கோர விபத்து உயிரிழந்த 53பேர்!

மெக்சிகோவில் புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற சரக்குலாரி விபத்துக்குள்ளான கோர விபத்தில் 53பேர் பரிதாபமாக உயிரிழந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்காவில் வறுமை மற்றும் வன்முறையின் காரணமாக புலம்பெயர்ந்தோர் பொதுவாக அமெரிக்க எல்லையை அடைய மெக்சிகோ வழியாக நடைபயணம் மேற்கொள்கின்றனர். மேலும் சில சமயங்களில் மிகவும் ஆபத்தான முறையில் கடத்தல்காரர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பெரிய லாரிகளில் ஏறுகின்றனர். குவாத்தமாலாவின் எல்லையோர மாநிலமான சியாபாஸ், அமெரிக்காவை அடைய முயற்சிக்கும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரின் முக்கிய போக்குவரத்து புள்ளியாகவும் கருதப்படுகிறது.

அவர்கள் இவ்வாறு பயணம் மேற்கொள்ளும் போது இந்த விபத்து ஏற்படுவதும், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு மெக்சிகோ எல்லையில் கடத்தல்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே ஏற்பட்ட மோதலில் வாகனங்களுக்கு தீவைத்து பெரும் மோதல் உருவானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மெக்ஸிகோவில் வியாழனன்று உரிய ஆவணங்கள் இல்லாமல் நுழைய முயன்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பயணம் செய்த பெரிய சரக்கு லாரி தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் பலரது உயிர் பறிபோன சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபாஸில் புலம் பெயர் தொழிலாளர்கள் சென்ற லாரி தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது.

53 பேர் பரிதாப பலி

சியாபா டி கோர்சோ நகரின் மாநிலத் தலைநகர் டக்ஸ்ட்லா குட்டிரெஸ்ஸுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் வந்த போது ட்ரக்கின் ஓட்டுநர் காவல் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக வேகமாகச் சென்றதாகவும், அப்போது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தபோது சாலையோர தடுப்புச் சுவரில் மோதி கோர விபத்து ஏற்பட்டு 53 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அந்நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

40 பேர் படுகாயம்

பலியானவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது உடனடியாகத் தெரியாத நிலையில், பலத்த காயம் அடைந்த சுமார் 40 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியானோர் மற்றும் காயமடைந்தவர்களை அடையாளம் காணும் பணியும் தற்போது நடைபெற்று வருவதாகவும், விபத்து குறித்து உரிய விசாரணை நடத்தவுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அரசு உதவி

விபத்து குறித்து கூறியுள்ள அம்மாநில ஆளுநர் ருட்டிலியோ எஸ்கண்டோன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும், காயமடைந்தவர்களுக்கு உடனடி கவனம் மற்றும் உதவியைப் பெற நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன் என்று அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Previous Story

அரபாத் வரலாறு

Next Story

பிணங்களோடு உடலுறவு கொண்டவர் கைது