இந்துக் கோவில்களை பாதுகாக்கும் முஸ்லிம்கள்!

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா கடந்த திங்களன்று வெகுஜன எதிர்ப்புகளைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறினார். இது நடந்து சில மணி நேரங்களுக்குப் பிறகு, தலைநகர் டாக்காவில் வசிக்கும் மேம்பாட்டுத் துறை வல்லுனரான அவிரூப் சர்க்காருக்கு அவரது உறவினரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எதிர்முனையில் பேசியவர் மிகுந்த பதற்றத்தில் பேசினார்.

அவிரூப் சர்க்கார் ஒரு வங்கதேச இந்து, 90% முஸ்லிம்கள் வாழும் ஒரு நாட்டில் வாழ்கிறார். அவிரூப் சர்க்காரின் அந்த உறவினர், டாக்காவுக்கு வடக்கே, சுமார் 100 கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள நெட்ரோகோனா என்ற மாவட்டத்தில் வசிக்கிறார்.

வங்கதேசம், இந்துக்கள் மீது தாக்குதல்
                                                         வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ்

கணவரை இழந்த பெண்ணான அவர், ஒரு கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். “அவர் பயத்துடன் பேசினார். வீட்டை ஒரு கும்பல் தாக்கி கொள்ளையடித்ததாக அவர் கூறினார்” என்று அவிரூப் சர்க்கார் டாக்காவிலிருந்து தொலைபேசியில் பிபிசியிடம் தெரிவித்தார்.

‘அவாமி லீக்கின் வழித்தோன்றல்கள்’

அவிரூப் சர்க்கார்
“வங்கதேச இந்துக்கள் எளிதாக குறிவைக்கப்படுகின்றனர்,” என்கிறார் மேம்பாட்டுத் துறை வல்லுனரான அவிரூப் சர்க்கார்

சுமார் 100 பேர் கொண்ட கும்பல், ஆயுதங்களுடன், வீட்டிற்குள் நுழைந்து, வீட்டுப் பொருட்கள் மற்றும் ஜன்னல், கதவுகளை அடித்து நொறுக்கியதாகவும்,. கிளம்பும் முன் பணம், நகைகள் அனைத்தையும் எடுத்து சென்றதாகவும் அவரது உறவினர் கூறியுள்ளார்.

அங்கு வாழ்ந்த ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 6 குழந்தைகள் உட்பட 18-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களில் யாரையும் அவர்கள் தாக்கவில்லை.

“நீங்கள் அவாமி லீக்கின் வழித்தோன்றல்கள்! உங்களால் இந்த நாடு மோசமான நிலையில் உள்ளது. நீங்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்” என்று அந்த கும்பல் கொள்ளையடித்து கொண்டு கிளம்பும் முன் குடியிருப்பாளர்களை நோக்கி சத்தம் போட்டது.

சர்க்கார்  ‘தான் அதிர்ச்சியடைந்ததாகவும், ஆனால் இந்த சம்பவத்தால் முற்றிலும் ஆச்சரியப்படவில்லை என்றும்’ கூறினார்.

வங்கதேசத்தில் உள்ள இந்து சிறுபான்மையினர், ஷேக் ஹசீனாவின் மதச்சார்பற்ற அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்களாகவே பார்க்கப்படுகின்றனர் என்றும், இஸ்லாம் அரசு மதமாக இருக்கும் நாட்டில் அவாமி லீக் கட்சியின் போட்டியாளர்களால் அடிக்கடி அவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்றும் சர்க்கார் கூறுகிறார்.

ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, சமூக ஊடகங்களில் இந்து சொத்துக்கள் மற்றும் கோவில்கள் தாக்கப்படுவதாக செய்திகள் அதிகமாக உலாவுகின்றன.

‘அவாமி லீக் ஆட்சியை இழக்கும் போது நடக்கும் தாக்குதல்கள்’

'அவாமி லீக்கின் வழித்தோன்றல்கள்'

இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் செவ்வாயன்று இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசியபோது, “மிகவும் கவலைக்குரியது என்னவென்றால், சிறுபான்மையினர், அவர்களது வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் கோயில்கள் பல இடங்களில் தாக்குதலுக்கு உள்ளானதுதான். சேதத்தின் முழு அளவு இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.” என்றார்.

இருப்பினும், இளம் முஸ்லீம் குழுக்கள், இந்த செயல்களைத் தடுக்க இந்து வீடுகள் மற்றும் கோவில்களைப் பாதுகாத்து வருகின்றனர்.

“வங்கதேச இந்துக்கள்தான் எளிதான இலக்கு. ஒவ்வொரு முறையும் அவாமி லீக் ஆட்சியை இழக்கும் போது, ​​அவர்கள் தாக்கப்படுகிறார்கள்” என்று சர்க்கார் கூறினார்.

