“தேர்தலுக்கு அஞ்சுவோரும் கெஞ்சுவோரும்”

நஜீப் பின் கபூர்

கடந்த வாரம் நாம் ஜனாதிபதி ரணில் பிரதமராகும் கதையொன்றை சொல்லி இருந்தோம். இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரம் அதற்குச் சமாந்திரமான சில விவகாரங்களை நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸா நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்கின்றார். எனவே நாம் கடந்த வாரம் சொல்லி இருந்த தகவல்கள் இதன் மூலம் உறுதியாகின்றன. ஆனால் விஜேதாச இது பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை. ஊடகங்கள் சில போலியான செய்திகளை சொல்லி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றன என்றும் கடுமையாக தனது உரையில் விமர்சித்தும் இருந்தார்.

அரசாங்கம் தேர்தல்களுக்கு முகம் கொடுக்காது கதவுகளை இறுக்கமாக மூடிக் கொள்ள முயற்சிக்கின்ற இந்த நேரத்தில் நீதி அமைச்சர் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி பேசினால் யார்தான் சந்தேகிக்க மாட்டார்கள்.? அத்துடன் 65-60 என்று வகையில் இந்த தேர்தல் முறை அமையும், தொகுதிக்கு ஒரு வேட்பாளர் வருவார், சிறு கட்சிகளுக்கும் இதன்மூலம் அதிக நன்மைகள் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் பேசி இருந்தார். ஜே.ஆர். 1978ல் அரசியல் யாப்பை அறிமுகம் செய்யும் போது இது சிறந்தது என்று சொல்லித்தான் அதனை அப்போது முன்வைத்திருந்தார் என்பதும் நமக்குத் தெரிந்ததே.

நீதி அமைச்சர் கருத்துக்கு இசைவாக ஆளும் தரப்பு உறுப்பினர்கள் பலர் கருத்துக்களை அங்கு தெரிவித்து அதற்கு சான்றிதழ்களையும் வழங்கிக் கொண்டிருந்தனர். எனவே அரசாங்கம் ஏதோ ஒரு குழப்பத்துக்குத் தயாராகின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது. இது பற்றி நாடாளுமன்றத்தில் எதிரணியினர் கேள்விகளை எழுப்பிய போது தேர்தல்கள் உரியகாலத்துக்கு நடக்கும் என்று பிரதமர் தினேஸ் குனவர்தனாவும் பதில் வழங்கி இருந்தார்.

இதே அரசாங்கம்தான் தேர்தலுக்கு வேட்பு மனுவை அறிவித்து நியமனப் பத்திரங்களையும் வாங்கிக் கொண்டு தேர்தலுக்கு காசு இல்லை என்று உள்ளாட்சித் தேர்தலையும் தள்ளிப் போட்டது என்பது இந்த நாட்டு மக்களுக்கு நன்றாகவே நினைவில் இருக்கின்றது. எனவே அரசியல் தலைவர்கள் தேர்தல் தொடர்பாக நமக்கத் தருகின்ற உத்தரவாதங்களை நாம் சந்தேகக் கண்கொண்டுதான் பார்க்க வேண்டும்.

ஆளும் தரப்பினர் தேர்தலை கண்டு அஞ்சுகின்றார்கள் என்பது சிறுபிள்ளைக்குக் கூட நன்றாகத் தெரியும். ஆனால் அவர்கள் ஊடகங்களுக்கு முன் வந்து பேசுகின்ற போது தமக்கும் தேர்தல் வேண்டும், மக்கள் எங்களுடன்தான் இன்னும் இருக்கின்றார்கள் என்று கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அதனைத்தான் நாம் தினம்தோரும்  ஊடகங்களில் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். ஜனாதிபதி ரணிலின் கையாட்களும் அவரிடம் பதவி பட்டங்கள் சலுகைகளைப் பெற்றுக் கொண்டிருப்பவர்களும் அவர் தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்க வேண்டும், அப்போதுதான் தமக்குப் பிழைத்தக் கொள்ள முடியும் என்று அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

