வாராந்த அரசியல்

நஜீப்

வாக்குக்கு மாலை

அண்மையில் ஒரு சுவையான சம்பவம் நடந்திருக்கின்றது. ஆளும் தரப்பு வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தற்காக பொத்துவிலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு மக்கள் ஒன்று கூடி மாலை போட்டு வரவேற்பளித்திருக்கின்றார்கள். இப்படி ஒரு சம்பவம் இந்த வரவு செலவுத் திட்ட விவகாரத்தில் நாட்டில் எங்கு மே நடக்கவில்லை. அப்படி இருக்க இந்த மாலை சூடும் விழாவை நடத்தியவர்களும் அதற்கு வாக்களித்தவரும் இன்று மக்கள் படும் துன்பங்களில் மகிழ்வடைகின்றார்கள் என்றுதான் நாம் பார்க்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் தனித்துவ அரசியல் எந்தளவுக்குக் கேவலப்பட்டிருக்கின்றது என்பது இதிலிருந்து புலப்படுகின்றது. மு.காவும். இப்போது வாக்களித்தவர்களைக் கட்சியில் இருந்து வெளியேற்றி இருப்பதாக நாடகமொன்றை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றது.

நிர்வாணப் போட்டி

நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்புக்குள் கடும் மோதல்கள் நடந்து கொண்டிருந்தாலும் வாக்கெடுப்பு என்று வந்துவிட்டால் அடம்பன் கொடிபோல் ஓரணியில் திறன்டு நிற்கின்றார்கள். முன்னாள் ஜனாதிபதி மைத்திரி தொடர்பாக ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்தவும் ரோஹித்த அபேகுனவர்தனாவும் மிகவும் கீழ்தரமாக சபையில் பேசி இருக்கின்றார்கள். அவர்கள் நாம் மைத்திரியின் ஆடைகளை களைந்து அவரை நிர்வாணமாக்கி இருக்கின்றோம். அவர் ஒரு மோசடிக்காரன் இருநூறு முன்னூறு வாகனங்களை பதவிக் காலத்தில் பாவித்து வந்திருக்கின்றார் என்றெல்லம் அந்தக் கதைகள் தொடர்கின்றன. இதற்கு மைத்திரி பதிலளித்து சவால் விட்டிருக்கின்றார். நமக்கும் பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆடைகளைக் களையவும் தெரியும். கண்ணாடி வீட்டில் இருந்து கல்லெறிய வேண்டம் என்று மொட்டுக்காரர்களை எச்சரித்திருக்கின்றார் சு.கட்சி செயலாளர் தயாசிரி.

ஹர்த்தால் நினைவு

1953ம் ஆண்டு இந்த நாட்டில் 25 சதமாக இருந்த ஒரு கொத்து அரசி 75 சதமாக மூன்று மடங்கு உயர்வடைந்ததால் மக்கள் ஹர்த்தால் ஒன்றை நடத்தி இருக்கின்றார்கள். அப்போது பதவியில் இருந்த டட்லி அமைச்சர்கள் அனைவரும் நாட்டிலிருந்து தப்பித்து கடலில் இருந்த கப்பலில் போய் ஏறிக் கொண்டு அமைச்சரவைக் கூட்டங்களை நடத்தி இருக்கின்றார்கள். அண்மையில் கண்டியில் நடந்த ஒரு வைபவத்தில் முன்னாள் ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் லால் காந்த இதனை நினைவுபடுத்தி இருக்கின்றார். எனவே தேர்தல்கள் நடந்துதான் ஆட்சிகள் மாற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது இப்படியும் மக்கள் நினைத்தால் ஆட்சியாளர்களை விரட்டியடிக்க முடியும் என்று அவர் எச்சரித்திருக்கின்றார். இப்போது அதற்கும் மேல் விலையேற்றங்கள் நடந்து கொண்டு செல்கின்றது. இதே போன்ற ஒரு கருத்தை கடந்த வாரம் விக்கடர் ஐவன் சொல்லி இருந்ததையும் நாம் பதிந்திருந்தோம்.

யாப்பும் ரிவசாகும்

தற்போது அரசியல் யாப்பொன்றை தனக்கு விசுவாசமானவர்களை வைத்து ஜனாதிபதியும் அவருக்கு நெருக்கமானவர்களும் வடிவமைத்து வருகின்றார்கள். அது பற்றிய விமர்சனங்கள் ஏற்கெனவே துவங்கி இருக்கின்றது. 1972ல் ஸ்ரீமா, மற்றும் 1978ல் ஜே.ஆர் போன்றவர்கள் நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைத்தே யாப்பு மாற்றங்களைச் செய்து வந்தார்கள். அந்த நடைமுறைக்கு மாற்றமாக இது தற்போது நடந்து கொண்டு செல்கின்றது. எனவே அது சபைக்கு வரும் போது அதனையும் இந்த அரசாங்கம் ரிவஸ் பண்ணிக் கொள்ள வேண்டிய நிலைதான் வரும் என்று எதிரணிக் கொரோடா லக்ஷ்மன் கிரியெல்ல சுட்டடிக் காட்டி இருக்கின்றார். ஆளும் தரப்பு இராஜங்க அமைச்சர் சுசில் பிரோம்ஜயந் கூட இதே பாணியில் அண்மையில் அரசை விமர்சனம் செய்திருந்தது நினைவில் இருக்கலாம்.

ஒதுக்கப்படும் நாடு

நூற்றி ஒன்பது நாடுகளை அழைத்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜனாநாயகம் பற்றிய கூட்டமொன்றை ஏற்ப்பாடு செய்திருக்கின்றார். அந்தக் கூட்டத்திற்கு இலங்கைக்கு அழைப்புக் கொடுப்பதும் தவிர்க்கப் பட்டிருக்கின்றது. இதற்கு இங்கு நடக்கின்ற ஜனாநாயக விரோத செயல்பாடுகள் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. ஆனால் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தற்போது நாட்டில் மனித உரிமைகள் மேன்பட்டிருக்கின்றது என்று கூறி வருகின்றார். அதே போன்று ஸ்கொட்லாந்து இலங்கை பொலிசுக்கு பயிற்ச்சி அளிப்பதை நிறுத்தி விட்டதாக அறிவித்திருக்கின்றது. இவை ஆரோக்கியமான நிலையாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்கள் நெருக்கடியை உணர்ந்து கொள்ள வேண்டும்.

Previous Story

அணுர அதிரடி பசில் பஜெட் நொருங்கியது!

Default thumbnail
Next Story

நூற்றாண்டுக்கான மக்கள் பேரவை நிலைப்பாடு