அணுர அதிரடி பசில் பஜெட் நொருங்கியது!

நஜீப் பின் கபூர்

தொடர் கதை போல நாமும் நாட்டு நடப்புக்களைச் சொல்லிக் கொண்டு வருகின்றோம். எங்கேயாவது நமக்கு ஒரு நல்ல செய்தியைச் சொல்லக் கிடைக்குமா என்று பார்த்தால் அப்படியான ஒரு தகவல் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் தெரியவில்லை. எனவே இந்த வாரமும் வழக்கம் போல நமது தேசத்துத் துயரங்களை பார்ப்போம். தேர்தல் காலங்களில் நாம் சொல்லி வந்த கணக்குகள் துல்லியமாக நிகழ்வது போல சமகால அரசியல் பற்றிய நமது கணிப்புக்களும் அப்படியே நடந்து கொண்டு வருவது நமது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும்.

வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைக்க மாட்டாது என்று நாம் சொல்லி இருந்தது அப்படியே நிரூபனமாகி இருக்கின்றது. ஆளும் தரப்பில் கிளர்ச்சி செய்கின்ற குட்டிக் கட்சிகள் வாக்கெடுப்பு என்று வரும் போது வழக்கமாக அரச தரப்புக்கு ஆதரவாக கை தூக்குவார்கள் என்றும் சொல்லி இருந்தோம் அதுவும் நடந்திருக்கின்றது. வேடிக்கை என்னவென்றால் விஜேதாச ராஜபக்ஸ போன்றவர்கள் கூட அரசை விமர்சித்து விட்டு இறுதியில் மாற்று வழியில்லாததால் நான் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தேன் என்று நியாயம் சொல்லி இருக்கின்றார்.

அவர் கருத்துப்படி பார்க்கின்ற போது நாடாளுமன்றத்தில் மாற்று வரவு செலவுத் திட்டம் ஒன்று வராத காரணத்தால் தான் அரசுக்கு ஆதரவளித்தேன் என்று அவர் சொல்ல வருகின்றார் என்று நாம் இதனை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். இது என்ன வேடிக்கையான கதை. இந்த நாட்டு மக்கள் பட்டிணி கிடந்து தெருக்களில் செத்து மடிந்தாலும் நமது அரசியல் தலைவர்கள் இப்படித்தான் நமக்குக் கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

அடுத்த வேடிக்கை என்னவென்றால் ஆளும் தரப்பிலுள்ள சிறிய கூட்டுக் கட்சிகள் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் என்ன செய்வது என்று கலந்துரையாடிய போது அங்கு அரசாங்கத்தை அவர்கள் துண்டு துண்டாகக் கிழித்துத் தள்ளி இருக்கின்றார்கள். பக்கத்தில் இருந்து பார்த்தவர்களுக்கு ஏதோ இவர்கள் அரசுக்கு எதிராகத்தான் நிச்சயம் வாக்குகளைப் பதிவு செய்வார்கள் என்பது போல இருந்தது.

வாக்கொடுப்பு என்று வந்த போது என்ன செய்தார்கள் என்பது இன்று அனைவருக்கும் தெரிந்த கதைதான். ஆனால் இவர்கள் அப்படித்தான் நடந்து கொள்வார்கள் என்ற செய்தியையும் நாம் எமது வாசகர்களுக்குச் சொல்லி இருந்தோம். அரசியல்வாதிகள் மற்றுமல்ல ஊடகங்களும் மக்களுக்கு இது விடயத்தில் தவறான கருத்துக்களையே விளைத்துக் கொண்டிருக்கின்றன. எனவேதான் அரசு நாளை கவிழ்ந்து விடும் அடுத்த மாதம் கவிழ்ந்து விடும் என்ற கதைகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. செல்வாக்கான எதிரணி அரசியல்வாதியான ராஜித சோனரத்தன திசம்பருக்குள் இந்த அரசு கவிழ்ந்து விடும் என்று சொல்லி இருந்தார். ஆனால் அதற்கான அறிகுறி எங்காவது புலப்படுகின்றனவா என்று நாம் மக்களை கேட்கின்றோம்.

