காதலுக்காக சட்டவிரோதமாக எல்லையை தாண்டி, சிறையில் தவிக்கும் பாகிஸ்தான் பெண்!

-அபினவ் கோயல்-

அந்தச் சிறிய அறையில், மெத்தைகள் இல்லாமல் இரண்டு கட்டில்கள் கிடக்கின்றன. ஆறு கோப்பைகள், சில கிண்ணங்கள் சுவற்றில் அமைக்கப்பட்டுள்ள ஒரு ஷெல்ஃபில் நேர்த்தியாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றுடன் சில அத்தியாவசியப் பொருட்களும் இருக்கின்றன.

இந்த அறை பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதரின் முழு உலகமாக இருந்தது. இங்கு சீமா தனது நான்கு குழந்தைகளுடன் கடந்த ஒன்றரை மாதங்களாக சச்சின் மீனா என்பவருடன் வசித்து வந்தார்.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள இந்த அறை இப்போது காலியாக உள்ளது. அவசரத்தில், சீமா தனது அணிகலன்கள் சிலவற்றை விட்டுச் சென்றுள்ளார். இந்த அறை ஒரு சுவாரஸ்யமான காதல் குறித்த ஆச்சரியமான கதையைச் சொல்கிறது

பாகிஸ்தான் நாட்டு பெண்ணின் சுவாரஸ்யமான காதல் கதை

சீமா எப்போதும் முழு அலங்காரத்துடன் இருப்பார் என வீட்டு உரிமையாளர் தெரிவித்தார்

பப்ஜி கேம் விளையாடியபோது, ​​பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சீமா குலாம் ஹைதர், தனது இதயத்தை இந்தியாவில் வசிக்கும் சச்சின் மீனாவிடம் பறிகொடுத்துள்ளார்.இணையவழியில் சில விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்த ​​சீமா தனது நான்கு குழந்தைகளுடன் விசா இல்லாமல் எல்லை தாண்டி சச்சினிடம் வரும் அளவுக்கு அந்த இருவருக்கும் இடையே மலர்ந்த காதல் பின்னர் ஆழமான காதலாக மாறிவிட்டிருந்தது.

ஆனால் தற்போது இந்தக் காதலர்கள் இருவரும் காவல் துறை மற்றும் பாதுகாப்பு ஏஜென்சிகளின் வலையில் சிக்கி கைது செய்யப்பட்டுள்ளனர்.சீமா குலாம் ஹைதர் விசா இல்லாமல் இந்தியாவை எப்படி அடைந்தார் என்பது பெரும் கேள்வியாக மாறியுள்ளது.

சீமா பாகிஸ்தானில் எங்கு வாழ்ந்தார்? இவர்களுக்கு இடையில் எப்படி காதல் மலர்ந்தது? யாருக்கும் தெரியாமல் இருவரும் ஒரு வாடகை அறையில் ஒன்றரை மாத காலம் எப்படி வசித்தனர்?

பாகிஸ்தான் நாட்டு பெண்ணின் சுவாரஸ்யமான காதல் கதை

சீமா குலாம் ஹைதரை கைது செய்த போலீசார்

பப்ஜி விளையாட்டு மூலம் இருவருக்கும் இடையே தொடங்கிய உரையாடல்

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் வசித்து வந்த குலாம் ஹைதர் 2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் சீமாவை மணந்தார். இந்தத் திருமணத்தில் அவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தனர்.

இந்நிலையில், கராச்சியில் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த குலாம் ஹைதர், குழந்தைகளுடன் சீமாவை விட்டுவிட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு சௌதி அரேபியாவுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.

கணவர் வெளிநாடு சென்ற பின் குழந்தைகளுடன் வசித்து வந்த சீமா தனிமையில் இருந்ததால் பப்ஜி விளையாட்டில் ஆர்வம் செலுத்தத் தொடங்கினார்.

