மணிப்பூர்: நிர்வாண ஊர்வலம் ‘கொடூர வீடியோ’ 

கடந்த இரண்டரை மாதங்களாக மணிப்பூரில் உள்ள மெய்தேய் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை மோதல்கள் நிலவி வரும் நிலையில், இரண்டு மணிப்பூர் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற கொடூரமான வீடியோ புதன்கிழமை வெளியாகியுள்ளது.

பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோவில் காணப்பட்டவர்களில் நான்கு பேரை மணிப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது, இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருந்தார். அவர் பேசிய அடுத்த சில மணிநேரங்களில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மணிப்பூர் வன்முறை

இத்தகைய வலி மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்குத் தனது வருத்தத்தைத் தெரிவித்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர், “ஆனால் இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை” என்றும் குறிப்பிட்டார்.

வீடியோவில், நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை திறந்தவெளி நிலத்திற்கு இழுத்துச் செல்லும் கூட்டத்தில் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகக் காணப்பட்ட நான்கு ஆண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வீடியோவை உறுதி செய்த மணிப்பூர் காவல்துறை, தௌபல் மாவட்டத்தில் மே மாதம் 4ஆம் தேதி இந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறியுள்ளனர்.

மணிப்பூர் வன்முறை

வீடியோவில், நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை திறந்தவெளி நிலத்திற்கு இழுத்துச் செல்லும் கூட்டத்தில் அந்தப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகக் காணப்பட்ட இரண்டு ஆண்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

வீடியோவில் காணப்பட்ட முக்கிய நபர் கைது

இந்தச் சம்பவம் தொடர்பாக தௌபால் மாவட்டத்தில் பெண்களிடம் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசும்போது, இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கில் முதல் கைது புதன்கிழமையன்றும் இரண்டாவது கைது வியாழக்கிழமையன்றும் நடந்ததாக அவர் தெரிவித்திருந்தார். புதன்கிழமையன்று கைது செய்யப்பட்ட நபர்தான் இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையவர்களைக் கைது செய்ய மத்திய பாதுகாப்புப் படையினர் அனைத்து இடங்களிலும் குவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

முதல்வர் இந்தத் தகவலை வழங்கிய அடுத்த சில மணிநேரங்களில், இதுதொடர்பாக மேலும் இருவர் கைது செய்யப்பட்டதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

வீடியோவில் கூட்டத்தை வழிநடத்துவதாகக் காணப்படும் நபரான ஹூய்ரேம் ஹெரதேஷ் சிங் முதலில் கைதுசெய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மற்ற மூன்ற பேரின் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

முன்னதாக இன்று காலை இதுகுறித்து மணிப்பூர் போலீசார் கூறுகையில், “இந்த சம்பவம் மே 4ம் தேதி நடந்தது. இந்த வழக்கில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க போலீசார் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்திருந்தனர்.

பெண்களை நிர்வாணமாக்கிய வீடியோவில் இருந்த முக்கிய நபரின் வீட்டிற்கு தீ வைத்த மெய்தேய் பெண்கள்

இந்தச் சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது அவர்களில் முக்கிய நபராகக் கருதப்படுபவரின் வீட்டை அடித்து, நொறுக்கி, மெய்தேய் பெண்கள் தீயிட்டு எரித்துள்ளனர்.

மணிப்பூரில் பல தசாப்தங்களாக சமூக இயக்கத்தை நடத்தி வரும் மெய்தேய் பெண்களின் வலிமை மிக்க அமைப்பான மெய்ரா பைபியுடன் தொடர்புடைய பெண்கள் இதைச் செய்துள்ளனர்.

ஹெய்ரெம் ஹெரோதாஸ் மெய்தேய் என்பவர் இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவத்தில் முக்கிய நபராக கைது செய்யப்பட்டார் இந்த நபர் அந்தப் பெண்களைப் பிடித்து வைத்திருப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது.

அவர் கைது செய்யப்பட்ட சில மணிநேரங்களில், மெய்ரா பைபியை சேர்ந்த பெண்கள், தௌபால் மாவட்டத்தின் பாச்சி கிராமத்தில் இருக்கும் குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டிற்குத் தீ வைத்தனர்.

