விசம் கலந்த தேன்

-நஜீப் பின் கபூர்-

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓய்ந்த பாடில்லை. உலக வரலாற்றில் இப்படி ஒரு முட்டுக் கட்டைகளைத்; தொடர்ச்சியாக சந்திக்கின்ற தேர்தலை இது வரைக்கும் உலகம் பார்த்திருக்க மாட்டாது என்று 2024 ஜனாதிபதித் தேர்தலை நமக்கு எண்ணத் தோன்றுகின்றது. அந்தளவுக்கு இந்த ஜனாதிபத் தேர்தலுக்கு சோதனைகள் சங்கிலித் தொடர் போல கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தேர்தல் காலம் தொடர்பாக லெனாவ தாக்கல் செய்த வாழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி இப்படி எல்லாம் முன்பு தீர்ப்புச் செல்லப்பட்ட வழக்குகளை இங்கு மீண்டும் மீண்டும் கொண்டு வந்து எமது காலத்தை வீணடிக்க வேண்டாம் என்று கூறி இருந்தார்.

அத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்தவருக்கு எச்சரிகையும் அவர் விடுத்திருந்தார். மேலும் அதற்காக நீதி மன்றச் செலவு என ஒரு இலட்சம் ரூபாவையும் செலுத்தும்படி கட்டளையிட்டு அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தக் கொள்ளாமலே குப்பையில் போட்டிருந்த விடயம் இப்போது இந்த நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் நன்கு அறிவார்கள். இந்த வழக்குக்கும் தனது தரப்புக்கும் எந்த தொடர்புகளும் கிடையாது என்று ஜனாதிபதி செயலாகம் அறிக்கை கூட விட்டதை நாம் அறிவோம்.

இந்த வழக்கை நீதி மன்ற விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் முன்னரே அது குப்பைக் கூடைக்கு போகின்ற என்ற தகவலையும் நாம் முன்கூட்டி நமது வாசகர்களுக்குச் சொல்லி இருந்தோம். நீதி மன்றம் திட்டவட்டமாக இது விடயத்தில் தீர்ப்புச் சொல்லி இருந்தாலும் ஜனாதிபதி தரப்பினர் இந்த விவகாரத்தை விட்டபாடில்லை. அதே நேரம் தனக்கும் வழக்குக்கும் தொடர்புகள் இல்iலை என்று லெனாவ வழக்கு விவகாரத்தில் ஜனாதிபதி செயலகம் அறிக்கை விட்டாலும் இது பற்றி அமைச்சரவையில் ஒரு தீர்மானம் எடுக்கபட்டுவிட்டது. அது விரைவில் நாடாளுமன்றத்துக்கு வருகின்றது என்று ஜனாதிபதி கையாளும் ஐக்கிய தேசியக் கட்சி செயலாளருமான ரங்கே பண்டார முன்பு சொல்லி இருந்ததும் தெரிந்ததே.

இப்போது இல்லாத ஒரு துரும்புச் சீட்டை வைத்து ஆளும் தரப்பு குறிப்பாக ஜனாதிபதி ரணில் இந்த ஜனாதிபதித் தேர்தலை தள்ளிப்போட எடுத்து வரும் ஒரு முயற்சி பற்றி இப்போது நாம் பார்ப்போம். அந்தக் கதை இதுதான் என்னதான் நீதி மன்றம் தீர்ப்புச் சொன்னாலும் அரசியல் யாப்பில் இருக்கின்ற பதிவுகளில் இன்னும் ஒரு குழப்ப நிலை தொடர்ந்தும் இருக்கின்றது. எனவே இதனை நாம் தீர்த்துவிட வேண்டும். எனவே ஜனாதிபதியின் பதவிக்காலம் ஆறு வருடங்கள் அல்ல ஐந்து வருடங்கள் தான் என்று இப்போது அமைச்சரவையில் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டு அதனை நீதி மன்றம் கொண்டு சொல்ல இருக்கின்ற ஏற்பாட்டில் தான் ஐந்த வருடங்கள் ஜனாதிபதி பதவிக்காலம் என்று நாம் அந்த திருத்தத்தை செய்து விட வேண்டும் என்பது ஜனாதிபதி ரணில் தரப்பு வாதமாக இருக்கின்றது.