இதில் தொடர்ந்து அதிக நேரத்தைச் செலவிட்ட அவருக்கு இணையவழியில் பப்ஜி விளையாடியபோது உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வசித்து வந்த சச்சின் மீனாவுடன் தொடர்பு ஏற்பட்டது. இணையத்தில் ஏற்பட்ட இந்தச் சந்திப்பு இருவருக்கும் இடையே ஒரு நட்பை ஏற்படுத்தி, பின்னர் அது காதலாக மாறியது.

இதுகுறித்து சீமா கூறுகையில், “நான் ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று மணி நேரம் பப்ஜி விளையாடுவேன். இப்படி பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தபோது ஒருமுறை சச்சினை பற்றி அறிந்தேன்.”

இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பு எண்களைப் பரிமாறிக்கொண்டு தினமும் மணிக்கணக்கில் ஃபோனில் பேச ஆரம்பித்தனர். இப்படி சுமார் மூன்று ஆண்டுகளாக இருவரின் காதலும் ஒவ்வொரு நாளும் வளர்ந்துகொண்டிருந்தது. கடைசியில், இனி சச்சின் மீனாவுடன் தான் வாழவேண்டும் என்று முடிவெடுத்தார் சீமா குலாம் ஹைதர்.

பாகிஸ்தான் நாட்டு பெண்ணின் சுவாரஸ்யமான காதல் கதை

சீமா குலாம் ஹைதரும் சச்சின் மீனாவும் நொய்டாவில் ஒன்றரை மாத காலம் ஒன்றாக வசித்தனர்

சச்சின் மீனா – சீமா குலாம் ஹைதரின் முதல் நேரடி சந்திப்பு

இணையவழியிலேயே இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்த நிலையில், அவர்கள் நேரில் சந்தித்துக்கொள்ள முடிவெடுத்தனர். இதன் அடிப்படையில் ஒரு பெரும் முயற்சியாக நேபாள சுற்றுலா விசா பெற்ற சீமா குலாம் ஹைதர், ஷார்ஜா வழியாக காத்மாண்டு சென்றடைந்தார்.

இதுகுறித்து நொய்டாவில் கைது செய்யப்பட்ட பின், சச்சின் மீனா ஊடகங்களுக்கு அளித்த தகவலில், “அவர் (சீமா குலாம் ஹைதர்) நேபாளத்திற்கு வந்திருந்தார். மார்ச் 10 அன்று நாங்கள் இருவரும் நேபாளத்தில் சந்தித்தோம். அங்கு நாங்கள் சில நாட்கள் ஒன்றாகத் தங்கியிருந்தோம். பின்னர் சீமா குலாம் ஹைதர் மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டார்,” என்றார்.

காத்மாண்டுவில் உள்ள ஒரு விடுதியில் சச்சினுடன் ஏழு நாட்கள் தங்கியிருந்த பின்னர் சீமா குலாம் ஹைதர் பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விசா இல்லாமல் இந்தியாவில் நுழைந்த பாகிஸ்தான் பெண்

முதல் சந்திப்புக்குப் பிறகு, சீமா பாகிஸ்தானுக்கு திரும்பிச் சென்றார், ஆனால் அதன் பின் மேலும் சில முயற்சிகளை அவர் மேற்கொண்டார்.

இதன்மூலம் சீமா குலாம் ஹைதருக்கு சுமார் இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேபாள சுற்றுலா விசா கிடைத்தது. ஆனால் இந்த முறை அவருடன் நான்கு குழந்தைகளும் வந்தனர்.

ஷார்ஜாவில் இருந்து நேபாளம் வந்து அங்கிருந்து பஸ் பிடித்து அவர்கள் அனைவரும் டெல்லிக்கு வந்தனர். சீமா மற்றும் சச்சினிடம் காத்மாண்டு, பொக்ரா நகரங்களில் இருந்து டெல்லிக்கு பேருந்து மூலம் பயணம் செய்ததற்கான பயணச் சீட்டுகள் இருந்ததைக் கண்டுபிடித்த போலீசார் அவற்றை மீட்டுள்ளனர்.

