–நஜீப்-
நன்றி 10.11.2024 ஞாயிறு தினக்குரல்
இது சற்றும் நம்ப முடியாத ஒரு கதை. ஆனாலும் உண்மை. மு.கா.வின் செல்வாக்கு மிக்க ஒரு செயலாளராகவும் தலைவர்களில் ஒருவராகவும் செயலாற்றியவர் நிந்தவூர் ஹசனலி. சமூக மற்றும் கட்சி விவகாரங்களில் தலைவருடன் முரண்பட்டதால் அவரை ஹக்கீம் திட்டமிட்ட சதிமூலம் வெளியே தள்ளி விட்டார்.
இவரது வீட்டு விராந்தையில் நாடு அனுரவோடு (ரட அனுரட) என்ற கட் அவுட் ஒன்று வைக்கப்பட்டிருந்த தகவல் நமக்குக் கிடைத்தது. உண்மைத் தன்மையை அறிய நாம் அவரைத் தொடர்பு கொண்டு நேரடியாக் கேட்டோம். ஆம் என்றவர் அதற்கு என்ன பிரச்சினை என்று எம்மைத் திருப்பிக் கேட்டார்.
துவக்கம் முதல் நீங்கள் தலைவர் அஸ்ரஃபுடன் நெருக்கமாக இருந்தவர். உங்கள் இந்தச் செயல் கட்சியைப் பாதிக்காதா என்று கேட்டோம். நிச்சயமாக தாக்கத்தை செலுத்தும்-செலுத்த வேண்டும் என்றவர், நான் ஏன் இப்படிச் செய்தேன் என்பதற்கு அவர் நமக்குத் தந்த விளக்கம், குறிப்பாக கிழக்கு சமூகம் எந்தளவுக்கு மாறிப்போய் இருக்கின்றது என்பதற்கு நல்ல சான்றாக இருந்தது.
முஸ்லிம் தலைவர்கள் சமூக விரோதிகளாக மாறி இருப்பதால் அவர்கள் விரட்டியடிக்கப்பட வேண்டும். அதற்கான இன்றைய ஒரே தெரிவு அனுரதான். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பிருந்தே நான் வீட்டில் அனுரவைக் குடி அமர்த்தி விட்டேன் என்றார் ஹசனலி.