பொது வேட்பாளரில் தங்கியுள்ள தமிழர் சுய மரியாதை!

-நஜீப் பின் கபூர்-

‘கோடாரிக் காம்புகள் எல்லா சமூகத்திலும் இருக்கும்’

UK Foreign Office supports Tamil autonomy in Sri Lanka's north - Nationalia

இன்னும் ஜனாதிபதித் தேர்தலுக்குச் சரியாக இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தேர்தல் பிரச்சாரப்பணிகள் அணைத்தும் முற்றுப் பெற்று விடும். இது நமது வாக்காளர்களுக்கும் தெரியும். வேட்பாளர்கள் முற்பத்து ஒன்பது பேரில் புத்தளத்தை சேர்ந்த முன்னாள் மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ்  மரணத்து விட்டாலும் அவரது பெயர் வாக்குச் சீட்டில் இடம் பெற்றிருக்கும். இதற்கு முன்னரும் இந்த இல்யாஸ் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டிக்கு வருவதை சம்பிரதாயமாக கடைப்பிடித்து வந்திருக்கின்றார்.

என்னதான் முற்பத்து ஒன்பது பேர் களத்தில் இருந்தாலும் இவர்களில் டசன் கணக்கானவர்கள் பிரதான வேட்பாளர்களின் டம்மிகளாகத்தான் தேர்தலில் குத்திருக்கின்றார்கள். வேட்பாளர்களாக பதிவு செய்தவர்களில் நான்கு பேரை காணவில்லை. காணவில்லை என்பதன் அர்த்தம் அவர்கள் தொலைபேசி இணைப்புக்குக் கூட வரத் தயாராக இல்லை. அவர்களின் புகைப்படங்களைக் கூட நமக்குத் தர அவர்கள் தயாராக இல்லை.

இன்னும் பத்தொன்பது பேர் பிரதான வேட்பாளர்களின் கையாட்களாக போட்டியில் குதித்திருக்கின்றார்கள். இதற்கு முன்னரும் இப்படி நடந்திருக்கின்றது. இன்று டசன் கணக்கானவர்கள் இருந்தாலும் முக்கியமான வேட்பாளர்கள் என்று விரல்விட்டு என்னக் கூடிய சிலர்தான் இருக்கின்றார்கள். அந்த வகையில் நாம் அவர்களை ஐந்து பேர் என்ற அளவில் வைத்துக் (அணுர> சஜித்> நாமல்> ரணில்> அரியம்) கொண்டு தமிழர்களின் சுயமரியாதை பற்றிப் பார்ப்போம்.

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் நிறையவே தேர்தல் பற்றியும் வேட்பாளர்கள் பற்றியும் நமது வார இதழில் பேசி இருந்தோம். அந்த வரிசையில் கடைசி சில தகவல்கள்களைத்தான் இப்போது நாம் இங்கு பார்க்க இருக்கின்றோம். ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சியை பிளந்து கொண்டு அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை நம்பி களத்தில் இறங்கி இருக்கின்றார். ஜனாதிபதி ரணில் இது விடயத்தில் மஹிந்த ராஜபக்ஸாக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்திருக்கின்றார் என்றதான் சொல்ல வேண்டும்.

அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியை பிளந்து கொண்டு தனிக் கட்சி அமைத்த சஜித் பிரேமதாச தொலைபேசி சின்னத்தில் ரணிலுக்கு எதிரான கட்சியை அமைத்து வேட்பாளராக வந்திருக்கின்றார். இங்கும் அவர் ஐ.தே. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களை தன்னுடன் வைத்திருக்கின்றார். இதனால்தான் கடந்த தேர்தலில் ரணிலுக்கு ஒரு ஆசனத்தை கூட போட்டி போட்டு வெற்றி கொள்ள முடியாமல் போனது. இதனானால் இன்று ரணிலும் சஜித்தும் அரசியல் எதிரிகள்.

