அக்டோபர் 7 தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த, ஹமாஸ் தலைவராக்கியது ஏன்?

-ருஷ்டி அபுலாஃப்-   

கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவர் தேர்வு
,உயிரிழந்த ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (இடது), புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட யஹ்யா சின்வார் (வலது)       

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி இஸ்ரேலின் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலைத் திட்டமிட முக்கியப் பங்காற்றியவர் யஹ்யா சின்வார். தற்போது, ஹமாஸ் குழுவின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டப் பிறகு, அவரது இடத்துக்கு சின்வார் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். இது இஸ்ரேலுக்கு ஹமாஸ் அனுப்பும் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், சின்வார் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதற்கு எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. என்ன நடக்கிறது?

ஹமாஸ் அமைப்பின் தலைவர்கள் கடந்த ஒரு வாரமாக கத்தாரை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். அவர்களது அரசியல் பிரிவு தலைவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க அவர்கள் அனைவரும் கத்தார் தலைநகர் தோகாவில் கூடினார்கள்.

ஹமாஸ் – இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் காஸா போர் துவங்கி ஒரு வருடம் நிறைவடைய உள்ள நிலையில், மத்தியக் கிழக்கு பிராந்தியங்களில் இருந்து ஹமாஸ் தலைவர்கள் கத்தாருக்கு விரைந்துள்ளனர்.

பலரும், அவர்களது அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட செய்தியால் மனமுடைந்து போய் இங்கே வந்துள்ளனர். அவரை இஸ்ரேல் கொலை செய்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

இஸ்ரேலுடனான போர் நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தையை மேற்பார்வையிட்டு வந்தவர் ஹனியே. போரில் முனைப்பு காட்டிய ஆயுதப் பிரிவினரை சமாதானம் செய்து, இஸ்ரேலுக்குச் சென்று அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் முக்கிய பங்காற்றினார் ஹனியே.

தற்போது வெற்றிடமாக உள்ள அவரது பதவியை நிரப்பப்பட வேண்டும்.

கூட்டம் எப்படி நடந்தது?

தோஹாவில் நடைபெற்ற நினைவு நிகழ்வில் ஹமாஸ் தலைவர்கள் தோளோடு தோள் நின்று ஹனியேவுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள். வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில், தரைவிரிப்புகள், அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள், திரும்பிய திசைகளில் எல்லாம் மாட்டப்பட்ட புகைப்படங்களுடன் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. வந்திருந்த தலைவர்கள், ஹனியேவுக்கும் தாக்குதலில் அவரோடு கொல்லப்பட்ட அவரது பாதுகாவலருக்கும் மரியாதை செலுத்தினார்கள்.

ஆனால் இது வெறும் நினைவு நிகழ்வு மட்டுமல்ல. ஒரு சகாப்தத்தின் முடிவும் மற்றொன்றின் துவக்கத்தையும் குறிக்கும் முக்கியமான கட்டமாகப் பார்க்கப்பட்டது.

ஹமாஸ் தலைவர்கள் மறைந்த பின்னர், புதிய தலைவரை ஹமாஸின் மூத்த தலைவர்கள் தேர்வு செய்வதைப் பார்ப்பது எனக்கு ஒன்றும் புது நிகழ்வல்ல. 2004-ஆம் ஆண்டு, ஹமாஸ் அமைப்பின் நிறுவனரான ஷேக் அஹமது யாசின் இஸ்ரேல் நாட்டால் கொல்லப்பட்ட பிறகு அவருடைய வீட்டில் இது போன்ற கூட்டம் ஒன்று நடைபெற்றது. அங்கே புதிய தலைவராக அப்தெல் அஸிஸ் அல் ரந்திஸி தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவர் தேர்வு செய்யப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவேறாத நிலையில் அவரையும் இஸ்ரேல் கொன்றது.

ஆனால் இம்முறை கூடிய ஹமாஸ் தலைவர்கள் தற்போதுள்ள பிரச்னை குறித்தும் அவர்கள் சந்திக்கும் இதர சவால்கள் குறித்தும் விவாதித்தனர்.

இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பிறகு புதிய தலைவரை தேர்வு செய்ய ஹமாஸ் முடிவு

  இஸ்மாயில் ஹனியேவின் அஞ்சலி நிகழ்வில் பங்கேற்க மத்திய கிழக்கில் இருந்து கத்தாருக்கு விரைந்த ஹமாஸ் தலைவர்கள்

புதிய அரசியல் பிரிவு தலைவரை தேர்வு செய்த ஹமாஸ்

2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது ஹமாஸ். அதில் 1,200 நபர்கள் கொல்லப்பட்டனர். 251 நபர்கள் பிணைக்கைதிகளாக காஸாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதற்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இதுவரை 29,600-க்கும் நபர்கள் கொல்லப்பட்டதாகவும், ஆயிரக் கணக்கானோர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறுகிறது ஹமாஸ் அமைப்பின் சுகாதார அமைச்சகம்.

காஸாவில் அமைந்துள்ள கட்டடங்களில் பாதிக்கு மேல் சேதப்படுத்தப்பட்டுள்ளது அல்லது முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையும் அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு இடம் மாறியுள்ளனர்.

காஸாவை 2007-ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்து வரும் ஹமாஸ் மீதான எதிர்ப்பு தற்போது அதிகரித்துள்ளது. இந்த அமைப்பும் பல்வேறு இழப்புகளை சந்தித்துள்ளது.

அதில் மிக முக்கியமானது ஜூலை 31-ஆம் தேதி அன்று, பாதுகாப்பான இடமாக கருதப்பட்ட தெஹ்ரானில் வைத்து இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாகும். இது இந்த அமைப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹமாஸ், ஹனியே அவருடைய அலைபேசியில் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருந்த போது, anti-personnel missile என்ற ஏவுகணை மூலமாகக் கொல்லப்பட்டார் என்று தெரிவிக்கிறது. இரானின் புரட்சிப்படை அமைப்பினர் 7 கிலோ மதிப்பிலான ஏவுகணை மூலம் அவர் கொல்லப்பட்டார் என்கிறது. சில மேற்கத்திய ஊடகங்கள், அவர் வருகைக்கு முன்பே அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்ட வெடிகுண்டு மூலம் அவர் கொல்லப்பட்டார் என்று செய்தி வெளியிட்டுள்ளனர்.

ஹனியேவின் அஞ்சலி நிகழ்வுக்கு தோஹா வந்தவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்ட ஒருவர், வெள்ளை முடியுடன், அளவான தாடி வைத்துக் கொண்டு ஒரு மூலையில் நின்று கொண்டிருந்தார்.

“அவரை உன்னிப்பாகக் கவனி,” என்று ஹமாஸின் ஊடக அதிகாரி ஒருவர் என்னிடம் கூறினார். நான் யார் என்றேன். “அவர் நிழல் போல் ஆரவாரம் இல்லாமல் இருக்கும் நபர். பெயர் அபு ஒமர் ஹசன்,” என்றார் அவர்.

ஹமாஸின் முதன்மை ஆலோசனை குழுவான சுரா கவுன்சிலின் தலைவர் தான் அபு ஒமர் ஹசன் அல்லது முகமது ஹசன் தர்விஷ். ஹமாஸின் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடைபெறும் வரை அந்த குழுவின் இடைக்கால தலைவராக பணியாற்ற இருக்கும் நபர்.

பெரிய கனவுகளைக் கொண்ட நபர் அவர் என்று என்னிடம் கூறினார்கள்.

2012-ஆம் ஆண்டு முதல் ஹமாஸின் அரசியல் பிரிவு செயல்பட்டு வரும் தோஹாவில், அஞ்சலி நிகழ்வுக்குப் பிறகு பல மூத்த தலைவர்கள், அமைதியாகச் செயல்பட்டு வரும் தலைவர்கள் பலரும் அடுத்த தலைவரைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனையை நடத்தினார்கள்.

இஸ்ரேல் - காஸா போர்

இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை காஸாவை முழுமையாக சேதப்படுத்தியுள்ளது

யார் இந்த யஹ்யா சின்வார்?

