ஜனாதிபதி தேர்தல்: மும்முனைப் போட்டி – முந்துவது யார்? -BCC

தமிழர் ஆதரவு யாருக்கு?

-முரளிதரன் காசிவிஸ்வநாதன்-

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2024
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் பிரதான வேட்பாளர்களாக கருதப்படும் அனுரகுமார திஸநாயகே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ

இலங்கையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மற்றொரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே ஆகியோருக்கிடையே நிலவும் மும்முனைப் போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியைத் தேர்வுசெய்வதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 21ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே, தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அனுரகுமார திஸநாயகே, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் பார்க்கப்படுகின்றனர். இவர்கள் தவிர, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

Anura Kumara Dissanayake | #රටඅනුරට #நாடுஅநுரவோடு #akd #nppsrilanka | Instagram

2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை (எஸ்எல்பிபி) சேர்ந்த கோட்டாபய ராஜபக்ஸ, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சஜித் பிரேமதாசவைத் தோற்கடித்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றார்.

ஆனால், 2022ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் காரணமாக மக்கள் மிகப் பெரிய போராட்டத்தில் (ஜனதா அரகலய) இறங்கினர். இதனால் ஏற்பட்ட நெருக்கடியையடுத்து, அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பதவி விலகிக் கொள்ள, நாடாளுமன்ற வாக்கெடுப்பின் மூலம் ரணில் விக்ரமசிங்க இலங்கையின் 9வது ஜனாதிபதியாக 2022ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் தேதி பதவியேற்றார்.

இலங்கையின் அரசமைப்புச் சட்டப் பிரிவு நாற்பதின் படி, இடைக்காலத்தில் ஜனாதிபதியாக பதவியேற்பவர் அந்தப் பதவிக் காலம் முடியும் வரைதான் ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன்படி, இந்த ஆண்டு நவம்பர் 17ஆம் தேதி ரணிலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதற்கு முன்பாக ஜனாதிபதி தேர்வு செய்யப்பட வேண்டும்.

இந்த நிலையில்தான் புதிய ஜனாபதியைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் தற்போது நடக்கவிருக்கிறது. இலங்கையைப் பொருத்தவரை பலவிதங்களில் இந்தத் தேர்தல் மிக முக்கியமானது. கடந்த சில தசாப்தங்களோடு ஒப்பிட்டால், இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் வெகுவாக மாறியிருக்கிறது.

சுமார் 20 ஆண்டுகளாக இலங்கையில் ஆதிக்கம் செலுத்தி ராஜபக்ஸ சகோதரர்கள் இந்தத் தேர்தலில் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர். அதேபோல, இலங்கையின் பாரம்பரிய கட்சிகளான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் (யுஎன்பி) கிட்டத்தட்ட சிதைந்துபோய்விட்டன. ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி (என்பிபி) ஒரு முக்கியமான அரசியல் சக்தியாக உருவெடுத்திருக்கிறது.

Sri Lanka: Opposition leader ready to run for presidency

இந்தத் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் 39 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. அதில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ஏ. முகமது இலியாஸ் என்பவர் ஆகஸ்ட் 22ஆம் தேதி மரணமடைந்தார். ஆகவே தற்போது 38 பேர் களத்தில் உள்ளனர். இவர்களில் பிரதான போட்டியென்பது எதிர்க் கட்சித் தலைவரான சஜித் பிரேமதாஸவுக்கும் மற்றொரு எதிர்க்கட்சித் தலைவரான அனுரகுமார திஸநயகேவுக்கும் தற்போதைய ஜனாதிபதி ரணிலுக்கும் இடையில்தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2024
சுமார் 20 ஆண்டுகளாக இலங்கையில் ஆதிக்கம் செலுத்திய ராஜபக்ஸ சகோதரர்கள் இந்தத் தேர்தலில் ஓரம்கட்டப்பட்டிருக்கின்றனர்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முக்கிய தலைவர்கள் யார்?

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக ராஜபக்ஸவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து ராஜபக்ஷ உருவாக்கிய கட்சி) அவருக்கு நாடாளுமன்றத்தில் பக்கபலமாக நின்றது.