நாடாளுமன்றத்தில் இரண்டு டசன் அளவில் உறுப்பினர்களை வைத்திருக்கின்ற ராஜபக்ஸாக்கள் தரப்பில் இருந்து அவர்களது அரசியல் வாரிசு நாமல் மொட்டுக் கட்சி சார்பில் போட்டிக்கு வந்திருக்கின்றார். தனிப்பட்ட ரீதியில் சீனியர் மஹந்த ராஜபக்ஸ தமது தரப்பில் இருந்து ஒரு வேட்பாளர் ரணிலுக்கு எதிராக 2024ல் களத்துக்கு வருவதை விரும்பவில்லை. என்றாலும் தனது புதல்வரின் பலவந்தம் காரணமாகத்தான் மஹிந்த அவரை ஆதரிக்கின்ற தீர்மானத்துக்கு வர வேண்டி வந்தது.

இது தொடர்பாக ராஜபக்ஸாக்களின் குடும்பத்துக்குள் நடந்த மோதல்கள் பற்றி நாம் முன்பு பல தகவல்களைச்  சொல்லி இருந்தோம். அவை ஊகங்கள் அல்ல யதார்த்தமான கதைகள். அடுத்து இப்போது தெற்கு அரசியலில் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் ஜேவிபி-என்பிபி தலைவர் அணுரகுமார திசநாயக்க.

அவர் மீதுதான் ஏனைய பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தனது  விமர்சனங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர். காய் இருக்கின்ற மரத்துக்குத்தான் கல் எறிவார்கள் என்பது போலத்தான் இது. இதிலிருந்து அணுர ஒரு செல்வாக்கான வேட்பாளராக இருக்கின்றார் என்பதனை அவரது அரசியல் எதிரிகளே உறுதி செய்து அவருக்கு ஒரு பிரச்சாரத்தைக் கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

தெற்கு அரசியலில் நான்கு முனைப் போட்டி என்று களம் இருக்கின்றது. ஆனால் நமது பார்வையில் அங்கு இருமுனைப் போட்டிதான். மூன்றாம் இடத்துக்குத்தான் இருவர் பலப் பரீட்சையில் இருக்கின்றார்கள். இது எப்படி? அவர்கள் யார் என்று நமது வாசகர்கள் யோசிக்கலாம். அடுத்த கட்டுரையில் வசகர்களே கள நிலவரங்களைக் கண்டறிவதற்கான வகையில் (சுய கணிப்பு) ஒரு கட்டுரையில் நிலமையை புரிய வைக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

எனவே இன்று கருத்துக் கணிப்புக்கள் என்று சொல்லப்படுகின்றவற்றை வாசகர்கள் தமது தலைகளில் போட்டுக் கொள்ளக் கூடாது என்பது நமது கருத்து. (கடந்த இரு வாரங்களாக அவசியமான நேரத்தில் கட்டுரை எழுது முடியாத ஒரு நிலை.  பலர் தொடர்பு கொண்டு தகவல் கேட்டிருந்தீர்கள்–நன்றி)

அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இன்று மக்களுக்கு உண்மைக்குப் புறம்பான கதைகளைச் சொல்லி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களும் பொருளாதார நலன்களும் அதில் இருக்கின்றன என்பதனை குடி மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரணில் நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்ற கதையும் சஜித்துக்கு தொன்நூறு இலட்சம் வாக்குகள். அணுராவுக்கு ஒரு கோடி வாக்குகள் என்பவைகள் எல்லாம் கற்பனைக் கதைகள் என்பது இருபத்தி இரண்டாம் திகதி பின்னிரவில் நாம் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும்.

ஒரு புறத்தில் பார்க்கின்ற போது தமது ஆதரவாளர்களை ஊக்குவிப்பதற்காக அரசியல் வாதிகளும் அவர்களுக்கு கூஜாதூக்குகின்ற ஊடகங்களும் இப்படியான கதைகளை சந்தைப்படுத்தி வருகின்றன. இதனை குடிமக்கள் புரிந்து கொண்டால் அவர்கள் குழப்பமடைய வேண்டி தேவை இருக்காது.