அதே போன்று சஜித் அணியில் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற தனித்துவ முஸ்லிம் கட்சிகள் கூட்டம் போட்டு தமது அணியினர் வாக்கெடுப்பின் போது வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க இருப்பதாக ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தார்கள். மு.கா.வில் இருந்த மூன்று பேருக்கு சுகயீனம் காரணமாக அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று தலைவர் ஹக்கீமும் கதை சொல்லி இருந்தார். கூட்டத்துக்கு வந்திருந்த திருமலை தௌபீக் நடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின் போது தலைமறைவாகி இருந்தார்.

இதிலிருந்து நடப்பது என்ன என்பதனைப் புரிந்து கொள்ள முடியும். இந்த அரசு பதவியில் இருக்கும் வரை இவர்கள் இப்படித்தான் நாடகமாடுவார்கள். தேர்தல் என்று வந்தால் புதுக் கதை சொல்லிக் கொண்டு ஆட்சியாளர்கள் ஊருக்கு வருவார்கள். எனவே ஆட்சியாளர்கள் மக்;களை எப்படி ஏமாற்றிக் கொண்டு காலத்தை ஓட்டுகின்றார்களோ. அதேபோன்று தான் இந்த நாட்டில்லுள்ள சிறுபான்மை சமூகத் தலைமைகளும் அரசியல் பிழைப்பை செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனை அந்தச் சமூகங்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் அணுரகுமார தெரிவித்த கருத்துக்களால் முழு நாடாளுமன்ற அமர்வே அடங்கி ஒடுங்கி நின்றது ஆளும் தரப்பினர் எவரும் அவருக்கு குறுக்கே வரவில்லை. பள்ளி மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுப்பது போல அவர் தனது உரையைத் தொடர்ந்தார். அவரது அந்த உரையும் இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. ஒரு கட்டத்தில் புள்ளி விபரங்களுடன் தனது உரையைத் தொடர்ந்த அணுர முழு வரவு செலவுத் திட்டத்திலும் ராஜபக்ஸாக்களின் அமைச்சுக்களுக்கு ஆறுபத்தி நான்கு சதவீத (64) நிதி ஒதுக்குப்பட்டிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். அதன்படி முழு அமைச்சுக்களுக்கும் 50200 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. இதில் ராஜபக்ஸாக்களின் அமைச்சுக்களுக்கு மட்டும் 34700 மில்லியன்கள் அள்ளிக் கொட்டப்பட்டிருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டிய போது எவருமே அதனை மறுக்கவில்லை.

கடந்த வாரம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் பிழையான பல தகவல்கள் சொல்லப்பட்டிருப்பதையும் நாம் சுட்டிக காட்டி இருந்தோம். அதே போன்று சகல உள்ளுராட்சி வட்டாரங்களிலும் வெற்றி பெற்ற உறுப்பினர்களுக்கு கட்சி பேதமின்றி தான் நாற்பது இலட்சம் ரூபாய்களை (40) வழங்கி இருப்பதாக நிதி அமைச்சர் பசில் சுட்டிக் காட்டி இருந்தார். இது ஒரு பொய்யான தகவல் என்று நமக்குத் தெரிய வந்திருக்கின்றது. ஆளும் தரப்பில் வெற்றி பெற்றவர்களுக்கு அப்படி நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் தெற்கில் எதிரணியில் வெற்றி பெற்றவர்களுக்கு அந்தப் பணம் பலருக்குப் போய்ச் சேரவில்லை.

தமது அணியில் தோற்றுப் போனவர்களுடன் இணைந்து இந்த அபிவிருத்திப் பணிகளைச் செய்யும் படி கட்டாயப்படுத்தி அதன்படி அந்தக் காரியங்கள் தற்போது பலத்காரமாக அரங்கேரி வருகின்றது. இன்னும் சில இடங்களில் வெற்றி பெற்றவரை ஒதுக்கி விட்டு வட்டாரத்தில் தோற்றுப் போனவர் முழுப் பணத்தையும் தன்னிஷ்டப்படி கையான்டு வருவதும் தெரிய வருகின்றது. இது பற்றி எவரும் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பியதையும் நாம் பார்க்கவில்லை. ஆனால் ரணிலின் கையாட்களுக்கு இது கிடைத்திருக்கின்றது. சஜித் தரப்பை ஆதரித்தவர்களுக்குத்தான் ஆப்பு வைக்கப்பட்டிருக்கின்றது.