அதோடு, பேச்சி அவாங் லைகாய் பகுதியைவிட்டு ஹெரோதாஸை குடும்பத்துடன் வெளியேற்ற ஊர் மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மணிப்பூர் வன்முறை
பெண்களை நிர்வாணமாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்தவர்களில் முக்கிய நபரின் வீட்டிற்கு தீ வைத்த மெய்தேய் பெண்கள்

இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, இந்த நபர் தனது தாய்வழி தாத்தா வீட்டில் வளர்க்கப்பட்டார். இவர் திருமணமானவர்.

இந்தச் சம்பவம் குறித்து மெய்ரா பைபியின் தலைவர் ஒருவர், “மெய்தேய் மட்டுமல்ல வேறு எந்த சமூகமாக இருந்தாலும் சரி ஒரு பெண்ணாக ஒரு பெண்ணின் கண்ணியத்தைப் புண்படுத்துவதை ஏற்க முடியாது.

அப்படிப்பட்ட ஒருவரை நம் சமூகத்தில் வாழ அனுமதிக்க முடியாது. இது ஒட்டுமொத்த மெய்தேய் சமூகத்திற்கும் வெட்கக்கேடான விஷயம்,” என்று கூறினார்.

மணிப்பூர் சம்பவம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் என்ன கூறினார்?

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து சில மணிநேரங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் வன்முறை
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, இந்தியாவில் வாழும் மக்களுக்கு அவர் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்

இந்தியாவில் வாழும் மக்களுக்கு அவர் தனது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார். மணிப்பூர் சம்பவம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கார்செட்டி, “நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை. இதைப் பற்றி நான் இப்போதுதான் முதன்முறையாகக் கேள்விப்படுகிறேன். ஆனால், நான் முன்பே கூறியது போல் உலகில் எங்கு மனித அவலம் நடந்தாலும் அதுகுறித்து நாங்கள் வேதனையடைவோம்,” என்று தெரிவித்தார்.

பிடிஐ செய்தி முகமையிடம் பேசிய கார்செட்டி, “எங்கள் எண்ணங்கள் இந்திய மக்களுடன் உள்ளன. ஆனால், இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை. இத்தகைய வலி மற்றும் துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு எங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மே 3ஆம் தேதி முதல் மணிப்பூரில் மெய்தேய் மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே நடந்து வரும் வன்முறையில் இதுவரை 160 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோதி கூறியது என்ன?

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திர மோதி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று மணிப்பூர் வீடியோ தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி தனது கருத்தைக் கூறியுள்ளார்.

மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் தனது இதயம் சோகத்தில் மூழ்கியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “இந்த சம்பவம் வெட்கக்கேடானது. நாடு அவமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தாய்மார்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியிருக்கிறார்.

“குற்றவாளிகள் யாரும் விடுவிக்கப்படமாட்டார்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது ஒருபோதும் மன்னிக்கப்படாது” என்று பிரதமர் மோதி கூறினார்.

பிரதமர் திசைதிருப்ப முயல்வதாக விமர்சனம்

இந்த விவகாரம் குறித்த பிரதமர் நரேந்திர மோதியின் பேச்சு திசைதிருப்பும்விதமாக உள்ளது என்று சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் விமர்சித்துள்ளார்.

மணிப்பூர் சம்பவம்

இன்று காலையில், மணிப்பூரில் இரண்டு பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது குறித்து பிரதமர் பேசியிருந்தார். அதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களையும் குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், “இத்தகைய சம்பவம் நடப்பது எந்த மாநிலமாக இருந்தாலும் சரி, அங்கு எந்த அரசு இருந்தாலும் சரி, அரசியலுக்கு அப்பாற்பட்டு பெண்களின் மரியாதையைக் காக்கும் வகையில் செயல்படுங்கள்,” என்று கூறியிருந்தார்.

