பொதுத் தேர்தலுக்கான கூட்டணி போடுவதில் இணக்கமும் முரண்பாடும்

-நஜீப் பின் கபூர்-
நன்றி: 06.10.2024 ஞாயிறு தினக்குரல்

2024 ஜனாதிபதித் தேர்தலில் வாய்ப்புக்கள் பற்றி நாம் முன்பு சொல்லி இருந்தோம். 2024 பொதுத் தேர்தலிலும் என்ன நடக்கப் போகின்றது என்றும் நாம் கடந்த வாரமே சொல்லி இருந்தோம். அதே போன்று அனுர குமாரவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் அதற்கு இருந்த நல்ல வாய்ப்புக்களையும் நாம் நெடுநாட்களுக்கு முன்னர் அரசியல் தலைமைகளுக்குச் சுட்டிக் காட்டி இருந்தோம்.

ஆனால் அவர்கள் தமக்குத்தான் வாய்ப்பு என்று அதித நம்பிக்கையில் இருந்து இன்று மூக்குடை பட்டிருக்கின்றார்கள் – வாய்ப்பைத் தவறவிட்டிருக்கின்றார்கள். அதே போன்று ஜனாதிபதித் தேர்தல் கூட்டல் கழித்தல்களைப் பார்த்து நாம் அன்று சொன்ன மொகா கூட்டணியை அமைத்தால் நாடாளுமன்ற அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும் என்று ஒரு கருத்து இன்று இருக்கின்றது. இது காலங் கடந்த பண்டம் போல ஒரு நிலைதான்.

ஜனாதிபதி அனுராவுக்கு எதிரான கூட்டணி பற்றி அதிக ஆர்வமாக இருந்தவர்கள்தான் சஜித் தரப்பினர். இன்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் ரணில் தரப்பினர் பலாத்காரமாக பொதுத் தேர்தலில் கூட்டணிக்கு அழைத்து வம்பு பண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த கூட்டணி தொடர்ப்பில் தலைவர் சஜித் கண்டு கொள்ளவில்லை.

அப்படி ஒரு கூட்டணி பற்றி பேசுவதாக இருந்தால் முதலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ரணில் வெளியே போக வேண்டும் என்று சஜித் உறுதியாக இருந்து விட்டார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் அந்தக் கூட்டணியில் ஆட்கள் இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் ஐதேக.வை நெருக்கடிக்கு ஆளாக்கி இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டவர் ரணில் என்பதனை எவரும் மறுக்க முடியாது. ஆனாலும் சஜித் அணியில் ரணில் கையாட்கள் பல பேர் இருக்கின்றார்கள்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு சஜித் அணியில் வந்து சேர்ந்தவர்கள் அல்லது முன் கூட்டி அங்கு இருந்தவர்கள் தமது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்காக அங்கு குடித்தனம் நடாத்தி வருகின்றார்கள். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் இது பற்றி இப்படி ஒரு கருத்தை சொல்லி இருந்தார். சஜித் அணியில் இணைந்திருந்த பெரும்பாலானவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் அவரது வெற்றிக்கு உரிய பங்களிப்பை செய்யவில்லை. அது இருத்தி ஐந்து சதவீதம் (25) கூட அமையவில்லை.

சஜித் தோற்றுப் போக அதுதான் முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தது. ரிசாட் கருத்தில் நமக்கும் உடன்பாடு இருக்கின்றது. அந்த அணியில் இன்றும் இருப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்புரிமையை பிரதான இலக்காக வைத்துத்தான் அங்கு இருக்கின்றார்கள்-கூட்டணி வைத்திருக்கின்றார்கள். தேர்தலில் கரை சேர்ந்தால் அதன் பின்னர் அவர்கள் பல்டி வழக்கம் போல அங்கு இருக்கின்றது.

