“எங்களின் நேரடி எதிரி சின்வார்” -இஸ்ரேல்

டெல் அவிவ்: இஸ்ரேல்மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய ஒரு வாரத்துக்கு பின், இந்தத் தாக்குதலுக்கு மூளையாக ஹமாஸ் இயக்கத்தின் அரசியல் பிரிவின் தலைவரான யாஹ்யா சின்வார் செயல்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

Israel should not kill Hamas' Yahya Sinwar - opinion - The Jerusalem Post

காசா பகுதியில் தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வரும் நிலையில், “யாஹ்யா சின்வார் எங்களின் கண்காணிப்பில் உள்ளார். விரைவில் அவர் வீழ்த்தப்படுவார்” என இஸ்ரேல் பாதுகாப்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. “தீமையின் முகம்”, “1,300 இஸ்ரேலியர்களைக் கொன்ற தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்” என யாஹ்யா சின்வாரை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் தளத்தில் வீடியோ வெளியிட்டு வருகிறது.

யாஹ்யா சின்வார் யார்? – யாஹ்யா இப்ராஹிம் அல்-சின்வார் என்பதே அவரது முழுப் பெயர். தற்போது தெற்கு இஸ்ரேலில் உள்ள அஷ்கெலோன் நகரத்தில்தான் சின்வாரின் குடும்பம் ஆரம்பத்தில் குடியிருந்தது. அல்-மஜ்தால் என்று அழைக்கப்பட்ட அஷ்கெலோனை 1948-ல் இஸ்ரேல் கைப்பற்றிய பின்னர் காசாவுக்கு இடம்பெயர்ந்த சின்வாரின் குடும்பம் தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸ் நகரில் வசித்து வந்தது. காசாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் அரபு படிப்பில் இளங்கலை பட்டம் பெற்ற சின்வார் அனுபவித்த சிறைவாசம் மட்டுமே 24 ஆண்டுகள்.

Yahya Sinwar elected new leader of Hamas in Gaza Strip | Hamas News | Al Jazeera

அத்தனையும் இஸ்ரேலுக்கு எதிராக செயல்பட்டதற்காக கிடைத்தவை. முதல் முறையாக 1982-ல் இஸ்ரேலுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக நான்கு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது சின்வாரின் வயது 20 மட்டுமே. சிறையில் வெளிவந்த அவர், ஹமாஸின் ஆரம்பக் கட்டத்தில் ராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கிய சலா ஷெஹாடேவுடன் இணைந்து பாலஸ்தீனத்துக்குள் இருக்கும் இஸ்ரேலின் உளவாளிகளை கண்டுபிடிக்க ஓர் அமைப்பை நிறுவினார்.

1987-ல் ஹமாஸ் அமைப்பு உருவாக்கப்பட்ட பிறகு, சில ஆண்டுகளில் அதில் இணைந்தவர், அதற்கடுத்த ஆண்டே, இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் நான்கு பாலஸ்தீனியர்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். இதற்காக நான்கு ஆயுள் தண்டனை அவருக்கு வழங்கப்பட, நீண்ட சிறைவாசத்துக்கு சென்றார்.

ஹமாஸின் இராணுவப் பிரிவான இஸ்ஸெடின் அல்-கஸ்ஸாம் 2006-ல் ஒரு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டது. இஸ்ரேல் எல்லைக்குள் ஊடுருவி ஒரு சிலரை கொன்றதுடன் கிலாட் ஷாலித் என்ற ஒரு இஸ்ரேல் ராணுவ வீரரையும் பிணைக்கைதியாக கடத்திவந்தது. இஸ்ரேலியர்கள் மத்தியில் ஹீரோ போல் பார்க்கப்பட்டார் கிலாட் ஷாலித்.

இதனால், ஐந்து ஆண்டுகள் பிணைக்கைதியாக இருந்த அவரை விடுவிக்க பேரம் பேசியது இஸ்ரேல். ஒற்றை நபரை விடுவிக்க, ஹமாஸ் விதித்த நிபந்தனை பாலஸ்தீனிய கைதிகளை விடுவிப்பது. அதன்படி, 1000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய கைதிகளை கிலாட் ஷாலித் என்பவருக்காக எந்தவித மறுப்பும் இல்லாமல் இஸ்ரேல் விடுதலை செய்தது.