Sri Lanka's current political impasse: Some additional thoughts – Groundviews

ஆளும் மொட்டுக் கட்சியில் இன்று பல குழுக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் என்ன வாதங்கள் தர்க்கங்களைப் பண்ணிக் கொண்டிருந்தாலும் அவர்களும் முடியுமான வரை அதிகாரத்தில் இருந்து பிழைப்பதில் ஆர்வமுள்ளவர்களாகத்தான் இருந்து வருகின்றார்கள். அவர்களுக்கு மக்கள் விருப்பு வெறுப்புக்களிலோ நலன்களிலோ கிஞ்சித்தோனும் ஆர்வம் இல்லை. எனவே தேர்தல்களைத் தள்ளிப் போடுகின்ற விவகாரத்தில்தான் அவர்களும் அதிக விருப்புடையவர்களாக இருக்கின்றார்கள். மொட்டுக கட்சியில் இருந்து வெளியேறி இருப்பவர்களும் கூட தமது அரசியல் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையில்லாதவர்களாக இருக்கின்றார்கள். அதனால் அவர்கள் சஜித் அணிக்குத் தாவ இடமிருக்கின்றது.

விமல், கம்மன்பில போன்றவர்கள் மீண்டும் ராஜபக்கஸ முகாமுக்குப் போய் சரணடைந்தாலும் அது ஆச்சர்யமாக இருக்காது. அவர்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பச்சசோந்திகள் போல செயல்பட அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. சஜித் அணியில் இருப்பவர்களிடத்தில் கூட எந்தவொரு விவகாரத்திலும் தெளிவான கருத்துக்களோ இணக்கபாடுகளோ இல்லை. அவர்கள் எப்போதும் தமக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். தலைவர் சஜித் தன்னிச்சையாக செயலாற்றிக் கொண்டிருக்கின்றார் என்று வேறு குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன.

Sri Lanka in 2021: Trouble Ahead For One of Asia's Oldest Democracies – South Asian Voices

நாம் இந்தக் கட்டுரையைத் தயாரித்தக் கொண்டிருக்கின்ற நேரம் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பு சுகததாச அரங்கில் ‘2048ல் வெற்றி கொள்வோம்’ என்ற தொனிப் பெருளில் தனது கட்சி விஷேட  கூட்டத்தை நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றது. 2048ல் தான் நமக்கு வெற்றி வருமாக இருந்தால், இன்று 25 வயதில் இருக்கின்ற இளைஞன்-யுவதிக்கு அப்போது வயது 50 தாக இருக்கும். அப்போது 1949ல் பிறந்த நமது ஜனாதிபதி ரணிலுக்கு வயது  தொன்னூற்றி ஒன்பதாக (99) இருக்கும். நாம் இப்படி ஒரு கணக்கை சுட்டிக் காட்டினால் ஐக்கிய தேசியக் காட்சிக்காரர்கள், சிந்தனைகள் நீண்ட இலக்காகத்தான் இருக்கும் என்று வாதிக்க இடமிருக்கின்றது.

இதே ரணில் தேர்தல் காலங்களில் பாடசாலை மாணவர்கள்கு வை பை கொடுப்பதாகச் சொன்னார். இளைஞகளில் கரங்களுக்கு தங்கச் சங்கிலி கொடுப்பதாகவும் சொன்னர். 2015 தேர்தல் பிரச்சாரங்களில் போது இன்னும் ஐந்து வருடங்களில் நாடு முற்றிலும் வெளிநாட்டுக் கடன்களில் இருந்து மீண்டு விடும் என்று மேடைகளில் பேசித்திரிந்தார். இவரது மாமானார் நாட்டை சிங்கப்பூராக கொண்டு வருவதாக நமக்கு முன்னர் சொல்லி இருந்தார். பதவிக்கு வரும் முன்னரும் வந்த பின்னரும் ரணில் இனப்பிரச்சிக்குத் தனது காலத்தில் தீர்வு நிச்சயம் என்று அதற்கும் நாள் குறித்திருந்தார்.

