அஜித் தோவல் முன் இந்திய முஸ்லிம்கள் குறித்து  இஸ்லாமிய அமைப்பின் தலைவர் பேசியது என்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இந்தியாவில் உள்ள சிறுபான்மையினர்கள் தொடர்பான பிரச்னைகள் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குரல் எழுப்பி இருந்தார். ஒபாமாவின் இந்த பேச்சுக்கு பின் இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை பற்றிய விவாதம் மீண்டும் எழுந்துள்ளது.

முஸ்லிம் அமைப்பின் தலைவர் பேச்சு

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் முஸ்லிம் உலக லீக் அமைப்பின் பொதுச் செயலாளர் முகமது பின் அப்துல் கரீம் அல்-இஷா

இந்தியாவில் ‘பொது சிவில் சட்டம்’ கொண்டு வருவது குறித்தும் அண்மை காலமாக தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டம் குறித்த தங்களின் கவலைகளை முஸ்லிம் சமூகத்தினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தான் முஸ்லிம் உலக லீக் அமைப்பின் பொதுச் செயலரும், செளதி அரேபியாவின் முன்னாள் சட்ட அமைச்சருமான முகமது பின் அப்துல் கரீம் அல்-இஷா ஆறு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக முஸ்லிம் உலக லீக் விளங்குகிறது.

செளதி அரேபியாவின் சட்ட அமைச்சராக அல் -இஷா பதவி வகித்தபோது பெண்களின் உரிமைகள், குடும்ப விவகாரங்கள் மற்றும் மனிதாபிமான விஷயங்கள் தொடர்பான சட்டங்களில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தார். பல்வேறு நாடுகள், சமூகங்கள் மற்றும் பிரிவுகளுக்கு  இடையேயான உறவுகளை வலுப்படுத்தும்  நோக்கில் உலகம் முழுவதும் பல்வேறு பிரசாரங்களையும் இவர் முன்னெடுத்து வருகிறார்.

தனது இந்திய பயணத்தின் முக்கிய நிகழ்வாக பிரதமர் நரேந்திர மோதி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோரை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார்.

மற்றொரு முக்கிய நிகழ்வாக, டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாசார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அல்-இஷா பங்கேற்றார்.

முஸ்லிம் அமைப்பின் தலைவர் பேச்சு

அல்- இஷாவுக்கு நினைவு பரிசு வழங்கும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

‘பயங்கரவாதத்துக்கும் எந்த மதத்திற்கும் சம்பந்தம் இல்லை’

இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்கள் குறித்து அஜித் தோவலும், முகமது பின் அப்துல் கரீம் அல்- இஷாவும் இந்த நிகழ்ச்சியில் நிறைய பேசினர்.

பயங்கரவாதத்துக்கும், எந்த மதத்திற்கும் தொடர்பு இல்லை. இருப்பினும் வன்முறை பாதையில் பயணிப்போரை எதிர்ப்பது மதத் தலைவரின் தலையாய பொறுப்பு என்று அஜித் தோவல் பேசினார். “பயங்கரவாதம் எந்த மதத்துடனும் தொடர்புடையது அல்ல. ஆனாலும் சிலர் தவறான பாதையில் செல்கின்றனர். வன்முறை வழிகளைப் பின்பற்றுபவர்களை திறம்பட  எதிர்ப்பது அனைத்து மதம் மற்றும் ஆன்மிக வழிகளை பின்பற்றும் தலைவர்களுக்கும், அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றும் தலைமைகளுக்கும் தலையாய பொறுப்பாகும்” என்று அஜித் தோவல் பேசினார்.

பல்வேறு மதத் தலைவர்கள், அறிஞர்கள், தூதர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் அஜித் தோவல் இவ்வாறு பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இந்திய முஸ்லிம்கள் குறித்து பெருமிதம்

இந்தியாவின் ஒருமைப்பாடு குறித்தும், இந்தியாவில் வாழும் முஸ்லிம் சமூகத்தினர் பற்றியும் அல்-இஷா பாராட்டி பேசினார்.

“தாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பற்றியும் இந்திய முஸ்லிம்கள் பெருமிதம் கொள்கின்றனர்’ என்று அல் – இஷா கூறினார்.

Previous Story

ஜாமியுல் அஸ்ஹரில் ஒரு வரலாற்றுப் பதிவு

Next Story

கருத்தடை டாக்டர் சாபி சிஹாப்தீன்!