தனது உறவினரின் வீடு தாக்கப்படுவது இது முதல் முறையல்ல என்று சர்க்கார் கூறுகிறார். 1992ஆம் ஆண்டு இந்திய நகரமான அயோத்தியில் உள்ள பாபர் மசூதியை இந்து கும்பல் இடித்ததை அடுத்து வங்கதேசத்தில் சிறுபான்மையினர் குறிவைக்கப்பட்டனர். சர்காரின் சகோதரியின் வீடு ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது.

அதற்கடுத்து இந்துக்கள் மீது பல மதத் தாக்குதல்கள் நடந்துள்ளன. வங்கதேச மனித உரிமைக் குழுவான ‘ஐன் ஓ சலிஷ் கேந்திரா’, ஜனவரி 2013 முதல் செப்டம்பர் 2021 வரை இந்து சமூகத்தின் மீது குறைந்தது 3,679 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக அறிவித்தது. இதில் பொருட்களைச் சேதப்படுத்துதல், தீவைப்பு மற்றும் இலக்கு வன்முறை ஆகியவை அடங்கும்.

சர்க்கார்
திங்கள்கிழமை மாலை தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பிற்குள் ஒரு கும்பல் நுழைய முயன்றதாக சர்க்கார் கூறுகிறார்

‘சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது’

2021ஆம் ஆண்டில், நாட்டின் மிகப்பெரிய இந்து பண்டிகையான துர்கா பூஜையின் போது மற்றும் அதற்குப் பிறகு வங்கதேசத்தில் இந்து சிறுபான்மையினரின் வீடுகள் மற்றும் கோயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

“பல ஆண்டுகளாக, தனிநபர்களுக்கு எதிரான இதுபோன்ற தொடர்ச்சியான தாக்குதல்கள், வகுப்புவாத வன்முறைகள் அரங்கேறுகின்றன, வீடுகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அழிக்கப்படுகின்றன. வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டதை இது காட்டுகிறது.” என மனித உரிமைகள் குழுவான அம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறியது.

திங்களன்று, சர்க்கரின் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் வன்முறைத் தாக்குதலுக்கான அபாயத்தை எதிர்கொண்டனர். டாக்காவில் இருந்து 120 கிமீ தொலைவில் உள்ள கிஷோர்கஞ்சில் உள்ளது அவரது பெற்றோரின் வீடு.

“நாங்கள் அக்கம் பக்கத்தில் நன்கு அறியப்பட்ட குடும்பம் மற்றும் அனைவருக்கும் தெரிந்தவர்கள் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை.” என்கிறார் சர்க்கார்.

'சிறுபான்மையினரைப் பாதுகாக்க அரசு தவறிவிட்டது'

சர்க்காரின் தாயார், உள்ளூரில் ஒரு பள்ளியை நடத்தி வருகிறார். அவரது நண்பரிடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, ‘யாரையெல்லாம் தாக்கவேண்டும் என்ற பட்டியலை உருவாக்குகிறார்கள்’ என்று அவர் கூறினார்.

மேலும் அந்த நண்பர், “உங்கள் பெயர் பட்டியலில் இல்லை. ஆனால் தயவுசெய்து கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார்.

அதன் பிறகு, சர்க்காரின் குடும்பத்தினர் வீட்டைப் பூட்டிக்கொண்டு உள்ளே இருந்துள்ளனர். வீட்டின் இரும்பு கேட்டிற்கு வெளியே ஒரு சிறிய கூட்டம் கூடுவதைக் கண்டார் சர்க்காரின் தந்தை.

“யாரோ கூட்டத்தினரிடம் வந்து, ‘இங்கே எதுவும் செய்யாதீர்கள், இங்கே வேண்டாம்’ என்று சொல்வதை என் தந்தை கேட்டார். கும்பல் கலைந்து சென்றது.” என்கிறார் சர்க்கார்.

ஆனால் சிறிது தொலைவில், கிஷோர்கஞ்சில் உள்ள நோகுவா பகுதியில், இந்து வீடுகள் சூறையாடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.ES

“அங்கு 20-25 வீடுகள் தாக்கப்பட்டதாக கேள்விப்பட்டேன். எனது இந்து நண்பரின் தங்கக்கடை உடைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர்களால் நகைப் பெட்டகத்தை உடைக்கவோ அல்லது எடுத்துச் செல்லவோ முடியவில்லை”, என்று சர்க்கார் கூறினார்.

