-நஜீப்-
நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல்
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதால் யாழ்ப்பாணம் நீதி மன்றத்துக்கு வரமுடியாது என்று முன்னாள் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ஸ தெரிவித்திருக்கின்றார். அவரது சட்டத்தரணி ரொமேஸ் யாழ் நீதி மன்றத்தில் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இதனைத் தெரிவித்திருக்கின்றார்.
2011 ஊடகவியலாளர்களான லலித், குகன், காணாமல் போனது தொடர்பான சாட்சி வழங்குமாறு அவரை நீதி மன்றம் கேட்ட போது உயிராபத்து என்று காரணம் காட்டி அங்கு அவர் ஆஜராகவில்லை.
இதற்கு முன்னரும் அவரை நீதி மன்றம் அழைத்த போது அன்றும் தனக்கு சுகயீனம் என்று ஒரு முறையும் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் இதே போன்று உயிராபத்து என்றும் சொல்லி நீதி மன்றத்தில் ஆஜராவதை தவிர்த்து வந்திருக்கின்றார்.
இந்த முறை யாழ்ப்பாணம் தவிர்ந்த எந்த இடத்திலும் தன்னால் சாட்சி வழங்கு முடியும் என்று அவரது சட்டத்தரணி நீதி மன்றத்தில் தெரிவித்திருக்கின்றார். இந்த லலித் என்பவர் முன்னாள் ஜேவிபி செயல்பாட்டாளர்.
பின்னர் அவர் முன்னிலை சோஸலிச கட்சியில் முழுநேர உறுப்பினராக பணியாற்றியவர். லலித் சிறையில் இருக்கும் போது குகனைச் சந்தித்து பின்னர் அவருடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.