூயான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையை வங்கதேசத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். மமதாவின் கோரிக்கையை ஆசிப் கிண்டல் செய்துள்ளார்.
அகர்தலா விவகாரத்தில் வங்கதேச மக்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
“இந்தியா தனது அண்டை நாட்டின் ராஜதந்திர பணிக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டது,” என வங்கதேசம் ஜமாத்-இ-இஸ்லாமி தலைவர் ஷஃபிகூர் ரஹ்மான் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “வங்கதேசத்தில் மத நல்லிணக்கம் குறித்துப் பேச இந்தியாவுக்கு உரிமை இல்லை. வங்கதேச மக்கள் யாருடைய ஆதிக்கத்தையும் ஏற்க மாட்டார்கள். வங்கதேச மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுபோன்ற விஷயங்களில் தேசிய ஒற்றுமை மிகவும் முக்கியமானது” எனவும் ஷபிகுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
‘ஜமாத்-இ-இஸ்லாமி’ முந்தைய ஷேக் ஹசீனாவின் அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது .
ஆனால், ஹசீனா ஆட்சியிலிருந்து விலகியவுடன், இடைக்கால அரசாங்கம் அத்தடையை நீக்கியது.
அகர்தலா தாக்குதல் சம்பவம் தொடர்பாக, வங்கதேசத்தின் பொதுமக்களும் இந்தியாவுக்கு எதிராக கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர்.
வங்கதேசத்தைச் சேர்ந்த சுமோன் கைஸ் என்பவர், டாக்கா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின் காணொளியை எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார்.
“அகர்தலாவில் உள்ள துணை உயர் ஆணையரகத்தின் மீதான தாக்குதலுக்கு எதிராக மக்கள், வங்கதேச தலைநகர் டாக்காவின் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ”ஷேக் ஹசீனாவுக்காக வங்கதேசத்துடனான அனைத்து உறவுகளையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் இந்தியா முறித்துக் கொண்டது.
இந்தியா எங்களை நடத்தும் விதத்தை எங்களால் மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது. இந்துத்துவாவின் விளைவுகளை அவர்களும் அனுபவிக்க வேண்டியிருக்கும். இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக வங்கதேசத்தின் 17 கோடி மக்கள் ஒன்றுபட்டுள்ளனர்” என்று சுமன் கைஸ் கூறியுள்ளார்.
“இந்தியாவுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்” என்று வங்கதேச மாணவர் உரிமைகள் கவுன்சில் தலைவர் ‘பின் யாமின் முல்லா’ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தி டெய்லி ஸ்டார் நாளிதழின் செய்திப்படி, டாக்கா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டங்களில் இஸ்லாமியர் அல்லாத மாணவர்களும் கலந்து கொண்டனர்.
”மதம், ஜாதி, இனம் போன்ற பேதங்களை மறக்க வேண்டிய நேரம் இது. நாங்கள் அனைவரும் வங்கதேச மக்கள், இதுவே எங்களின் அடையாளம்.
நாட்டின் இறையாண்மையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருப்போம். வங்கதேசத்தின் இந்துக்களுக்கு எதிராக பல வகையான சதிகள் நடைபெற்று வருவதை நாங்கள் வெவ்வேறு காலங்களில் பார்த்திருக்கிறோம்,” என்று ஜெகநாத் விடுதியில் தங்கியிருக்கும் மாணவர் ஜாய் பால் கூறியுள்ளார்.
இதனிடையே, டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையரகத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் எந்த அச்சுறுத்தலையும் எதிர்பார்க்கவில்லை, ஆனால் அகர்தலாவில் நடந்த தாக்குதலுக்குப் பிறகு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய உயர் ஆணையரகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என, டாக்கா பெருநகர காவல்துறை துணை ஆணையர் முகமது நூர்-இ-ஆலம், ‘டாக்கா ட்ரிப்யூன்’ நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
இந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ், கைது செய்யப்பட்டதற்கு எதிராக திரிபுராவின் தலைநகர் அகர்தலாவில் உள்ள வங்கதேச துணை ஆனையரகத்திற்கு வெளியே திங்கள்கிழமை நடைபெற்ற போராட்டங்கள் கட்டுப்பாட்டை இழந்தன.