அவர்கள், ஏற்கனவே 2017-ஆம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பில் தலைவராக இருந்த யஹ்யா சின்வாரை தலைவராகத் தேர்வு செய்தனர். இந்தத் தேர்வு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், 2011-ஆம் ஆண்டு பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டிருந்த இஸ்ரேல் ராணுவ வீரர் கிலாத் ஷாலித்தை விடுதலை செய்து, இஸ்ரேலின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட சின்வாரின் அரசியல் வாழ்க்கையை அறிந்த அனைவருக்கும் தெரியும், ஒரு நாள் அவர் ஹமாஸ் அமைப்பின் தலைவராவார் என்று.

இதற்கு முன்பு ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர்கள் யாரும் ஆயுதப் பிரிவினருடன் அவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. சின்வாரின் சகோதரர் முகமது, ஹமாஸின் மிகப்பெரிய ராணுவப் படைக்குத் தலைமை தாங்கி வருகிறார்.

ஹமாஸின் ராணுவப் பிரிவின் தலைவராக 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த, கடந்த ஆண்டு இஸ்ரேலால் கொல்லப்பட்டதாக கூறப்படும் முகமது டெய்ஃப், சின்வாரின் நண்பர். பள்ளிக் காலத்தில் உடன் படித்தவர். அவரது அண்டை வீட்டில் வசித்து வந்தவர். காஸாவின் கான் யூனிஸ் அகதிகள் முகாமில் இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள்.

இத்தனைக்கும் பிறகு, பலரும் சின்வாருக்கு முக்கியப் பொறுப்பு வழங்குவது பைத்தியக்காரத்தனம் என்று கூறுகின்றனர். இஸ்ரேலின் பாதுகாப்பு முகமைகள், தெற்கு இஸ்ரேலில் நடைபெற்ற தாக்குதலைத் திட்டமிட்டு அரங்கேற்றியவர் சின்வார் தான் என்று நம்புகின்றனர். தேடப்படும் நபர்கள் பட்டியலில் இவர் முதல் இடத்தில் உள்ளார்.

ஹமாஸ் தலைமையில் உள்ள அனைவரும் இந்த முடிவை ஆதரிக்கவில்லை என்று என்னிடம் கூறினார் ஹமாஸ் தலைவர் ஒருவர். “சில தலைவர்கள் அவர்களது கருத்துகளை முன்வைத்தனர். ஒரு சிலர் அதிக தீவிரம் இல்லாத நபரைத் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால் இறுதியில் அவருக்கே பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன,” என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் பங்கு பெற்ற மற்றொரு ஹமாஸ் தலைவர், அபு ஒமர் ஹாசனைத் தேர்வு செய்ய முடியாத சூழல் நிலவி வருவதாகத் தெரிவித்தார். இந்த இயக்கத்தைத் தாண்டி அவருக்குப் பொதுவெளியில் அறிமுகம் இல்லை. ஆனால் அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதல் மூலம் உலக நாடுகளால் அறியப்பட்ட நபராக மாறியுள்ளார் யஹ்யா சின்வார்.

அக்டோபர் 7-ஆம் தேதி நடைபெற்ற தாக்குதலுக்குப் பிறகு ஒரு ‘டிரேட்மார்க்’காக மாறிவிட்டார் சின்வார். அரபு மற்றும் இஸ்லாமிய உலகில் அவர் பிரபலம் அடைந்துள்ளார் என்றும் அவர் கூறினார். “அவர் இரானால் ஆதரிக்கப்படும் எதிர்ப்பின் மையத்தில் உள்ள நபர்களுடன் நெருங்கிய உறவில் உள்ளார். மேலும் காஸாவில் போர் நடைபெற்று வருகின்ற சூழலில், அவரது நியமனம் இஸ்ரேலுக்கு பலமான எதிர்ப்பு செய்தியை அனுப்பும்,” என்றும் அவர் கூறினார்.

