குவைத்+ஓமனுடன் கைகோர்த்த சீனா!  திசைமாறும் போர்?

காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த 15 நாட்களாக தொடர் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர் கப்பலை மத்திய தரைக்கடலில் காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. இந்நிலையில், சீனா கடற்படையானது ஓமன், குவைத் நாட்டின் கடற்படையுடன் இணைந்து கூட்டு பயிற்சியை மேற்கொண்டுள்ளன.

பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தி ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்த குழுதான் ஹமாஸ். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இந்த ஹமாஸ் குழு பயங்கரவாத தாக்குதல்களை தொடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான பேர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதற்கு எதிராக இஸ்ரேல் கடந்த 15 நாட்களாக கொடூரமான பதில் தாக்குதலை தொடுத்து வருகிறது. இதனால் தற்போது வரை காசாவில் 1,500 குழந்தைகள் உட்பட 4,137 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 13,400 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருகிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 ஆம்புலன்ஸ்கள், 10 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

14வது நாளாக தொடரும் தாக்குதல்.. காசா தேவாலயம் மீது இஸ்ரேல் சரமாரி குண்டு வீச்சு! இரு பெண்கள் பலி

காசாவுக்கான குடிநீர், மின்சாரம், எரிபொருள் சப்ளையை இஸ்ரேல் துண்டித்திருப்பதால் சுமார் 23 லட்சம் காசா மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதால் இஸ்லாமிய நாடுகளும், ஐநாவும் உதவி பொருட்களை அனுப்பி வைத்திருக்கிறது. இந்த பொருட்கள் கடந்த சில நாட்களாக ராஃபா எல்லையில் இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று காசாவுக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பாலஸ்தீனத்தில் பாதிப்பு கடல் அளவுக்கு இருக்கும் நிலையில் உதவி பொருட்கள் கடுகளவுக்குதான் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில், இந்த சூழலை மேலும் மோசமாக்கும் விதமாக இஸ்ரேல், காசா மீதான தரைவழி தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. இஸ்ரேலுக்கு சப்போர்ட் செய்யும் விதமாக அமெரிக்கா, தனது ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட்’ எனும் போர்க்கப்பலை மத்திய தரைக்கடலில் காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. இது தவிர, வெளியுறவு செயலர் ஆண்டனி பிளிங்கன் “உங்களைத் தற்காத்துக் கொள்ள தேவையான பலத்தை நீங்களே கொண்டிருக்கலாம். ஆனால், அமெரிக்கா இருக்கும்வரை நீங்கள் தனியாக இருக்க வேண்டியது இல்லை. நாங்கள் எப்போதும் உங்கள் பக்கம் இருப்போம்” என்று இஸ்ரேலுக்கு ஆதரவு கூறியிருந்தார்.

இதனையடுத்து பிரிட்டன் தனது ‘R08 குயின் எலிசபெத்’ (R08 Queen Elizabeth) என்ற 60 விமானங்களை தாங்கக் கூடிய போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப முடிவெடுத்துள்ளது. மற்றொருபுறம் அமெரிக்காவின் வெளிநாடு அவசர சிறப்பு படை (Foreign Emergency Special Team) டெல் அவிவ் வந்து சேர்ந்திருக்கிறது. ஆக பலம் வாய்ந்த மேற்கு நாடுகள் மொத்தமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக களத்தில் இறங்க, ரஷ்யாவும், சீனாவும் இஸ்லாமிய நாடுகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்திருக்கிறது. அதாவது ரஷ்யா தனது போர் விமானத்தையும், அத்துடன் சில ராணுவ தளவாடங்களையும் சிரியாவுக்கு அனுப்பியது.

அதேபோல தற்போது சீனா, தனது கடற்படை கப்பல்களை குவைத்துக்கு அனுப்பி குவைத் மற்றும் ஓமன் நாட்டின் கடற்படையுடன் இணைந்து போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறது. முதலில் ஓமன் பயணத்தை முடித்துக்கொண்டு குவைத் திரும்பிய சீனாவின் ஜிபோ, ஜிங்ஜோ மற்றும் கியாண்டாவோஹு உள்ளிட்ட 6 போர்கப்பல்கள் குவைத் கடற்படையுடன் பயிற்சியை கடந்த 19ம் தேதி நிறைவு செய்தது. பயிற்சி முடிந்த பின்னரும் தற்போது குவைத்தின் ஷுவைக் துறைமுகத்தில்தான் இந்த கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றன. இந்த துறைமுகத்திற்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையே சுமார் 1,500 கி.மீ தொலைவு இருக்கிறது. இருப்பினும் இந்த போர்க்கப்பல்களில் உள்ள ஏவுகணைகளுக்கு இந்த தொலைவு ஒரு பொருட்டே கிடையாது. எனவே இந்த பகுதியில் பதற்றம் சற்று அதிகரித்திருக்கிறது.

Previous Story

ஐ.நா.வில் கதறி அழுத பாலத்தீன தூதர்!

Next Story

கத்தார்:இஸ்ரேலுடன் தகவல் பகிர்ந்த இந்திய கடற்படையினர் 8 பேருக்கு மரண தண்டனை