அதற்கு, தற்போது சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் செய்தியாளார்களிடம் பேசும்போது பதிலடி கொடுத்துள்ளார். மணிப்பூர் சம்பவத்தின் மீதான கவனத்தைத் திசைதிருப்பவே பிரதமர் நரேந்திர மோதி சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களின் பெயர்களைச் சேர்த்துக் குறிப்பிடுவதாக அவர் விமர்சித்தார்.

“மணிப்பூர் சம்பவம் வேறு மாதிரியானது. அதுகுறித்துப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சத்தீஸ்கரையும் ராஜஸ்தானையும் இதோடு இணைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது? நமது மாநிலத்தை அவதூறு செய்ய மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி துரதிர்ஷ்டவசமானது.

முதலில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பிறகு மணிப்பூர் எனக் குறிப்பிட்டார். முதன்முறை ஊடகங்கள் முன் வந்து பொய் சொல்லிவிட்டுச் சென்றார். பிரதமரே இந்தப் பேச்சுகளை நிறுத்துங்கள். உங்கள் பொறுப்பை நிறைவேற்றுங்கள்,” என்று பிரதமர் மோதியை, பூபேஷ் பாகேல் கடுமையாக விமர்சித்தார்.

“ஒடிஷாவுக்கு சென்ற பிரதமர் மோதி மணிப்பூருக்கு ஏன் வரவில்லை?”

மணிப்பூர் வன்முறை

நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் மோதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், கொடுமையான இந்தச் சம்பவம் குறித்து மெய்தேய் இன மக்கள் என்ன சொல்கிறார்கள்?

நாச வேலையை ஏற்படுத்தும் நோக்கிலான இதுபோன்ற நிறைய வீடியோக்கள் தங்கள் வசம் உள்ளன என்றும் ஆனால் அவை எல்லாம் பகிரப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோதி பேசுவதற்கு முன், வீடியோவின் உண்மைத்தன்மையை உறுதி செய்திருக்க வேண்டும் என்று மேய்தேய் சமூக மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இந்த விவகாரம் குறித்த பிரதமர் மோதியின் கருத்தால் மணிப்பூரில் வன்முறை மேலும் அதிகரிக்கலாம் என்று மனித உரிமைகள் ஆர்வலர் கே.கே. ஓனிலின் அச்சம் தெரிவித்துள்ளார்.

“கிட்டத்தட்ட மூன்று மாதங்களாக மணிப்பூரில் நீடித்து வரும் வன்முறைகளால் மேய்தேய், குகி என இருதரப்பு சமூக மக்களும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக இதற்கு முன்பும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

அப்போதெல்லாம் எதுவும் பேசாமல் மெளனம் காத்து வந்த பிரதமர் மோதி, குறிப்பிட்ட இந்த வீடியோ குறித்து மட்டும் பேசியுள்ளார். இரு சமூகத்தினர் சந்தித்து வரும் பிரச்னைகள் குறித்தும் பிரதமர் பேசவேண்டும். ஒருதலைபட்சமான இந்த வீடியோ நேற்று (புதன்கிழமை) முதல் வைரலாகி வருவது துரதிருஷ்டவசமானது,” என்று ஒனிலின் மேலும் கூறியுள்ளார்.

மணிப்பூர்

சமீபத்தில் ஓடிஷாவில் ரயில் விபத்து நிகழ்ந்தபோது அங்கு பிரதமர் மோதி நேரில் சென்றார். ஆனால் மணிப்பூர் வன்முறை கலவரம் குறித்து அவர் தொடர்ந்து மெளனம் சாதித்து வந்தார் என்றும் மனித உரிமை ஆர்வலரான ஒனிலின் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.

“மேய்தேய், குகி ஆகிய இரண்டு சமூகத்தைச் சேர்ந்த பெண்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் தற்போது குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கொல்லப்படுவதாகவும், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாகவும் காட்டப்படுவது, பொதுவெளியில் எவ்வாறு புரிந்து கொள்ளப்படும்?” என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

“மத்திய அரசோ, மாநில அரசோ தற்போது வன்முறையை முடிவுக்கு கொண்டு வருவதில் யாரும் உறுதியாக இருப்பதாகத் தெரியவில்லை. இங்கு வன்முறைக்கு முடிவுகட்ட இன்னும் ஓராண்டோ, அதற்கு மேலாகவோ கூட ஆகலாம்,” என்கிறார் ஓனிலின்.

