மணிப்பூர் வன்முறை:  தொடங்கியது எப்படி? யார் காரணம்?

-கிரேமி பேக்கர்-

மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. இரண்டு குகி இன பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம் நாட்டையே உலுக்கியுள்ளது.

மணிப்பூர் இப்போது இரண்டு துண்டுகளாகிவிட்டதைப் போல் காட்சியளிக்கிறது. ஒரு பகுதி மெய்தேய் சமூக மக்களிடமும் மற்றொரு பகுதி குகி சமூகத்தினரிடமும் உள்ளது.

கண்ணுக்குத் தென்படும் காட்சிகள், இந்த வன்முறை வாரக்கணக்கில் நீடித்துக் கொண்டிருப்பதைக் காட்டுகின்றன. வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

மெய்தேய், குகி, நாகா இன மக்கள் பழைய பிரச்னைகளை மறந்து மீண்டும் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற கனவும் இந்த வன்முறைத் தீயில் கருகிக் கொண்டிருக்கிறது.

மணிப்பூர் வன்முறை
மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் நடவடிக்கையைக் கோரி தீப்பந்தங்களுடன் இரவு நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மெய்ரா பைபிஸ் அமைப்பைச் சேர்ந்த பெண்கள்
மணிப்பூர் வன்முறை எப்படித் தொடங்கியது? அங்கு என்ன நடக்கிறது?

மெய்தேய், குகி, நாகா இன மக்கள் பழைய பிரச்னைகளை மறந்து மீண்டும் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற கனவும் இந்த வன்முறைத் தீயில் கருகிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஒன்றரை மாதங்களில் சாதிச் சண்டையாக உருவெடுத்த இந்த வன்முறை இனக் கலவரமாக மாறிவிட்டது. இந்தியாவில் உள்ள ஒரு சிறிய மாநிலத்தின் வன்முறையை கிட்டத்தட்ட உள்நாட்டுப் போரின் நிலை என்று பலரும் வர்ணிக்கும் அளவுக்கு நிலைமை மோசமானது.

பெரும்பான்மையான மெய்தேய் மற்றும் சிறுபான்மை குகி சமூக மக்களுக்கு இடையே நிலம், செல்வாக்கு ஆகியவற்றுக்கான மோதல் கலவரமாக மாறி பூதாகரமாக வளர்ந்துள்ளது.

இந்தப் பகுதியில் பெண்களுக்கு எதிரான சமீபத்திய கொடூர பாலியல் துன்புறுத்தல் நாட்டையே உலுக்கியது. மே மாதத்தில் இரண்டு குகி இன பெண்கள், அவர்களது கிராமம் அழிக்கப்பட்ட பிறகு மெய்தேய் சமூக ஆண்களால் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக இழுத்துச் செல்லப்பட்ட கொடூரத்தின் வீடியோ சமீபத்தில் வெளியானது.

இவ்வளவு கொடூரமான வன்முறை சம்பவங்கள் மணிப்பூரில் ஏன் நடக்கிறது? அங்கு என்னதான் பிரச்னை?

மணிப்பூரில் யார் வாழ்கிறார்கள்?

மலைகள் நிறைந்த வடகிழக்கு மாநிலமான மணிப்பூர், வங்கதேசத்திற்கு கிழக்கே அமைந்துள்ளது. அதன் மக்கள்தொகை 33 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சிறுபான்மை பழங்குடி சமூகங்களான குகி, நாகா ஆகிய சமூகங்களைச் சேர்ந்த மக்கள் 43% வாழ்கின்றனர்.

மணிப்பூரில் என்ன நடக்கிறது?

மே மாத தொடக்கத்தில் ஆரம்பித்த கலவரத்தில் இதுவரை குறைந்தது 130 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 400 பேர் காயமடைந்துள்ளனர். கலவரத்தை அடக்க ராணுவம், துணை ராணுவப் படைகள், காவல்துறை ஆகியவை போராடி வருகின்றன. அங்கு நடந்துகொண்டிருக்கும் கலவரத்தால் 60,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

காவல்துறையின் ஆயுத குடோன்கள் சூறையாடப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான தேவாலயங்கள், ஒரு டஜனுக்கும் அதிகமான கோவில்கள் அழிக்கப்பட்டன. கிராமங்கள் தீக்கிறையாக்கப்பட்டன.

மணிப்பூர் கலவரம் எப்படித் தொடங்கியது?

