பொதுத் தேர்தலில் தனிக்குதிரை ஓட்டம்!

-நஜீப் பின் கபூர்-

(நன்றி 27.10.2024 ஞாயிறு தினக்குரல்)

நமது வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த ஜனாதிபதித் தேர்தல் பற்றியும் அதன் முடிவுகள் பற்றியும் நாம் திட்டவட்டமாக பல மாதங்களுக்கு முன்னரே வாசகர்களுக்கு சொல்லி இருந்தோம். அந்த செய்திகள் அச்சொட்டாக அப்படியே நடந்து முடிந்திருக்கின்றது.

இதனை நாம் முன்பும் பலமுறை ஞாகப்படுத்தி வந்திருக்கின்றோம். அதற்குக் காரணம் நமது தகவல்கள் செய்திகள் நம்பகத்தனமானது துல்லியமானது என்பதனை வாசகர்களுக்கு மீண்டும் மீண்டும் ஞாபகப்படுத்துவதுதான் எமது நோக்கம்.

இப்போது சூட்டோடு சூடாக 2024 பொதுத் தேர்தல் வந்திருக்கின்றது. அதன் முடிவுகள் தொடர்பாக நாம் எந்த ஆரூடங்களையும் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. பிரதான எதிரணியே நமது நிலையை அறிந்து அடக்கமாக பேசி வருகின்றனர்.

முன்பொல்லாம் அனுரவைப் பற்றியும் ஜேவிபி-என்பிபி பற்றியும் அபாண்டங்களைக் கட்டவிழ்த்து விட்ட அரசியல்வாதிகளே இப்போது எதுவுமே நடக்காதது போல ஜனாதிபதி அனுரவுடன் இணக்க அரசியலுக்கு பகிரங்க அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரச ஊடகங்களும் தனியார் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களும் மட்டுமல்ல அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்கள் கூட என்பிபி-ஜேவிபி மற்றும் அதன் தலைவர்களுக்கு எதிராக நாகூசாது அபாண்டங்களை பகிரங்க மேடைகளில் பேசிய குறிப்பாக முஸ்லிம் தனித்துவத் தலைவர்களின் கருவரை கதைகள் மற்றும் என்பிபி. அதிகாரத்துக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு நோன்பு கிடையாது பெருநாள் கிடையாது என்றெல்லாம் சொன்னவர்கள் இன்று அப்படியான கதைகளைச் சொல்வதில்லை.

எனவே ஆளுதரப்புக்கு எதிராக இப்போது விசமத்தனமான கருத்துக்கள் கணிசமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. அல்லது பொய்காரர்கள் அடங்கிப் போய் நிற்கின்றார்கள். செய்தி ஊடகங்கள் பலவும் இன்று அரசின் கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றது.தனியார் ஊடகங்களும் கட்டுப்பாட்டுடன் காரியம் பார்க்க வேண்டிய நிலை. இந்தப் பின்னணியில்தான் தேர்தல் நடக்கின்றது. இன்று என்பிபி.ஜேவிபி பற்றி கட்டுக்கதைகள் எல்லாம் கட்டுக்குள் வந்து விட்டன.

நாம் வெற்றி பெற்றாலும் ஜனாதிபதியின் தலைமைத்துவத்துக்குக் கட்டுப்பட்டு செயலாற்ற இருப்பதாகவும் சஜித்தே பல இடங்களில் பகிரங்கமாகப் பேசியும் வருகின்றார். இந்தத் தேர்தலில் சஜித்துக்குத்தான் வெற்றி அவர்தான் பிரதமர் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய சில அரசியல்வாதிகள் இன்றும் பேசி வருகின்றார்கள். இது எஞ்சி இருக்கின்ற சிறுதொகை வாக்காளர்கள் தம்மிடமிருந்து விலகிப் போகாமல் இருப்பதற்கு அவர்கள் காட்டும் கணக்கு. இதில் தான் அவர்களது விருப்பு வாக்குகள் தங்கி இருக்கின்றன.

ஆனால் இந்த நாட்டில் இருக்கின்ற சிறு குழந்தைக்கும் அனுர தலைமையிலான மொட்டுக் கட்சிதான் இந்தத் தேர்தல் களத்தில் தனிக்குதிரையாக நிற்கின்றது என்பது நன்றாகத் தெரியும். கட்சிகளை மதமாகவும் அதன் தலைவர்களை சமயப் பெரியார்கள் போல நினைத்துக் கொண்டிருக்கின்ற ஒரு சிறு கூட்டம் இன்றும் எல்லா இனங்களிலும் இருக்கின்றன.