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி வேண்டும் – குகி சமூகத்தினர் வலியுறுத்தல்

குகி பழங்குடியின பெண்களுக்கு நிகழ்ந்துள்ள கொடுமைகள் குறித்து மணிப்பூர் பழங்குடியினர் மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

“மணிப்பூரில் நிகழ்ந்து வரும் வன்முறை, மோதல் சம்பவங்கள் குறித்து பிரதமர் மோதியின் கருத்தை பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். தற்போது அவர், இந்த குற்றச் சம்பவத்தை செய்த நபர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார். நாட்டின் பிரதமராக அவர் கூறியுள்ள இந்த வார்த்தைகளுக்கு நிச்சயமாக பலன் இருக்கும்” என்று மணிப்பூர் பழங்குடியினர் மன்றத்தின் செய்தி தொடர்பாளர் டாக்டர் சின்கன்லுன் கெய்ட் கூறியுள்ளார்.

அதேநேரம் “இந்த விவகாரத்தில் மாநில அரசு பாரபட்சத்துடன் நடந்து கொண்டுள்ளதாகவும் கெய்ட் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். பெண்களின் வீடியோ விவகாரம் குறித்து பிரதமர் மோதி பேசியுள்ளதையடுத்து, குகி-ஜு சமூக மக்கள் சற்று நிம்மதியாக உணர வேண்டும்.

ஏனெனில் தங்களுக்கு நிகழ்ந்த அநீதிகளுக்கு மாநில அரசிடம் இருந்து நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லாமல் இருந்து வந்தது. தற்போது பிரதமர் மோதி, மோசமான இந்த விவகாரம் குறித்து பேசியுள்ளதால் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்துள்ளது” என்று கெய்ட் கூறியுள்ளார்.

பிரதமர் மோதி இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளதால், தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் குகி சமூகத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான லாம்டின்சாங் ஹோக்கி.

வன்முறையை கட்டுப்படுத்த தவறிய மணிப்பூர் மாநில முதல்வர் பிரன் சிங், தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதன் மூலமே மணிப்பூரில் அமைதி திரும்பும் என்றும் ஹோக்கி வலியுறுத்தியுள்ளார்.

உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

மணிப்பூர் வன்முறை உச்சநீதிமன்றம் கண்டனம்

இந்நிலையில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கை ஜூலை 28ஆம் தேதி வெள்ளிக்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

“இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இச்சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது. இது அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளை மீறும் செயலாகும்.” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜூலை 28ஆம் தேதிக்குள் தெரிவிக்குமாறு தலைமை நீதிபதி பெஞ்ச் மத்திய அரசையும், மணிப்பூர் அரசையும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

மணிப்பூர் வன்முறை

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.

அதே நேரத்தில், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘இந்த விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர் என். பிரேன் சிங்கிடம் பேசியதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மணிப்பூர் வீடியோ தொடர்பாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘இதயம் நொறுங்கிவிட்டதாக’ என சமூக ஊடகம் வாயிலாக பதிவிட்டுள்ளார்.

அவரின் பதிவில், “மணிப்பூரில் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை சம்பவத்தை கண்டு என் இதயம் நொறுங்கிவிட்டது. நமது கூட்டு மனசாட்சி எங்கே? மனித குலத்தின் ஆன்மாவை வெறுப்பும் விஷமமும் வேரோடு பிடுங்கி எறிகிறது. மணிப்பூரில் நிகழும் இத்தகைய கொடூர வன்முறை அட்டூழியங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நின்று, மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் ஒரு சமுதாயத்தை உருவாக்க பாடுபட வேண்டும்.மணிப்பூர் முழுவதும் அமைதி திரும்ப தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்,” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

மணிப்பூர் வன்முறை

மணிப்பூர் முதல்வரின் பதில் என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங், குற்றம் செய்தவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

