‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநரின் புதிய படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

-உமாமகேஷ்வரன்-

“தி கேரளா ஸ்டோரி” திரைபடத்தை இயக்கிய சுதீப்தோ சென்னின் புதிய படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாவதற்கு முன்பே இஸ்லாமியர்களின் மத உணர்வுகளை அத்திரைப்படம் புண்படுத்தும்படி இருக்கிறது எனக் கூறி கேரள முதலமைச்சரும், பல அரசியல் முக்கிய தலைவர்களும், பல இஸ்லாமிய தலைவர்களும் குரலெழுப்பி இருந்தார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மானும் மறைமுகமாக தனது எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார். இப்போது அதே இயக்குநரின் படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பதாக அறிவிப்பு வெளியாகி இருப்பது பேசு பொருளாகி இருக்கிறது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான சஹாரா நிறுவனத்தின் ஸ்ரீ சுபத்ரா ராவின் வாழ்க்கை வரலாறை தனது அடுத்த திரைப்படமாக இயக்குவதாக சுதீப்தோ சென் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்ச்சைக்குள்ளான ‘தி கேரளா ஸ்டோரி’

“தி கேரளா ஸ்டோரி”-யின் ட்ரெயிலர் வெளியிடப்பட்டபோதே கேரள முதமைச்சர் பினராயி விஜயன், ”தி கேரளா ஸ்டோரி” அரசுக்கு எதிராக, வகுப்புவாத பிரச்னைகளை உருவாக்கும் விதமாக உள்ளது எனக் கூறி தனது கண்டனங்களைத் தெரிவித்தார். இதேபோல், காங்கிரஸ் கட்சியும் தனது கண்டனங்களைத் தெரிவித்தது.

இவ்வாறு, பல சர்ச்சைகளுக்கிடையே இந்தியில் உருவான ”தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மே-5ஆம் தேதி இந்தியில் மட்டுமே தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியானது.

”தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் பற்றி பிரபல நாளிதழான தினமணி “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் வெறுப்பை உமிழும் திரைப்படம் எனவும், இந்து நாளிதழ் “தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் உண்மையை அடிப்படையாகக் கொண்டது எனக் கூறினாலும் அதில் கடுகளவுக்கு கூட நம்பகத் தன்மை இல்லை எனவும் மோசமான விமர்சனங்களை எழுதின.

கேரளாவில் மிகவும் பரவலாக காணப்படும் இந்து, முஸ்லிம், கிறித்துவ நண்பர்களைப் போலவே, நர்சிங் கல்லூரியில் சேரும் 4 பெண்கள் ஒரு அறையில் தங்குகிறார்கள். அவர்களில் உள்ள ஆசிஃபா எனும் முஸ்லீம் பெண், மற்ற மூவரையும் மூளைச்சலவை செய்கிறாள். ஹிஜாப் அணியும் பெண்கள் மட்டுமே ஆண்களின் தவறான கண்களில் இருந்து தப்ப முடியும் எனவும், மற்ற தெய்வங்கள் எல்லாம் பலவீனமானவை எனவும் குறிப்பிடுகிறார்.

அல்லாவால் மட்டுமே நரக நெருப்பில் அழிந்தொழிவதை தடுக்க முடியும் எனவும் ஆசிஃபா கூற, அவளது பேச்சில் மற்ற மூவரும் எளிமையாக மயங்கி விடுவதாக அந்தப் படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்திய அளவில் கல்வியறிவு பெற்ற பெண்கள் அதிகமிருக்கும் கேரளாவில் இது எப்படி சாத்தியம் என உறுதியான எந்த காட்சியமைப்புகளும் இன்றி உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கேரளா அடுத்த 20 ஆண்டுகளில், முஸ்லீம் மாநிலமாக மாறும் என துணை முதலமைச்சர் தெரிவித்ததாகவும் குறிப்பிடுகிறார்கள். உண்மையில் இதுமாதிரியாக நடந்ததா என்பது பற்றிய எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களும் இல்லை. இதுமாதிரியான நிகழ்வுகள் படத்தின் நம்பகத்தன்மையை குலைக்கிறது” என ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ காட்டமாக தனது விமர்சனத்தைப் பதிவு செய்தது.