கிரேட்டர் நொய்டாவின் காவல் துணை ஆணையர் சாத் மியான் கான் கூறுகையில், “சிந்து மாகாணத்தைச் சேர்ந்த சீமா கராச்சியில் வசித்து வந்தார். யூடியூப் வீடியோவை பார்த்து, பயணச் சீட்டைப் பெற்றுத் தரும் முகவரை அணுகி அவர் நேபாளத்துக்குப் பயணம் செய்திருக்கிறார். நேபாளத்தில் இருந்து பேருந்தில் பயணித்து சச்சினை சந்திக்க வந்துள்ளார்,” என்றார்.சாத் மியானின் கூற்றுப்படி, பின்னர் சச்சினுடன் வசிக்க சீமா முடிவெடுத்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இருந்த தனது வீட்டை பனிரெண்டு லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டு சீமா இந்தியாவுக்கு வந்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டு பெண்ணின் சுவாரஸ்யமான காதல் கதை

சீமா குலாம் ஹைதர் தனது நான்கு குழந்தைகள் மற்றும் சச்சின் மீனாவுடன் வாழ்ந்த அறை

உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள ரபுபுராவில் வசிப்பவர் சச்சின் மீனா. இந்த ஊரில், சீமாவையும் அவரது குழந்தைகளையும் தன்னுடன் வைத்துக்கொள்ள சச்சின் மீனா அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வைத்திருந்தார்.

சீமா வருவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, ரபுபுராவின் அம்பேத்கர் மொஹல்லாவில் உள்ள கிர்ஜேஷ் என்பவரை சச்சின் மீனா தொடர்பு கொண்டு தனக்கு ஒரு அறை வாடகைக்குத் தேவை என்று தெரிவித்தார்.

கிர்ஜேஷ் வீட்டில் ஏராளமான வாடகைதாரர்கள் வசிக்கின்றனர். இரண்டு மாடிகள் கொண்ட இந்த வீட்டின் முதல் தளத்தில் வாடகைக்கு இருப்பவர்களுக்கு ஆறு அறைகள் உள்ளன. இவற்றில் ஒன்றை சச்சினுக்கு மாதம் ரூ.2,500 வாடகையில் கிர்ஜேஷ் கொடுத்தார்.

பாகிஸ்தான் நாட்டு பெண்ணின் சுவாரஸ்யமான காதல் கதை

சச்சின் மீனா, சீமா குலாம் ஹைதருடன் கிர்ஜேஷ் குமாரின் வீட்டில் உள்ள வாடகை அறையில் வசித்து வந்தார்

இதுகுறித்து கிர்ஜேஷ் பேசுகையில், “எங்கள் வீட்டில் ஒரு அறை காலியாக இருந்தது. அதனால் நாங்கள் அதைக் கொடுத்தோம். மே 13ஆம் தேதிக்கு முன்னர், நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு முன்பு அந்த அறையைப் பற்றி பேசிவிட்டு சச்சின் சென்றார்.

நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்படும் திருமணம் பற்றிக் கூறிய அவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளை அறையில் தங்க வைப்பதாகக் கூறினார். அந்தப் பெண் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அவரது ஊரான ஷிகர்பூரில் வசிப்பவர் என்றும், சந்தேகப்பட ஒன்றுமில்லை என்றும் சச்சின் கூறியிருந்தார்,” என்றார்.

அந்த அறையை அவர்களுக்கு ஒதுக்கிய பிறகு சச்சின் மீனா, சீமா மற்றும் அவரது நான்கு குழந்தைகள் அங்கே வசிக்கத் தொடங்கினர். அப்பகுதியில் உள்ள மளிகைக் கடை ஒன்றில் சுமார் ஆறாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு சச்சின் மீனா வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார்.

இதுகுறித்து கிர்ஜேஷ் பேசுகையில், “சீமாவுக்கு மூன்று பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை இருந்தனர். மகன் தான் அனைவரையும்விட மூத்தவன். அவனுக்கு 8 வயதிருக்கும். கடைசி பெண் குழந்தைக்கு இரண்டு வயது இருக்கும்.