எனவே என்னதான் குடிகளுக்கு தூரோகம் செய்தவர்கள் தேர்தலுக்கு வந்தால் அவர்களுக்கும்  குறிப்பிட்ட ஒரு தொகை ஆதரவாலர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள். மேலும் பணமும் நமது தேர்தலில் தனது ஆதிக்கத்தை காட்டுவது வழக்கம். அதற்கும் ஒரு கூட்டம் பின்னால் திரிவார்கள். இப்படியான நிலையில் அவர்களின் உணர்வுகளும் மதிக்கப்பட வேண்டி இருக்கின்றது.

பொதுவாக நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடந்த கையோடு நாடாளுமன்றத் தேர்தல்  நடக்கின்ற போது ஆளும் தரப்புக்குத்தான் வாய்ப்புக்கள் அதிகம். 2024 பொதுத் தேர்தலிலும் களம் அப்படித்தான்  தெளிவாகத் தெரிகின்றது. எனவே பிரதான எதிரணியான தேசிய மக்கள் சக்தியினர் இன்று கலைத்துப் போய் இருக்கின்றார்கள்.

இதற்கிடையில் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து பிரதான எதிரணியான சஜித் அணியில் அமைதியின்மையும் குழப்பங்களும் காணப்படுகின்றது. வேட்புமனுவில் கையொப்பப் போட்ட பலர் தேர்தலில் இருந்து ஒதுங்கி இருக்கின்றாhகள். பலர் தேசியப்பட்டியலுக்கு இன்னும் அடிபிடிப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு நல்ல உதாரணம் நடிகை தமிதா அவர் இன்று காட்சி தாவி இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

தனக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள் என்று கருதுகின்ற தனது கூட்டணியில் இருக்கின்ற முக்கிய தலைவர்கள் பலரை சஜித் தேசிய பட்டியலில் கட்டிப் போட்டிருப்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. தேர்தலில் தனக்குக் கிடைக்கின்ற ஆசனங்களை வைத்து அவர்களை அவர் களத்தில் இருந்து வெளியேற்றிவிடவும் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. தனது கட்சியில் இருக்கின்ற முக்கியஸ்தர்களை அந்த மாவட்டங்களில் தலைமை வேட்பாளர்களாக் கொண்டு வரும் நோக்கில்தான் டலஸ் போன்றவர்களுக்கு அங்கு வேட்பு மனுக்கிடைக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலில் 5564239 வாக்குகளைப் பெற்ற சஜித் அதனைத் தொடர்ந்து வந்த பொதுத் தேர்தலில் அதனை விட அரைப்பங்கு குறைவாக அதாவது 2771984 வாக்குகளை மட்டுமே பெற்றதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்தத் தேர்தலிலும் அது போன்ற ஒரு நிலைதான் சஜித் தரப்பினருக்கு ஏற்படப் போகின்றது. அவரை ஆதரித்த பல கட்சிகள் இந்தத் தேர்தலில் தனிக்குடித்தனம் போய் இருக்கின்றன.

வடக்குக் கிழக்கில் ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு கிடைத்த வாக்குகள் எப்படியும் இந்த முறை அவருக்குக் கிடைக்கப் போவதில்லை என்பதும் தெரிந்த விடயமே. இந்தப் பின்னணியில் அவருக்குப் பிரதமர் வாய்ப்பு என்பது பகல் கனவுவாகத்தான் இருக்க முடியும்.

ஐக்கிய மக்கள் சக்தி தனக்கு ஜனாதிபதித் தேர்தலில் கிடைத்த வாக்கைவைத்து ஆசனங்களை கணக்குப் பார்ப்பது ஒரு முட்டால்தனமான வேலை. மேலும் தேர்தலின் பின்னர் அந்த அணியில் இருந்து வெற்றி பொறுகின்ற பலர் ஜனாதிபதி அனுரவுக்கு ஆதரவாக செயல்பட ஏற்கெனவே தயாராக இருக்கின்றார்கள். எனவே வருகின்ற பொதுத் தேர்தலில் எதிரணியில் சஜித்துக்குத்தான் அதிக ஆசனங்கள் கிடைக்கும். அப்படி இருந்தாலும் அது ஒரு பலயீனமான எதிரணியாகத்தான் நாடாளுமன்றத்தில்  இருக்கும்.