போராட்டக்காரர்கள் குழு, காவல்துறைத் தடுப்புகளை உடைத்து உயர் துணை ஆணையரக அலுவலகத்துக்குள் நுழைந்து சேதப்படுத்தியது.
மேலும், அந்த கட்டட வளாகத்தில் இருந்த ‘வங்கதேச தேசியக் கொடியையும்’ போராட்டக்காரர்கள் கும்பல் அகற்றியது.
அகர்தலாவில் என்ன நடந்தது?
திங்கள்கிழமை மாலை, “வங்கதேசத்தின் துணை உயர் தூதரகத்தில் நடந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது,” என இந்திய வெளியுறவு அமைச்சகம் வருத்தம் தெரிவித்தது.
ஆனால் ‘இந்தத் தாக்குதல் சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது’ என்று வங்கதேசம் இந்த சம்பவத்திற்கு கடுமையாக பதிலளித்துள்ளது.
“திரிபுரா போலீசார் தங்கள் கண் முன்னே கலவரம் நடக்க அனுமதித்துள்ளனர்” என்றும் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
“அகர்தலாவில் உள்ள வங்கதேச துணை உயர் தூதரக வளாகத்தில் நடந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. எந்த சூழ்நிலையிலும் ராஜதந்திர தூதரக சொத்துக்கள் சேதமடையக்கூடாது.
வங்கதேச உயர் ஆணையரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“இந்து சங்கர்ஷ் சமிதி” என்ற பதாகையின் கீழ் அகர்தலாவில் போராட்டம் நடைபெற்றது.
“அகர்தலாவில் உள்ள எங்கள் துணை உயர் ஆணையரக வளாகத்தில் ‘இந்து சங்கர்ஷ் சமிதி’ நடத்திய வன்முறை ஆர்ப்பாட்டம் குறித்து அரசாங்கம் கடும் கோபத்தோடு உள்ளது.
போராட்டக்காரர்கள் வளாகத்தின் கதவை உடைத்து உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் முற்றிலும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டள்ளது.
அகர்தலாவில் என்ன நடந்ததோ, அது ராஜதந்திர தூதரகங்களுக்கான வியன்னா மாநாட்டை மீறுவதாகும்” என்று வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆரம்பத்தில் போராட்டக்காரர்கள் வங்கதேச துணை உயர் ஆணையரக வளாகத்திற்கு வெளியே அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.
ஆனால் பின்னர் “ஜெய் ஸ்ரீ ராம்” என்றும் வங்கதேச எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பத் தொடங்கினர்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதாகவும், முகமது யூனுஸ் அரசு எல்லாவற்றையும் அனுமதிப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
திரிபுராவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் துணைத் தலைவர் சுபால் பௌமிக்கும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.
முகமது யூனுஸிடம் இருந்து நோபல் விருதை திரும்பப் பெற வேண்டும் என்றும் பௌமிக் கூறியிருந்தார்.
திங்களன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்துக்கள் மீதான இத்தகைய தாக்குதல்கள் சகிக்க முடியாதவை.
உலகம் முழுவதும் இந்துக்கள் ஒன்றுபடுகிறார்கள்.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்த தாக்குதல்களுக்கு முகமது யூனுஸ் மக்களைத் தூண்டிவிடுகிறார்” என்று பௌமிக் கூறியிருந்தார்.
வங்கதேசத்தின் துணை உயர் ஆணையரக அதிகாரியிடம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பிப்பதற்காக ஆறு போராட்டக்காரர்கள் அடங்கிய குழு சென்றபோது, மற்றொரு குழு தூதரக வளாகத்திற்குள் நுழைந்தது.