தமிழர் அரசியலை எடுத்துக் கொண்டாலும் அதிலும் பாரிய வித்தியாசங்கள் கிடையாது. கடந்த தேர்தல் காலங்களில் ஐயா சுமந்திரன் பேசிய கருத்துக்களை உன்னிப்பாக பார்த்ததால் அவர் ராஜபக்ஸாக்களுக்கு மறைமுகமாக ஆதரவாகவே பேசி வந்தார். பொதுத் தேர்தலலின் போது தனது வெற்றிக்காக அவர் அந்த விடயத்தில் அடக்கி வாசித்தார். தலைவர் சம்பந்தரின் உடல் பலயீனத்தால் அவர் இன்று தமிழ் மக்களின் ஹீரோவாக முயல்கின்றார். அவர் ஒரு சிறந்த சட்டவல்லுணர் என்ற விடயத்தில் எமக்கு உடன்பாடுகள் இருந்தாலும் தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பான விவகாரங்களில் அவர் ஒரு ஆரோக்கியமான தலைவர் அல்ல என்பதுதான் எமது நிலைப்பாடு.

ஜனாதிபதி தேர்தல் காலங்களில் சுமந்திரன் நடவடிக்கைகள் பற்றி நாம் பல தகவல்களைச் சொல்லி இருந்தோம். எனவேதான் மேற்கு நாடுகளுக்கு அவர் இன்று மேற் கொண்ட பயணங்களில் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கின்றன. அவருடன் இணைந்து கொண்டதில் ராஜமானிக்கம் சாணக்கியன் கூட இன்று விமர்சனங்களுக்கு இலக்காகி இருக்கின்றார் என்றுதான் தெரிகின்றது. நல்லாட்சிக் காலத்தில் தமிழர் பிரச்சினைகளுக்கு நிச்சயம் தீர்வு என்று சம்பந்தர் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்து வந்ததை எவரும் மறந்திருக்க வாய்ப்புக்கள் கிடையாது.

நாடு என்னதான் குட்டிச்சுவரானாலும் பருவாயில்லை சிறுபான்மை சமூகங்கள் விடயத்தில் தமது பிடியை பதவிக்கு வருகின்ற அரசுகள் மற்றும் கடும் போக்கு பேரினவாதிகள் தளர்தத்த் தயாராக இல்லை. எனவே இந்த நாட்டுக்கு அரசியல் ரீதியில் விடிவு இல்லை என்றுதான் நாம் நம்புகின்றோம். அந்த விவகாரங்கள் அப்படி இருக்க இப்போது ஆட்சியாளர்களின் பிடிவாதப் போக்குகளும். முன்னுக்குப் பின் முரனான கருத்துக்களும் தீர்மானங்களில் மேற்கொள்ளப்படுகின்ற தொடர் பல்டிகள் பற்றிய சில தகவல்களைப் பார்ப்போம்.

உர விவகாரத்தில் அரசு பல்டி யடித்திருக்கின்றது. இப்போது அதற்கு ஆளும் தரப்பினர் கூருகின்ற காரணம், மக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்கின்ற அரசு அதனால்தான் தனது முடிவை ஜனாதிபதி மாற்றிக் கொண்டிருக்கின்றார் என்று தற்போது நமக்குக் கதை சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆனால் ஜனாதிபதி ஸ்கொண்ட்லாந் மா நாட்டில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து சேதனப் பசளை விவகாரத்தில் உலகுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கப் போவதாக மார்தட்டி இருந்ததும், இது வரை உலகில் நூறு சதவீதம் சேதனப் பசளையில் விவசாயம் செய்கின்ற ஒரு நாடு எங்கும் இல்லை என்ற சொய்தியையும் நாம் முன்பு சொல்லி இருந்ததோம்.

இந்த விடயத்தில் விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற தோரணையில் ஆளும் தரப்பினர் காரணம் சொல்லிக் கொள்ள முடியும். எப்படியோ ஏழு மாதங்கள் வரை உயிர் வாழ்ந்த வர்த்தமானி அறிவித்தலை அரசு விலக்கிக் கொண்டிருக்கின்றது. இந்த உத்தரவை பிறப்பிப்பதற்கு சில நாட்களுக்கு முன்னரும் ஜனாதிபதி ஜீ.ஆர். சேதனைப் பசளை விவகாரத்தை முன் வைத்துத்தே தான் மக்களிடம் ஆறுபத்தி ஒன்பது இலட்சம் வாக்குகளைப் பெற்றதாகவும் நினைவுபடுத்தி இருந்த நிலையில் தான் இந்த உர விவகாரத்தில் ரிவஸ் நடந்திருக்கின்றது. ராஜாபக்ஸாக்களின் மூத்த சகோதரர் சமல்தான் ஜனாதிபதியின் இந்த மன மாற்றத்துக்கு அலுத்தம் கொடுத்திருந்தார் என்று சொல்லப்படுகின்றது.

