வடகொரியாவுக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்

தங்களது நாட்டின் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர் ஒருவரை பிடித்து வைத்திருப்பதாக வட கொரியா தெரிவித்துள்ளது.அந்த ராணுவ வீரர் தென் கொரியாவிலிருந்து அதிக பாதுகாப்பு நிறைந்த எல்லையை தாண்டி வட கொரியாவுக்குள் நுழைந்தார் என்று கூறப்படுகிறது. இரு நாடுகளையும் பிரிக்கும் ராணுவமற்ற பகுதிக்கு அவர் ஏற்கெனவே திட்டம் போட்டு பயணம் செய்திருக்கிறார்.

வட கொரியாவால் பிடிக்கப்பட்ட அமெரிக்க வீரர்

தென்கொரிய வீரர்கள், இருநாடுகளின் கூட்டுப் பாதுகாப்புப் பகுதியில் உள்ள பன்முன்ஜோம் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்

உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்ட வடகொரியாவில் பதற்றம் நிலவும் நேரத்தில் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்கா தனது குடிமக்கள் வடகொரியாவுக்கு போகவேண்டாம் என ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.

வடகொரியா பிடித்து வைத்துள்ள அந்த ராணுவ வீரரை எந்த விதத்திலும் தொடர்புகொள்ள முடியவில்லை என்று அமெரிக்க ராணுவத்தின் மூத்த தளபதி ஒருவர் தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்தோ-பசிபிக் கமாண்டின் அட்மிரல் ஜான் அக்விலினோ பேசிய போது, வட கொரியாவுடன் “தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை” என்றார். அந்த ராணுவ வீரர், அமெரிக்க ராணுவத்தின் அறிவுரையை மீறி தன் விருப்பத்துடன் எல்லையைக் கடந்து சென்றிருக்கிறார் என்றும், இது குறித்து வடகொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க ராணுவம் விசாரித்து வருகிறது,” என்றும் கூறினார்.

வடகொரியா ராணுவ வீரர்

வடகொரியாவுக்குள் அத்துமீறி நுழைந்த ராணுவ வீரர் காவலில் வைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, வட கொரியா சந்தேகத்திற்கிடமான இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை அருகிலுள்ள கடல் பகுதியில் ஏவியது.

கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்த ஏவுகணைகள் குறித்த தகவல் தென்கொரியா ராணுவத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதற்கும், அமெரிக்க ராணுவ வீரரை வடகொரியா பிடித்து வைத்திருப்பதற்கும் எந்த வித தொடர்பும் இல்லை.

அந்த ராணுவ வீரர் தப்பிச் செல்லும் நோக்கத்துடன் வட கொரியாவுக்குச் சென்றாரா அல்லது மீண்டும் திரும்பிவர முடிவெடுத்திருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இது குறித்து வடகொரியாவில் இருந்து இதுவரை எந்தத் தகவலும் வரவில்லை.

அவர் பிரைவேட் செகண்ட் க்ளாஸ் (பிவி2) படைப்பிரிவைச் சேர்ந்தவர் என்றும், அவரது பெயர் டிராவிஸ் கிங் என்றும், கடந்த 2021 ஜனவரியில் அவர் ராணுவப் பணியில் சேர்ந்ததாகவும் அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் அடையாளம் கண்டுபிடித்துள்ளது.

அவர் ஒரு குதிரைப்படை வீரர் என்றும், தென் கொரியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத்தில் சுழற்சி முறையில் 1வது கவசப் பிரிவில் நியமிக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

டிராவிஸ் கிங் ஒரு தாக்குதல் குற்றச்சாட்டில் சிக்கியதால் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இருந்ததாகவும், இதனால் அவர் வடகொரியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என்றும் அசோசியேட்டட் பிரஸ் தெரிவிக்கிறது.

பிபிசியின் அமெரிக்க கூட்டுச் செய்தி நிறுவனமான சிபிஎஸ் செய்திகளின்படி, டிராவிஸ் கிங் சியோல் நகர விமான நிலையப் பாதுகாப்பைக் கடந்து சென்றதாகவும், ஆனால் எப்படியோ அங்கிருந்து வெளியேறி எல்லைப்பகுதிக்குச் சென்றதாகவும் அதன் பின் அவர் வடகொரியாவுக்குச் சென்றதாகவும் தெரியவருகிறது.

அவர் “வேண்டுமென்றே, ராணுவ விதிகளுக்கு முரணாக” வடகொரியாவுக்குச் சென்றதாக அமெரிக்க இராணுவம் கூறியுள்ளது.

ராணுவ வீரர் வட கொரியாவுக்குச் சென்றபோது அவருடன் இருந்தவரும், நேரில் கண்ட சாட்சியுமான ஒருவர் CBS இடம் பேசியபோது, அவர்கள் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தைக் கண்டதாகவும் – உள்ளூர் ஊடகங்கள் அந்த இடம் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள பன்முன்ஜோம் என்ற கிராமம் எனத் தெரிவிக்கின்றன – அங்கு சென்றபின் அந்த ராணுவ வீரர் சத்தமாக ‘ஹா ஹா ஹா’ என்று சிரித்ததாகவும், அங்கிருந்த பல கட்டடங்களுக்கு இடையே நடமாடியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “அந்த வீரர் அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்ததைப் பார்த்து, அது ஒரு மோசமான நகைச்சுவை என்று நான் முதலில் நினைத்தேன். ஆனால் அவர் மீண்டும் திரும்பி வரவில்லை என்பதை அறிந்த பின் அது ஒரு நகைச் சுவை அல்ல என உணர்ந்தேன். அதன் பின் தான் இத்தனை விஷயங்களும் நடந்துள்ளன,” என்று அவர் கூறினார்.