SLFP at 65: The crisis of Lanka's political party system | The Sunday Times Sri Lanka

அதனை நம்பி கொழும்புக்கு ஓடித்திரிந்த  தமிழ் அரசியல்வாதிகள் இன்று மூக்குடைபட்டு நிற்கின்றனர்.   இது போன்று அவர் நாட்டுக்கு கொடுத்த ஏதாவது வாக்குறுதிகள் அவரால் நிறைவு செய்யப்பட்டிருக்கின்றதா? அப்படி இருக்கும் போது 2048 நாட்டுக்கு நல்ல காலம் என்று இப்போது அவர் கொழும்பில் விஷேட கூட்டம் போட்டுக் கொண்டு இருக்கின்றார். இந்த கூட்டம் தேர்தலுக்கு ஆப்பு வைக்கின்ற ஒரு கூட்டமாக இருந்தாலும் ஆச்சர்யப்பட ஏதும் இல்லை.

அதே போன்று ராஜபக்ஸாக்களும் என்னதான் மக்கள் இன்னும் தங்களுடன் இருக்கின்றார்கள் என்ற சொன்னாலும் அவர்களுக்கு நன்றாகத் தெரியும் குடி மக்கள் தங்களுடன் எந்தளவுக்கு கோபத்தில் இருக்கின்றார்கள் என்பது. எனவே தேர்தலைச் சந்திக்க அவர்கள் ஒருபோதும் வரும்பமாட்டார்கள். இதனால் ரணில் தேர்தலுக்கு போடுகின்ற முட்டுக் கடடைகளுக்கு அவர்களும் உற்சாகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள் அல்லது அதன் பின்னணியில் இருந்து காய் நகர்த்துக்கின்றார்கள் என்றதான் நாம் நம்புகின்றோம்.

sri lankan political... - sri lankan political cartoons A resolution submitted to US senate urging to address Sri Lanka's political and economic crises (Full text) • Sri Lanka Brief

நாம் கடந்த வாரம் சொன்னது போல கட்சி தாவல்களைத் தவிர்ப்பதற்காகத்தான் ஹபீஸ் நசீருக்குக் கொடுக்கப்பட்ட தண்டணை ஏனையோருக்குக் கொடுக்கபட்ட ஒரு  எச்சரிக்கையாகவும் இதனை எடுத்துக் கொள்ள முடியும். மேலும் ரணில் சட்டத்தையோ அரசியல் யாப்பையோ மதிக்கின்ற ஒரு தலைவராக இல்லை. இதனை பொலிஸ் அதிபர் நியமனத்தில் நாம் இந்த நாட்களில் பார்த்தக் கொண்டிருக்கின்றோம். சட்ட நிர்ணயக் குழு எடுத்த தீர்மனத்தை அரசுக்கு எதிரான சதி என்ற அளவில் ஜனாதிபதி ரணில் கணித்து அதற்கு சீனாவில் இருந்து ஆப்பும் வைத்திருக்கின்றார். அது இன்று அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படட்டு வருகின்றது.

இன்று தேர்தலுக்கு எதிராக ரணிலின் நகர்வுகளை விமர்சிக்கும் ஆளும் தரப்பினர் இந்த விவகாரங்கள் நாடாளுமன்றத்தில் ரணில் தரப்பால் முன்வைக்கப்படும் போது நிச்சயம் அதற்கு ஆதரவாக கைகளை உயர்த்துவார்கள். இப்படியான காட்சிகளை நாம் கடந்த காலங்களில் நிறையவே பார்த்தும் வந்திருக்கின்றோம். தேர்தல் ஒன்று வருமாக இருந்தால் ஜேவிபி அணுரகுமார திசாநாயக்காவுக்கும் சஜித்துக்கும் இடையிலான போட்டியாகத்தான் அது இருக்கும். இது தனது நெடுநாள் அரசியல் அனுபவத்தின் கணக்கு என்று டாக்டர் ராஜித சேனாரத்தன குறிப்பிடுகின்றார். இதே கருத்தை சமூக ஊடகங்களும் உறுதி செய்து கொண்டிருக்கின்றன. மேலும் அவை ஒரு படி மேலே சென்று களத்தில் தனிக்குதிரையாக  அணுர மிகவும் முன்னணியில் இருப்பதையும் உறுதி செய்து தகவல்களை வெளியிட்டு வருகின்றன.