ஆனால் இப்படியான கதைகளை எல்லாம் காதில் வாங்கிக் கொள்கின்ற கூட்டத்தினர்தான் சமூகத்தில் டென்சனாகிக் கொண்டிருக்கின்றார்கள். நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் பூரவிலும் அரசியலில் இப்படியான காட்சிகள் நடந்து கொண்டுதான் வருகின்றன. இதனால்தான் இன்று அணுர, சஜித், ரணில், நாமல் தமக்கே வெற்றி என்று கதை சொல்லிக் கொண்டு வருகின்றார்கள்.

இப்போது நாம் தலைப்பில் சொல்லி இருக்கின்ற தமிழர்களின் சுயமரியதை பற்றிய நமது கருப் பொருளுக்குள் பிரவேசிப்போம். இந்த சுயமரியாவை என்ற பதம் ஒவ்வொரு தனிமனிதனதும் உயிரிணங்களில் உணர்வுகளிலும் இரண்டரக் கலந்திருக்கின்ற ஒரு அம்சம். அது உணர்வுக்குள் அடங்கிப் போய் இருக்கும். தனக்கு அல்லது தனது இனத்துக்கு சமூகத்துக்கு தேசத்துக்கு ஒரு கௌரவப் பிரச்சினை வரும் போது சுயமரியாதை என்ற உருவத்தில் அது வெளிப்படும்.

மேற்சொன்ன நான்கு வேட்பாளர்கள் மத்தியில் ஐந்தாம் ஆளாக தமிழர்களின் பொது வேட்பாளரையும் நாம் ஒரு கனதியான வேட்பாளராக எடுத்துக் கொள்ள முடியும். அவருக்கு சமூகம் எந்தளவுக்கு கொடுக்கின்றதோ அந்தளவுக்குத்தான் அவர்களுக்கான மரியாதையும் சுயகௌரவமும் பாதுகாப்பும் இருக்கும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். தமிழர்களைப் பொறுத்தவரை அவர்தான் அந்த சமூகத்தின் ஜனாதிபதி வேட்பாளர்.

தமிழர்களின் பொது வேட்பாளராக அரியநேந்திரனைக் களத்தில் இறக்கி இருப்பது ஒரு இனத்தின் குறியீடாகத்தான் என்பது அனைவரும் அறிந்த செய்தி. என்றாலும் வெற்றி பெற முடியாத ஒருவர் ஏன் களத்திற்கு வரவேண்டும் என்று தமிழர் தரப்பிலிருந்தே சில அரசியல்வாதிகள் கேட்டிருந்தார்கள். எனவே வெற்றி பெறக்கூடிய தெற்கு அரியல்வாதி ஒருவருக்கு ஆதரவு கொடுத்து அவர் ஊடாக தமிழர்கள் உரிமைகளை அடைவதற்கு இது தடை என்பது அவர்கள் வாதமாகவும் இருக்கின்றது.

இவர்களிடம் நாம் கேட்பது போட்டியிடுகின்ற முற்பத்து ஒன்பது பேரில் ஒருவர்தானே வெற்றி பெற முடியும். எனவே வெற்றி பெற முடியாத ஏனையோர் அப்படியாக இருந்தால் எதற்காக அங்கு போட்டிக்கு வந்திருக்கின்றார்கள்.? அடுத்து இவர்கள் இனம் காட்டுக்கின்ற வேட்பாளர்தான் தெற்கில் வெற்றி பெறுவார் என்பதற்கு என்னதான் உத்தரவாதம் இருக்கின்றது. அடுத்து நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்குக் கொண்டு வருததில் பிரதான பங்காளியாக இருந்த இவர்கள் அன்று வாய்ப்பான நேரத்தில் தமிழர்களுக்கு என்னதான் பெற்றுக் கொடுத்திருந்தார்கள்.

