இந்தியா முஸ்லிம்கள் உரிமை குறித்து பேசிய ஒபாமா; நிர்மலா சீதாராமன் எழுப்பிய கேள்வி

பிரதமர் நரேந்திர மோதி அரசுமுறை பயணமாக அமெரிக்க சென்றிருந்தபோது, முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்த கருத்துக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர், அதிபர் பைடனுடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமை குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

அவரது கேள்விக்கு இந்தியாவில் பாகுபாடு என்பதற்கே இடமில்லை என்று மோதி பதிலளித்தார். இதற்கிடையே, பிரதமர் அமெரிக்காவில் இருக்கும்போது அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா சி.என்.என் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தபோது இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையின் உரிமைகள் பற்றி விமர்சிக்கும் வகையில் பேசினார்.

obama and sitharaman

ஒபாமாவின் கருத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வினையாற்றியுள்ளார்.

“ஒபாமா ஆட்சியில் இருக்கும்போது முஸ்லிம்கள் அதிகமாக வாழும் 6 நாடுகள் மீது அமெரிக்கா குண்டு வீசியுள்ளது. அப்படியிருக்கும்போது, மக்கள் அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டை உண்மையென்று நம்புவார்களா?” என்று கேள்வியெழுப்பியுள்ளார் நிர்மலா சீதாராமன்.

பிரதமர் நரேந்திர மோதி ஜூன் 20ஆம் தேதியன்று தனது முதல் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றபோது, பைடன் அரசு அவரை மிகச் சிறப்பாகக் கவனிக்க வேண்டும் என்பதில் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டன.

ஆனால், இதற்கிடையே மோதி அரசு பெருமான்மை அரசியல் செய்வதாக ஒபாமா முன்வைத்த கருத்து மீதான விவாதம் சூடுபிடித்தது.

பிரதமர் மோதி அமெரிக்கா சென்றதுமே, அந்நாட்டின் பல எம்.பிக்கள் மற்றும் மனித உரிமை குழுக்கள் இந்தியாவில் மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் தொடர்பான கேள்விகளை எழுப்பத் தொடங்கினர். ஆனால், ஒபாமாவின் கருத்துக்குப் பிறகு, இந்தக் கேள்விகள் மீது அதிக கவனம் குவியத் தொடங்கியது.

இதற்குப் பிறகு, கடந்த வாரம் வெள்ளை மாளிகையில் அதிபர் பைடனை பிரதமர் சந்தித்த பிறகு, இருவரும் கூட்டாகச் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் அமெரிக்க செய்தியாளர் சப்ரினா சித்திக் இந்தியாவில் மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் தொடர்பான பிரச்னைகள் குறித்த கேள்விகளைக் கேட்டார்.

இந்தக் கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், ஜனநாயகம் என்பது இந்தியாவின் மரபணுவிலேயே உள்ளது என்று கூறினார்.

பாஜக ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்தின் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஒபாமா குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். அந்த ட்வீட் இஸ்லாமிய வெறுப்பு கருத்தாகப் பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நிதியமைச்சரும் ஒபாமாவை குறிவைத்து விமர்சித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி பற்றிய ஒபாமாவின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ஒபாமா பேசியது என்ன?

அமெரிக்க செய்தியாளரான கிறிஸ்டியன் அமன்போர் ஒபாமாவிடம், “அதிபர் பைடன் தனது நிர்வாகத்தின் மையமாகத் தற்காப்பு ஜனநாயகத்தை உருவாக்கியுள்ளார். உலகளவில் ஜனநாயகம் ஆபத்தில் இருக்கும் காலகட்டம் இது.

சர்வாதிகாரிகள், சர்வாதிகாரங்களால் ஜனநாயகம் சவாலுக்கு உள்ளாகி வருகிறது. தாராளவாத ஜனநாயக நாடுகளிலும் அது சவாலுக்கு உள்ளாகிறது. சீன அதிபரை பைடன் சர்வாதிகாரி எனக் கூறுகிறார். இந்நிலையில், எதேச்சதிகாரியாக அல்லது குறைந்த அளவு தாராளவாத ஜனநாயகவாதியாகக் கருதப்படும் பிரதமர் மோதியை ஜோ பைடன் எவ்வாறு கையாள வேண்டும்?” என்று கேள்வியெழுப்பினார்.