இந்துவாக வாழ்ந்த சீமா குலாம் ஹைதர்

பாகிஸ்தான் நாட்டு பெண்ணின் சுவாரஸ்யமான காதல் கதை

அந்த வீட்டின் உரிமையாளரான கிர்ஜேஷ் மட்டுமல்லாமல், அந்த வீட்டில் வசித்த யாருக்கும் சீமா குலாம் ஹைதரின் மதம் மற்றும் குடியுரிமை குறித்து ஒருபோதும் எந்த சந்தேகமும் எழவில்லை. இதற்கு அவருடைய வாழ்க்கை முறையே காரணமாக இருந்தது.

கிர்ஜேஷின் மனைவி ராஜ்குமாரி பேசுகையில், ​​“நாங்கள் அவருடன் அவ்வப்போது சிறிது நேரம் பேசிக்கொண்டிருப்போம். ஆனால் அப்போது எந்த சந்தேகமும் எங்களில் யாருக்கும் ஏற்படவில்லை.

போலீஸ் வந்த பின்னர் தான் எங்களுக்கு உண்மை தெரிய வந்தது. அவர் எப்போதுமே ஒரு முழு அலங்காரத்துடன் தான் இருப்பார். சில நேரங்களில் நெற்றியில் அடர்ந்த வண்ணத்துடன் கூடிய குங்குமம் பூசியிருப்பார்,” என்றார்.

இந்த ஒன்றரை மாதத்தில்தான் ஈத் பெருநாள் வந்திருக்கிறது. ஆனால் சீமா குலாம் ஹைதர் மக்கள் சந்தேகப்படும்படி எதையும் செய்யவில்லை.அவர் மேலும் பேசியபோது, “ஈத் பெருநாள் அன்று அவர் நாங்கள் சந்தேகிக்கக்கூடிய எதையும் செய்யவில்லை. அன்றைக்கு சாதாரணமாக பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் ரொட்டிகளை மட்டுமே அவர் சமைத்தார். எந்தவித அசைவ உணவையும் அவர் சமைக்கவில்லை,” என்றார்.

ராஜகுமாரியின் மாமியார் பகவதி பேசியபோது, “அவர் காலில் வளையல், பிண்டி போன்றவற்றை அணிந்துகொண்டு ஒரு இந்து பெண்ணைப் போலவே வாழ்ந்தார். கடந்த இரண்டு நாட்களாக, அவர் சேலையும் அணிந்திருந்தார். ஆனால் பெரும்பாலும் சூட்-சல்வார் மட்டும் தான் அணிந்திருந்தார். அவருடைய குழந்தைகளும் அவரும் பார்க்க மிகவும் அழகாக இருந்தார்கள்,” என்றார்.

வீட்டு உரிமையாளர் கிர்ஜேஷ் பேசுகையில், சில நேரங்களில் சீமாவும் சச்சினும் பீடி புகைப்பதற்காக சண்டையிட்டுக் கொள்வார்கள். சீமாவுக்கு பீடி புகைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது. இது சச்சினுக்கு பிடிக்கவில்லை என்று கூறுகிறார்.

இதுபோல் இரண்டு முறை அவர்கள் சண்டையிட்டுக் கொண்டதற்காக அறையைக் காலி செய்யுமாறு சச்சினிடம் கிர்ஜேஷ் கூறியுள்ளார்.

சச்சின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே தெரிந்த ரகசியம்

பாகிஸ்தான் நாட்டு பெண்ணின் சுவாரஸ்யமான காதல் கதை

சச்சின் மீனாவை பலமுறை அறிவுறுத்தியும் அவர் அதை ஏற்கவில்லை என்கிறார், அவரது பெரியப்பா பீர்பால்

சீமாவின் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை என்பதற்கு சச்சின் மீனாவின் குடும்பமும் ஒரு காரணமாக அமைந்தது.

