காஸாவில் போர் இடைநிறுத்தம்?

காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கி 4 வாரங்களை கடந்துவிட்ட நிலையில் அங்குள்ள மக்களின் நிலை நாளுக்கு நாள் மிகவும் மோசமாகி வருகிறது. இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் அரபு நாடுகளில் மக்களிடையே கொந்தளிப்பு அதிகரித்து வருகிறது.

காஸாவில் போர் இடைநிறுத்தம்

அந்த பிராந்தியத்தில் நிலைமை மேலும் மோசமாகிவிடாமல் தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அதற்காக, அமெரிக்க வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கில் முகாமிட்டுள்ளார். வெள்ளிக்கிழமையன்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கும் மற்றும் சனிக்கிழமையன்று ஜோர்டான் தலைநகர் அம்மானுக்கு அவர் சென்று சமரசப் பேச்சுவார்த்தைகளை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக ஆண்டனி பிளிங்கன் திடீரென ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள ரமல்லாவுக்கு சென்றார். அவரது மத்திய கிழக்கு பயணத்தின் தொடக்கத்தில் இதுகுறித்த அறிவிப்பு ஏதும் இல்லை.

மஹ்மூத் அப்பாஸ் – பிளிங்கன் பேசியது என்ன?

அங்குள்ள பாலஸ்தீன அதிகார சபையின் தலைமையகத்தில் பாலத்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை அவர் சந்தித்தார். அப்போது, மேற்குக் கரையில் அமைதியை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் குறித்து இருவரும் விவாதித்ததாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

“இஸ்ரேல் – ஹமாஸ் பிரச்னை குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், பாலத்தீன தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

காஸாவில் உயிர் காக்கும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் அத்தியாவசிய சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கும் அமெரிக்காவின் ஆதரவை பிளிங்கன் மீண்டும் உறுதிப்படுத்தினார்” என்று அமெரிக்க வெளியுறவுத் துறையின் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.

பாலத்தீனர்களை “வலுக்கட்டாயமாக இடம்மாற்றம் செய்யக்கூடாது” என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார் என்று மேத்யூ மில்லர் கூறினார்.

பிளிங்கனும் அப்பாஸும் மேற்குக் கரையில் “அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கான” முயற்சிகள் குறித்து விவாதித்தனர். இதில் “பாலத்தீனர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டியதன் அவசியம் மற்றும் இத்தாக்குதலுக்கு யார் பொறுப்போ, அவர்களைப் பொறுப்பேற்கச் செய்வது” ஆகியவை அடங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

“பாலத்தீனர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் கண்ணியம் மற்றும் பாதுகாப்பு குறித்து சமமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது” என்று பிளிங்கன் மீண்டும் வலியுறுத்தியதாக மில்லர் கூறினார்.

“பாலத்தீன அரசை உருவாக்குவதற்காக பாலத்தீனர்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றத் தேவையான” பணிகளை நிறைவேற்றுவதில் அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் பிளிங்கன் வெளிப்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.

காஸாவில் போர் இடைநிறுத்தம்

மனிதாபிமான போர் இடைநிறுத்தம் – அமெரிக்கா சூசகம்

மனிதாபிமான அடிப்படையில் போர் இடைநிறுத்தம் செய்வது தொடர்பான முயற்சிகள் முன்னேற்றம் அடைந்திருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சூசகமாக தெரிவித்துளளார்.

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் மனிதாபிமான அடிப்படையில் தாக்குதல் நிறுத்தம் செய்வதை நோக்கி சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

ஆனால் உண்மையில் அவர் என்ன சொன்னார்?.

சனிக்கிழமை, பைடனிடம் செய்தியாளர்கள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதில் ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா என்று கேட்டனர்.

டெலாவேரில் உள்ள ஒரு தேவாலயத்தை விட்டு வெளியேறிய போது அமெரிக்க அதிபர் வெறுமனே “ஆம்” என்று கூறி கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டுச் சென்றார்.