அப்போது, மோதியுடன் தனக்குப் பேச வாய்ப்பு கிடைத்திருந்தால், சிறுபான்மையினர் குறித்துப் பேசியிருப்பேன் என்று இஸ்லாமியர்களின் பாதுகாப்பை மேற்கோள் காட்டிக் கூறினார் ஒபாமா.

அப்போது, “இந்து பெரும்பான்மையான இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறிப்பிடத்தக்கது. பிரதமர் மோதியுடன் நான் உரையாடியிருந்தால், இந்தியாவில் சிறுபான்மையினரின் உரிமைகளை நீங்கள் பாதுகாக்கவில்லை என்றால், இந்தியா ஒரு கட்டத்தில் பிளவுபடுவதற்கான வாய்ப்பு வலுவாக உள்ளது. அது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது,” என்று தெரிவித்தார்.

பராக் ஒபாமாவை குறிவைத்து கருத்து தெரிவித்த அசாம் முதல்வர், வெள்ளிக்கிழமையன்று, “இந்தியாவிலும் பல ஹுசேன் ஒபாமாக்கள் இருக்கிறார்கள். நாம் வாஷிங்டன் வரையிலும் செல்வதற்கு முன்பாக அவர்களைப் பற்றி விசாரிக்க வேண்டும். அசாம் காவல்துறை அதற்கு முன்னுரிமை அளித்துச் செயல்படும்,” என்று பதிவிட்டார்.

அவரது இந்தப் பதிவு சமூக ஊடகங்கள் முதல் அமெரிக்க பத்திரிகைகள் வரை விவாதிக்கப்படுகிறது. இந்த வரிசையில் தற்போது நிதியமைச்சரும் இணைந்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோதி பற்றிய ஒபாமாவின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

அவர் ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஒபாமாவின் கருத்து குறித்து விமர்சித்ததோடு, அதன் நம்பகத்தன்மையை கேள்விக்கு உள்ளாக்கினார்.

அப்போது, “அமெரிக்காவுடன் நல்ல நட்புறவை நாங்கள் விரும்புகிறோம். ஆனால், மத சகிப்புத்தன்மை பற்றிய கருத்துகள் அவர்கள் தரப்பிலிருந்து வருகின்றன. முன்னாள் அதிபர் சில விஷயங்களைக் கூறுகிறார்.

அவருடைய ஆட்சியின்கீழ், சிரியா, ஏமன், சௌதி, இராக் என்று முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஆறு நாடுகளில் குண்டுகள் வீசப்பட்டன. ஏழு நாடுகளில் போர் போன்ற சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. சுமார் 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன.

இதுபோன்ற நாடுகள் இந்தியா மீது குற்றச்சாட்டுகளைக் கூறும்போது, அதை யார் நம்புவார்கள்?”என்று கூறினார் நிர்மலா சீதாராமன்.

இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஒபாமாவின் கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ளார்; இந்தியா மதத்தின் அடிப்படையில் யார் மீதும் பாகுபாடு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் மதச்சார்பற்ற கொள்கையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்” என்றும் “இந்தியாவில் சிறுபான்மை உரிமை குறித்து பேசுபவர்கள்; எத்தனை முஸ்லிம் நாடுகள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது குறித்தும் யோசிக்க வேண்டும்” என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஒபாமா மீதான விமர்சனம்

ஒபாமா குறித்துக் கூறப்படும் கருத்துகளைப் பற்றி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பாஜகவின் வளர்ந்து வரும் தலைவரான அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, இந்தியாவின் ‘பல ஹுசைன் ஒபாமாக்களை’ விசாரிக்குமாறு இந்திய காவல்துறையிடம் கேட்டுக்கொண்டதாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்தியில் பிரதமர் மோதி தொடர்பான ஒரு விஷயம் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 9 ஆண்டுகளில் நரேந்திர மோதி ஒரு பிரதமராக நேரலையில் செய்தியாளர் சந்திப்பில் கேள்விகளை எதிர்கொள்வது இதுவே முதல்முறை என்பதுதான் அந்தக் குறிப்பிட்ட ஒரு விஷயம்.

இவற்றோடு சேர்த்து, நரேந்திர மோதி குஜராத் முதல்வராக இருந்தபோது எப்படி அவர்மீது அமெரிக்கா வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது என்பதும் தொடர்ந்து விவாதிக்கப்படுகிறது. கடந்த 2002ஆம் ஆண்டு நரேந்திர மோதி முதல்வராக இருந்தபோது, குஜராத்தில் கடுமையான வகுப்புவாத கலவரம் ஏற்பட்டது.