மொட்டுக் கட்சி மற்றும் ரணில் முதலாம் இரண்டாம் இடங்களில் அவர்கள் பிரதான போட்டியாளர்களாக இல்லை. எனவே அவர்கள் இந்தத் தேர்லுக்கு ஆப்பு வைக்கின்ற முயற்சிகளைச் செய்வதும், குழப்பி அடிக்க முனைவதும் இயல்பானதுதான். சிறுபான்மைக் கட்சிகள் இந்தத் தேர்தலில் என்ன நிலைப்பாட்டை எடுக்கின்றன என்று பார்த்தால், வடக்கு கிழக்கில் தமிழ் தரப்பினர் ஜனாதிபதித் தேர்தல் வருமாக இருந்தால் தமது வேட்பாளர் ஒருவரை களத்தில் இறக்குவது தொடர்பாக கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இது எந்தளவுக்கு சாத்தியம்? அவர்கள் எந்தளவுக்கு இந்த விவகாரத்தில் ஐக்கியமாக நின்று முடிவுகளை மேற்கொள்வார்கள் என்று தெரியாது. அது அனேகமாக ஆப்பிழுத்த குரங்கின் கதையாகத்தான் போய் முடியும்.

பொதுத் தேர்தல் ஒன்று முன்கூட்டி வருமாக இருந்தால் அவர்கள் வழக்கம் போல தமது அரசியல் கட்சிகளின் பலத்தை வைத்து வேட்பாளர்களைக் களத்தில் நிறுத்துவார்கள். சிறுபான்மை தனித்துவ முஸ்லிம் அரசியல் தலைவர்களும் மலையகத் தiமைகளும் முன்கூட்டி பொதுத் தேர்தல் ஒன்று நடப்பதில்தான் ஆர்வமாக இருக்கின்றார்கள். அப்போதுதான் சஜித் அணியுடன் கூட்டணி போட்டு தமது ஆட்களை வழக்கம் போல களத்தில் நிறுத்தி சில உறுப்பினர்களை வென்றெடுக்க முடியும் என்பது அவர்கள் கணக்கு.

ஜனாதிபத் தேர்தல் முன்கூட்டி வருமாக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக அதே முடிவைத்தான் எடுப்பார்கள். தனது ஆதரவு வேட்பாளர் சஜித் ஜனாதிபதித் தேர்தலில் மண்கவ்வினாலும் அவர்கள் சஜித் அணியில் இருந்து வெளியேறி தேர்தல்களை ஒரு போதும் சந்திக்க மாட்டார்கள். அதற்கான திரணி அவர்களுக்கு இல்லை. பொதுத் தேர்தலில் சஜித் அணியில் போட்டியிட்டு பின்னர் அரசு அமைக்கின்ற போது அவர்கள் எந்த தரப்புடனும் கூட்ணி அமைத்து பதவிகளைப் பெற்றுக் கொள்ளும் முயற்சியைத்தான் இந்தத் தேர்தலிலும் அவர்கள் எடுப்பார்கள். இது அவர்களது வழக்கமான அரசியல் வார்த்தகம். இதனை அவர்கள் சார்ந்த சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த முறை அவர்களுக்கு நிறையவே சவால்கள் இருக்கின்றன என்பதும் மறுப்பதற்க்கில்லை.

குறிப்பாக ஜனாதிபதி ரணிலும் மொட்டுக் கட்சியும் தேர்தல் தொடர்பான அச்சத்தில் தமது காய்களை நகர்த்திக் கொண்டிருக்கின்ற போது. தேர்தலுக்கான ஆயத்தங்களும் நடந்து கொடுதான் வருகின்றன. தேர்தல் ஆயத்தங்கள் பற்றிப் பார்க்கின்ற போது என்பிபி. என்ற அணுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி மிகுவும் முனைப்புடன் தமது நகர்வுகளை நாட்டில் அணைத்துப் பிரதேசங்களிலும் வெற்றிகரமாக நடாத்திக் கொண்டு வருகின்றது. அவர்கள் அண்மையில் வெற்றிகரமாக ஒரு கூட்டத்தை மலையத்தில்-ஹட்டனில் நடாத்தி இருந்தனர். அதே போன்று மூதூரிலும் அப்படி ஒரு கூட்டம் நடந்தது. இன்னும் சில நாட்களில் வடக்கு யாழ்ப்பாணத்திலும் அணுர குமாரதிசாநாயக்க தனது பரப்புரைகளை அங்கு போய் நடத்த இருக்கின்றார். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றன.

