USA அதிபர் தேர்தலில்  ஓட்டளித்த 6.8 கோடி! ஓட்டுச்சாவடிகளில் அலைமோதும் கூட்டம்!!

அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடக்க உள்ள நிலையில், 6.8 கோடி பேர் முன்னதாகவே தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். ஓட்டுச்சாவடிகளில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

உலக நாடுகளின், ‘பெரியண்ணன்’ எனக் கருதப்படும் அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை நடக்கவுள்ளது. அமெரிக்காவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடப்பது வழக்கம்.

தற்போதைய அதிபர் ஜோ பைடனின் பதவிக் காலம் வரும் 2025 ஜனவரியில் முடிவடைவதால், புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாளை நடக்கிறது.

இதில், ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபரும், அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபருமான டொனால்டு டிரம்ப் போட்டியிடுகின்றனர்.

US Election 2024 | Latest News & Analysis | BBC News

தபால் ஓட்டுகள்

ஜனநாயகக் கட்சி சார்பில் ஏற்கனவே தற்போதைய அதிபர் ஜோ பைடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், வயோதிகம் காரணமாகவும், டிரம்புடன் நடந்த விவாதத்தில் பின்னடைவை சந்தித்ததாலும், பைடனுக்கு பதிலாக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

அமெரிக்க வரலாற்றிலேயே, முதல் முறையாக, கருத்துக் கணிப்புகளில், டிரம்பும், கமலா ஹாரிசும் சமநிலையிலேயே உள்ளனர். இதனால், இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 தகவல் சுரங்கம்: உயரமான அதிபர்

அமெரிக்க தேர்தல் சட்டங்களின்படி, வாக்காளர்கள் தங்களுடைய ஓட்டுகளை முன்னதாகவே செலுத்த முடியும். தபால் ஓட்டுகள் அல்லது தனியாக அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடிகளில் நேரடியாக தங்களுடைய ஓட்டுகளை செலுத்த முடியும்.

வானிலை, மருத்துவம், வெளியூர் பயணம் என பல காரணங்களால் தேர்தல் நாளன்று ஓட்டளிக்க முடியாதவர்கள், முன்னதாகவே ஓட்டளிக்கலாம். மேலும் தேர்தல் நாளன்று நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்கவும் இந்த முறையை பயன்படுத்தலாம்.

இந்தத் தேர்தலில், 24.4 கோடி பேர் ஓட்டளிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில், 6.8 கோடி பேர் முன்னதாகவே தங்களுடைய ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறை வித்தியாசமானது.

இங்கு அதிபர் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவது இல்லை. மாகாண அளவில் மக்கள் அளிக்கும் ஓட்டு கணக்கிடப்பட்டு, ‘எல்க்டோரல் காலேஜ்’ எனப்படும் தேர்வுக்குழு வாயிலாக அதிபர் தேர்வு செய்யப்படுவார்.

தேர்வுக்குழு

ஒவ்வொரு மாகாணத்துக்கும் உள்ள மக்கள் தொகையின் அடிப்படையில், அந்தந்த மாகாணத்துக்கு தேர்வுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை இருக்கும்.

இதன்படி, அமெரிக்காவில் உள்ள மொத்தம், 50 மாகாணங்களின் தேர்வுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை, 538. இதில், 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறுபவர், அதிபராக தேர்வு செய்யப்படுவார்.

கமலா ஹாரிஸ் உருக்கம்

தெற்காசியாவில் வெளியாகும், ‘ஜூகர்னாட்’ எனப்படும் ஆன்லைன் ஊடகத்தில் எழுதியுள்ள கட்டுரையில், தன் சிறு வயது அனுபவங்களை, இந்திய வம்சாவளியான துணை அதிபர் கமலா ஹாரிஸ் பகிர்ந்து உள்ளார். தன் தாய் குறித்தும், சென்னைக்கு பயணம் மேற்கொண்டது குறித்தும், தன் தாத்தா உள்ளிட்ட உறவினர்களுடனான சந்திப்பு குறித்தும் அவர் அதில் விளக்கியுள்ளார். அவர் கூறியுள்ளதாவது:தன், 19 வயதில், எந்த ஒரு துணையும் இல்லாமல், அமெரிக்காவுக்கு என்னுடைய தாய் ஷியாமளா படிக்க வந்தார். அவருடைய வாழ்க்கையின் இரண்டு முக்கிய நோக்கங்கள், என்னையும் என் சகோதரி மாயாவையும் நல்லபடியாக வளர்க்க வேண்டும், மார்பக புற்றுநோய்க்கு சரியான சிகிச்சையை உருவாக்க வேண்டும் என்பதாகவே இருந்தது. எங்களுடைய பாரம்பரியத்தை கற்றுத் தந்தார். அதுவே எங்களை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous Story

கருணா - பிள்ளையான் கடும் மோதல்: 3 பேர் படுகாயம்

Next Story

அநுர குமார கையெழுத்திட்டதை காட்ட முடியுமா-டில்வின் சில்வா சவால்