தற்போது சஜித் கூட்டணியில் இருக்கின்ற பலர் இப்போதிருந்தே ஜனாதிபதி அனுர குமரவின் புகழ்பாட ஆரம்பித்திருக்கின்றார்கள். அது ஏன் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ரணில் அதிகாரத்தில் இருக்கின்ற போது சஜித்துக்கு எதிராக வசைபாடி  ஏலனம் செய்த வஜிர, ஹரின், மனுஷ, ரங்கே போன்றவர்கள் என்ன முகத்தை எடுத்துக் கொண்டு சஜித் அணியில் வந்து இணைய வருகின்றார்களோ தெரியாது.

Sajith Premadasa pledges to abolish executive presidency if elected - Sri Lanka

எனவே அவர்கள் கூட்டணி விடயத்தில் சஜித் கடுமையாக நடந்து கொள்வது நியாயமானதே. அதே போன்ற தேர்தலில் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டு பல்டியடிக்க இருப்பவர்கள் பற்றியும் சஜித்துக்குத் தெரியும். எனவே அவர்கள் விடயத்திலும் அவர் தனது பிடியை இருக்க வேண்டும்.

சஜித் அணியில் இணைந்து கொண்டால்தான் தமக்கு நாடாளுமன்ற உறுப்புரிமை பற்றி சிந்திக்க முடியும் அல்லது இந்தத் தேர்தலில் போட்டியிடுவது வேஸ்ட் என்பது பெரும்பாலான எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியும். எனவேதான் அந்த அணியில் வந்து இணைந்து கொள்ள பலர் முன்டியடிக்கின்றார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பது போல இந்த முறை அந்த முயற்சியும் சுலபமாக இருக்கப் போவதில்லை.

2019 கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் 5564239 வாக்குகள் பெற்றிருந்தார். அதன் பின்னர் 2020ல் கடைசியாக நடைபெற்ற பொதுத் தேர்தலில் இதே கூட்டணி வைத்திருந்த சஜித் பெற்ற மொத்த வாக்குகள் 2771984. வருகின்ற பொதுத் தேர்தலிலும் இதுதான் நடக்கப் போகின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மொட்டு கட்சியில் இருந்து வந்து ரணிலுடன் இணைந்து கொண்டவர்கள்தான் இன்று சஜித்-ரணில் கூட்டணி முயற்சியால் பெரிதும் நெருக்கடிகளுக்கு ஆளாகின்றார்கள். அதனால்தான் இன்று மொட்டுக் கட்சியில் இருந்தவர்களில் பலர் ஒரு புதிய கூட்டணியை அமைக்கின்ற முயற்சியில் இருக்கின்றார்கள். மொட்டுக் (நாமல்) கட்சியினரும் பல்டிக்காரர்களை தம்முடன் இணைத்துக் கொள்ளத் தயாராக இல்லை என்று ஏற்கெனவே அறிவித்து விட்டார்கள். இது எவ்வளவு தூரம் நடைமுறையாகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாமல் தலைமையிலான மொட்டுக் கட்சியினர் தமது அணியில் இருந்து அதிகளவான இளைஞர்களக் களமிறக்க இருப்பதாகத் தெரிகின்றது. தனது சொந்நத மாவட்டமான ஹம்பந்தோட்டையில் நாமல் படுதோல்வி. அதனால் அவர் தேசியப் பட்டியலில் கூட வர முயற்சிக்கலாம்.  ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுடன் பார்க்கின்ற போது மொட்டுக் கட்சிக்கு எந்த ஒரு மாவட்டத்திலும் ஒரு ஆசனம் கூட இல்லை என்பது தெளிவாகின்றது. அப்படி தேசிய பட்டியலில் ஓரிரு ஆசனங்கள் கிடைத்தால் அதிலாவது நாடாளுமன்றம் போகலாம் என்றுதான் அவர்களில் சிலர் எதிர்பார்க்கின்றார்கள் போலும்.