அரணாக நின்ற உள்ளூர் முஸ்லிம்கள்

அரணாக நின்ற உள்ளூர் முஸ்லிம்கள்
வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையால், முஸ்லிம்கள் இந்து கோவில்களை பாதுகாத்து வருகின்றனர்

டாக்காவில் இருந்து வடக்கே 200 கிமீ தொலைவில், ஷெர்பூர் மாவட்டத்தில் உள்ள சர்க்கரின் மனைவியின் வீடும் தாக்கப்படும் அபாயத்தில் இருந்தது.

பின்னர் அந்த வீடு தாக்குதலில் இருந்து தப்பித்தாலும், ஒரு கும்பல் பக்கத்து இந்து வீட்டை சூறையாடியது.

ஆனால், இதில் ஒரு நேர்மறையான விஷயம் என்னவென்றால், வன்முறை பற்றிய செய்தி பரவியதும், உள்ளூர் முஸ்லிம்கள் ஒன்று திரண்டு இந்து வீடுகள் மற்றும் கோவில்களைச் சுற்றி பாதுகாப்பு வளையங்களை உருவாக்கினர்.

“இது வங்கதேசம் முழுவதும் நடந்துள்ளது. முஸ்லிம்களும் இந்துக்களின் சொத்துக்களைப் பாதுகாத்துள்ளனர்” என்கிறார் சர்க்கார். ஆனால் விஷயங்கள் இதோடு முடிவடையவில்லை.

திங்கட்கிழமை இரவில், டாக்காவில் சர்க்கார் தங்கியுள்ள 10 மாடி அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே ஒரு கும்பல் கூடத் தொடங்கியது. இங்கு தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் வசிக்கிறார் சர்க்கார். அதே கட்டிடத்தில் வசிக்கும் அவாமி லீக்கின் கவுன்சிலரைத் தேடி அக்கும்பல் வந்ததாக அவர் கணித்தார்.

“நான் எனது ஆறாவது மாடி பால்கனியில் இருந்து வெளியே வந்தபோது, ​​​​கூட்டத்தினர் கட்டிடத்தின் மீது கற்களை எறிந்து உடைக்க முயற்சிப்பதைப் பார்த்தேன். கதவுகள் சரியாகப் பூட்டப்பட்டிருந்தன, அதனால் அவர்களால் நுழைய முடியவில்லை. பார்க்கிங்கில் இருந்த சில கார்கள் மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன” என்று சர்க்கார் கூறுகிறார்.

நெட்ரோகோனாவுக்குத் திரும்பிய சர்க்காரின் உறவினர், குடும்பம் மேலும் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் இருப்பதாகக் சர்க்காரிடம் கூறினார்.

சர்க்கார், ராணுவத்தில் உள்ள தனது நண்பரை அழைத்து, ராணுவ வேன் ஒன்று அக்கம் பக்கத்தில் தொடர்ந்து ரோந்து வருமாறு கேட்டுக் கொண்டார்.

“இது ஒரு மோசமான காலகட்டம். சட்டம் ஒழுங்கு இல்லை. நாங்கள் மீண்டும் குறிவைக்கப்படுகிறோம்,” என்று அவர் கூறுகிறார்.

லிட்டன் தாஸ் வீடு எரிக்கப்பட்டதா?

சமீபத்தில் வங்கதேச கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் பல பதிவுகள் வெளியாகின.

‘வங்கதேச இந்து கிரிக்கெட் வீரர் லிட்டன் தாஸ் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது’ என பலர் ‘எக்ஸ்’ (முன்பு ட்விட்டர்) தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

அந்த பதிவுகளில், லிட்டன் தாஸின் புகைப்படத்துடன் எரியும் வீட்டின் புகைப்படம் சேர்த்து பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடு உண்மையில் லிட்டன் தாஸுக்கு சொந்தமானது அல்ல என்று வங்கதேசத்தைச் சேர்ந்த உண்மைச் சரிபார்ப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அது வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃப் பின் மோர்தாசாவின் வீடு என்று அவர்கள் கூறியுள்ளனர். முஸ்லிமான இவர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் எம்.பி. ஆவார்.

2019ஆம் ஆண்டில், அவாமி லீக் கட்சி சார்பில் நரைல்-2 நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து மோர்டாசா வெற்றி பெற்றார்.

இருப்பினும், வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் சில வீடியோக்களும் வெளியாகியுள்ளன. அவ்வாறான காணொளி ஒன்றில், சிலர் தாங்கள் இந்துக்கள் என்றும், அவர்களது வீடுகள் தாக்கப்படுவதாகவும் கூறுவது காணப்பட்டது.

Previous Story

 வங்கதேச வன்முறைக்கு இடஒதுக்கீடு மட்டுமே காரணமா?

Next Story

யார்  இந்த யூனுஸ்!