இதன் அடுத்த கட்டம் இந்த அமைச்சரவைத் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்ற வேண்டும் என்பது அதனை முன்வைத்திருக்கின்ற ஜனாதிபதி தரப்பு வாதமாக இருக்கின்றது. அதன் பின்னர் இதற்கு சர்வசன வாக்கொடுப்புக் கொண்டு வரப்பட வேண்டும் என்ற சட்டச் சிக்கலைக் உருவாக்கி இந்தத் தேர்தலுக்கு ஆப்பு வைப்பதுதான் சதிகாரர்களின் இலக்கு என்பது நமது கணிப்பு. மேலும் இப்போது ஆளும் மொட்டுக் கட்சியினரும் ஜனாதிபதி ரணில் தரப்பினரும் மிகவும் நெருக்கமான ஒரு உறவை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

ரோகித குணவர்தனாவின் இருபத்தி ஏழாவது அரசியல் நிறைவு விழாவில் இருதரப்பு பேச்சுக்களும், அதன் பின்னர் அரசியல் அரங்குகளில் இவர்களின் உறவுகளில் நாம் இந்தக் காட்சிகளைப் பார்க்க முடிகின்றது. அதன் படி ஜனாதிபதி ரணில்தான் ஆளும் தரப்பு வேட்பாளர் என்ற ஒரு தோற்றப்பாடும் இப்போது அரசியல் அரங்கில் காணப்படுகின்றது. அதுவும் அவர் எதிர்பார்ப்பது போல பொது வேட்பளராக அவருக்கு வாய்ப்பு என்றும் தெரிகின்றது.

இந்த நல்லறவை வைத்து தற்போது அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருக்கின்ற தீர்மானத்தை ராஜபக்ஸாக்களின் ஒத்தழைப்புடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றி கொள்ள முடிம். அதன் மூலம் சர்வஜன வாக்கெடுப்பு என்று காலத்தை இன்னும் சில வருடங்களுக்கு ஓட்டிக் கொள்ளலாம் என்பது இவர்களது எதிர்பார்ப்பு. இது இல்லாத துரும்புச் சீட்டை வைத்த ஜனாதிபதி ரணில் விளையாடுகின்ற ஒரு ஆட்டமாக இருந்தாலும் அராஜகத்தக்கு ஏது நீதி ஏது சட்டம் என்ற நிலை நாட்டில் இருப்பதால் இல்லாத துரும்புச் சீட்டுக் கூட ஆட்டத்தை தீர்மானிகலாம் என்று நாம் அஞ்சுகின்றோம்.

ஆளும் தரப்புக்கு இன்று பாராளுமன்றத்தில் நூற்றி இருபது வரையிலான உறுப்பினர்கள்தானே இருக்கின்றார்கள் அப்படி இருக்க எப்படி இன்னும் முப்பது வரையிலான உறுப்பினர்களின் வாக்குகளை இதற்காக பெற்றுக் கொள்ளலாம் என்ற ஒரு கேள்வியும் இருக்கின்றது. இந்த நாட்டில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமான தொகையினர் ஊழல் பேர்வழிகள் மோசடிக்காரர்கள் கடத்தல்காரர்கள் என்று இருப்பதால் இவர்கள் வாய்க்கு அரிசி போட்டு விட்டால் ஜனாதிபதி ரணில் எதிர்பார்க்கின்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ள ஒரு வாய்ப்பும் இருக்கின்றது என்று நாம் எச்சரிக்கின்றோம்.

என்னதான் வெளித்தோற்றத்துக்கு ரணிலுக்கும் ராஜபக்ஸாக்களுக்கும் முரண்பாடுகள் இருக்கின்றன என்ற காட்சிகள் அரங்கேற்றப்பட்டாலும் அவை அனைத்தும் மாயை என்று நாம் தொடர்ச்சியாக சொல்லி வருவது நமது வாசகர்களுக்கு நன்றாக நினைவில் இருக்கும் என்று நாம் கருதுகின்றோம். இப்படி ஒரு முயற்ச்சி நடக்கின்ற போது பொது மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்ற நிலை வந்தால் அப்போது இன்று களத்தில் செல்வாக்குடன் இருக்கின்ற தரப்புக்கள் மீது அதற்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களுக்கு தேர்தல் தடைகளைக் கொண்டு வருவதற்கும் இதில் இடமிருகின்றது.