காரணம் அனுர தரப்புடன் தாக்குப்பிடிக்கக் கூடிய ஆளுமை சஜித்திடம் சிறிதளவும் கிடையாது என்பது நமது வாதம். இது அந்த அணியில் இருக்கின்றவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும் இந்தத் தேர்தலில் அவருடன் இருந்தால்தான் தலை தப்பும் என்று தன்னலத்துக்காகத்தான் அவருடன் கூட்டணியாக பல கட்சிகள் இருக்கின்றார்கள் தனி நபர்களாக அந்தக் கட்சியில் இருப்போரின் நிலையும் அதுவாகத்தான் இருக்கின்றது.

இப்போது முன்னாள் ஜனாதிபதியின் சுயேச்சை அல்லது யானை மொட்டு சகாக்களின் நிலை என்ன என்று பார்த்தால் அவர்களும் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமக்குக்கிடைத்த வாக்குகளை வைத்துத்தான் இந்தத் தேர்தலில் ஆசனங்களைக் கணக்குப் போடுகின்றார்கள் ஆனால் அதுவும் ஒரு தப்பான கணக்காகத்தான் அமையப் போகின்றது. அவர்கள் தரப்பிலும் கணிசமான வீழ்ச்சியே இந்தப் பொதுத் தேர்தலில் அமைய இருக்கின்றது. நமது கணக்குப்படி அதுவும் அரைப்பங்காக வீழ்ச்சி  காணும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்-கூறுனிறோம்.

இப்போது மொட்டுக் கட்சியின் நிலை என்ன என்று பார்த்தால் அது கசங்கிப் போய் இருக்கின்றது. சிதைந்து போன மொட்டை இந்தத் தேர்தலில் ஒருபோதும் சீர்செய்ய முடியாது. அவர்களுக்கு மாவட்ட ரீதியாக நேரடியாக வெற்றி பெற்று ஆசனங்களை பெற முடியாது போனாலும் தேசிய பட்டியலில் இருந்து ஒரிரு ஆசனங்களை எதிர்பார்க்க முடியும். அப்படி வந்தால் அதிலும் நாமல் ராஜபக்ஸாவுக்குத்தான் முதலிடம்-முன்னுரிமை என்பதும் உறுதி. அங்கு வாரிசு அரசியலை ஒழித்துக் கட்டுவதாக இருந்தால் அது குடிமக்கள் கரங்களில்தான் இருக்கின்றது.

இது தவிர தெற்கில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் என்று பல தரப்புக்கள் தேர்தலில் நின்றாலும் அவற்றில் எதுவும் பெறிதாக சாதிக்கப் போவதில்லை. என்றாலும் அதிஸ்டவசமாக சில சில்லறைக் கட்சிகளுக்கு குழுக்களுக்கு ஆங்காங்கே ஓரிரு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள ஒரு சிறு வாய்ப்பும் இருக்கத்தான் செய்கின்றது.

இப்போது தெற்கிற்கு வெளியே வடக்குக் கிழக்கில் என்ன நடக்கின்றது என்று பார்ப்போம். எப்படியும் வடக்குக் கிழக்கில் அங்கிருக்கின்ற தமிழ் தரப்புக்கள் இருபது (20) வரையிலான ஆசனங்களைப் பெற்றுக் கொள்ளும். முன்பு திறண்டிருந்த அடம்பன் கொடிபோல் இருந்த தமிழ் அரசியல் இயக்கம் இன்று சிதருண்டு நிற்கின்றது. இது எந்த வகையிலும் தமிழ் மக்களுக்கு ஆரோக்கியமான ஒரு விடயமாக இருக்கப் போவதில்லை. ஆனாலும் இந்தப் பின்னணியில்தான் தமிழர்கள் அங்கு தேர்தலைச் சந்திக்கின்றார்கள்.

தமிழரசுக் கட்சியை அந்தக் கட்சியின் தலைவர்களே பலயீனப்படுத்தியதன் விளைவுதான் இது. இந்த அவல நிலைக்கு பிரதான காரணியாக இருந்தவர் சுமந்திரன் தான் என்பது எமது அவதானம். அடுத்து சம்பந்தன் மற்றும் மாவையுடன் சிறீதரனின் பலயீனங்களும் இதற்குப் பொறுப்பு சொல்ல வேண்டும். தேர்தல் களத்தில் இருக்கின்ற பல கட்சிகளுக்கு அங்கு ஒரிரு ஆசனங்கள் இந்த முறை கிடைக்கும் என்பிபி. க்குக் கூட அங்கு ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள நல்ல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன என்றுதான் நாம் நம்புகின்றோம்.