மணிப்பூர் வன்முறை
படக்குறிப்பு,மெய்தேய் சமூகத்திற்கு பழங்குடி அந்தஸ்து வழங்கப்படுவது, அவர்களுக்கு ஏற்கெனவே மாநில அரசுடன் இருக்கும் செல்வாக்கை மேலும் வலுப்படுத்தும் என குகி மக்கள் எதிர்த்தனர்.

மெய்தேய் சமூகத்தினருக்கு அதிகாரப்பூர்வ பழங்குடி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு குகி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மணிப்பூரில் பதற்றம் ஏற்பட்டது.

இந்த அந்தஸ்து வழங்கப்பட்டால், அரசாங்கத்தில் அந்தச் சமூகத்திற்கு ஏற்கெனவே இருக்கும் செல்வாக்கு மேலும் வலுப்படும் என்று குகி மக்கள் வாதிட்டனர்.

ஆனால், இந்தக் கலவரத்திற்கான அடிப்படையாக எண்ணற்ற காரணங்கள் உள்ளன. மெய்தேய் தலைமையிலான அரசாங்கம் போதைப்பொருட்களுக்கு எதிரான போர் எனக் கூறி மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தங்கள் சமூகத்தை வேரோடு பிடுங்குவதற்கான ஒரு திரைமறைவுச் செயலே என்று குகி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

மியான்மரில் இருந்து வருவோரின் சட்டவிரோத குடியேற்றம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அதிகமாகி வரும் மக்கள்தொகையால் நிலப் பயன்பாட்டின்மீது அழுத்தம் ஏற்பட்டுள்ளது. வேலையின்மை இளைஞர்களைப் பல்வேறு போராளிக் குழுக்களை நோக்கித் தள்ளியுள்ளது.

மணிப்பூர் கலவரத்தில் சண்டையிட்டுக் கொள்பவர்கள் யார்?

மணிப்பூர் வன்முறை

“இப்போது நடக்கும் இந்த மோதல் முற்றிலும் இனரீதியான மோதலாக வேரூன்றியுள்ளது.”

மெய்தேய், குகி, நாகா ஆகிய சமூகங்களின் போராளிகள், பல தசாப்தங்களாக முரண்பட்ட ‘தாய்நாடு கோரிக்கைகள்’, மத வேறுபாடுகள் தொடர்பாக ஒருவருக்கொருவர் சண்டையிட்டு வருகின்றனர்.

மேலும் அனைத்து தரப்பினரும் இந்தியாவின் பாதுகாப்புப் படைகளுடனும் மோதி வருகின்றனர். இது ஒருபுறம் இருந்தாலும், தற்போது வெடித்துள்ள கலவரம் கிட்டத்தட்ட முற்றிலும் மெய்தேய் மற்றும் குகி மக்களுக்கு இடையிலானதாக உள்ளது.

“இப்போது நடக்கும் இந்த மோதல் முற்றிலுமாக இனரீதியான மோதலாக வேரூன்றியுள்ளது. இது மதத்தால் நடப்பதல்ல,” என்கிறார் தி ஃபிரான்டியர் பத்திரிகையின் மணிப்பூர் ஆசிரியர் திரன் ஏ சடோக்பம்.

யார் இந்த குகி மற்றும் மெய்தேய் மக்கள்?

மெய்தேய் மக்கள், மணிப்பூர், மியான்மர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டுள்ளார்கள்.

பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள் என்றாலும் சிலர் சனமாஹி(Sanamahi) மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.

குகி சமூக மக்கள், பெரும்பாலும் கிறிஸ்தவர்கள். இவர்கள் இந்தியாவின் வடகிழக்குப் பகுதி முழுவதும் பரவி வாழ்கின்றனர். மணிப்பூரில் உள்ளவர்களில் பலர் தங்கள் பூர்வீகத்தை மியான்மர் வரை கொண்டுள்ளனர்.

மெய்தேய் மக்கள் பெரும்பாலும் இம்பால் பள்ளத்தாக்கில் வாழ்கின்றனர். குகி மக்கள் அதைச் சுற்றியுள்ள மலைகளிலும் அதற்கு அப்பாலும் வாழ்கின்றனர்.மணிப்பூர் வன்முறை

பெண்கள் தாக்கப்படுவதும் அவமானப்படுத்தப்படுவதும் ஏன்?