நமது பார்வையில் இந்த பொதுத் தேர்தலில் மிகவும் பின்னடைக்கின்ற ஒரு கட்சியாக இருக்கப்போவது ரணில் விக்கிரமசிங்ஹவின் ஐக்கிய தேசியக் கட்சிதான். 2020 பொதுத் தேர்தலில் கிடைத்த வாக்குகளுக்குச் சமாந்திரமான ஒரு வாக்குத்தான் ரணில் தரப்புக்கு கிடைக்க இருக்கின்றது என்று நாம் நம்புகின்றோம். எனவே சஜித்-ரணில் கூட்டணி சாத்தியமில்லை. அப்படி அபூர்வமாக முன்னேற்றங்கள் கடைசி நேரத்தில் வந்தாலும் வேட்புமனு பங்கீட்டில் பெரும் முரண்பாடுகள் அங்கு வரும்.

President Ranil Wickremesinghe to Run as Independent Candidate, Advisor Reveals

தற்போதுள்ள நிலையில் ரணிலுடன் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பல்டியடித்த மொட்டுக் காரர்கள் தனிக் கூட்டணி என்றுதான் இந்தத் தேர்தலில் களமிறங்க இடமிருக்கின்றது. மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் ரணிலுடன் இருந்தாலும் அங்கிருந்து வாக்குகள் எதிர்பார்த்தது போல அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

இந்தப் பின்னணியலும்  பல மொட்டுக் கட்சி உறுப்பினர்கள் ரணில் ஆதரவு அணியுடன் இணைந்து போட்டியிட இருப்பதால்  ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் அவர்கள் தேர்தலுக்கு வர வாய்ப்புக்கள் குறைவு. அதனால் அவர்கள் மீண்டும் சிலிண்டரில்தான் அனேகமாக பொதுத் தேர்தலுக்கு வருவார்கள் என்றும் எதிர்பார்க்க முடியும்.

சிறுபான்மைக் கட்சிகளைப் பெறுத்தவரை வடக்குக் கிழக்கில் இந்த முறை புதிய கூட்டணிகள் வரும். 2024 பொதுத் தேர்தலில் அங்கு ஆசனங்கள் சிதறிப் போகும் ஒரு நிலை இருக்கின்றது. கடந்த காலங்களில் தமிழரசு கட்சியினர் பார்த்த வேலைகள்தான் இதற்குக் முக்கிய காரணம். தமிழ் பிரதேசங்களில் கூட ஜனாதிபதி அனுரவின் என்பிபி. கட்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெரும் வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சி நடந்து கொண்ட கீழ்தரமான நடவடிக்கைகளினால் அந்தக் கட்சிக்கு இந்தத் தேர்தலில் மக்கள் நல்ல பாடங்களைக் கற்பிப்பார்கள்-கற்பிக்க வேண்டும் என்று நாமும் எதிர்பார்க்கின்றோம். இதனால் மாற்று அணிகளை வாக்காளர் நாட இடமிருக்கின்றது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில்

சஜித் மற்றும் ரணிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் கிடைத்த வாக்குகள் இந்த முறை கிடைக்காது. ஆனால் அனுர தலைமையிலான என்பிபி. அங்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வாக்குகளை விட அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கின்றது.

Tamil political parties call for hartal across the North-East in support of resigned judge | Tamil Guardian

அதே போன்று முஸ்லிம் தனித்துவக் கட்சியினரான ஹக்கீம் ரிசாட் போன்றவர்கள் காதைப் பிடித்து வெளியே தள்ளினாலும் சஜித் அணியில் இருந்து வெளியே போக மாட்டார்கள். அங்கிருந்தால்தான் தலைவர்கள் கூட நாடாளுமன்றம் போக முடியும் என்ற நிலை இருப்பதால் அப்படி. இங்கு சமூகமோ கட்சியோ முக்கியமில்லை. இதனை சமூகமும் புரிந்துதான் வைத்திருக்கின்றது. இது தலைவர்களின் தன்னலத்தை முன்னிருத்திய கூட்டணிதான்.