அடுத்து வடக்குக் கிழக்கில் இந்த முறை சில இடங்களில் முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும் இன்னும் சில இடங்களில் தனித்தும் போட்டியிடுகின்றன. இதில் அவர்களுக்கு சில அனுகூலங்களும் பிரதி அனுகூலங்களும் இருக்கின்றன. ஆனால் இதில் அதிக பாதிப்புக்களை எதிர் நோக்குவது சஜித்தான் என்பது தெளிவு.

உதாரணத்துக்கு திகாமடுல்ல (அம்பாறை) மாவட்டத்தில் அனுர, சஜித், ஹக்கீம், ரிசாட், ரணில் மற்றும் தமிழ் தரப்பினர் இடையே ஒரு போட்டி நிலை இருக்கின்றது. இது ஒரு சமானற்ற நிலையில் இருந்தாலும் வாக்குகள் பிரிவதால் முஸ்லிம் பிரதேசங்களில் என்பிபி.க்குக் கிடைக்கின்ற வாக்குகள் கடந்த ஜனாதிபதித் தேர்தலை விட இந்த முறை அதிகரிக்கும் சாத்தியம் இருக்கின்றது. இதனால் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் வெற்றி பெற்ற சில மாவட்டங்கள் கூட இந்த முறை அவரிடமிருந்தது கை நழுவிப் போகின்ற ஒரு நிலையும் காணப்படுகின்றது. இது திகாமடுல்லையிலும் நடக்கும்.

அப்படி நடந்தால் போனஸ் ஆசனம் என்பிபி.க்குப் போவது தவிர்க்க முடியாது. காரணம் அம்பாறை தேர்தல் தொகுதியை அவர்கள் மிகப் பெரும் வித்தியாசத்தில் இந்த முறை வெற்றி கொள்வார்கள். நாட்டிலே அதிகமான கட்சிகளும் சுயேச்சைகளும் இந்த மாவட்டத்தில்தான் போட்டியிடுகின. அதில் வாக்குகள் பிரிவதும் பிரதான-செல்வாக்கான கட்சிகளுக்கு அது வாய்ப்பாக அமையும். இந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் என்பிபி. கடும் தாக்கத்தை செலுத்தும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம். கல்முனையில் ஹரிசுக்கு வாய்ப்புக் கொடுக்காமல் விட்டது அங்கு மு.காவுக்கு கடும் பின்னடைவைக் கொடுக்கும் என்று நாம் நம்புகின்றோம்.

திகாமடுல்ல என்பது முஸ்லிம் தனித்துவ அரசியலில் ஒரு மத்திய நிலையம். இன்று அங்கு ஹக்கீம் ரிசாட் சிலிண்டரில் வரும் அதாவுல்ல பிரதான போட்டியாளர்களாகத் தெரிந்தாலும் அவர்களுக்கு திசைகாட்டி இந்த முறை நல்ல சவாலைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. அங்கு தழிழர்களுக்கு குறைவான வாக்குகள் இருந்தாலும் கடந்த காலங்களில் அவர்கள் ஐக்கியமாக களமிறங்கிய சந்தர்ப்பங்களில் அங்கும் அவர்களுக்கு பிரதிநித்துவங்களை வென்றெடுக்க முடியுமாக இருந்தது. இதற்கு ஏறக்குறைய சமாந்திரமான ஒரு நிலைதான் திருமலையிலும் இன்று காணப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஒட்டு மொத்த சிறுபான்மை அரசியல் தலைமைத்துவங்களும் இந்தப் பொதுத் தேர்தலில் ஆட்டம் காணத்துவங்கி இருக்கின்றது. இளசுகள் இனவாத சிந்தனைகளுக்கு அப்பால் அனுரகுமார மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணமாக இருக்கின்றது. இதனை தமிழ் மக்களின் பிரதான ஒரு அரசியல்வாதியே ஜனாதிபதி அனுரவை சந்தித்த போது நேரடியாகவே அவரிடம் கூறியும் இருக்கின்றார். இது பற்றிய ஒரு குறிப்பை நாம் கடந்த இதழிலும் சொல்லி இருந்தோம்.

Previous Story

இஸ்ரேலுக்கு தான் சேதாரம்! எங்ககிட்ட இருக்கு ஆதாரம்! நாங்க தான் வல்லரசு.

Next Story

முதல் திருநங்கை தேர்தலில் போட்டி!