-நஜீப் பின் கபூர்-
நன்றி 03.11.2024 ஞாயிறு தினக்குரல்
கடந்த ஜனாதிபதித் தேர்தல் நடக்கின்ற நேரத்தில் அதில் நாட்டில் புள்ளடிப் புரட்சியொன்று நடக்க இருப்பது பற்றி முன்கூட்டி சொல்லி இருந்தோம். அது பற்றி விரிவாக ஒரு கட்டுரையும் அன்று எழுதி இருந்தோம். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் பத்தே பத்து நாட்கள் இருக்கின்ற போது பாராளுமன்றத்தை சுத்திகரிககும் பணியில் சிறுபான்மை சமூகங்களின் பங்களிப்பு பற்றி இந்த வாரம் போசலாம் என்று தோன்றுகின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும் 17140354 வாக்காளர்கள் தகுதி பெற்றிருக்கின்றார்கள்.
அதில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 79.29 சதவீதமானவர்கள் வரை வாக்களித்திருந்தனர். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பு விகிதம் வீழ்ச்சியடைலாம் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். காரணம் ஜனாதிபதித் தேர்தலில் மக்களிடையே உச்சகட்ட எதிர்பார்ப்பு ஒன்று இருந்தது. ஆனால் இந்தத் தேர்தலில் அது அந்தளவுக்கு இருக்காது என்பதும் எமது கருத்து. இந்த நாட்டில் இருக்கின்ற 17140354. வாக்காளர்களை இன ரீதியில் வகைப்படுத்தினால்
சிங்களவர்கள் 12341054.
தமிழர்கள் 2056842.
முஸ்லிம்கள் 1714035.
இந்திய வம்சவளி 857017.
இதர 171406 என்று
இது ஏறக்குறைய அமைகின்றது.
நாம் ஏன் வாக்காளர்களை இன ரீதியாக இங்கு வகைப்படுத்துகின்றோம் என்றால் பாராளுமன்றத் தேர்தலில் இனரீதியான ஒரு தாக்கமும் இருக்கின்றது. சில இடங்களில் இது குலம் கோத்திரம் என்று கூட செல்வாக்குச் செலுத்தி வருகின்றது. எனவே வேட்பாளர்களின் வெற்றி தோல்வியில் இந்த இனம் மதம் கோத்திரம் என்பன இன்றும் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. வடக்குக் கிழக்கில் ஏறக்குறைய தமிழ் முஸ்லிம் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். அதே போன்று மலையகத்தில் குறிப்பாக நுவரெலியாவில் இந்திய வம்சவளிப்பிரசைகள் செல்வாக்கு இருக்கும்.
இது தவிர மத்திய கொழும்பு ஹாரிஸ்பத்துவ பஸ்சர அப்புதலை கல்கிஸ்ஸ காலி பேருவளை போன்ற இன்னும் பல இடங்களில் அந்த தொகுதிகளில் வெற்றி வாய்ப்பில் சிறுபான்மை ஆதிக்கம் இருந்து வருகின்றது. கடந்த காலத் தேர்தல் முடிவுகளை ஆய்வு செய்து பார்த்தால் இதனை அவதானிக்க முடியும்.
அண்மையில் நடத்த ஜனாதிபதித் தேர்தலின் போது அனுர குமாரவின் வெற்றியில் சிறுபான்மை சமூகங்களின் வாக்குகள் குறிப்பிடத் தக்க அளவில் செல்வாக்குச் செலுத்தி இருக்கின்றது.
வடக்குக் கிழக்கில் கூட அனுர பெற்றிருக்கின்ற வாக்குகளில் இருந்த அவரது அணிக்கு இந்து முறை நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு பிரகாசமான வாய்ப்பு இருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது.
இதே நிலைதான் முஸ்லிம் பிரதேசங்களிலும் காணப்பட்டது. தற்போது அவர்கள் அதிகாரத்துக்கு வந்திருப்பதால் பொதுவாக அந்த அணிக்கு மேலும் செல்வாக்கு அதிகரிப்பது இயல்பானதே. இப்போது பாராளுமன்றத்தை சுத்திகரிக்கின்ற சிரமதான விவகாரத்துக்கு வருவோம்.
நவம்பர் 14ம் திகதி ஊழல் மிகுந்த நமது நாடாளுமன்றத்தை சுத்திகரிக்கின்ற பணி நடக்கின்றது அந்தப் புனிதப் பணியில் வாக்காளர்கள் தமது பங்களிப்பை புள்ளடி மூலம் வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதி அனுர குமாரவின் இசு-வார்த்தை வைரலாகி இன்று நாடுபூராவிலும் அது பேசு பொருளாக இருக்கின்றது.