அந்த ஆயிரம் நபர்களில் ஒருவராக யாஹ்யா சின்வார் 22 ஆண்டுகள் சிறைவாசத்துக்கு 2011ல் வெளிவந்தார். 22 வருட சிறைவாசம் இஸ்ரேலியர்கள் மொழியான ஹீப்ரு மொழியை கற்றுக் கொடுத்ததுடன், ஹமாஸ் இயக்கத்தில் மேலும் ஈடுபட வைத்தது. மீண்டும் ஹமாஸ் இயக்கத்துக்கு திரும்பியவர் இந்தமுறை அதன் ராணுவப் பிரிவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார். “மஜ்த்” எனப்படும் ஹமாஸ் பாதுகாப்பு சேவை என்ற துணை அமைப்பின் தலைவராக சந்தேகத்துக்குரிய இஸ்ரேலிய உளவாளிகளை விசாரணைகளை நடத்துதல் மற்றும் இஸ்ரேலிய உளவுத் துறை மற்றும் பாதுகாப்பு சேவை அதிகாரிகளையே கண்காணிப்பது போன்றவற்றை பணியாக செய்துவந்தார்.

Osama bin Laden killed in Pakistan | News | Al Jazeera

2017-ல் ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவராக பணியமர்த்தப்பட்டார் சின்வார். ஆரம்பம் முதலே இஸ்ரேலுக்கு எதிரான ஆயுதப் போராட்டங்களில் தீவிரமாக இயங்கிவரும் இவர், அதிரடியாக பேசக் கூடிய நபரும்கூட. இதனால் அமெரிக்கா இவரை தேடப்படும் தீவிரவாதியாக அறிவித்துள்ளது.

தற்போது இஸ்ரேல் மீது எதிர்பாராத தாக்குதலை ஹமாஸ் நிகழ்த்தியதில் சின்வாருக்கு முக்கியப் பங்கு உண்டு என இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. இந்த தாக்குதலின் மூளையாக அவரே உள்ளார் என்றும் அடித்து கூறுகிறது.

Richard Hecht: The Scot explaining the Israeli military's position to the world

இஸ்ரேல் பாதுகாப்பு படையின் செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ரிச்சர்ட் ஹெக்ட், “யாஹ்யா சின்வார் தீமையின் முகம். அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல் பின்னணியில் ஒசாமா பின்லேடன் இருந்ததைப் போல தற்போதைய ஹமாஸ் தாக்குதலின் மூளையாக யாஹ்யா சின்வார் உள்ளார். சந்தேகத்தின்பேரில் பாலஸ்தீனியர்களை அவர்களின் சொந்த மண்ணில் கொலை செய்துதான் இந்த சின்வார் தனது வாழ்க்கையை தொடங்கினார்.

இதனால்தான் அவரை நாங்கள் ‘கான் யூனிஸின் கசாப்புக் கடைக்காரர்’ என அழைக்கிறோம். தற்போது இஸ்ரேலியர்களை கொலை செய்ய கசாப்புக் கடைக்காரர்களை அனுப்பி வைத்துள்ளார். அதனை நாங்கள் முறியடிப்போம். சின்வாரை இஸ்ரேல் விட்டுவைக்காது. அவரும் அவரின் குழுவும் எங்கள் கண்காணிப்பில் உள்ளனர். அவரைத் தேடி செல்வோம். அவர் விரைவில் வீழ்த்தப்படுவார்” என தெரிவித்துள்ளார்.

இதனால்தான் “இஸ்ரேல் அரசின் நேரடி எதிரி” என இஸ்ரேல் பாதுகாப்பு படை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

Previous Story

இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தம் : இலங்கைக்கு மறைமுக தாக்கங்கள்

Next Story

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 2,808 பேர் பலி