“மணிப்பூர் தொடர்பாக நேற்று வெளியான வீடியோ மிகவும் மோசமானது. இது மனிதத்தன்மையற்ற செயல். இந்த விவகாரம் தொடர்பாக மணிப்பூர் போலீஸ் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, இன்று இருவரை கைது செய்துள்ளது. உரிய விசாரணை நடத்தி தவறிழைத்தவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று மணிப்பூர் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் வெளியிட்ட செய்தியின்படி, குகி-ஜோமி சமூகத்தைச் சேர்ந்த இந்த பெண்கள் மே 4 அன்று மெய்தேய் இனத்தவர் அதிகமாக வாழும் தௌபல் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது.

இருப்பினும், அவர்கள் மீது பாலியல் துன்புறுத்தல் தொடர்பான முதல் தகவல் அறிக்கை மே 18-ஆம் தேதி காங்போக்பி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவம் குறித்து மணிப்பூர் காவல்துறையின் உயர் அதிகாரியான எஸ்பி மேகசந்திர சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குற்றவாளிகளை பிடிக்க மணிப்பூர் காவல்துறை முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

வீடியோவில் காணப்பட்ட ஒரு பெண்ணின் வயது சுமார் 20 வயது என்றும் மற்றொரு பெண்ணின் வயது 40 என்றும் கூறப்படுகிறது.

இந்த வீடியோவில் இரண்டு பெண்கள் மட்டுமே காணப்படுவதாகவும், ஆனால் அந்த கும்பல் 50 வயது பெண் ஒருவரையும் ஆடையை களைய வற்புறுத்தியதாகவும் இந்த பெண்கள் தங்கள் புகாரில் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் இளம் பெண்ணும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக எப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது.

மணிப்பூர் வன்முறை

என்ன நடந்தது?

மே 3ஆம் தேதி 800 முதல் 1000 பேர் வரை நவீன ஆயுதங்களுடன் தௌபால் மாவட்டத்தில் அமைந்துள்ள தங்கள் கிராமத்தில் தாக்குதல் நடத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தக் கும்பல் கொள்ளையடித்ததுடன் கிராமத்திற்கு தீ வைக்க ஆரம்பித்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

பாதிக்கப்பட்ட பெண்கள் தந்தை, சகோதரருடன் அருகேயிருந்த காடுகளை நோக்கி ஓடியிருக்கின்றனர்.

முதல் அறிக்கையில் கூறப்பட்ட தகவல்களின்படி, இந்த பெண்களை காவல்துறையினர் காப்பாற்றினர். பின்னர் இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்ல முயன்றனர். ஆனால் காவல் நிலையத்திற்கு இரண்டு கிலோமீட்டர் முன்பு, கும்பல் அவர்களைத் தடுத்திருக்கிறது.

மணிப்பூர் வன்முறை

இதைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் இந்த பெண்களை காவல்துறையினரிடம் இருந்து வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றிருக்கின்றனர். பிறகு இளம் பெண்ணின் தந்தை சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார்.

“மூன்று பெண்களும் கூட்டத்தின் முன் நிர்வாணமாக நடக்க வற்புறுத்தப்பட்டனர். ஒரு இளம் பெண் பொது இடத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பெண்ணின் 19 வயது சகோதரர் அவரை காப்பாற்ற முயன்றபோது, அவரும் கொல்லப்பட்டார்.” என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து பழங்குடியினர் தலைவர்கள் மன்றம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வீடியோக்களை வெளியிட்டு குற்றம் செய்தவர்கள் அந்தப் பெண்களுக்கான கொடுமையை மேலும் அதிகரிக்க செய்துள்ளனர்’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், இந்தப் பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப் போவதாக மகளிர் அமைப்பினர் அறிவித்ததை அடுத்து, இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், காக்சிங், தௌபால் ஆகிய 5 மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவை மாநில அரசு அறிவித்துள்ளது.

Previous Story

உயிர் கொல்லி புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள்

Next Story

பூமியை துளையிட்டு"34,000 அடி ஆழம்!" வேலையை ஆரம்பித்த சீனா!