ஜனாதிபதி அனுர குமார மற்றும் அவர்களது என்பிபி. செயல்பாடுகளினால் மக்கள் குறிப்பாக இளைஞர்கள் கவரப்பட்டிருப்பதால் இன மத மொழி வேறுபாடுகளின்றி அவர்கள் அனுரவை ஆதரிக்கின்ற ஒரு நிலை நாட்டில் பரவலாகத் தெரிகின்றது. இதனை சிறுபான்மை சம்பிரதாய கட்சிகளின் தலைவர்களும் நன்றாக இப்போது அறிந்து வைத்திருக்கின்றார்கள். மூன்றும் மூன்றும் ஆறுதான் என்று கணக்குச்; சொன்னவர்கள் இன்று நடுங்கிப்போய் நிற்க்கின்றார்கள்.
நாம் சில வாரங்களுக்கு முன்னர் சொல்லி இருந்தது போல இந்த பொதுத் தேர்தல் தனிக் குதிரை ஓட்டமாகத்தான் இருக்கின்றது. ஆளும் தரப்பினர் நாடுபூராவிலும் அனுர தலைமையில் மெகா பேரணிகளை நடாத்தி அசத்திக் கொண்டிருக்கின்றனர்.
பிரதான எதிரணியான சஜித் தரப்பினர் கூட ஆங்காங்கே பொக்கட் மீட்டின்களை மட்டுமே நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் சில அரசியல்வாதிகள் இந்தத் தேர்தலில் சஜித்துக்கு வாய்ப்பு இருக்கின்றது என்று சொல்லி தமது வாக்காளர்களை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
கூலிக்கு மாரடிக்கின்ற ஒரு கூட்டம் தான் இன்று எதிர்க் கட்சிகள் சார்பில் பிரச்சாரப் பணிகளை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். பணம் நிறைய வைத்திருக்கின்ற சுயேட்சைக் குழுக்கள் கூட கூலிக்கு ஆள் அமர்த்தி வேலை பார்க்கின்றன. சராசரியாக ஒரு நாளைக்கு கென்வெசிங் பணியில் ஈடுபடுவோருக்கு 2000-3000 வரை ரெட் போகின்றது. அத்துடன் சாப்பாட்டு பார்சலும் வழங்கப்படுக்கின்றது.
சில இடங்களில் போத்தலும் கூட வழங்கப்படுகின்றன. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்போர் பிழைப்புக்கு ஏதும் வழி இல்லாத நிலையில் தொழிலுக்காக அவர்களுக்காக களத்தில் இறங்கி வேலை செய்வதை நாம் குறையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இது மக்களின் பட்டிணியுடன் தொடர்பான ஒரு விவகாரம்.
இந்த நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை சமூகத்தினர் இன்று சிந்தனை ரீதியாக தலைகீழாக மாறி இருக்கின்றார்கள். இது எந்தளவுக்கு சென்றிருக்கின்றது என்றால் ராஜபக்ஸாக்களை மன்னர்கள் போல பார்த்த தெற்கு சமூகம் இன்று அவர்களை துரோகிகளாகவும் தமது சந்ததியினரின் எதிர்கால வாழ்க்கைக்கு உழைவைத்த கூட்டமாகவும்தான் பார்க்கின்றனர்.
இதனால் 87 வருடங்களுக்குப் பின்னர் அவர்களின் சொந்த மண்ணிலே-மாவட்டத்திலே அவர்கள் இன்று தலைமறைவாகி இருக்கின்றார்கள் அல்லது விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றனர் என்ற கூட இதனை நாம் எடுத்துக் கொள்ள முடியும்.
அங்கு கூட ஒரு வேட்பாளரை அவர்களினால் களமிறக்க முடியாது அளவுக்கு அவர்கள் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். இதனால் ராஜபக்ஸாவின் அரசியல் வாரிசாக நாமல் ராஜபக்ஸ கட்சி எடுக்கின்ற மொத்த வாக்கில் நாடாளுமன்றம் நுழையலாம் என்ற எதிர்பார்ப்பில் தேசிய பட்டியலில் தனது பெயரைப் பதிந்திருக்கின்றார். இது எவ்வளவு கேவலம் கெட்ட ஒரு அரசியல் என்பதையும் அவர்களின் அரசியல் வாங்கு ரோத்தையும் இதிலிருந்து நாடு கண்டு கொள்ள முடிகின்றது.
கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக இந்த நாட்டை ஆட்சி செய்தி அரசியல் தலைமைகளும் கட்சிகளும் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளி விட்டிருக்கின்றன. குறிப்பாக ராஜபக்கஸாக்களின் ஆட்சிக்காலத்தில் நாட்டில் ஒரு அராஜக நிலை காணப்பட்டது. அவர்கள் சட்டத்தை துச்சமாக மதித்தனர்.
எனவேதான் கோட்டாபே ராஜபக்ஸ தனது வார்த்தைகளை சட்டமாக எடுத்துக் கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று ஒரு முறை உத்தரவு போட்டுப் பகிரங்கமாகப் பேசியும் இருந்தார். இவர்களது ஆட்சியில்தான் வரலாற்றில் என்றும் இல்லாத அளவில் நாட்டில் சொத்துக்களை அதிகாரத்தில் இருப்பவர்கள் கொள்ளையடிப்பதற்கு கதவுகள் திறந்து கொடுக்கப்பட்டிருந்தது.
அரச கஜானாவில் இவர்கள் கை வைத்ததுடன் நாட்டில் இருக்கின்ற இயற்கை வளங்களை சுராண்டி தமக்கு பணம் சேர்த்துக் கொள்ளும் ஒரு வாய்ப்பையும் இவர்கள் தமது கையாட்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்கள்.
ராஜபக்ஸாக்களின் புதல்வர்களுக்கு அரச கஜானவில் இருந்து தாராளமாப் பணத்தை பெற்றுக் கொள்ளும் வசதிகளும் இருந்தன. இதற்கு சிறந்த உதாரணம்தான் ராஜபக்ஸாவின் இளைய மகன் ரொக்கட் ஏவிய கதை. எந்த ஒரு தொழிலையும் செய்யாது இவர்கள் எப்படி கோடிஸ்வரர்களாக முடிந்தது.?
மேலும் இவர்கள் காலத்தில் தனக்கு வேண்டியவர்களுக்கு இஸ்டம் போல் பணம் சம்பாதித்துக் கொள்ளும் ஏற்பாடுகளும் நாட்டில் இருந்தது. கோட்டா அதிகாரத்தில் இருந்த போது சீனி தேங்காய் எண்ணெய் போன்ற மோசடிகள் மூலம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களைத் தமது சகாக்களுக்குச் சம்பாதித்துக் கொள்ளும் வாய்ப்பு செய்து கொடுக்கப்பட்டது. இப்படி அவர்கள் சம்பாதித்த பணத்தில் ஆட்சியாளர்களுக்கும் பங்கு இருக்கின்றது.
எனவேதான் இவை எல்லாவற்றையும் புதிய அரசு கிளரி எடுக்கும் என்ற அச்சத்தில் ஜனாதிபதி கோட்டா தேர்தலுக்கு முன்னரே நாட்டில் இருந்து தப்பியோடி விட்டார். அவரது தம்பி (டென் பேசன்) பத்தவீதம் என்று அழைக்கப்படுகின்ற பசிலும் அமெரிக்காவுக்கு ஓடிவிட்டார். அவர் மீது எண்ணிலடங்காத ஊழல் குற்றச்சாட்டுக்கள். மல்வானை வீட்டு விவகாரம். பாட்டியின் இரத்தின பொதி (ஆச்சிகே மெனிக் மல்ல) என்பன இவற்றில் நல்ல நகைச்சுவைகள்.
அது மட்டுமல்ல ராஜபக்ஸாக்களுக்கு நெருக்கமாக இருந்த ஜொண்ஸ்டன் மஹிந்தானந்த போன்ற நிறைய அரசியல்வாதிகள் எப்படி சொத்துக்களை சேகரித்தார்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய கோடிக்கணக்கான வரிகளை தமது அதிகாரத்தை வைத்து செலுத்தாமல் இருந்தார்கள் என்ற விவகாரங்கள் எல்லாம் இப்போது கேள்விக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றன.
இது தவிர மத்திய அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்கள் அதிகாரிகள் வரை ஊழலுக்கு நாடு இவர்கள் காலத்தில் பழக்கப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் இது பற்றி நீதி மன்றங்களில் விசாரணகளுக்கு உட்படுத்தப்பட்டாலும் அதிகாரத்தில் இருந்த தலைவர்கள் வழங்கி இருந்த சலுகைகள் காரணமாக அந்த விசாரணகள் உரிய முறையில் நடத்த முடியாத ஒரு நிலை நாட்டில் இருந்தது.