அத்துடன் நாம் முன்பொருமுறை சொல்லி இருந்தது போல வருகின்ற மார்ச் அளவில் நாட்டில் பெரும் பஞ்சம் ஒன்றுக்கு இடமிருக்கின்றது என்ற விவகாரத்தை அதிகாரிகள் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தி இருந்ததால் அந்த அச்சமும் ஜனாதிபதியின் இந்த மன மாற்றத்துக்குக் மற்றுமொரு காரணம் என்றும் எடுத்துக் கொள்ள முடியும். தனிப்பட்ட ரீதியில் இது ஜனாதிபதிக்குப் பாரிய பின்னடைவு. சமூக ஊடகங்கள் இந்த விவகாரத்தை தற்போது எள்ளி நகையாடிக் கொண்டிருக்கின்றது. டொலர் பற்றாக் குறைதான் ஜனாதிபதியின் பழைய தீர்மானத்தின் அடிப்படை. உர இறக்குமதியை தனியாருக்கு வழங்கியதிலிருந்து இது மேலும் மேலும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த சேதனைப் பசளை விவகாரமாக இருந்தலும் இரசாயன உர விவகாரமாக இருந்தாலும் அரசியல் வாதிகளும் அவர்களுக்கு நெருக்கமான வர்த்தகர்களும் நன்றாக பிழைத்துக் கொள்கின்றார்கள். கொரோனா விவாகாரத்திலும் இந்தக் கொடூரம் நடந்தது. பிறந்தாலும் லாபம் இறந்தாலும் இலாபம்; என்ற நியதியில்தான் இப்போது அரசு ஓடிக் கொண்டிருக்கின்றது. எதிர்காலச் சந்ததியினர் நிலை நினைத்துப் பார்ப்பதற்கே பயமாக இருக்கின்றது.

டொலர் பற்றாக்குறை ஒரு பக்கம். பியகமையிலுள்ள காசு அச்சு இயந்திரத்தை மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் விரைவாக இயக்கிக் கொண்டு உள்நாட்டு பணத் தட்டுப்பாட்டை சமாளிக்க முனைகின்றார். இது பெரும் பொருளாதார பேரழிவுக்கே நாட்டை இட்டுச் செல்லும் என்பது அந்தத்துறையுடன் தொடர்புள்ளவர்களுக்குத் தெரியும். ஆனால் சாதாரன பொது மக்களே இதனைத் தாம் அனுபவிக்கும் போதுதான் புரிந்து கொள்வார்கள்.

அவ்வப்போது தேர்தல் என்று கதையைக் கட்டிவிட்டு உள்நாட்டில் மக்கள் கவனத்தை அரசு திசைதிருப்பி வருவதும், இந்தியாவை சமாளிப்பதும் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் தொடருமோ தெரியாது. அதே போன்று புதிய யாப்பு பற்றியும் இப்போது அடிக்கடி பேசப்படுகின்றது. நாடாளுமன்றத்துக்கு வெளியில்தான் இந்த யாப்பு வடிவமைக்கப்படுக்கின்ற காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் ஆளும் தரப்பிலுள்ள துறை பற்றி அறிந்தவர்கள் தமது கடும் எதிர்ப்புக்களை காட்டிக் கொண்டிருந்ததும் தெரிந்நதே.

நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு அரசை வாசு விமர்சித்திருந்தாhர். அப்படிக் கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தாலும் இந்த அரசு பதவியில் இருக்கும் வரை அவர்கள் ஒரு போதும் அரசிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பே கிடையாது இதனையும் நாம் நெடுநாளாக சொல்லி வருகின்றோம்.

Previous Story

போதையில் பிடிபட்ட ஞானசார தேரர்

Next Story

வாராந்த அரசியல்