ரணிலை நம்பிக் கடைசிவரையிலும் தமிழர்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள் இந்த பொது வேட்பாளரை எதிர்ப்பதிலும் முன்னணியில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் செயல்பாடுகளின் போது அவர்களை எந்த இடத்தில் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்பது தொடர்பிலான தீர்மானங்களையும் இப்போது தமிழர்கள் எடுத்தாக வேண்டும்.

MAP Calls For Independent Evidence-Gathering Mechanism For Sri Lanka - Colombo Telegraph

இதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. தமிழர்களின் அரசியல் அரங்கை தூய்மைப்படுத்தும் ஒரு காலாமாக இதனை தமிழர்கள் உபயோகித்துக் கொள்ள முடியும். சந்தர்ப்பவாத அரசியல் செய்தவர்களுக்கும் செய்கின்றவர்களுக்கும் இனங்களின் அரசியல் உணர்வுகள் போராட்டங்கள் தியாகங்களைப் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால்  இன உணர்வுடன் செயல்படுகின்றவர்கள் இவர்கள் விடயத்தில் இன்னும் அடக்கி வாசிப்பது புரிந்து கொள்ள முடியாத வியடயமாக இருக்கின்றது. ஈகோ பிரச்சினைகளோ தெரியாது.!

Sinhalese getting India-funded houses - TNA MPs

தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற ஏனைய தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் பொது வேட்பாளருக்கு ஆதரவு என்ற கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதால் அவர்களும் முதுகொழும்பு இல்லாத தலைவர்கள் என்பதனை தம்மை சமூகத்திற்குக் கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சுமந்திரன் ஒரு முறை 2024 செப்தெம்பர் இருபதாம் திகதி (20) வரை பொது வேட்பாளர் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க காலம் இருக்கின்றது என்று ஒரு கதையை ஊடகங்களுக்குச்  சொல்லி இருந்தார். அவரது அந்தக் கதையிலிருந்து எதனை உணர முடிகின்றது.

ஒருவார் இனத்தின் சார்பில் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கின்ற தீர்க்கமான இந்த நேரத்தில் இறுதி நிமிடம் வரை தமிழரசுக் கட்சி முடிவு சொல்லும் வரை காத்திரு என்ற வார்த்தை எவ்வளவு தூரம் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகின்ற விடயமாக இருக்கமுடியும்.? இது தொடர்பாக தமிழரசுக் கட்சி இன்னும் மௌனம் காப்பது ஏன்?

தெற்கின் அரசியல் முகவர் தமிழரசுக் கட்சித் தீர்மானம் பற்றிக் கேட்ட போது அந்த முகவர் 20ம் தகதிவரை பொறுத்திரு என்று சொல்லி இருந்தார். இது எவ்வளவு தூரம் துரோகமான கதை. அடுத்து கிழக்கில் ஒருவருக்கு அறுபது கோடியும் வடக்கில் ஒருவருக்கு நாற்பது கோடியும் என்று ஜனாதிபதி ரணில் நிதி ஒதுக்கி இருக்கின்றார் என்று தயாசிரி தயசேக்கர பகிரங்கமாக பெயர் குறிப்பட்டு கூறி வருகின்றார். இவர்கள்தான் இன்று தமிழ் பொது வேட்பாளருக்கு எதிரகப் போர்க் கொடி தூக்கி இருக்கும் முக்கிய புள்ளிகள்.

மறுபுறத்தில் இப்படி ரணிலிடம் பணம் வாங்கி தமது அரசியலை முன்னெடுத்துச் செல்பவர்கள் எப்படிப் பொது வேட்பாளர்களை ஆதரிக்க முடியும்.?