இதனால் நாடாளுமன்றத்தில் இருந்த அனைவரும் போல அரச சொத்துக்களை கொள்ளை அடித்து பணம் சம்பாதிக்கின்ற நிலை நாட்டில் தொடர்ந்தது. மக்கள் கொதித்து ராஜபக்ஸாக்களை விரட்டியடித்த போதும் அந்த இடத்துக்கு ராஜபக்ஸாக்களில் முகவராக வந்த ஜனாதிபதி பதவிக்கு வந்த ரணில் காலத்திலும் இந்த கொள்ளையர்களுக்கு நல்ல பாதுகாப்பு இருந்தது. அன்று ஜனாதிபதியாக இருந்த ரணில் ஏற்கெனவே மத்திய வங்கிக் கொள்ளையுடன் சம்பந்தபட்டிருந்தார்.
மத்திய வங்கி ஆளுநராக அவர் கொண்டு வந்த அர்ஜூன் மஹேந்திரன் மத்திய வங்கியையே கொள்ளையடித்துக் கொண்டு தனது நாடான சிங்கப்பூருக்குத் தப்பி ஓடி விட்டார். அர்ஜூன மஹேந்திரன் தப்பியோடும் போது ரணிலிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்ட போது அவர் ஒரு நல்ல நம்பிக்கையான மனிதன்.
அவர் எனக்கு விசுவாசமானவர். ஒரு திருமண வைபவத்தில் கலந்து கொள்ளவே அவர் அங்கு போகின்றார். அவர் திரும்பி வருவார் என்று ரணில் உறுதிமொழி கொடுத்தார். ஆனால் இன்று வரை மத்திய வங்கியின் பிரதான கொள்ளையன் ரணிலின் நல்ல நண்பன் நாடு திரும்பவில்லை.
அவரது மருமகன் அலசியசும் கோடிக்கணக்கில் அரசுக்குச் செலுத்த வேண்டி வரிகளை செலுத்தாது அதிகாரத்தில் இருந்தவர்களின் பாதுகாப்புடன் நாட்டில் சுதந்திரமாக நடமாடித்திரிந்தார். புதிய ஜனாதிபதி அதிகாரத்துக்கு வந்த பின்னர்தான் நீதி விளித்துக் கொண்டு தனது பணிகளைச் செய்யத்துவங்கி இருக்கின்றது.
இப்போதுதான் அரசியல்வாதிகள் குடிமக்களின் சொத்துக்களை எந்தளவுக்குக் கொள்ளை அடித்து பணம் சம்பாதித்திருக்கின்றாhகள் என்பது குடி மக்களுக்குத் தெரிய வந்திருக்கின்றது. இதனால் இன்று மக்கள் கடந்த ஆட்சியாளர்கள் மீது எந்தளவுக்குக் கோபத்தில் இருக்கின்றார்கள் என்பது ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் இருந்து தெரிய வந்திருக்கின்றது.
இந்தப் பின்னணியில் ஜனாதிபதி அனுர குமாரவில் பாராளுமன்றத்தை சுத்திகரிக்கும் சிரமதானம் என்ற கதை மக்கள் மத்தியில் வைரலாகி இருக்கின்றது. எனவே கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்தவர்கள் குறிப்பாக ராஜபக்ஸாக்கள் மற்றும் ரணில் போன்றவர்கள் அரசியல் யாப்பைக் கூட துச்சமாக மதித்து நாட்டில் ஆராஜக ஆட்சியை முன்னெடுத்து வந்தார்கள் என்பது இன்று நிரூபனமாகி வருகின்றது.
இதனால் அன்று ஊழல் பேர்வளிகளினாலும் மேசடிக்காரர்களினாலும் பகல் கொள்ளையர்களினாலும் நிரம்பி வழிந்த பாராளுமன்றத்தை துப்புரவு செய்யும் பெரும் சிரமதானம் வருகின்ற 14ம் திகதி நடக்கின்றது. அதில் குடி மக்கள் தமது பங்களிப்பை வழக்க வேண்டும் என்று ஜனாதிபதி அனுர கேட்டிருக்கின்றார்.
அதிகாரத்தில் இருந்த ராஜபக்ஸாக்கள் மற்றும் ரணில் மட்டும்தான் குற்றவாளிகளா என்று பார்த்தால் அங்க ஒரு நீண்ட பட்டியில் இருக்கின்றது. அது பற்றி இப்போது பார்ப்போம். உச்ச அதிகாரத்தில் இவர்கள் தவறுகளைச் செய்கின்ற போது அவர்களுக்கு நெருக்கமாக இருந்தவர்களும் அச்சமின்றி அட்டகாசங்களைச் செய்தார்கள்.