இப்போது ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன தங்கள் கட்சியின் சார்பில் மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவைக் களத்தில் இறக்கியிருக்கிறது. ரணிலைப் பொருத்தவரை இப்போதும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக இருந்தாலும், சுயேச்சையாகக் களமிறங்கியிருக்கிறார்.

அவருக்கு பொதுஜன பெரமுனவின் சிலரும் ஆதரவளித்துள்ளனர். டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவையும் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைப் பொறுத்தவரை, சமாகி ஜன பலவெகய (Samagi Jana Balawegaya) என்ற ஐக்கிய மக்கள் சக்தி முன்னணியின் சார்பில் போட்டியிடுகிறார்.

இஸ்லாமியக் கட்சிகளான ஆல் சிலோன் மக்கள் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், மனோ கணேசனின் தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, மலையக மக்கள் முன்னணி ஆகியவை சஜித்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Ranil Wickremesinghe to resign as Sri Lanka's prime minister, Mahinda to take over | Tamil Guardian

ராஜபக்ஸக்களைப் பாதுகாக்கிறார், மேட்டுக்குடிகளுக்கான ஆட்சி நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் ரணிலுக்கு எதிராக இருக்கிறது

ஜனதா விமுக்தி பெரமுனவின் தலைவரான அனுரகுமார திஸநாயக்கே தேசிய மக்கள் சக்தி என்ற முன்னணியின் சார்பில் களத்தில் நிற்கிறார். பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாக்கியிருக்கும் இந்த முன்னணியில் மார்க்ஸிய – லெனினிய சார்பு கொண்ட ஜனதா விமுக்தி பெரமுன முக்கியமான கட்சியாக இருக்கிறது.

1970களிலும் 80களிலும் அரசுக்கு எதிராக உருவான சிங்கள இளைஞர்களின் ஆயுதக் கிளர்ச்சிகளின் பின்னணியில் இந்தக் கட்சியே இருந்தது. தற்போதைய நாடாளுமன்றத்தில் இந்தக் கட்சிக்கு மூன்று இடங்களே இருந்தாலும், இந்த தேர்தலில் ஒரு வலுவான வேட்பாளராக உருவெடுத்திருக்கிறார் அனுரகுமார திஸநாயக்கே.

மகிந்த ராஜபக்ஸவின் மகனும் ஹம்பந்தோட்டா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் வேட்பாளராக களத்தில் இருக்கிறார். தங்கள் கட்சியில் பலர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்கப் போவதாகச் சொன்னதும், தங்களுடைய வாக்கு வங்கியை மொத்தமாக இழந்துவிடாமல் இருக்க கடைசித் தருணத்தில் களமிறங்கியிருக்கிறார் அவர்.

இவர்கள் தவிர, தமிழ் பொது கூட்டமைப்பு என்ற பெயரில் சில தமிழ் அமைப்புகளும் சிவில் குழுக்களும் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை தமிழர்களுக்கான பொது வேட்பாளராக களத்தில் இறக்கியுள்ளனர்.

இவருக்கு டெலோ, ஈபிஆர்எல்எப் ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. போருக்குப் பிந்தைய பொருளாதார வளர்ச்சி, அதிகாரப் பகிர்வு போன்ற எதிலுமே தங்களுக்கு எவ்வித பங்களிப்பையும் தராத தென்பகுதி அரசியல்வாதிகளுக்கு எதிராக இந்த வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2024

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன மகிந்த ராஜபக்ஸவின் மகன் நாமல் ராஜபக்ஸவை களம் இறக்கியுள்ளது

எதைச் சொல்லி வாக்குக் கேட்கிறார்கள்?

ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை, ‘We can Srilanka’ என்ற கோஷத்துடன், ஸ்திரத்தன்மையை முன்னிறுத்தி வாக்குகளை கோரி வருகிறார். பொருளாதார நெருக்கடியில் இருந்த நாட்டை, கடந்த இரு ஆண்டுகளில் மீட்சியை நோக்கி வழிநடத்தியதாகச் சொல்லி, தனக்கே மீண்டும் வாக்களிக்கும்படி கோருகிறார்.

