வாராந்த அரசியல்

-நஜீப்-

ஜனாதிபதிக்கு சீற்றம்

தற்போது அரசாங்கத்துக்கு விவசாயத்துறையில் ஏற்பட்டு வருகின்ற நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி விவசாயத்துக்குப் பொறுப்பான அமைச்சரான மஹிந்தானந்தாவுக்கு இதற்கான பொறுப்புக்களை ஏற்றுக் கொள்ளுமாறு கடும் தொனியில் பேசி குற்றம் சாட்டி இருப்பதாக நமக்குத் தெரிய வருகின்றது. தான் இராணுவ அதிகாரியான சமோத பெரேராவை செயலாளராக நியமித்துக் காரியங்களை முன்னெடுத்த போது அந்த மனிதனுடன் தனக்கு பணியாற்ற முடியாது என்று கூறி அவரை அந்த செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் விரட்டியத்ததால் தான் இந்த நிலை வந்து, தான் விவசாயிகளிடத்தில் இந்தளவு எதிர்ப்பை சம்பாதிக்க வந்தது என்றும் ஜனாதிபதி அமைச்சரைத் திட்டி இருக்கின்றார் என்றும் அந்த வட்டாரங்கள் மேலும் தகவல் தருகின்றது. தனக்கு பிழையான தகவல்களை வழங்கியதால்தான் இந்த நெருக்கடி நிலை என்றும் ஜனாதிபதி தற்போது அங்கலாய்ப்பதாகவும் சொல்லப்படுகின்றது.

ஆசான்களுக்கு வெற்றி

தற்போது தங்களது சம்பள முரன்பாடுகளைத் தீர்க்க ஆசிரியர் சமூகத்தினர் தொழிற் சங்கப் போராட்டங்களை நடாத்திக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது இருநூறுக்கும் குறைவான மாணவர்கள் உள்ள பாடசாலைகளை கடந்த 21ம் திகதி திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது. நாம் அன்றைய தினம் அரசாங்கத்தின் கட்டளைக்கு அடிபணிந்து பாடசாலைக்கு வரப்போவதில்லை என்று தொழிற் சங்கங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் அரசாங்கம் எப்படியும் பாடசாலைகளைத் திறக்கின்ற விடயத்தில் உறுதியாக இருந்தது. கடமைக்கு வராதவர்களுக்கு இந்த மாதம் சம்ளம் கூட இல்லை என்ற சில ஆளுநர்கள் அறிவித்தும் இருந்தனர். அரசு பொலிஸ், இரானும், உளவுத்துறை, அடியாட்கள், தமது அரசியல் வாதிகள் என்று வைத்து மிரட்டிப் பார்த்த போதும் அந்த முயற்ச்சியில் அரசு படுதோல்வி அடைந்திருக்கின்றது.

தேர்தல் வந்தால் ஆபத்து

மாகாணசபைத் தேர்தல் நடத்துவது பற்றி நிதி அமைச்சர் பசில் அறிவிப்புச் செய்திருக்கின்றார். அவர் 2022 மார்சுக்குள் தேர்தல் என்று சொல்லி இருந்தார். ஆனால் ஆளும் தரப்பிலுள்ளவர்கள் இந்த நேரத்தில் தேர்தலை வைப்பது தமக்கு மிகவும் ஆபத்தாக இருக்கும். பொது மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றார்கள். எனவே தேர்தல் வைக்கின்ற திட்டத்தைக் கைவிடுங்கள் என்று ராஜக்களிடத்தில் பல ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றார்கள். மக்களுக்கு ஏதும் சலுகைகளை வழங்கி அரசுக்கு சாதகமான ஒரு நிலை வரும் வரை தேர்தலை ஒத்திப் போட வேண்டும் என்பது அவர்கள் நிலைப்பாடாக இருக்கின்றது. ஆனால் எதிர் வருகின்ற காலம் தற்போதய நிலையை விட மிக மோசமாக அமைய இருக்கின்றது என்பதை நிதி அமைச்சர் பசில் தெரிந்துதான் வைத்திருக்கின்றார்.

பேராயரே நீதி வராது!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பேராயர் மெல்கம் பாதிக்கப்பட்ட சமூகத்தினருக்கு நீதி கிடைக்கும் என்று இன்னும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார். இந்த அரசாங்கம் இருக்கின்ற வரை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு போதும் நீதி கிடைக்க வாய்ப்பே கிடையாது என்பதுதான் எமது கருத்து. ஞானத்தார் கூற்றுப்படி சூத்திரதாரி முஸ்லிம்களின் அல்லாஹ் என்று அவர் கண்டு பிடித்திருக்கின்றார். எனவே நீங்கள் எப்படி இதற்குப் போய் அரசாங்கத்திடம் நியாயம் கேட்க முடியும். இவ்வாறான பதில்கள் வழங்கப்படுகின்ற ஒரு நாட்டில் நீங்கள் எப்படி மனிதர்களிடத்தில் போய் நீதியை எதிர்பார்க்க முடியும். எனவே இந்த மனிதப் படுகொலைக்கு நீங்கள் உங்கள் கடவுளிடம்தான் நியாயம் கேட்க வேண்டி இருக்கின்றது. அரசாங்கத்திடம் நியாயம் கேட்டு தொடர்ந்தும் உங்கள் சமூகத்தை ஏமாற்றுவதைத் தவிர்த்து நீதிக்கு நீங்கள் வேறு இடத்தை நாடுவதுதான் நல்லது.

தலைமைத்துவ போட்டி

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் கடுமையான தலைமைத்துவப் போட்டியொன்று தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க முடியாது. அது இன்று பகிரங்கமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றது. கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தான் தலைமைத்துவத்துக்கு வந்து விடுவேன் என்று சிலர் அஞ்சுவதாகவும் சுட்டிக் காட்டி இருக்கின்றார். சுமச்திரன் தலைவராகின்றாறோ இல்லையோ கூட்டமைப்புக்கு துடிப்பான தலைமைத்துவம் ஒன்று காலத்தின் தேவையாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது. அத்துடன் கூட்டமைப்புக்குள் வடக்கு முதலமைச்சர் குறித்தும் முரன்பாடான கருத்துக்கள் இருந்து வருவதையும் பார்க்க முடிகின்றது. இதற்கிடையில் கூட்டுத் தலைமைத்தும் என்ற ஒரு கருத்தும் தற்போது அங்கு உச்சரிக்கப்பட்டு வருகின்றது.

Previous Story

அரசுக்குள் வெடிப்பு

Next Story

வாராந்த அரசியல்