அதனைப்பார்த்த அதிகாரிகள் சிற்றுழியர்கள் வரை இது நீண்டு கொண்டு சென்றது. இதனால் இந்த ஊழல் ஆளும்தரப்பு மட்டும் செய்தது என்று இல்லை. எதிர்க் கட்சியில் இருக்கின்ற அரசியல்வாதிகள் ‘பார்லைசன்’ போன்ற சலுகைகளைப் பெற்றுக் கொண்டு எதிரணில் இருந்தாலும் தவறான வேலைகளைச் செய்து வந்திருக்கின்றார்கள் அது பற்றி மேலும் சற்று விரிவாகப்பார்ப்போம்.
தமது தரப்பில் துரோகம் இழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை விரட்டி அடிப்பதில் பேரினம் குறிவைத்து அடித்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் சிறுபான்மை சமூகங்கள் தமக்குத் துரோகம் இழைத்தவர்களை அரசியல் இருந்து எப்படிக் களை பிடுங்கப் போகின்றார்கள்?
தமிழ் அரசியல்வாதிகளும் தலைமைகளும் இதே துரோங்களை வேறு வழிகளில் செய்து வந்ருக்கின்றாhகள். இனப்பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாக நாள் குறித்து சம்பந்தன் சுமந்திரன் போன்றவர்கள் தமிழர்களை ஏமாற்றி கொழும்பு அதிகார வார்க்கதுடன் ஒத்துழைத்து அதில் இலாபம் சம்பாதித்திருக்கின்றார்கள். அண்மையில் பார்லைசன் விவகாரம் இதில் முக்கியமாகப் பேசப்படுகின்றது. எனவே அவர்களுக்கு இனத்தின் நலன்களைவிட தன்னலன்தான் இங்கு முக்கியமாக இருந்திருக்கின்றது.
இந்த பார்லைசன் பெற்ற வடக்கு கிழக்கு அரசியல்வாதிகளில் மேலும் சில நாமங்கள் இன்னும் வெளியே வராமல் மறைவாக இருக்கின்றது. முஸ்லிம் அரசியல்வாதிகள் குறிப்பாக சமூக நலனுக்கான அரசியல் கட்சிகளை வைத்திருப்போரின் அட்காசங்கள் மிகவும் கொடியதாக இருக்கின்றது. சமூகத்துக்கு எதிரான இருபதற்கு கைதுக்கியது தொடர்பாக கேட்டால் தலைவர் சொல்லித்தான் செய்தோம் என்று அவர்கள் வாக்குமூலம் கொடுக்கின்றார்கள். இதற்கு காசுவாங்கிய கதைகளும் இருக்கின்றன.
இப்படியான தலைவர்கள் தேர்தல் காலங்களில் எப்படி எல்லாம் டீல் அரசியல் செய்தார்கள். பணம் சம்பதித்தார்கள் என்பதும் கட்சிகளில் பெயரைச் சொல்லி அரபு நாடுகளில் வசூல் பண்ணி அதனை வரும் வழியில் இந்தியாவில் போய் மூலதனமிட்டது பற்றிய கதைகள் எல்லாம் வெளியில் வராமல் இருக்கின்றன. இது பற்றி சமூகம் எந்தளவுக்கு புரிதலுடன் இருக்கின்றது என்று தெரியாது.
புத்தளத்தில் சமூகப் பிரதிநிதித்துவத்துக்கு கூட்டணி போட்டு தேர்தலில் வெற்றி பெற்ற தங்கங்கள் பார்த்த வேலைகளை உலகமே அறியும். அவர்கள் இன்று தமது தலைவர்களை தூள் வியாபாரிகள் என்று பகிரங்க மேடைகளில் பேசி வருகின்றார்கள். எனவே தமிழ் முஸ்லிம் வாக்காளர் 14ம் திகதி நடக்கின்ற சிரமதானத்தில் எப்படி நடவடிக்கைகைள மேற்கொள்ளப் போகின்றார்கள். நேர்மையாக உழைக்கக் கூடிய எத்தனை பேரை அங்கு அனுப்பி வைக்கப் போகின்றார்கள் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு வழங்கப்பட்ட ஒரு புள்ளடியிலே ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள் அறுபது பேர்வரை இந்த முறை தமக்கு வாய்ப்பு இல்லை என்று தானாகவே ஒதுங்கி இருக்கின்றார்கள். எஞ்சி இருப்பேரும் 14ம் திகதி மக்கள் வழங்குகின்ற புள்ளடியால் ஓரம்கட்டப்பட்டுவார்களோ தெரியாது. ஆனாலும் தம்மிடம் இருக்கின்ற பணப் பலத்தால் இவர்களில்; சிலர் மீண்டும் நாடாளுமன்த்துக்கு நுழையும் வாய்ப்பும் இருக்கின்றது என்று நாம் முன்கூட்டிச் சொல்லி வைக்கின்றோம்.