மொட்டுக் கட்சிக்கு என்னதான் சவால்கள் இருந்தாலும் பொதுவாக தேர்தல் தொடர்பான பரப்புரைகளை கூட்டங்களை நடாத்தவதில் அவர்கள் இரண்டாம் இடத்தில் இருக்கின்றார்கள். அந்த வரிசையில் சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மூன்றாம் இடத்தில்தான் இருக்கின்றது. அவர்களிடத்தில் எந்த ஒரு விவகாரத்தலும் தெளிவான நிலைப்பாடுகள் இருப்பதாகத் தெரியவில்லை. இதற்கிடையில் திலித் ஜயவீர மற்றும் தம்மிக்க பெரேராஆகியோரும் தமது ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரைகளை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களது அரசியல் பலம் என்ன என்பதனை விட அவர்களது பணப் பலம்தான் இந்த தேர்தலில் அவர்களின் செல்வாக்கை மதிப்பீடு செய்யும் காரணியாக அமையும்.

தம்மிக்க பெரேரோ மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக வரலாம் என்று எதிர்பார்ப்பு இருக்கின்றது. அதே நேரம் திலித் ஜயவீரவுக்கு தனது தனிப்பட்ட ஊடகங்கள் ஜனாதிபதி தேர்தல் பரப்புரைக்களுக்கு கை கொடுக்கக் கூடும். அவரும் தற்போது நாடுபூராவிலும் தனது மவ்பிம ஜனதா  கட்சி அமைப்பாளர்களைத் தொகுதி மற்றும் பிரதேச சபைகள் வாரியாக நியமித்துக் கொண்டு வருகின்றார். இதில் சிறுபான்மை உறுப்பினர்கள் பலரும் இடம் பெற்றிருக்கின்றார்கள். எனவே ஜனாதிபத் தேர்தலுக்கான ஆயத்தங்களை மேற்கொள்வதில் திலித் மற்றும் தம்மிக்க என்பிபி. அணுராவுக்கு அடுதத் நிலையில் இருக்கின்றார்கள் என்பது நமது கணக்கு.

Tamil political parties call for hartal across the North-East in support of  resigned judge | Tamil Guardian

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தமிழர் தரப்பில் ஒரு வேட்பாளர் வருவார் என்று சொன்னவர்கள் இதுவரை அது தொடர்பான எந்த ஏற்பாடுகளையும் மேற் கொண்டதாகச் தெரியவில்லை. எனவே கடந்த காலங்ககளில் வந்த தமிழ் வேட்பாளர்கள் போலத்தான் அவர்கள் செல்வாக்கும் தேர்தல் முடிவுகளில் நாம் பார்க்கக் கூடியதாக இருக்கும். அப்படி ஒரு வேட்பாளர் வந்தால் அவர் ஒட்டு மொத்த தமிழ் மக்களின் உணர்வுகளையும் உலகிற்குக் கட்டுகின்ற வேட்பாளராக இருக்க வேண்டும். அதற்கான ஆயத்தங்கள் பூச்சயமாகத்தான் இருக்கின்றது. எனவே இப்போதைக்கு இந்த தமிழர் தரப்பு வேட்பாளர் என்ற கதை கோமளிக் கூத்தாகத்தான் நமக்குத் தெரிகின்றது.

நன்றி: 22.10.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

இலங்கையில் நகர மயமாக்கள்!

Next Story

பாலத்தீன் மேற்குக் கரை: கிராமங்களை காலி செய்யும் இஸ்ரேல்