அமெரிக்க செய்தி சேனலான சி.என்.என்னும் கூட மோதியின் வருகையை விரிவாக ஒளிபரப்பியது. சி.என்.என் தனது செய்தியில், “மோதியின் புகழ் இந்தியாவில் பரவியுள்ளது. ஆனால், சர்வாதிகாரத்தின் மீதான அவரது சாய்வு மேற்குலக நாடுகளைக் கவலைகொள்ளச் செய்கிறது,” என்று விமர்சித்தது.

“இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என்று அழைக்கப்படுகிறது. ஆசியாவில் பைடனின் மூலோபாயத்தில் இந்தியா ஒரு முக்கியப் பாத்திரமாக உருவெடுத்துள்ளது,” என்று சி.என்.என் செய்தி கூறுகிறது. இந்தியா சமீபகாலமாக மக்கள் தொகையில் சீனாவை பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்தியாவையும் உடன் சேர்த்துக்கொள்ளாமல், காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்னைக்குத் தீர்வு காண்பது கடினம் என்று பைடன் கருதுவதாகவும் அந்தச் செய்தி சொல்கிறது.

பிரதமர் நரேந்திர மோதி பற்றிய ஒபாமாவின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

பாஜகவின் தீவிர பதிலடி

பிப்ரவரியில், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெடா, பிரதமர் மோதி குறித்து கருத்து தெரிவித்தார்.

இந்தக் கருத்துக்குப் பிறகு, அசாம் போலீசார் பவன் கெடாவை டெல்லி விமான நிலையத்தில் இருந்து காவலில் எடுத்தனர். அப்போது காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பவன் கெடா விமானம் மூலம் சத்தீஸ்கர் சென்றுகொண்டிருந்தார்.

இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தச் சம்பவத்தைக் கேலி செய்து, செய்தியாளர் ரோகினி சிங் “கவுஹாத்தியில் உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி ஒபாமா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதா? ஒபாமாவை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டுக் கைது செய்வதற்காக அசாம் காவல்துறை வாஷிங்டனுக்கு சென்றுகொண்டிருக்கிறதா?” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த அசாம் முதல்வர், “இந்தியாவில் இன்னும் பல ஹுசேன் ஒபாமாக்கள் உள்ளனர். அசாம் காவல்துறை அதற்கு முன்னுரிமை அளிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி செயல்படும்,” என்று பதிவிட்டிருந்தார்.

ஹிமந்த பிஸ்வா சர்மாவின் இந்த ட்வீட்டுக்கு பிறகு, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இருந்து கடுமையான எதிர்வினைகள் வந்தன.

ஒருபுறம் பிரதமர் மோதி அமெரிக்காவில் உள்ள சிறுபான்மையினரின் ஜனநாயக விழுமியங்கள், நலன்கள் பற்றிப் பேசுகிறார். மறுபுறம் அவரது சொந்தக் கட்சியின் முதல்வர் முஸ்லிம் அடையாளத்தைக் குறி வைத்து ட்வீட் செய்கிறார் என்று விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் அமெரிக்காவில் பேசுகையில், “இந்தியாவின் ஜனநாயக விழுமியங்களில் மதம், சாதி, வயது, பிராந்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்தப் பாகுபாடும் இல்லை. ஜனநாயகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் அடிப்படையில் நமது அரசு செயல்பட்டால், ‘சார்பு என்ற கேள்வியே எழாது,” என்று கூறினார்.

பிரதமர் நரேந்திர மோதி பற்றிய ஒபாமாவின் கருத்துக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

பிரதமர் மோதிக்கும் பராக் ஒபாமாவுக்கும் இடையிலான உறவு ஏற்கெனவே விவாதத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடிகர் அக்ஷய் குமாருக்கு அளித்த பேட்டியில், பிரதமர் மோதி, “பராக் ஒபாமா எனது நல்ல நண்பர்” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால், 2015ஆம் ஆண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பராக் ஒபாமா அதிபராக இந்தியா வந்தபோது, “ஒவ்வொருவருக்கும் அவரவர் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. எந்த மதத்தின் மீதும் பாகுபாடு காட்டக்கூடாது. என் பின்னணி காரணமாக நானும் அமெரிக்காவில் அத்தகைய சில விஷயங்களைச் சந்திக்க நேர்ந்தது,” என்று கூறியிருந்தார்.

Previous Story

டைடானிக் கதை 2  ஆரம்பம்!

Next Story

பண்டாவுடன் முரண்படும் மகள்!