இதற்கிடையில் சஜித் அணியினர் ஜனாதிபதி அனுர தலைமையிலான அரசுடன் இணங்கிப் போகத் தயாராக இருப்பதாக பகிரங்கமாக சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதே நேரம் ஜனாதிபதி அனுர தலைமையில் சஜித் பிரதமரானால் சிறப்பாக இருக்கும் என்ற இப்போது சஜித் கூட்டணியில் இருக்கும் பலர் பேசி வருகின்றார்கள்.

மறுபக்கத்தில் ரணிலின் ஒத்துழைப்பால்தான் அனுர ஜனாதிபதியானர் என்றும் அதனால் அனுர நம்முடன் இணக்கமாக நடந்து கொள்வார் என்று எதிர்பார்ப்பதாக ரணில் தரப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் பகிரங்கமாகவே பேசி இருந்தார். எனவே அனுரவை தேர்தலில் விமர்சித்தவர்கள் இப்போது அவரிடத்தில் பணிந்து போக தயார் என்ற சிக்னலைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். தழிழரசுத் தலைவர் சிரிதரன் கூட ஜனாதிபதி அனுரவைச் சந்தித்து தனது நல்லெண்ணத்தை வெளியிடடிருக்கின்றார்.

இப்போது தேர்தலுக்கான என்பிபி. தயார் நிலைகள் பற்றி பார்ப்போம். ஜனாதிபதியை வென்றெடுத்த அவர்கள் நாட்டில் பாரிய மாற்றங்களைச் செய்ய வேண்டி இருக்கின்றது. அவற்றை செய்து குடி மக்களுக்கு நம்பிக்கையானதும் பாதுகாப்பானதுமான ஒரு ஆட்சியைக் கொடுக்க வேண்டுமாக இருந்தால்  நமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை நாடாளுமன்றம் தேவை என்று அவர்கள் கேட்டு வருகின்றார்கள். குறிப்பாக மக்களுக்கு இசைவான ஒரு அரசியல் மாற்றத்தை செய்வதாக இருந்தால் புதிய ஒரு யாப்பு நாட்டுக்குத் தேவை. அதனை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் நாடாளுமன்றில் தேவை.

இதற்கான அங்கிகாரத்தை மக்கள் அவர்களுக்கு வருகின்ற தேர்தலில் கொடுப்பார்கள். அல்லது மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மிகவும் நெருக்கமான எண்ணிக்கையை அனேகமாகக் கொடுக்கக் கூடும். அது நாட்டினதும் சமூகத்தினதும் தேவை. இதனை இந்த நாட்டு குடிமக்களும் புரிந்துதான் வைத்திருக்கின்றார்கள். பொதுத் தேர்தலில் அனுர தரப்பினருக்குத்தான் அதிக வாய்ப்பு என்பதை நாம் சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆனாலும் கூட்டணி போட்டு ஆட்சியைப் பிடிக்கப் போகின்றோம் என்று சிலர் சொல்வார்கள். அவர்களுக்கு அப்படிச் சொல்லவும் உரிமை இருக்கின்றது. ஆனால் அரசியல் தலைவர்கள்-அரசியல்வாதிகளை விட இப்போது பொதுமக்கள் அரசியலில் நல்ல புரிதலில் இருக்கின்றார்கள். எனவே இந்த சுற்றில் மக்கள் ஏமாற மாட்டார்கள். எனவேதான் ராஜபக்ஸாக்களுக்கு நல்ல பாடம் கற்றுக் கொடுத்திருக்கின்றாhகள்.

என்பிபி. அரசியல் ரீதியில் இன்று பொது மக்களை நன்றாக அறிவூட்டி விட்டிருக்கின்றது. அத்துடன் சமூக ஊடகங்களின் துணையுடனும் மக்கள் நாட்டு நடப்புக்களையும் அரசியல் ரீதியிலாகவும் இன்று நல்ல தெளிவுகளை அடைந்திருக்கின்றார்கள். இதனால் அரசியல்வாதிகளின் ஏமாற்றுக் கதைகள் நயவஞ்சகத் தனங்கள் எல்லாம் இன்று நாட்டில் இனிமேல் எடுபட மாட்டாது.

