போலீஸ் மாஅதிபர் இல்லாமல் ஜனாதிபதி தேர்தலை நடத்தலாமா!

 

இலங்கையில் போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்ட தேசபந்து தென்னக்கோன் செயல்பட உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் ஜனாதிபதி தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸ் மாஅதிபர் இல்லாமல் தேர்தலை நடத்த முடியாது என ஒரு தரப்பினர் கூறி வருகின்ற நிலையில், பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் தேர்தலை நடத்த முடியும் என மற்றுமொரு தரப்பு தெரிவிக்கின்றது.

போலீஸ் மாஅதிபர் பதவிக்கும், ஜனாதிபதி தேர்தலுக்கு என்ன தொடர்பு? போலீஸ் மாஅதிபர் இல்லாமல் தேர்தலை நடத்துவதில் என்ன சிக்கல்? இலங்கை அரசியலில் என்ன நடக்கிறது?

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

போலீஸ் மாஅதிபருக்கு நடந்தது என்ன?

தேசபந்து தென்னக்கோன், போலீஸ் மாஅதிபராக கடமையாற்றுவதற்கு உயர்நீதிமன்றம் கடந்த 24ம் தேதி இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதன்படி, போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோனுக்கான இடைக்கால தடையுத்தரவு அமலிலுள்ள காலப் பகுதியில், அந்த பதவிக்கு சட்ட ரீதியாக தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்றம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இந்த தடையுத்தரவு எதிர்வரும் நவம்பர் மாதம் 11ம் தேதி வரை அமலில் இருக்கும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் போலீஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவின் ஓய்வை அடுத்து, பிரதி போலீஸ் மாஅதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் பதில் போலீஸ் மாஅதிபராக 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 29ம் தேதி நியமிக்கப்பட்டார்.

அரசியலமைப்பு சபையின் அனுமதி கிடைத்த பிறகு, பதில் போலீஸ் மாஅதிபராக பதவி வகித்த தேசபந்து தென்னக்கோன் போலீஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டார்.

எனினும், இலங்கையில் 2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாமை தொடர்பில் தேசபந்து தென்னக்கோனிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு விசாரணைகளை நடாத்திய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தமை மற்றும் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றில் உயர்நீதிமன்றம் அவரை குற்றவாளி என அறிவித்திருந்தமை ஆகிய காரணங்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு தரப்பினர் அவரது நியமனத்திற்கு எதிராக குரல் எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் பதவிக்கு தேசபந்து தென்னக்கோனின் பெயர் அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட போதிலும், அவரது பெயர் தெரிவு செய்யப்பட்ட விதம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

அரசியலமைப்பு சபையில் 9 அங்கத்தவர்கள் அங்கம் வகிப்பதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது அவர்களில் ஐந்து பேரின் அனுமதி அவசியம் என கூறப்படுகின்றது.

அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் செயற்படுவதுடன், தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் போது வாக்குகள் சமமாகும் பட்சத்தில் மாத்திரமே சபாநாயகரினால் தனது வாக்கை அளிக்க முடியும்.

இந்த நிலையில், போலீஸ் மாஅதிபர் தெரிவின் போது அரசியலமைப்பு சபையின் 4 பேர் தேசபந்து தென்னக்கோனிற்கு ஆதரவாகவும், இருவர் எதிராகவும் வாக்களித்திருந்ததுடன், எஞ்சிய இருவர் வாக்களிக்காதிருந்தனர்.

வாக்களிக்காத இருவரது வாக்குகளும் எதிராக அளிக்கப்பட்ட வாக்கு என கருதி, சபாநாயகர் தனது வாக்கை ஆதரவாக அளித்தார். இதனைத் தொடர்ந்து, தேசபந்து தென்னக்கோன்னை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க போலீஸ் மாஅதிபராக நியமித்தார்.

இந்த செயற்பாடானது, அரசியலமைப்பை மீறிய செயற்பாடு என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டி வருகின்றன.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

உயர்நீதிமன்றம் போலீஸ் மாஅதிபருக்கு இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையை அவசரமாக கூட்டியிருந்தார்.

இந்த விடயம் தொடர்பான சட்ட விடயங்களை ஆழமாக ஆராய்ந்து இரண்டு தினங்களுக்குள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதி கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்திருந்தார்.

போலீஸ் மாஅதிபர் பதவி வெற்றிடமாகவில்லை எனவும், தேசபந்து தென்னக்கோனே தொடர்ந்து போலீஸ் மாஅதிபராக கடமையாற்றுகின்றார் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

போலீஸ் மாஅதிபர் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை, செல்லுபடியற்றதாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனவும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகர் வெகுவிரைவில் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன கூறினார்.

”உயர்நீதிமன்றம் போலீஸ் மாஅதிபரின் கடமைகளை இடைநிறுத்தும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணை நவம்பர் மாதம் 11ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் 11ம் தேதி ஆகும் போது ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு முடிவடைந்திருக்கும் என்பதை நாட்டிலுள்ள அனைவருக்கும் அறிவார்கள். புதிய ஜனாதிபதி ஒருவர் பதவியேற்றிருப்பார். தேர்தல் காலப் பகுதியில் தேர்தல் ஆணைக்குழுவுடன் பாதுகாப்புக்காக போலீஸ் மாஅதிபர் செயற்படுவார்.