அரசியல் யாப்பில் இரு இடங்களில் இந்த தவறு இடம் பெற்றிருக்கின்றது என்பது இந்த பிரேரனையைக் கொண்டு வருபவர்களின் கருத்து. அதனை வைத்து இதற்கு சர்வசன வாக்கெடுப்புத் தேவை என்ற வாதத்தை முன்வைத்து இந்த குழப்பத்தை ஏற்படுத்துவது. அதனால் தமக்குக் கிடைக்கின்ற முதல் வாய்ப்பிலே தாமதப்படுத்தாமல் தேர்தல் பற்றிய அறிவிப்பை ஆணைக்குழு மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் இதற்கு ஒரே வழி. ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்புக்கு நீண்ட காலம் எடுத்து இதில் சட்டச்சிக்களை உண்டு பண்ண தேர்தல் ஆனைக்குழு அவர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்கக் கூடாது என்பது ஜனநாயகத்துக்கு ஆதரவானவர்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.

இதனை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றினாலும் ஒருவருக்கு நீதி மன்றம் செல்லும் வாய்ப்பு இருக்கின்றது. இதனால்தான் நாம் கூறுகின்றோம் தன்னிடம் இருந்த அனைத்து துரும்புச் சீட்டுக்களையும் போட்டு மண்கவ்வி இருக்கின்ற ஆட்சியாளர்கள் இப்போது இல்லாத துரும்புச் சீட்டுக்களை காட்டி ஒரு ஆட்டத்தை புதிதாகத் துவங்கி இருக்கின்றார்கள். இது வன்முறையானது ஆபத்தானது என்பது எமது கணக்கு.

இறுதியாக நடந்த பாராளுமன்ற அமர்வில் பேசி மஹிந்தானந்த தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசி இருக்கின்றார். எதிர்க்கட்சிகளைத் திருப்திப்படுதும் விதமாக இவர்கள் நடந்து வருகின்றார்கள் என்பது அவரது குற்றச்சாட்டாக இருக்கின்றது. அன்று ரணிலுக்கு எதிராக மொட்டுக் கட்சியினர் என்வெல்லாம் பேசி இருந்தார்கள.; இன்று அவர்கள் எப்படி எல்லாம் பேசுகின்றார்கள் என்பதனை ஒருமுறை எண்ணிப்பாருங்கள். இது என்ன முரண்பாடு என்பது அப்போது புரியும். தமது தனிப்பட்ட நண்மைகள் கருதி இப்படி முன்னுக்குப் பின் பேசுகின்ற நமது அரசியல்வாதிகளை நாம் அரசியலில் நிரந்தர நண்பர்களுமில்லை நிரந்தரப் பகைவர்களும் இல்லை என்று பேசுவது போலத்தான் பார்க்க வேண்டும்.

யாப்பில் என்பத்தி மூன்றின் கீழ் பி (83-பி) சரத்தை திருத்த வேண்டும் என்று அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கேட்பதற்கு இனிமையான செய்தியாகத்தான் இருக்கின்றது. அதன்படி ஜனாதிபதியின் ஆயுல் காலம் ஆறு வருடங்கள் அல்ல ஐந்து வருடங்கள்தான் என்பதை உறுதிப்படுத்துகின்ற ஒரு ஏற்பாடுதான். இது வரை ஜனாதிபதி பதவிக்காலம் ஆறுவருடங்கள் அல்ல ஐந்து வருடங்கள்தான் என்று நீதி மன்றம் மூன்று முறை அடித்து தீர்ப்புக் கூறி இருக்கின்ற இந்த விடயத்தில் ஜனாதிபதி இப்படி ஒரு தீர்மானத்தை எடுத்திருக்கின்றார் அது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியும்.