Joint New Year Message From World-Wide Tamil Entities: A Solemn Pledge To Work For International Investigation - Colombo Telegraph

கட்சியின் அங்கிகாரம் இல்லாமல் இப்படி தன்னிஸ்டத்துக்கு அபிவிருத்தி பணிகளுக்கு பணம் வாங்கி சமூகவிரோத அரசியல் செய்வது தொடர்பாக தமிழரசுக் கட்சி  இன்று வரை கேள்வி எழுப்பியதும் கிடையாது. சிரிதரன் என்னதான் தலைவராக தெரிவு செய்யப்பட்டாலும் அவர் ஏட்டுச் சுரைக்காய் வடிவில்தான் தனது பதவியையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகின்றார். அல்லது தெற்கு அரசியல் முகவர்களுக்கு அவர் பயந்து முடிவுகளை எடுக்கப்பின் வாங்கி வருகின்றார்.

இப்படியான ஒரு பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னால் வருகின்ற பொதுத் தேர்தலில் தற்போது பொது வேட்பாளரை களத்தில் ஆதரிக்கின்ற சக்திகள் புதியதோர் அரசியல் இயக்கமாக வருகின்ற தேர்தலில் தமிழ் மக்களின் அங்கிகாரத்துக்கு வரலாம். அப்போது இந்த தமிழரசுக் கட்சியும் சிரிதரன் போன்றவர்களும் இளவு காத்த கிளியின் நிலைக்கு ஆளாகலாம்.

தமிழர்கள் தொடர்பாக சர்வதேசத்தின் அவதானத்தை ஈப்பதற்கும் இங்குள்ள தமிழர்களின் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கும் பொது வேட்பாளர் பெருகின்ற வாக்குகள் நிச்சயம் துணைபுரியும். பொது வேடபாளர் அறியநேந்திரன் தமிழ் மக்களின் எழுபத்தி ஐந்து சதவீதமான வாக்குகளுக்கு அதிகம் பெறத் தவறுவராக இருந்தால் அது தமிழர்களுக்கான தலை குனிவாகத்தான் அமையும். இந்த நாட்டில் தமிழர்களுக்கு நெருக்கடிகள் பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றுதான் அது அர்த்தத்தைக் கொடுக்கும்.

மேலும் எதிர் வரும் காலங்களில் இந்த நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் மீது தெற்கு அரசியல்வாதிகள் தமது அவதானத்தை செலுத்துவதற்கும் அறியநேந்திரன் பெறுகின்ற வாக்குகள் உறுதுனையாகவும் இருக்கும்.  பணத்துக்காகவும் தெற்கு அரசியல் தலைமைகளுடன் கொடுக்கல் வாங்கள் அரசியல் செய்ய முனைகின்றவர்களுக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்கும் ஒரு தேர்தலாகவும் தமிழர்கள் இந்த 2024 ஜனாதிபதித் தேர்தலை பாவிக்க முடியும்.

நாம் வாழ்க்கின்ற சமூகத்தில் தன்னலன்களுக்காக கோடாறிக் காம்புகள் தமது பணிகளைச் செய்து கொண்டுதான் இருக்கும். இதற்கு மத்தியில்தான் சமூக விமோசனங்களுக்கான பணிகளும் போராட்டங்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருக்கின்றது என்பதனை நாம் வரலாறு பூராவிலும் பார்த்துத் தான் வருகின்றோம்.

அணுர> சஜித்> நாமல்> ரணில் ஆகியோருக்கு அடுத்தபடியாக வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளராக தமிழர்களின் பொது வேட்பாளர் வருவார் என்று எதிர்பாக்கலாம். வடக்குக் கிழக்கில் பொது வேட்பாளர் பெறுகின்ற வாக்குகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான ஒரு கருத்துக் கணிப்பாகவும் உலகம் பார்க்கும் ஒரு நிலையும் இந்தத் தேர்தலில் இருக்கின்றது. இதனை  உலகம் பூராவிலும் வாழ்கின்ற தமிழ் சமூத்தினர் புரிந்து கொள்ள வேண்டும்.

நன்றி 01.09.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ரங்கேக்கு என்னதான் நடந்தது!

Next Story

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு  நடவடிக்கை