உலகக் கோப்பை மோதி மைதானத்தில்  இந்தியா – பாகிஸ்தான் மோதும்!

இந்தியாவில் இந்தாண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவை சென்னையில் எதிர்கொள்கிறது. ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 15-ம் தேதி ஆமதாபாத்தில் நடைபெறுகிறது. அதே மைதானத்தில் நவம்பர் 19-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெறுகிறது.

ரோஹித் ஷர்மா

ஐ.பி.எல். திருவிழா, டெஸ்ட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி ஆகியவற்றை கண்டு குதூகலித்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த விருந்து தயாராகியுள்ளது. இந்தாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறும், 13-வது ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கமிட்டி வெளியிட்டுள்ளது.

இந்த உலகக்கோப்பைத் தொடர் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை 46 நாட்கள் நடைபெறுகிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, கொல்கத்தா, மும்பை, ஆமதாபாத் உள்பட இந்தியாவின் 10 நகரங்களில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இங்கிலாந்து உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன.

உலகக்கோப்பை கிரிக்கெட் சூப்பர் லீக் அடிப்படையில் 8 அணிகள் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்ட நிலையில் எஞ்சிய 2 அணிகள் எவை என்பதை தீர்மானிக்கும் தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஜிம்பாப்வேயில் நடைபெறும் தகுதிச் சுற்றின் முடிவில் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் உலகக்கோப்பைக்கு முன்னேறும்.

உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு
உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் நெதர்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ் ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் லோகன் வான் பீக் பந்தை விளாசுகிறார்

விண்வெளியில் உலகக்கோப்பை அறிமுகம்

உலகக்கோப்பையின் முதல் சுற்று ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் அடிப்படையில் நடைபெறும். அதாவது, தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறும்.

4 அணிகள் முன்னேறும் நாக் அவுட் சுற்று என்பது அரையிறுதிப் போட்டியாகும். அதில் தோற்கும் அணி தொடரில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். அதில் வெல்லும் அணி ஒருநாள் போட்டிகளுக்கான உலக சாம்பியனாக அரியணை ஏறும்.

முதன் முறையாக, இந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வெற்றி கோப்பை விண்வெளியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அக்.15ம் தேதி இந்தியா vs பாகிஸ்தான்

ஐ.சி.சி. வெளியிட்டுள்ள உலகக்கோப்பை போட்டி அட்டவணைப்படி, தொடரின் முதல் போட்டியும், இறுதிப்போட்டியும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில்தான் நடைபெறுகின்றன. அங்கே அக்டோபர் 5-ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தியா தனது முதல் போட்டியில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. அக்டோபர் 8-ம் தேதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கிறது.

அக்டோபர் 11-ம் தேதி இந்தியா தனது இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை டெல்லியில் எதிர்கொள்கிறது.

இந்தியா மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதும் ஆட்டம் அக்டோபர் 15-ம் தேதி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ.5ம் தேதி இந்தியா vs தென் ஆப்ரிக்கா

3 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அக்டோபர் 19-ம் தேதி இந்தியா தனது அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடக்கிறது.

அக்டோபர் 22-ம் தேதி இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் ஆட்டம் தரம்சாலாவில் நடைபெறும். அக்டோபர் 29-ம் இந்திய அணி நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் எதிர்கொள்கிறது.

ஜிம்பாப்வேயில் நடைபெறும் தகுதிச்சுற்றில் இரண்டாம் இடம் பிடிக்கும் அணியுடன் இந்திய அணி நவம்பர் 2-ம் தேதி மும்பையில் பலப்பரீட்சை நடத்தும். அதே தகுதிச் சுற்றில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் நவம்பர் 11ம் தேதி பெங்களூருவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி மோதும்.

நவம்பர் 5-ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியை இந்தியா எதிர்கொள்ளும்.

புனே நகரில் நவம்பர் 12-ம் தேதி ஆஸ்திரேலியா – வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டத்துடன் லீக் சுற்று முடிவுக்கு வரும்.

நவ.19-ம் தேதி இறுதிப்போட்டி

லீக் சுற்றில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

நவம்பர் 15-ம் தேதி மும்பயில் முதலாவது அரையிறுதி ஆட்டம் நடைபெறும்.

நவம்பர் 16-ம் தேதி கொல்கத்தாவில் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடைபெறும்

அடுத்த 2 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அடுத்த உலக சாம்யின் யார் என்பதைத் தீர்மானிப்பதற்கான இறுதிப்போட்டி நடைபெறும். உலகக்கோப்பை தொடங்கும் ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானத்திலேயே இறுதிப்போட்டியும் நடைபெறும். அதில் வெற்றி பெறும் அணி ஒருநாள் உலக சாம்பியனாக மகுடம் சூடும்.

Previous Story

ரணிலைப் பாதுகாப்போம் பசில்!

Next Story

ரஷ்யாவில் சகோதர படுகொலைகள் நடக்க வேண்டுமென்றே எதிரிகள் விரும்புகின்றனர்: அதிபர் புதின்