இப்படி எந்த வகையிலும் அவசியம் இல்லாத ஒரு பிரேரனையை இவர்கள் கொண்டு வந்து நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த செய்கின்ற ஒரு ஏற்பாடுதான் இது. இன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள ஒரு சிறு எண்ணிக்கையான வாக்குகள்தான் இவர்களுக்கு தேவை. அதனை ரணிலும் ராஜபக்ஸாக்களும் சேர்ந்து பெற்றுக் கொள்ள அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. மொட்டுக் கட்சி அமைப்பாளர் நாமல் ராஜபக்ஸ நாம் எந்த வகையிலும் தேர்தல் தள்ளிப் போடுவதற்கு இடமளிக்க மாட்டோம் என்று கூறி இருந்தார். இன்று அவர் இது விடயத்தில் அடக்கி வாசிகின்றார்.

ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருக்கின்ற இந்த வன்முறையானது நாட்டில் அமைதி இன்மையை ஏற்படுத்த இடமிருக்கின்றது. இது ஆட்சியாளருக்கும் இப்போது தேவையான ஒன்றாகவும் இருக்கின்றது. எப்படி இருந்தாலும் அரசாங்கத்தின் இந்த வன்முறைக்கு எதிராக மக்கள் போராடித்தான் நாட்டில் ஜனாதிபதி தேர்தலைப் பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. 1983ல் நடந்தது போன்று அரசியல் கட்சிகளுக்கு ஒரு தடையை ஏற்படுத்துவதற்கான ஒரு ஏற்பாட்டைத்தான் ஆட்சியாளர்கள் இப்படி எல்லாம் ஒரு குழப்பத்தை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

தற்போது அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் எப்படியும் ஒரு ஆட்சி மாற்றம் வருவதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. அப்படி வருகின்ற ஆட்சி மாற்றத்தால் நமக்கு பெரும் பாதிப்புக்கள் இழப்புக்கள் வரும் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதால் தான் அவர்கள் இப்படி நடந்து கொள்கின்றார்கள் என்பதும் மிகத் தெளிவு. எனவே இப்படி ஆளும் தரப்பினர் தேர்தல்களுக்கு போட்டு வரும் முட்டுக்கட்டைகளைத் தாண்டி தேர்தல் வந்தாலும் கூட புதிய ஜனாதிபதி ஒருவர் பதவி ஏற்கும் வரை இன்று பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களின் இந்த அடவடித்தனங்கள் தொடர நிறையவே இடமிருக்கின்றது என்று நாம் மீண்டும் எச்சரிக்கின்றோம்.

அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கின்ற நேரம் அதற்கு ஆதரவாக கைதூக்கி விட்டு சில அமைச்சர்கள் இந்த ஐந்து ஆறு கதையில் இங்கு பச்சோந்தித்தனமாக நடந்து வருகின்றார்கள். நாடாளுமன்ற விவாதத்தில் இது ஒரு தேவையில்லாத விடயம் என்று அமைச்சர் சுசில் போசியபோது அணுரகுமார இப்படி கேள்வி எழுப்பி இருந்தார். இது தேவையில்லாத விடயமாக இருந்தால் நீங்கள் அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கின்ற இடத்திலே அதனை எதிர்த்திருக்கலாமே என்று அவர் அங்கு கேட்டார்.

இது ஒரு சராசரித் தீர்மானம்தான் என்ற தோணியில் நீதி அமைச்சர் விஜேதாச பேசிய போது அப்படியானால் இதனை எடுத்துக் கொண்டு நீங்கள் நீதி மன்றம் சர்வஜன வாக்கொடுப்பு என்று போக மாட்டோம் என்று உத்தரவாதம் தர முடியுமா என்று கேட்டால் அதற்கு ஆளும் தரப்பில் எவரும் அங்கு அதற்கான பதிலைக் கொடுக்கவில்லை. எனவே சேனியன் குடும்மி சும்மா ஆடவில்லை என்பது தெளிவு. இந்த பிரேரணையை விசம் கலந்த தேனாகத்தான் நாம் பார்க்க வேண்டி இருக்கின்றது.

நன்றி: 14.07.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கார்டியன் நியூஸ்(4) 10.07.2024

Next Story

கார்டியன் நியூஸ்(5) 17.07.2024