இராணுவமயமாக்கப்பட்ட மண்டலம் மற்றும் கூட்டுப் பாதுகாப்புப் பகுதியை நிர்வகிக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் படைப்பிரிவினர் வட கொரிய இராணுவத்துடன் தொடர்பு கொண்டு அந்த வீரரை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறினர்.

“அவர் தற்போது வட கொரியாவின் காவலில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். மேலும் அவரை மீட்கும் விதமாக நாங்கள் தென் கொரியா மற்றும் வட கொரிய ராணுவங்களுடன் இணைந்த பேச்சு நடத்திவருகிறோம்,” என்று அவர்கள் தெரிவித்தனர்.

டிராவிஸ் கிங் எங்கு அல்லது எந்த நிலையில் வைக்கப்பட்டுள்ளார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

வடகொரியா

வாஷிங்டன் டிசி-ஐ தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழுவின் நிர்வாக இயக்குனர் க்ரெக் ஸ்கார்லட்டாய் (Greg Scarlatoiu) பிபிசியிடம் பேசியபோது, வட கொரிய அதிகாரிகள் அவரது ராணுவப் பணிகள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொள்ள அவரைக் கட்டாயப்படுத்திப் பேசவைப்பார்கள் என்றும், அதற்கான முயற்சிகள் ஏற்கெனவே தொடங்கியிருக்கும் என்றும், அவரை ஒரு பிரச்சார பீரங்கியாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் கூறினார்.

ராணுவம் அற்ற பகுதி இரு கொரிய நாடுகளையும் பிரிக்கிறது என்பதுடன், இது உலகின் மிக அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும் என்பது கவனிக்கத்தக்கது.

மேலும், இப்பகுதி கண்ணிவெடிகளால் நிரம்பியுள்ள பகுதியாகவும் உள்ளது, அது மட்டுமின்றி இப்பகுதியைச் சுற்றிலும் மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பி வேலிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. ஆயுதம் ஏந்திய காவலர்கள் 24 மணி நேரமும் இப்பகுதியில் உஷார் நிலையில் இருக்கின்றனர்.

வடகொரியா

ராணுவம் விலக்கப்பட்ட மண்டலம் என்பது என்ன?

1950 களில் நடந்த கொரியப் போருக்குப் பிறகு ஆயுதமற்ற இந்தப் பகுதி இரு நாடுகளையும் பிரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்கா தெற்குப் பகுதியை ஆதரித்தது. தற்காலிக போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு கொரியப் போர் முடிவடைந்தது. அதாவது விதிகளின்படி பார்த்தால் இரு தரப்பும் இன்னும் போரில் ஈடுபட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான மக்கள் வட கொரியாவிலிருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார்கள். ஆனால் DMZ எனப்படும் இந்த ராணுவம் விலக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவது மிகவும் ஆபத்தானது. கொரோனா பரவல் தொடக்கத்தில் வடகொரியா அதன் எல்லைகளை சீல் வைத்தது. இன்னும் அவற்றை மீண்டும் திறக்கவில்லை.

கடைசியாக 2017-ஆம் ஆண்டு வடகொரியாவில் இருந்து ஒரு ராணுவ வீரர் காரை ஓட்டியும், ஓடியும் தப்பிக்க முயன்றதாக தென்கொரியா கூறுகிறது. அவர் 40 முறை சுடப்பட்டதாகவும், அதில் உயிர் தப்பியதாகவும் தென்கொரியா கூறுகிறது.

கொரோனாவுக்கு முன்பு தென் கொரிய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் வட கொரியாவிலிருந்து 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் சீனாவுக்கு தப்பி ஓடினர்.

தற்போது அமெரிக்க ராணுவ வீரர் வடகொரியாவில் சிக்கியிருப்பது அந்நாட்டு அதிபர் ஜோ பைடனுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

2017 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவில் கடுமையான விரிசல் ஏற்பட்டது. ஓராண்டுக்கு முன்புதான் முன்னர் ஒரு பரப்புரை குறியீட்டைத் திருடியதற்காக கைது செய்யப்பட்ட ஒரு அமெரிக்க மாணவர் கோமா நிலையில் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் இறந்துவிட்டார். அவரது மரணத்திற்கு வடகொரிய அதிகாரிகளே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

2018 இல் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது மூன்று அமெரிக்க குடிமக்கள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் இறுதியில், கிம் ஜாங் உன்னுக்கும் டிரம்புக்கும் இடையே நடந்த தொடர் பேச்சுவார்த்தைகள் உறவை மேம்படுத்த சிறிதும் உதவி செய்யவில்லை.

Previous Story

நெல்சன் மண்டேலா காதலை ஏற்க மறுத்த இந்தியப் பெண்

Next Story

ரணில் நாளை இந்தியா பயணம்