முஸ்லிம் அல்லாத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச், யூடியூபர் கைதால் சர்ச்சை 

-செல்வகுமார்-

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த இஸ்லாமியர் அல்லாத பெண்களிடம், ஹிஜாப் அணியச் செய்து, அதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சர்ச்சைக்குள்ளான இந்த வீடியோவும் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

கோவை ஹிஜாப் சேலஞ்ச்
அனஸ் அஹமது, கோவை ஹிஜாப் சேலஞ்ச் வீடியோ தொடர்பாக கைது செய்யப்பட்டவர்

இந்த கைது நடவடிக்கைக்கு, எதிர்ப்பும் ஆதரவுமாக இரு தரப்பு விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகனும் எதிர்வினையாற்றியுள்ளார். அவர் என்ன சொன்னார்? இந்த விஷயத்தில் நடந்தது என்ன?

        நடந்தது என்ன?

கோவை மாநகரின் இதயப்பகுதியான ரேஸ் கோர்ஸ் (Racecourse), தினமும் காலையும் மாலையுமாக பல ஆயிரம் மக்கள் ‘வாக்கிங்’ செல்லும் பகுதியாகும். இதைச் சுற்றிலும் அரசு கலைக் கல்லூரி, பிஷப் அப்பாசாமி கல்லூரி நிர்மலா மகளிர் கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளும் உள்ளன. அதனால் எப்போதுமே இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமிருக்கும். குறிப்பாக கல்லுாரி மாணவ, மாணவியர் கூட்டம்கூட்டமாக வலம் வருவதைப் பார்க்க முடியும்.

அங்கேதான் செப்டம்பர் 3-ஆம் தேதி அன்று, இந்த சர்ச்சைக்குரிய ஹிஜாப் சேலஞ்ச் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ‘இந்திய இளம் பெண்களிடம் ஹிஜாப் சவால்–முதல் முறையாக ஹிஜாப் முயல்கிறேன்!’ (Hijab Challenge with Indian Girls) என்ற தலைப்பில் ‘அல் ஹஸ்வா’ என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். ஹிஜாப் அணிந்த முஸ்லிம் அல்லாத மாற்று மத பெண்கள் தங்களது அனுபவங்களை கூறும் வகையில் அந்த வீடியோ உள்ளது. அதன் முகப்பில், ஓர் இளம்பெண் டிராக் சூட், டி சர்ட் உடன் இருக்கும் படத்துடன், ஹிஜாப் அணிந்துள்ள படத்தையும் இணைத்து ‘முன்னர் பின்னர்’ (Before, After) என்றும் பதிவேற்றியுள்ளனர்.

கோவை ஹிஜாப் சேலஞ்ச்

கோவை ரேஸ் கோர்ஸ் சாலை

இந்து அமைப்புகள் எதிர்ப்பு – கைது

இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதும், இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் அதற்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டனர்.

பாரத் சேனா என்ற அமைப்பின் நிர்வாகியான எஸ்.ஆர்.குமரேசன் என்பவர் கோவை சைபர் க்ரைம் பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், ‘அல் கஸ்வா யூடியூப் சேனல்’ பங்குதாரரான 22 வயது இளைஞர் அனஸ் அஹமது, கடந்த 6 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சர்ச்சைக்கு வித்திட்ட அந்த காணொளியும் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டது. சேனலை நடத்தும் மற்றவர்கள், ஹிஜாப் சேலஞ்ச் நிகழ்ச்சியை நடத்தியவர்கள், படமெடுத்தவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுப்பது குறித்து இனிதான் முடிவெடுக்கப்படும் என்று பிபிசி தமிழிடம் பேசிய சைபர் கிரைம் சார்பு ஆய்வாளர் சிவகுமார் தெரிவித்தார்.

ஹிஜாப் சேலஞ்ச் - கோவை

              எஸ்.டி.பி.ஐ., கோவை மத்திய மாவட்டத் தலைவர் முஸ்தபா

சைபர் க்ரைம் செய்வது சரியில்லை

இரண்டு நாட்களுக்குப் பின், இந்த கைது நடவடிக்கைக்கு, எதிர்ப்பு எழுந்தது. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ.,) அமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

எஸ்.டி.பி.ஐ., கோவை மத்திய மாவட்டத் தலைவர் முஸ்தபா பிபிசி தமிழிடம் பேசுகையில், “எந்தவிதமான வற்புறுத்தலும் இன்றி, பங்கேற்ற பெண்களின் விருப்பத்துடன் நடந்த ஒரு நிகழ்ச்சியின் வீடியோ பதிவுக்காக இப்படி கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது” என்றார்.

ஆனால், புகார்தாரரான குமரேசனோ, இது மறைமுகமான மத மாற்ற முயற்சி என்று குற்றம்சாட்டுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘மேலோட்டமாகப் பார்க்கும் போது, ஒரு யூடியூப் சேனலில் கேளிக்கையாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி போலத் தோன்றும். ஆனால் உன்னிப்பாகக் கவனித்தால்தான் அந்த நிகழ்ச்சியை நடத்துவதற்கான காரணம் புரியும். வாக்கிங் வரும் பெண்களுக்கு பர்தா ஆடையை அணிவித்து விட்டு, ‘இந்த டிரஸ்சில் நீங்க அவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டிய அவசியமென்ன…ஏன் இதற்கு முன்பு அவர்கள் அழகாக இல்லையா…அவர்கள் சொல்லும் அந்த வார்த்தைகளில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. அதற்குள் மறைந்திருக்கிற திட்டமே வேறு. அது மத மாற்றத்துக்கான மறைமுக முயற்சி,” என்றார்.