வீட்டு உரிமையாளர் கிர்ஜேஷ் பேசியபோது, ​​“அறையை வாடகைக்கு எடுப்பதற்கு முன்பு சச்சின் தனது ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு நகலைக் கொடுத்திருந்தார். மேலும், அவர் இங்கு வசிக்கத் தொடங்கிய பின் சச்சினை சந்திக்க அவரது தாயும் தந்தையும் இங்கு வந்தனர். சச்சினின் திருமணமான சகோதரியும் சீமாவுக்கு புடவை ஒன்றைக் கொண்டு வந்து கொடுத்தார். குடும்ப உறுப்பினர்களும் சந்திக்க வந்ததால் யாருக்கும் எந்த சந்தேகமும் எழவில்லை,” என்றார்.

சச்சினின் சொந்த வீடும் ரபுபுரா நகரில் உள்ளது. தோட்டத் தொழிலாளியாக வேலை செய்யும் அவரது தந்தை, வாடகை அறையிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் இரண்டு அறைகள் கொண்ட வீட்டில் வசிக்கிறார்.

சச்சினின் பெரியப்பா பீர்பாலிடம் பேசியபோது, தனது சகோதரர் நேத்ரபாலின் முதல் மனைவி இறந்த பிறகு மறுமணம் செய்துகொண்டதாகவும், அவரது முதல் திருமணத்தில் அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தனர் என்றும், அதில் சச்சின் இரண்டாவதாகப் பிறந்தவர் என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்போது சச்சினின் தந்தையுடன் வசிக்கும் இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.அவரது பெரியப்பா பீர்பாலுக்கு சச்சினின் காதல் கதை நீண்ட காலத்திற்கு முன்பே தெரிநிதிருக்கிறது. அந்த காதலைக் கைவிட அவர் வலியுறுத்தியபோதும், சச்சின் கேட்கவில்லை.

இதுகுறித்து பீர்பால் பேசுகையில், “இது ஆறு-ஏழு மாதங்கள் பழைமையான விஷயம். வீட்டு மாடியில் சச்சின் மணிக்கணக்கில் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். ஒருமுறை அவர் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்த நிலையில், யாரிடம் பேசினார் என்பதைக் கண்டுபிடித்தேன். அதன் பின் அவர் ஒரு சில நாட்களுக்கு ஃபோனில் பேசவில்லை.”

“சில நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை அதேபோல் அவர் பேசியதைக் கண்டுபிடித்தேன். பின்னர் சச்சினை கண்டித்தபோது அவர் பப்ஜி விளையாடியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

நான் வற்புறுத்திக் கேட்டபோது, பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவர் இந்தியா வர விரும்புகிறார் என்றும் தெரிவித்தார். சச்சினுக்கு பதில் அளித்த நான், ‘நாம் ஏழைகள், இது நமக்கு ஒத்துவராது. எனவே இதுபோன்ற பழக்கத்திலிருந்து விடுபடுவதே நல்லது’ என அறிவுரை வழங்கினேன். அவரிடம் நான் கைகளைக் கூப்பி மன்றாடியபோதும் அவர் அதை ஏற்கவில்லை,” என்றார்.

பாகிஸ்தான் நாட்டு பெண்ணின் சுவாரஸ்யமான காதல் கதை

சீமாவும், சச்சினும் ஜுலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக காவல் துணை ஆணையர் சாத் மியான் கான் தெரிவித்துள்ளார்

ஜூலை 1ஆம் தேதி சீமா குலாம் ஹைதரும், சச்சின் மீனாவும் தங்களுடைய பொருட்களைக் கட்டிக்கொண்டு வாடகை அறையை விட்டு அவசரமாக வெளியேறினர்.