Send a strong message to India, Sri Lanka and international community – Ariyanenthiran | Tamil Guardian

எதிர்க்கட்சித் தலைவரான சஜித்தைப் பொருத்தவரை, எல்லோருக்குமான வளர்ச்சியைத் தருவேன் என்றும் கல்வி, வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்றும் கூறி வாக்குகளை சேகரிக்கிறார். தான் வெற்றிபெற்றால், தன்னுடைய அரசு எல்லோருக்குமானதாக இருக்கும் என்றும் கூறுகிறார்.

அனுரகுமார திஸாநாயக்கவைப் பொறுத்தவரை, ஊழலற்ற ஆட்சியை முன்னெடுக்கப் போவதாகக் சொல்கிறார். இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து ஆட்சியில் இருந்தவர்கள்தான் இலங்கையின் வீழ்ச்சிக்குக் காரணம் எனக் குறிப்பிடும் அனுரகுமார, மக்களை வைத்து தேச விடுதலை இயக்கத்தை உருவாக்கப்போவதாகவும் சொல்லியிருக்கிறார்.

இலங்கை தேர்தல் எப்படி நடக்கும்?

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதாவது, வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம்.

50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த வேட்பாளரும் 50 சதவிகித்திற்கு மேல் வாக்குகளைப் பெறவில்லையென்றால், முதல் இரண்டு இடங்களைப் பிடித்த வேட்பாளர்கள் மட்டும் கணக்கில் எடுக்கப்பட்டு, அவர்களுக்கான விருப்ப வாக்குகள் எண்ணப்படும்.

ஒரு கோடியே 71 லட்சம் பேர் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவிருக்கின்றனர். இதில் சிங்களம் பேசும் மக்களின் வாக்குகள் 74 சதவிகிதம். வடக்கில் உள்ள தமிழர்கள், கிழக்கில் உள்ள இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் ஆகிய சிறுபான்மையினரின் வாக்குகள் மீதமுள்ள 26 சதவீதம்.

“இந்த முறை ரணில் விக்ரமசிங்க – சஜித் பிரேமதாஸ – அனுரகுமார திஸநாயகே என மும்முனைப் போட்டி நிலவுவதால் ஒருவருக்கும் 50 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்றுதான் கருதுகிறேன். ஆகவே, விருப்ப வாக்குகளை எண்ண வேண்டியிருக்கும். இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான ஜனாதிபதி தேர்தலாக இது இருக்கும்” என்கிறார் மூத்த பத்திரிகையாளரான வீரகத்தி தனபாலசிங்கம்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2024

இலங்கையில் இதுவரை நடந்த தேர்தல்களிலேயே மிக இழுபறியான ஜனாதிபதி தேர்தலாக இது இருக்கும்

தாக்கம் செலுத்தும் பிரச்னைகள் என்னென்ன?

2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் பிரச்னை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு விலைவாசி வெகுவாக அதிகரித்திருப்பதால், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்திருக்கின்றது. வாழ்க்கைத் தரம் மோசமடைந்திருக்கிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது.

“இந்தத் தேர்தலைப் பொருத்தவரை பொருளாதார நெருக்கடிதான் வாக்குகளை முடிவு செய்யக்கூடிய முக்கியப் பிரச்னையாக இருக்கும். புதிதாக வரும் ஜனாதிபதி இலங்கைக்கும் சர்வதேச நிதியத்திற்கும் இடையில் உள்ள ஒப்பந்தத்தை மாற்றியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது. தமிழர், இஸ்லாமியர் போன்ற சிறுபான்மை மக்களைப் பொருத்தவரை எதிர்காலத்தில் அவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுமா, அதிகாரப்பகிர்வு கிடைக்குமா என்ற கேள்விகள் இருக்கின்றன.

மேலும், யுத்தம் முடிந்து இத்தனை ஆண்டுகள் ஆன பிறகும் வடகிழக்கில் ராணுவம் மற்றும் தொல்பொருள்துறையின் காணி அபகரிப்பு காணப்படுகிறது. ஆனால், புதிய அரசு இவ்வாறான விஷயங்களைத் தீர்த்துவைக்குமா என்ற கேள்வியும் இருக்கவே செய்கிறது.” என்கிறார், அரசியல் பொருளாதார ஆய்வாளரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி அகிலன் கதிர்காமர்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2024

2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிதான் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய முக்கியப் பிரச்சனை

