விராட் கோலி OUT?

வருங்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியை சர்வதேச ஒருநாள் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் ரோஹித் ஷர்மா தலைமை தாங்கி வழி நடத்த இந்திய மூத்த தேர்வுக் குழுவினர் தீர்மானித்துள்ளனர் என பிசிசிஐ அமைப்பு சில தினங்களுக்கு முன் அதிகாரபூர்வமாக அறிவித்தது. பெரிய காரணங்கள் ஏதுமின்றி, சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கான தலைவர் பதவி விராட் கோலியிடமிருந்து பறிக்கப்பட்டதாக கோலியின் ரசிகர்களாலும், கிரிக்கெட் ஆர்வலர்களாலும் கருதப்படுகிறது.

பிசிசிஐ தரப்பு சொல்வதென்ன? கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கோலியின் ரசிகர்கள் மனநிலை என்னவாக இருக்கிறது?

விராட் கோலியின் வெற்றி விகிதம்

இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் போட்டிகளில் கபில் தேவ், மொஹம்மத் அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், மகேந்திர சிங் தோனி, செளரவ் கங்குலி என பலரும் 70 போட்டிகளுக்கு மேல் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளனர்.இவர்களில் அதிக வெற்றி விகிதம் கொண்டவர் என்றால் அது விராட் கோலி தான். அதிக முறை இந்திய அணியை ஒரு நாள் போட்டிகளில் வழிநடத்திய மகேந்திர சிங் தோனி 200 போட்டிகளில் 110 போட்டிகளில் வென்று 59.52% வெற்றி விகிதம் கொண்டுள்ளார்.

மொஹம்மத் அசாருதீன் 174 போட்டிகளில் 90 போட்டிகளில் வென்று 54.16%, செளரவ் கங்குலி 147 போட்டிகளில் 76 போட்டிகளில் வென்று 53.52% உள்ளது. விராட் கோலி 95 போட்டிகளில் தலைமை தாங்கி 65 போட்டிகளில் வென்று 70.43 என அதிகபட்ச வெற்றி விகிதத்தைக் கொண்டுள்ளார்.சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், கபில் தேவ் போன்ற புகழ் பெற்ற வீரர்களின் வெற்றி விகிதம் கூட 56 சதவீதத்தைக் கடக்கவில்லை. மேலும் அவர்கள் கோலியை விட குறைவான போட்டிகளிலேயே இந்திய அணியை வழிநடத்தியுள்ளனர்.

இந்த புள்ளி விவரங்களைக் கொண்டு, பல கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கோலி ரசிகர்கள் பிசிசிஐ அமைப்பை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கோலிக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் சில இணைய பயனர்கள் பதிவிட்டு தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். கோலி தன்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக விளையாடியும் அவர் வெளியேற்றப்படுவதைக் வருத்தமளிப்பதாகவும் இணையவாசிகள் தங்கள் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். கங்குலி இப்படி செய்வார் என கனவில் கூட நினைக்கவில்லை என மற்றொரு பயனர் பதிவிட்டுள்ளார்.

கடந்த பல ஆண்டுகளாக இந்திய அணியை திறம்பட வழிநடத்திய விராட் கோலிக்கு முறையாக வழியனுப்பு விழாவோ, பத்திரிகையாளர் சந்திப்போ கூட நடத்தப்படவில்லை. அவர் தன் சொந்த மக்களாளேயே, தன் சொந்த கிரிக்கெட் வாரியத்தினாலேயே அவமதிக்கப்பட்டுள்ளார் என பயனர்கள் பதிவிட்டுள்ளனர்.

பிசிசிஐ தரப்பு சொல்வதென்ன?

இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து இத்தனை கடுமையான விமர்சனங்கள் எழுந்த பிறகு பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி பிடிஐ முகமையிடம் வியாழக்கிழமை விளக்கமளித்தார். அதில் “டி20யின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டாம் என விராட் கோலியிடம் கூறினோம், ஆனால் அவர் டி20-ன் தலைவராகத் தொடர விரும்பவில்லை. டி20 மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டிகளுக்கு தனித்தனி கேப்டன்களை வைத்துக் கொள்ள வேண்டாம் என தேர்வாளர்கள் கருதினர்” என கூறினார் கங்குலி.

மேலும் “இந்த குழப்பம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது, ஆனால் தேர்வாளர்கள் அப்படித் தான் கருதுகிறார்கள். அப்படித்தான் விராட் கோலி சிவப்புப் பந்துக்கு தலைமையேற்று வழிநடத்தவும், வெள்ளைப் பந்து போட்டிகளுக்கு ரோஹித் ஷர்மா வழிநடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது” என கங்குலி கூறினார்.

“ஒருநாள் போட்டிகளில் விராட்கோலியின் அபாரமான சாதனைகளை கருத்தில் கொண்டோம், ஆனால் ரோஹித் ஷர்மா தலைமை தாங்கி வழி நடத்திய ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். வெள்ளைப் பந்து போட்டிகளுக்கு இரண்டு தலைவர்கள் இருக்க முடியாது என்பதுதான் அடிப்படை விஷயம்” என்று குறிப்பிட்டார் கங்குலி.

மேலும் “தலைமைப் பொறுப்பு பிரச்சனை குறித்து விராட் கோலியுடன் நானும், தேர்வாளர்கள் தலைவர் சேத்தன் ஷர்மாவும் பேசினோம். “அதை விராட் கோலி ஏற்றுக் கொண்டார்” என கங்குலி பிடிஐ முகமையிடம் கூறினார்.

Previous Story

சீனாவுக்காக தைவானுடன் உறவை முறித்த நிகரகுவா!

Next Story

வன்முறையாளர் கூடாரமாகின்றது பாராளுமன்றம்!!