டெல்லியில் உள்ள பிபிசி செய்தியாளர் கீதா பாண்டே, “பாலியல் வல்லுறவு, வன்கொடுமைகள் ஆகியவை கலவரத்தின்போது வன்முறையின் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுவதற்கான சமீபத்திய சான்றாக மணிப்பூரில் பெண்களுக்கு நேர்ந்த கொடூரத்தின் வீடியோ உள்ளது. இது பெரும்பாலும் பழிவாங்கும் தாக்குதல்களின் ஒரு சுழற்சியாக மேலும் மோசமடையக்கூடும்,” என்று கூறுகிறார்.

உள்ளூர் ஊடக செய்திகளின்படி, மே மாதம் நடந்த இந்தத் தாக்குதல், குகி போராளிகளால் மெய்தேய் பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக வெளியான போலிச் செய்தியைத் தொடர்ந்து, அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது.

இது “குகி பழங்குடிப் பெண்கள் மீது மெய்தேய் போராளிக் கும்பல்கள் பழிவாங்கும் விதத்தில் மேற்கொள்ளும் வன்முறையின் ஒரு புதிய, கொடிய சுழலை கட்டவிழ்த்துவிட்டதாக,” தி பிரின்ட் குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது?

மே 4ஆம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலின் வீடியோ வெளியாகும் வரை மணிப்பூரில் நடந்த வன்முறை குறித்து பிரதமர் நரேந்திர மோதி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.

மணிப்பூர் வன்முறை

மணிப்பூர் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்க பிரதமருக்கு ஏன் இவ்வளவு காலம் ஆனது என்று மக்கள் பலரும் கேட்கின்றனர்.

வீடியோ வெளியான பிறகு பேசிய அவர், இந்தச் சம்பவம் “இந்தியாவை அவமானத்தியது” என்றும் “இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தப்பிக்க மாட்டார்கள், மணிப்பூர் மக்களுக்கு நடந்ததை மன்னிக்கவே முடியாது” என்றும் கூறினார்.

ஆனால், மணிப்பூர் குறித்து அவர் பகிரங்கமாக கருத்து தெரிவிக்க ஏன் இவ்வளவு காலம் ஆனது என்று மக்கள் பலரும் கேட்கின்றனர்.

இந்தக் கலவரத்தைத் தடுக்கும் முயற்சியில் இந்திய அரசு சமீபத்தில் 40,000 ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர், காவல்துறையினரை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது. இதுவரை, நேரடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருமாறு பழங்குடித் தலைவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கவில்லை.

இதற்கிடையே, வன்முறை தொடர்ந்து பரவிக் கொண்டிருப்பது, மேலும் பல கிராம மக்களைத் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளுகிறது.

மணிப்பூரில் யார் ஆட்சி நடக்கிறது?

மணிப்பூர் வன்முறை
ஹெராயின் வர்த்தகத்திற்காக கசகசா பயிரிடுவதற்கு எதிரான முதல்வர் பிரேன் சிங்கின் சமீபத்திய நடவடிக்கைகள் குகி மக்களின் பகுதிகளைக் குறி வைத்து நடப்பதாக குகி சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோதியின் பாரதிய ஜனதா கட்சிதான் மணிப்பூரில் ஆளும் கட்சியாக உள்ளது. மெய்தேய் சமூகத்தைச் சேர்ந்த என்.பிரேன் சிங் தலைமையிலான அரசு அங்கு ஆட்சி செய்கிறது.

மொத்த மக்கள்தொகையில் 53% இருக்கும் மெய்தேய் சமூகம், சட்டப்பேரவையின் 60 இடங்களில் 40 இடங்களை வைத்துள்ளது.

ஹெராயின் வர்த்தகத்திற்காக கசகசா பயிரிடுவதற்கு எதிரான பிரேன் சிங்கின் சமீபத்திய நடவடிக்கைகள் குகி மக்களின் பகுதிகளைக் குறி வைத்து நடப்பதாக குகி சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர் குகி கிளர்ச்சிக் குழுக்கள் சமூக மக்களைத் தூண்டிவிடுவதாக அவரது அரசு குற்றம் சாட்டியது.

Previous Story

பூமியை துளையிட்டு"34,000 அடி ஆழம்!" வேலையை ஆரம்பித்த சீனா!

Next Story

சாம்பலாகிறது ரஜிவ்-ஜே.ஆர் உடன்பாடுகள்!