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் தனபாலசிங்கம். “எல்லோருமே சர்வதேச நிதியம் வகுத்துள்ள விதிகளின் அடிப்படையில் பொருளாதாரத்தை சீர்செய்யப் போவதாகச் சொல்கிறார்கள். அந்த சீர்திருத்தங்களை தான் மட்டுமே செய்ய முடியும் என்கிறார் ரணில். அனுரவும் சஜித்தும் சில மாற்றங்களுடன் அவற்றைச் செய்வோம் என்கிறார்கள். ஆனால், எல்லோருமே நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிக்கிறார்கள். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஊதியத்தைக் கூட்டுவோம் என்கிறார்கள். பாட சாலைகளில் மாணவர்களை அடிப்பதை நிறுத்துவோம் என்கிறார் ரணில். வறுமை ஒழிப்புக்கு பணம் கொடுப்போம் என்கிறார்கள். இதெல்லாம் சாத்தியமே இல்லாத வாக்குறுதிகள்” என்கிறார் அவர்.

இந்தத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவினாலும், அனுரகுமார திஸநாயகேவுக்கும் சஜித்திற்கும் இடையில்தான் உண்மையான போட்டி நிலவுகிறது என்கிறார் அகிலன் கதிர்காமர்.

“ரணில் ஏற்கனவே மக்கள் ஆதரவை இழந்துவிட்டார். மக்களிடம் ரணிலுக்கு எதிரான மனப்போக்குதான் இருக்கிறது. ஆகவே, அவருடைய ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பகுதி வாக்குகள் இந்த முறை சஜித்திற்குத்தான் செல்லும்.

மற்றொரு பக்கம், ராஜபக்ஷேக்களின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பகுதி வாக்குகள் அனுரகுமார திஸநாயக்கேவுக்கு செல்லும். இந்தத் தேர்தலில் அனுரகுமார திஸநாயக்கேவை நோக்கிய அலை ஒன்று காணப்படுகிறது. இளைஞர்கள், கிராமப்புறத்தினர் மத்தியில் அவருக்கு பெரும் ஆதரவு தென்படுகிறது” என்கிறார் அகிலன்.

ரணிலுக்கு ஆதரவு கிடைக்காமல் போக காரணம் என்ன?

ஆனால், இந்தக் கருத்தில் மாறுபடுகிறார் தனபாலசிங்கம். கடந்த தேர்தலில் 3 சதவீத வாக்குகளையே பெற்ற அனுரகுமார, எப்படி 50 சதவீத வாக்குகளை நெருங்க முடியும் என்கிறார் அவர்.

“மக்கள் போராட்டத்திற்குப் பிறகு அவருக்கான செல்வாக்கு அதிகரித்திருப்பது உண்மைதான். ஆனால், அது வெற்றியாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்கிறார் தனபாலசிங்கம்.

இன்னொரு முக்கியமான கேள்வியும் இருக்கிறது. மிக நெருக்கடியான தருணத்தில் ஜனாதிபதி பொறுப்பை ஏற்று நடத்திய ரணிலுக்கு ஆதரவு குறைவாக இருப்பதாக கருதுவது ஏன்? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “ரணில் சிக்கலான நேரத்தில் நாட்டின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் என்றாலும் அவருடைய பொருளாதார கொள்கைகள் எல்லாம் கொழும்பு நகரை மையமாகக் கொண்ட மேட்டுக் குடியினருக்குத்தான் சாதகமாக இருந்தன.

ரணில் மின்சாரக் கட்டணத்தைக் கடுமையாக அதிகரித்தார். இதனால் 65 லட்சம் குடும்பங்களில் 13 லட்சம் குடும்பங்களால் மின் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. அவர்களது மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தவிர, வறுமையும் அதிகரித்திருக்கிறது. எனவே பொருளாதார சிக்கலை அவர் சிறப்பாக கையாண்டார் எனக் கூற முடியாது. ஆதரவு குறைந்ததற்குக் காரணம் அதுதான்” என்கிறார் அகிலன்.

ராஜபக்ஷேக்களைப் பாதுகாக்கிறார், மேட்டுக்குடிகளுக்கான ஆட்சி நடத்துகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் ஐக்கிய தேசியக் கட்சி பலவீனமடைந்திருப்பதும் ரணிலுக்கு எதிராக இருக்கிறது என்கிறார் தனபாலசிங்கம்.