போலீஸ் அவரைப் பின்தொடர்கிறது என்ற தகவல் அவருக்குக் கிடைத்திருக்க வேண்டும். ரகசியத் தகவலின் அடிப்படையில், ஜூலை 4ஆம் தேதி ஹரியானா மாநிலம் பல்லப்கரில் இருந்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் சச்சினின் தந்தை நேத்ரபால் மீனாவும் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து இரண்டு வீடியோ கேசட்டுகள், நான்கு மொபைல் ஃபோன்கள், ஒரு சிம் கார்டு, ஒரு உடைந்த மொபைல் ஃபோன், ஒரு குடும்பப் பதிவுச் சான்றிதழ், நான்கு பிறப்புச் சான்றிதழ்கள், ஒரு திருமணப் பதிவுச் சான்றிதழ், மூன்று ஆதார் அட்டைகள், ஒரு பாகிஸ்தான் அரசு ஆவணம், ஆறு பாஸ்போர்ட்கள், பஸ் டிக்கெட், தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சச்சின் மீனா, அவரது தந்தை நேத்ரபால் மற்றும் சீமா குலாம் ஹைதர் ஆகியோர் மீது வெளிநாட்டினர் சட்டம் 14, 120பி மற்றும் பாஸ்போர்ட் (இந்தியாவுக்குள் நுழைதல்) சட்டம் 1920 ஆகியவற்றின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சீமாவும், சச்சினும் ஒன்றாக இருப்பதற்காக எல்லைகளைத் தாண்டியது மட்டுமல்லாமல், அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களையும் ஏமாற்றவும் முடிந்திருக்கிறது.

சச்சின் மற்றும் சீமா இருவரும் இப்போது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உள்ளனர். இன்னும் அவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. ஏனெனில் இருவரும் ஒருவரையொருவர் மிகவும் விரும்புவதாகத் தெரிவித்துள்ளதுடன், அவர்களுக்குத் திருமணம் செய்து வைக்குமாறு இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீமாவின் கணவர் என்ன கூறுகிறார்?

பாகிஸ்தான் நாட்டு பெண்ணின் சுவாரஸ்யமான காதல் கதை

தனத மனைவி இன்னொருவரைக் காதலித்தது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என குலாம் ஹைதர் கூறுகிறார்

சீமாவின் கணவர் குலாம் ஹைதர் ஜக்ரானி சௌதி அரேபியாவில் கூலி வேலை செய்துவருகிறார்.பிபிசியிடம் பேசிய குலாம் ஹைதர் ஜக்ரானி, கடந்த 2014இல் சீமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும், அப்போது சீமாவின் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு இருந்ததாகவும் கூறுகிறார்.

“குழந்தைகள் பிறந்த பிறகு எனக்குப் போதிய வருவாய் கிடைக்காததால் நான் சௌதி அரேபியாவுக்கு வந்துவிட்டேன். இருப்பினும் தொடர்ந்து எனது மனைவியிடம் பேசிக்கொண்டுதான் இருந்தேன்.”

“அவரை நான் முழுமையாக நம்பினேன். அவருக்குத் தேவையான பணமும் அனுப்பி வைத்தேன். ஆனால் அவர் இப்படி நடந்துகொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை.”

மே மாதம் 9ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்ட பிறகு அந்நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக இணையதளம் முடக்கப்பட்டதால் அவருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

“எனது மனைவியுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பின் அவரது சகோதரரிடம் பேசினேன். எனது வீட்டுக்குச் சென்று பார்த்த அவர், சீமா தனது வீட்டை விற்றுவிட்டு, நகைகள் மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரில் ஒரு வீடு வாங்கிவிட்டதாக அங்குள்ள நபர்களிடம் அவர் கூறியிருந்ததைக் கண்டுபிடித்தார்.”

பின்னர் தெரிந்தவர்களிடம் குலாம் ஹைதர் விசாரித்தபோது, சீமா துபாய் சென்றதாகவும், நேபாளம் சென்றதாகவும் அவருக்கு தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, சீமா குலாம் ஹைதர், சச்சின் மீனா மற்றும் அவரது தந்தை நேத்ரபால் மீனா ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை நீதிமன்ற காவலில் சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

Previous Story

இலங்கைக்கு புதிய தலையிடி :ஏன்?

Next Story

புதினை சந்தித்த 8 வயது சிறுமி - ஒரு சுவாரஸ்யம்