பெண்கள் கருத்து

இந்த காணொளி எடுக்கப்பட்ட அதே ரேஸ் கோர்ஸ் சாலைக்கு பிபிசி தமிழ் சென்றது. செப்டெம்பர் 9-ஆம் தேதியன்று மாலை வேளையில், கல்லுாரி மாணவ மாணவிகள் மகிழ்வோடு அமர்ந்து, அளவளாவிக் கொண்டிருந்தனர். அவர்களிடம் இந்த ஹிஜாப் சேலஞ்ச் வீடியோ சர்ச்சை பற்றி பேசிய போது, ஒரு வீடியோவுக்காக கைது நடவடிக்கை எடுத்திருப்பது அதிர்ச்சி தருவதாகத் தெரிவித்தனர்.

ப்ரீதா, முபீனா என்ற இரண்டு மாணவிகள், பிபிசி தமிழிடம், ‘‘அந்தப் பெண்களே முழு விருப்பத்துடன் அந்த ஆடையை அணிந்து கொண்டு வீடியோ எடுக்கவும் அனுமதித்துள்ளனர். அவர்களே இதைப் பற்றி பெரிதாக எடுத்துக் கொள்ளாத போது, இதற்காக ஒருவரை கைது செய்திருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.’’ என்று ஒரே மாதிரியான கருத்தைப் பதிவு செய்தனர்.

அனஸ் அஹமது யார்?

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அனஸ் அஹமது, குன்னுாரைச் சேர்ந்தவர். ஹிஜாப் சேலஞ்ச் காணொளியைப் போலவே, இதே இளைஞர் நேரடியாகப் பேசி, பலரிடமும் கருத்துகளை சேகரித்து வெவ்வேறு காணொளிகளை அவரது யூடியூப் சேனலில் முன்பு வெளியிட்டுள்ளார்.

ஒரு காணொளியில் ‘மது–தீமைகளின் தாய்’ என்று, தமிழகம் முழுவதும் போதையால் நடந்த பல வித குற்றச்சம்பவங்களைப் பட்டியலிட்டுப் பேசுகிறார். மற்றொரு காணொளியில், இஸ்லாமியர் அல்லாத பிற மக்களிடம் சென்று, ‘முஸ்லீம்களிடம் உங்களுக்குப் பிடித்தது எது, பிடிக்காதது எது’ என்று கருத்துக் கேட்டு, பிடிக்காத விஷயம் என்று சொல்லும் கருத்துக்கு, அதே நபர்களிடம் சில விளக்கங்களைக் கொடுத்து, அந்தக் கருத்தை மாற்றிக் கொள்ளுமாறு கோருகிறார்.

ஹிஜாப் சேலஞ்ச் வீடியோ தொடர்பான புகாரில் அனஸ் அஹமது மீது பாரதீய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 352, 353 (2) மற்றும் தகவல் தொழில் நுட்பச்சட்டம் 66 F ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மூத்த வழக்கறிஞர் கருத்து

வழக்கறிஞர் சண்முகம் இந்த விவகாரம் தொடர்பாக கூறுவது என்ன?
வழக்கறிஞர் சண்முகம்

ஒரு காணொளியின் அடிப்படையில், இந்த பிரிவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கின் நிலை என்னவாகும் என்று மூத்த வழக்கறிஞர் சண்முகத்திடம் பிபிசி தமிழ் கேட்டது.

“பொது அமைதிக்கு ஊறு விளைவிப்பது, மின்னணு சாதனத்தைப் பயன்படுத்தி, வெவ்வேறு பிரிவினருக்கு இடையே வெறுப்புணர்வைத் துாண்டும் விதத்தில் தகவல் பரப்புவது என வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த காணொளியில் உள் நோக்கம் எதுவும் இருப்பதாக உறுதிப்படுத்த முடியாது.

இத்தனை பெண்களை இன்டர்வியூ செய்ததில் யாராவது ஒருவர் வந்து புகார் கொடுத்திருக்கிறார்களா என்று வாதம் வைத்தால் வழக்கு நிற்க வாய்ப்பேயில்லை. ஆனால் அந்தப் பெண்களில் யாராவது ஒருவர் புகார் கொடுத்திருந்தால் வழக்கு வலுவாகியிருக்கும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது பொழுதுபோக்கிற்காக செய்யப்பட்ட விஷயம் என்று பார்க்கும்போது, உள்நோக்கம் இருப்பதாகக் கருத முடியாது,” என்றார்.

புதிய சட்டம் தேவை

இந்த கைது நடவடிக்கை நடந்த இரண்டு நாட்களுக்குப் பின், கோவைக்கு வருகை தந்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

“இன்றைக்கு யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் துவக்கலாம், எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற நிலை இருக்கிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில், புதிய ஒளிபரப்பு சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதற்கான வரைவு, மக்களின் கருத்துகளை பெறுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறினார்.

Previous Story

சிரியாவின் மீது இஸ்ரேல் தாக்குதலில் 18 பேர் பலி

Next Story

உறுதியுமான முடிவுக்கு தயாராகும் இலங்கை தமிழரசுக் கட்சி