“ரணில் விக்ரமசிங்கவைப் பொறுத்தவரை, ராஜபக்ஸ ஆட்களுடன் சேர்ந்து ஆட்சி நடத்துகிறார். பொருளாதார நெருக்கடிக்கு அவர்களை பொறுப்புக்கூற வைக்காமல் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு வலுவாக இருக்கிறது. அதேபோல, அவருடைய ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பலவீனப்பட்டுப் போயிருக்கிறது.

ஆகவே, தன்னுடைய கட்சியை நம்பி தேர்தலில் நிற்பது சரியல்ல என்பதை அவர் புரிந்துகொண்டிருக்கிறார். தற்போது பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்திருந்தாலும் தட்டுப்பாடு ஏதும் இல்லை. ஆகவே, மேல் நடுத்தர வர்க்கம் திருப்தியடைந்திருக்கிறது. ஆனால், விலை உயர்வினால் கீழ்தட்டு மக்களுக்கு பிரச்னைதான். ஆகவே அவர்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்” என்கிறார் தனபாலசிங்கம்.

சிறுபான்மையினரின் வாக்குகள் யாருக்கு?

சிறுபான்மையினரைப் பொருத்தவரை, எல்லாப் பிரிவினருமே பிரிந்துகிடப்பதால் அவர்களது வாக்குகள் யாருக்குக் கிடைக்கும் என கணிப்பது கடினம். இந்த ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு தமிழர் அரசியல் சிதறும் வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறார் அகிலன் கதிர்காமர்.

“இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை தமிழர் அரசியல் குழப்பமான நிலையில் இருக்கிறது. சில தமிழ் தேசியவாதிகள் வெளிநாட்டில் இருக்கும் சக்திகளின் நிதியுதவியுடன் ஒரு பொது தமிழ் வேட்பாளரை முன்வைத்துள்ளனர். தெற்குடன் இணைந்து போகாமல் பிளவுபடுத்தும் அரசியலை முன்வைப்பதுதான் அதன் நோக்கம். என்னைப் பொருத்தவரை, ஜனாதிபதி தேர்தலில் பேரம் பேசும் சக்தியாக தமிழர் அரசியல் உருப்பெற வேண்டும்.

ஆனால், தற்போதுள்ள தமிழ் அரசியல் சக்திகள் தமிழர்களுக்கு என ஒரு பொது வேட்பாளரை முன்னிறுத்துவது அல்லது தேர்தலைப் புறக்கணிப்பது ஆகிய இரு வாய்ப்புகளையே முன்வைக்கின்றனர். வடக்கில் தமிழ் தேசியவாதத்தையும் தெற்கில் சிங்கள பௌத்தவாதத்தையும் இவர்கள் உருவாக்க நினைக்கிறார்கள்.” என்கிறார் அவர்.

மேலும் தொடர்ந்த அவர், “சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், இந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த தேசியம் பெரிய அளவில் தாக்கம் செலுத்தப் போவதில்லை. நிலைமை இப்படியிருக்கும் போது வடக்கில் இவ்வாறான தேசியவாதத்தை முன்னெடுப்பது சிங்கள பௌத்த தேசியவாதத்தைத் தூண்டிவிடும் செயலாகத்தான் இருக்கும்.

தமிழர்களைப் பொருத்தவரை பெரும்பாலும் சஜித்திற்கும் அனுரகுமார திஸநாயகேவுக்கும்தான் வாக்களிப்பார்கள் என்று கருதுகிறேன். யாழ்ப்பாணத்தில் இருக்கும் சில நடுத்தர வர்க்கத்தினர் மட்டும் பொது வேட்பாளர் குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், பொதுவாகவே இலங்கை தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒரு குழப்பம் இருக்கிறது. இதனால், தேர்தலுக்குப் பிறகு தமிழர் அரசியல் சிதறும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. இஸ்லாமியர்களைப் பொருத்தவரை பல முஸ்லிம் கட்சிகளும் மலையக கட்சிகளும் சஜித்திற்கு ஆதரவாக இருக்கின்றன.” என்கிறார் அகிலன் கதிர்காமர்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2024
சமீபத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், இந்தத் தேர்தலில் சிங்கள பௌத்த தேசியம் பெரிய அளவில் தாக்கம் செலுத்தப்போவதில்லை