எதிர்ப்பின் மையம் (axis of resistance) என்பது இரானால் ஆதரிக்கப்படும் ஆயுதமேந்திய குழுக்களின் கூட்டமைப்பாகும். இஸ்ரேலுக்கு மேலும் ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் லெபனானை தலைமையாகக் கொண்டு செயல்படும் ஹெஸ்பொலாவும் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளது.

இஸ்ரேல் - காஸா போர்

தெற்கு இஸ்ரேலில் அக்டோபர் 7-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் சேதம் அடைந்துள்ள வாகனங்கள்

சின்வாருக்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

அக்டோபர் 7-ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் சின்வாருக்கு இருக்கும் தொடர்பால், அரபு மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பலரும் சின்வாரை அந்தப் பொறுப்பில் அமர்த்தக் கூடாது என்று கேட்டுக்கொண்டனர். மேற்கத்திய நாடுகள், சின்வாரையும் அவர் தற்போது தலைமை தாங்கி வரும் அமைப்பையும் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன.

அவர் தாக்குதல் திட்டங்களின் ‘மாஸ்டர்மைண்டாக’ செயல்பட்டதால் அவரை கவுரவிக்கவே நாங்கள் அவருக்கு வாக்களித்தோம் என்றார் மற்றொரு ஹமாஸ் தலைவர். அக்டோபர் 7-ஆம் தேதி அவருக்கானது. அவர் இந்த இயக்கத்தை வழி நடத்த தகுதியானவர் என்றும் குறிப்பிட்டார்.

இந்தத் தாக்குதல் நடைபெற்று பத்து மாதங்கள் ஆகியுள்ளன. போர் நிறுத்தம் தொடர்பான அத்தனை பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்துள்ளன. இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள இரண்டு முக்கியஸ்த நாடுகள் கத்தார் மற்றும் எகிப்து, போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைக்குத் தேவையான பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்று பிபிசி புரிந்து கொண்டுள்ளது.

தற்போது கசிந்துள்ள போர் நிறுத்தப் பேச்சு வார்த்தையின் முன்மொழிவு வரைவில், இஸ்மாயில் ஹனியேவின் கொலைக்குப் பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என இரானிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகவும், இதற்குப் பதிலாக இஸ்ரேலை போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைக்கவும், பிலாடெல்ஃபி எல்லையில் நிறுத்தப்பட்ட ராணுவத்தினரை திரும்பப் பெறவும் இரான் வலியுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிலாடெல்ஃபி காரிடர் என்பது ஒரு 100 மீட்டர் அகலம் மட்டுமே கொண்டுள்ள, 8 கிலோ மீட்டர் நீளம் கொண்டுள்ள பரப்பாகும். இது காஸா மற்றும் எகிப்தின் எல்லைப்பகுதிக்கு மத்தியில் செல்லும் பாதையாகும். காஸாவின் மற்றொரு நில எல்லையானது இஸ்ரேல்.

போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை குறித்து நன்றாக அறிந்த பாலத்தீன அதிகாரி ஒருவர் தோஹாவில் என்னிடம் பேசிய போது, “எகிப்து நாட்டின் உளவுத் துறை ஏற்கனவே தோஹாவுக்கு ஒரு குழுவை அனுப்பியுள்ளது. இஸ்ரேல் மீதான தாக்குதலைத் தவிர்த்து அதற்குப் பதிலாக போர் நிறுத்தத்தை வலியுறுத்த வருகின்ற நாட்களில் ஒரு செயல்திட்டத்தை உருவாக்க ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்,” என்றார்.

தற்போது, ஹமாஸில் மிகத் தீவிரமாகச் செயல்படும் யஹ்யா சின்வார் போன்ற ஒருவரை தலைவராகக் கொண்டிருக்கையில் இரு நாட்டுப் பிரச்னையின் சத்தம் மட்டுமே அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறது. இந்தப் போரில் அவர் உயிர் பிழைத்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இவர் தான் அந்தக் குழுவை வழி நடத்துவார்.

Previous Story

அச்சத்தில் இருக்கும் பிரிட்டன் முஸ்லிம் சமூகம்

Next Story

பிரிட்டனில் இனவாத எதிர்ப்பு பேரணிக்கு ஆதரவு