போலீஸ் மாஅதிபரின் கடமைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமை பாரிய பிரச்னையை தோற்றுவித்துள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளாது, அரசியலமைப்பின் 41 (அ) சரத்தின் கீழ் பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்க முடியாது. தற்போதைய ஜனாதிபதி, எதிர்வரும் தேர்தலில் வேட்பாளராக களமிறங்குகின்றமையினால், பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமிக்க முடியாது. போலீஸ் மாஅதிபர் பதவி இன்னும் வெற்றிடமாகவில்லை. அவரே இன்றும் போலீஸ் மாஅதிபராக கடமையாற்றுகின்றார்,” என பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிடுகின்றார்.

‘உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லுபடியாகாது’

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

அரசியலமைப்பு சபை நாடாளுமன்றத்திற்கு கீழ் செயற்படுகின்றமையினால், அரசியலமைப்பு சபையினால் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பில் எந்தவிதத்திலும் கேள்வி எழுப்ப முடியாது என தெரிவித்துள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன, உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு செல்லுபடியாகாது எனவும் கூறியள்ளார்.

”அரசியலமைப்பு சபை என்பது நாடாளுமன்றத்திற்கு கீழ் செயற்படுகின்றது” என அவர் கூறுகின்றார்.

அரசியலமைப்பு சபையின் தீர்மானம், நாடாளுமன்ற கட்டமைப்பிற்கு கீழ் மாத்திரமே கட்டுப்படும். நாடாளுமன்றத்தை தவிர வேறு எந்தவொரு நிறுவனத்திற்கும் அரசியலமைப்பு சபையின் தீர்மானம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது” எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.

”நாடாளுமன்றம் உயரியது. அதனால், அரசியலமைப்பு சபையின் நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பது அல்லது உத்தரவு பிறப்பிப்பதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. அதனால், இடைக்கால தடையுத்தரவு செல்லுபடியாகாது.|” என அவர் கூறுகின்றார்.

போலீஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனிற்கு உயர்நீதிமன்றம் இடைகால தடையுத்தரவை பிறப்பித்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டது.

இதன்படி, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் தேதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ள பின்னணியில், போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை நடத்த முடியாது என கூறப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெளிவூட்டினார்.

சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கலந்துரையாடி ஒரு வாரத்திற்குள் இந்த பிரச்னையை தீர்க்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

“போலீஸ் மாஅதிபரின் நியமனம் சட்டரீதியானது என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு சென்றால் எந்த இடத்தில் இந்த பிரச்னை முடிவடையும் என தெரியாது. தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே நாம் கடமையாற்றி வருகின்றோம். அதற்காக தேர்தல் ஆணைக்குழுவிற்கு முழுமையாக ஆதரவை வழங்குங்கள்,” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிக்கின்றார்.

இந்த விடயம் குறித்து தேர்தல் ஆணைக்குழுவிடம் முதலில் வினவுவதற்கு உயர்நீதிமன்றத்திற்கு அவசியமொன்று இருந்தது. ஏனென்றால், 106வது சரத்தின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு போலீஸ் அதிகாரிகளை, போலீஸ் மாஅதிபரிடமிருந்தே பெற்றுக்கொள்ள வேண்டும். சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபரிடம் கிடையாது. போலீஸ் மாஅதிபர் ஒருவர் இல்லையென்றால், எவ்வாறு அதிகாரிகளை கோருவது என ரணில் தரப்பு கூறுகிறது.

“தேவையான போலீஸ் அதிகாரிகளை இந்த வாரம் போலீஸ் மாஅதிபரிடம் கோர வேண்டும். அதன்பின்னர் கோரினால், அதிகாரிகளை வழங்க முடியாது. அப்படியென்றால், தேர்தலை நடாத்த முடியாது, செப்டம்பர் 21ம் தேதிக்கு பின்னர் தேர்தல் காலத்தை நீடிப்பதற்கு தனக்கு விருப்பம் கிடையாது” என்கிறார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.