தமிழர் அரசியல் இப்போதே சிதறிப் போய்தான் கிடக்கிறது என்கிறார் தனபாலசிங்கம். “கடந்த மூன்று தேர்தல்களாக தமிழர்கள் பொதுவாக ராஜபக்ஸவுக்கு எதிராக வாக்களித்தார்கள். இந்த முறை தமிழ் பொது வேட்பாளர் என ஒருவர் நிறுத்தப்பட்டிருந்தாலும், கடந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்ற 3,30,000 வாக்குகளை இவர் பெற்றாலே அதிகம்.

தமிழரசுக் கட்சி சஜித்தை ஆதரிக்கிறது. அதே கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களான மாவை சேனாதிராஜாவும் ஸ்ரீதரனும் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். இதையெல்லாம் எப்படி எடுத்துக்கொள்வது? ஆகவே, தமிழரசுக் கட்சி சொல்வதை மக்கள் கேட்க மாட்டார்கள். தங்கள் விருப்பத்தின்படியே வாக்களிப்பார்கள்” என்கிறார் அவர்.

ஆனால், இந்தத் தேர்தலில் இனவாதப் பிரசாரம் சுத்தமாக இல்லை என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது என்கிறார் அவர். “மூன்று பிரதான வேட்பாளர்கள் இருப்பதால், தென்னிலங்கையின் வாக்குகள் மூன்றாகப் பிரியும். ஆகவே வெற்றிபெற வேண்டுமானால் சிறுபான்மையினரின் வாக்குகள் மிக முக்கியம். ஆகவே, எந்த பிரதான வேட்பாளரும் இனவாதப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. நாமல் ராஜபக்ஸ மட்டும் வடக்கிற்கு அதிகாரத்தை பகிர மாட்டோம் எனப் பேசுகிறார். மற்றவர்கள் அப்படி எதுவும் பேசுவதில்லை” என்கிறார் தனபாலசிங்கம்.

ஆனால், தேர்தலுக்குப் பிறகு புதிதாக வரும் ஜனாதிபதிக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியின் காரணமாக சில தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு நடந்திருக்க வேண்டிய உள்ளூராட்சி சபை தேர்தல்கள் ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. அதேபோல, மாகாண சபை தேர்தல்களும் காலவரையின்றி ஒத்திப்போடப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியாக வேண்டும். வேறு சில சவால்களும் இருக்கின்றன.

“பொருளாதார நெருக்கடியின்போது வாங்கிய கடனை இன்னும் திருப்பிக் கட்டத் துவங்கவில்லை. 2028க்குப் பிறகு கடனைக் கட்ட ஆரம்பிக்கும்போது நெருக்கடி ஆரம்பிக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போகவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதையெல்லாம் புதிய ஜனாதிபதி சமாளித்தாக வேண்டும்” என்கிறார் தனபாலசிங்கம்.

இந்தத் தேர்தலில் ராஜபக்ஷேக்களின் சார்பில் நாமல் ராஜபக்ஸ போட்டியிடுகிறார். தேர்தலுக்குப் பிறகு, ராஜபக்ஸ குடும்பத்தினரின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்? என்ற கேள்விக்கு, “ராஜபக்ஸக்களைப் பொறுத்தவரை அவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு குறைவு. ஆனால், புதிதாக வரும் ஆட்சி பொருளாதார நிலையை சரியாகக் கையாளாவிட்டால், அவர்கள் மீண்டும் செல்வாக்குப் பெறலாம். பிலிப்பைன்ஸில் இமெல்டா மார்கோஸின் மகன் மீண்டும் அதிபராகியிருப்பதைப் போல இங்கேயும் நடக்கலாம். அவர்களைப் பொருத்தவரை அரசியலுக்குள் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றே கருதுகிறார்கள்” என்கிறார் அகிலன் கதிர்காமர்.

Previous Story

நாளையும் மறுதினமும் என்பிபி எடுக்கும் முக்கிய தீர்மானங்கள்!

Next Story

முஸ்லிம், யூதர் பின்பற்றும் சுன்னத் சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?