வழக்கமாக முன்கூட்டி தேர்தல் தொடர்பான கணக்குகளைச் சொல்கின்ற நாம் இன்று புதியதோர் தகவல்கள் சிலவற்றையும் வழங்லாம் என்று எதிர்பார்க்கின்றோம். அதன் படி 2024 பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அனுர தலைமையிலான என்பிபி. மிகத் தெளிவான பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்வார்கள்.

அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு சற்று நெருக்கமாகப் போவார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் கூட இந்த முறை தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் என்பிபி. ஊடாக நாடாளுமன்றத்துக்கு வருவார்கள் என்று உறுதியாக சொல்ல முடியும். இது தெற்கு அரசியலில் நல்லதொரு மாற்றமாகப் பார்க்கப்படுகின்றது.

Namal Rajapaksa Drums Up Election Readiness, Seeks Broader Coalition - Newscutter.lk - Sri Lanka's Leading News Site | Breaking News Updates | Latest News Headlines

இரண்டாம் இடத்துக்கு சஜித் கூட்டணியினர்தான்  வருவார்கள். ஆனாலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் பெற்ற வாக்குகளில் கணிசமான ஒரு வீழ்ச்சி அங்கு நிகழும். அதே போன்று இந்தத் தேர்தலில் மிகப் பெரும் பின்னடைவு ரணில் தரப்புக்கத்தான் வரும். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவர்களுக்கு முப்பத்து ஏழுவரையலான (37) ஆசனங்கள் என்ற அளவு இருந்தாலும் வருகின்ற பொதுத்  தேர்தலில் அவர்கள் காணாமல் போக இடமிருக்கின்றது.

மொட்டுக் கட்சியில் இருந்து ரணிலுக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் இன்று தனி வழி பயணிப்பதாக இருந்தால் அவர்களுக்கும் அழிவுதான் காத்திருக்கின்றது. அவர்கள் ரணில் அணியில் இருந்தாலும் இதே நிலைதான். இவர்களில் பலர் மீண்டும் மொட்டுக் கட்சியில் இணைய நாடினாலும் அவர்களை உள்வாங்குவதில்லை என்று செயலாளர் சாகர காரியவாசம் அறிவித்துவிட்டார்.

சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவு ரணிலுடனும் மற்றுமொரு பிரிவு சஜித்துடனும் போக அதன் அமைப்பாளர்கள் நிபந்தனையின்றி ஜனாதிபதி அனுரவின் என்பிபி.க்கு தேர்தலில் நிபந்தனையின்றி ஆரவளிக்க உறுதி எடுத்திருக்கின்றார்கள். தினேஸ் தலைமையில் கிண்ணத்தில் ஒரு தரப்பும் தேர்தலுக்கு வருகின்றது.

இன்று நாட்டில் இருக்கின்ற எல்லாக் கட்சிகளும் போல ஊழலுக்கு எதிரான நிலைப்பாட்டில் பேசுகின்றார்கள். நாமல் தரப்பு மற்றும் ரணில் சஜித் போன்றவர்களும் அதனைத்தான் உச்சரிக்கின்றார்கள். ஆனால் அவர்களின் முகாம்களில்தான் ஊழல் பேர்வழிகள் குடியே இருக்கின்றார்கள்.

இன்றைய அரசியலில் ஊழலுக்கு எதிரான கோஷம் பெசனாக மாறி இருக்கின்றது. ஆனால் இதனை வெற்றிகரமாக சந்தைப்படுத்தியவர்களும் அதில் அதிக நன்மை பெற்றவர்களும் அனுராவின் என்பிபி.யினர்தான் என்பதையும் இங்கு சுட்டடிக்காட்ட வேண்டும்.

Previous Story

நயவஞ்சகர்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாப்போம்!

Next Story

ஜனாதிபதி அநுரவுக்கு  ஆபத்து -சுனந்த தேசப்பிரிய