“சிவில் அமைப்புகள் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அறிகின்றேன். நீதிமன்றத்திற்கு சென்று மேலும் குழப்ப வேண்டாம். நான் ஒன்றை கூறுகின்றேன். சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் கதைத்து இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த வாரத்திற்குள் தீர்வை பெற்றுக்கொள்ள வேண்டும். செப்டம்பர் 21ம் தேதி தேர்தலை தேர்தல் ஆணைக்குழு நடத்தும் வகையில் நான் செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

சபாநாயகர் கருத்து

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

“போலீஸ் மாஅதிபரை தெரிவு செய்தமை தவறு என சிலர் கூறுகின்றார்கள். எனினும், தவறான விதத்தில் தீர்மானம் எடுக்கவில்லை என நான் கூறுகின்றேன்” என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

”அரசியலமைப்பு சபையினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நீக்குவது தொடர்பில் அரசியலமைப்பின் 44 (சீ) சரத்தின் கீழ் திட்டங்கள் காணப்படுகின்றன. அந்த திட்டத்தின் கீழ் சென்றே செயற்பட வேண்டும். அப்படியில்லை என்றால், மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு சென்று இந்த தீர்மானத்தை அந்த இடத்தில் எடுங்கள். ஜனாதிபதியினால் தீர்மானம் ஒன்று எடுக்க முடியாத இடத்திலேயே அவர் இருக்கின்றார். நான் தவறு என்றால், நீதிமன்றத்திற்கு சென்று தவறை சரி செய்து கொள்ளுங்கள்,” என சபாநாயகர் தெரிவித்தார்.

சபாநாயகர் மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

அரசியலமைப்பு பேரவையின் தீர்மானத்தை சபாநாயகர் திரிபுபடுத்தி ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.

“பிரதமரும் அங்கம் வகிக்கின்ற அரசியலமைப்பு பேரவையின் செயற்பாடுகளை திரிபுபடுத்தி சபாநாயகர் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். அரசியலமைப்பு பேரவையின் கூட்டத்திற்குப் பின்னர், அதன் முடிவை நாடாளுமன்றத்திற்கு அறிவிக்காமல் ஜனாதிபதிக்கு இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கடிதம் அரசியலமைப்பை தெளிவாக மீறியுள்ளது. பிழையான, பொய்யான, வஞ்சிக்கும் இந்த கடிதத்தின் அடிப்படையில் ஜனாதிபதி நியமனங்களை வழங்கியதும் அரசியலமைப்புக்கு முரணானது” என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சபாநாயகரின் அடிப்படையற்ற இவ்வாறான கடிதங்களை மூலமாகக் கொண்டு ஜனாதிபதி இவ்வாறான நியமனங்களை மேற்கொள்வது பொருத்தமான நடவடிக்கையா? இது தொடர்பில் அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? அரசாங்கம் இதற்கு பதிலளிக்க வேண்டும் என சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போலீஸ் மாஅதிபர்

பட மூலாதாரம்,SJB MEDIA

படக்குறிப்பு,சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவர்

போலீஸாருக்கு இப்போது யார் கட்டளையிடுவது?

போலீஸ் மாஅதிபராக பதவி வகிக்க தேசபந்து தென்னக்கோனுக்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீஸ் திணைக்களம் தலைமைத்துவம் இன்றி கடந்த 24ம் தேதி முதல் செயற்பட்டு வருகின்றது.

அத்துடன், போலீஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி போலீஸ் மாஅதிபராக (நிர்வாகம்) கடமையாற்றிய நிலந்த ஜயவர்தன, ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் விசாரணை தொடர்பில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் போலீஸ் திணைக்களத்தின் உயர் பீடத்திலுள்ள இரண்டு பதவிகளும் வெற்றிடமாகியுள்ள பின்னணியில், போலீஸ் திணைக்களத்திற்கு யார் கட்டளை பிறப்பிக்கின்றார்கள் என்பது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க பிபிசி சிங்கள சேவைக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் போலீஸ் திணைக்களத்தின் நடவடிக்கைகள் வழமை போன்று நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.

வெற்றிடமாகியுள்ள பதவிகளுக்கான அதிகாரிகளை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

போலீஸ் மாஅதிபர் இன்றி தேர்தலை நடத்த முடியாதா?

இலங்கை ஜனாதிபதி தேர்தல்

போலீஸ் மாஅதிபர் இன்றி ஜனாதிபதித் தேர்தலை நடத்த தடை கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவிக்கின்றார்.

ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

”நீதிமன்றம் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து தீர்ப்பொன்றை வழங்கும் வரை தற்போதுள்ள போலீஸ் மாஅதிபர், அவர் இதற்கு முன்னர் வகித்த பதவியிலிருந்து செயற்பட முடியும். பதில் போலீஸ் மாஅதிபர் ஒருவரை நியமித்து, அவரின் கீழ் தேர்தலை நடத்த முடியும். அதற்கு எந்தவித பிரச்னையும் கிடையாது. இடைகால ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தை நடத்த முடியும் என்றால், பதில் போலீஸ் மாஅதிபரின் கீழ் தேர்தலை நடத்த முடியும்,” என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

தேர்தல் நடவடிக்கைகள் தடைப்பட்டுள்ளனவா?

போலீஸ் மாஅதிபராக கடமையாற்ற தேசபந்து தென்னக்கோனிற்கு இடைகால தடை விதிக்கப்பட்ட நிலையில், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், தேர்தலுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான கட்டுப்பணத்தை பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட நடவடிக்கைகளை தேர்தல் ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

 

Previous Story

வாராந்த அரசியல் 28.07.2024

Next Story

பாரிஸ் ஒலிம்பிக் 2024 பதக்கப் பட்டியல்