காஸாவில் போர் இடைநிறுத்தம்

போர் நிறுத்தம் – மனிதாபிமான இடைநிறுத்தம் என்ன வேறுபாடு?

காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான மோதலில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று பல நாடுகளும், ஐக்கிய நாடுகள் சபையும் வலியுறுத்தியுள்ளன.

ஆனால் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட மற்ற சக்திகள் இந்த யோசனையை ஆதரிக்கவில்லை. இது அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய அரசாங்கங்களால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ள ஹமாஸுக்கு பயனளிக்கும் என்று கூறுகின்றன.

நாங்கள் கூறிவருவதைப் போல் அமெரிக்கா அதற்கு பதிலாக ஒரு மனிதாபிமான ரீதியிலான இடைநிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது.

ஆனால் என்ன வித்தியாசம்?

ஒரு முறையான போர் நிறுத்தத்துடன் ஒப்பிடும்போது, மனிதாபிமான இடைநிறுத்தங்கள் குறுகிய காலத்திற்கு நீடிக்கும். சில நேரங்களில் சில மணி நேரங்கள் மட்டுமே நீடிக்கும். மேலும் பொதுவாக வரையறுக்கப்பட்ட காலம் மற்றும் குறிப்பிட்ட இடத்தை உள்ளடக்கியதாகவே இருக்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நீண்டகால அரசியல் தீர்வுகளை அடைவதற்கு மாறாக, மனிதாபிமான ஆதரவை வழங்கும் நோக்கத்துடன் அவை பொதுவாக செயல்படுத்தப்படுகின்றன.

இதற்கிடையில், போர்நிறுத்தங்கள் நீண்ட கால நோக்கம் கொண்டவை. மேலும் பெரும்பாலும் ஒரு நிரந்தர அரசியல் தீர்வை எட்டுவதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட அனுமதிப்பதை போர் நிறுத்தம் நோக்கமாகக் கொண்டிருக்கின்றன என்று ஐ.நா கூறுகிறது.

காஸாவில் போர் இடைநிறுத்தம்

காஸா மக்கள் தெற்கே இடம்பெயர அவகாசம் – இஸ்ரேல்

வடக்கு காசாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர நான்கு மணி நேர அவகாசத்தை அளிக்கப் போவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் இடம்பெயர்வதற்கான பாதை, காஸா பகுதியில் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையான சலா அல்-தின் சாலை என்றும், – உள்ளூர் நேரப்படி காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை (0800-12:00 ஜிஎம்டி) பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமையும் இதேபோன்ற திட்டத்தைச் செயல்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் துப்பாக்கி ஏந்திய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் அந்தச் சாலையில் பணியாற்றும் இஸ்ரேலிய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறியது. பொதுமக்களை “மனிதக் கேடயங்களாகப்” பயன்படுத்த ஹமாஸ் அமைப்பு முயற்சிப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

மீண்டும் நினைவூட்டும் வகையில், வடக்கு காஸாவை பொதுமக்களை வெளியேற்றும் பகுதியாக இஸ்ரேல் அறிவித்தது. அங்கு வசித்து வரும் பொதுமக்கள் தென்பகுதியை நோக்கி பாதுகாப்பாகப் பயணிக்குமாறும் அழைப்பு விடுத்தது. இருப்பினும் தெற்கு பகுதியிலும் அப்போது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

தற்போதைய நிலையில், சுமார் 3,50,000 முதல் 4,00,000 பேர் தற்போது வடக்கு பகுதியில் தங்கியுள்ளனர் என்று அமெரிக்க தூதர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Previous Story

மேற்கு கடற்கரைக்கு USA பிளிங்கன் திடீர் விஜயம்: பாலஸ்தீன அப்பாஸுடன் சந்திப்பு!

Next Story

சம்பந்தன் சட்டவல்லுனர் லடாய்!