இனவெறியை எதிர்த்தவர் மரணம்

 

தென் ஆப்ரிக்காவில் இனவெறியை எதிர்த்து போராடி நீண்ட நாள் சிறைவாசம் அனுபவித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இப்ராகிம் இஸ்மாயில் உடல் நலக்குறைவால் காலமானார்.தென் ஆப்ரிக்காவில் வசித்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் இப்ராகிம் இஸ்மாயில் 84.இவர் அந்நாட்டில் இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர். நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர், நேற்று தன் வீட்டில் மரணம் அடைந்தார்.

இதுகுறித்து ஆப்ரிக்க தேசிய காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: இனவெறிக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர் இப்ராகிம் இஸ்மாயில். இதற்காக கைதான அவர், நெல்சன் மண்டேலா மற்றும் அகமது கத்ரடா ஆகியோருடன் ராபன் தீவில் பல ஆண்டுகள் சிறையில் இருந்தவர்.அவரது மறைவு எங்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஆப்ரிக்க தேசிய காங்கிரசின் நீண்ட கால உறுப்பினரான அவர், பணிவு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வுடன் தேசத்திற்கு சேவை செய்தவர்.தென்ஆப்ரிக்காவில் இந்தியர்களை ஒடுக்கும் சட்டங்களை மீறியதற்காக அவரது தந்தை இரு முறை கைது செய்யப்பட்டார். அதனால் தன் 13 வயதிலேயே விடுதலை போராட்டத்தில் பங்கேற்றவர் இப்ராகிம். இதற்காக அடுத்தடுத்து கைதாகி சிறைவாசம் அனுபவித்தவர்.தென் ஆப்ரிக்காவில் முதல் முறையாக ஜனநாயக ரீதியில் தேர்தல் நடந்து நெல்சன் மண்டேலா அதிபரான பின், அவரது பார்லிமென்ட் ஆலோசகர், வெளியுறவுத் துறை துணை அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை இப்ராகிம் வகித்தார்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Previous Story

வலியில்லாமல் சாக இயந்திரம்

Next Story

ஹெலிகாப்டர் விபத்து : பிந்திய தகவல் தளபதி பலி!!