தி கேரளா ஸ்டோரி இயக்குநரின் அடுத்த படம்

இந்நிலையில், சுதிப்தோ சென் ட்விட்டரில் தனது அடுத்த திரைப்படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், சஹாரா ஸ்ரீ சுப்ரதா ராயின் புதிரான வாழ்க்கையைப் பற்றியது எனது அடுத்த திரைப்படம். கரடு முரடான பயணங்களால் நிரம்பியது அவரது வாழ்க்கை. உங்கள் கண்களை இதுவரை கண்டிராத, காதுகள் கேட்டிராத, நீங்கள் அறியாத அவரது வாழ்க்கைப் பயணத்தை பார்ப்பதற்கு தயாராக இருங்கள் என ட்வீட் செய்துள்ளார்.

தி கேரளா ஸ்டோரி

யார் இந்த சுப்ரதா ராய்?

இந்த சஹாரா ஸ்ரீ சுப்ரதா ராய் யார் என உங்களுக்கு நினைவுபடுத்த வேண்டுமென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து கிரிக்கெட் வீரர்களின் ஜெர்சியிலும் சஹாரா என்று எழுதியிருக்கும் நினைவிருக்கிறதா?

ஆம், அந்த சஹாரா நிறுவனத்தின் நிறுவனர் தான் ஸ்ரீ சுப்ரத்ரா ராய். சஹாரா இந்தியா பரிவார் என்பது தான் நிறுவனத்தின் முழுப் பெயர். ஒரு காலகட்டத்தில் சஹாரா இந்தியா பரிவார் இந்திய தேசிய கிரிக்கெட் அணியின் தலைப்பு ஸ்பான்சராக இருந்தது. மேலும், இந்திய தேசிய ஹாக்கி அணி மற்றும் பங்களாதேஷ் தேசிய கிரிக்கெட் அணி, ஃபோர்ஸ் இந்தியா ஃபார்முலா ஒன் அணி என பல விளையாட்டுகளின் ஸ்பான்சாரகவும் இருந்தது.

அதோடு மட்டுமல்லாமல் சுப்ரதா ராய் மக்களுடைய செல்வாக்கைப் பெற அவ்வப்போது ஏழைகளுக்குத் திருமணம், மது ஒழிப்பு முகாம்கள் என மக்கள் சேவையிலும் ஈடுபட்டார்.

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய இந்த குழுமம், அடுத்தடுத்த ஆண்டுகளில் சரிவைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து மக்களிடம் சுப்ரத்ராவின் நன்மதிப்பு குறைந்து, அவர்கள் தங்களது பணத்தை திருப்பி வாங்க ஆரம்பித்தனர். அதுவரை உச்சத்திலிருந்த சஹாரா நிறுவனம் முதல் முறையாக சாமாளிக்க முடியாத அளவுக்கு பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டது.

ஆஸ்கர்

சஹாரா நிறுவனம் முறைகேடான விதத்தில் மக்கள் பணத்தினை ஏமாற்றியதைக் செபி கண்டுபிடித்தது. பல ஊழல்கள் ஒன்றின் பின் ஒன்றாக வெளிவர, சுப்ரீம் கோர்ட் சுப்ரத்ரா ராயின் சஹாரா நிறுவனத்தையும், அதன் பங்குகளையும், சொத்துகளையும் முடக்கி, சுப்ரத்ரா ராயை ஜனவரி 26- ஆம் தேதி, 2014 ஆம் ஆண்டு கைதும் செய்தது.

மொத்த இந்தியாவையே உலுக்கிய சஹாரா ஊழலில் சிக்கிய சுப்ரதா ராயை பற்றி இயக்குநர் சுதிப்தோ சென் திரைப்படமாக இயக்குகிறார் என்ற செய்தி ட்விட்டரில் வெளி வந்தவுடன் நாம் பிபிசி தமிழுக்காக அவரைத் தொடர்பு கொண்டு பேசினோம்.

“சஹாரா ஸ்ரீ சுப்ரத்ரா ராயின் வாழ்க்கையை நான் இயக்குவது உண்மைதான். இப்பொழுது நான் மவோயிஸ்டுகளைப் பற்றிய திரைப்படம் ஒன்றை இயக்கிக் கொண்டிருக்கிறேன். இத்திரைப்படம் முடிந்த பிறகு, சஹாரா ஸ்ரீ சுப்ரதா ராய் திரைப்படத்தை அடுத்த வருடம் இயக்குவேன். அதற்கு இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அவர்கள் இசையமைக்கிறார். இதற்கு மேல் இப்பொழுது வேறு எதுவும் கூற முடியாது,” என்றார்.

ரஹ்மான்

ஏ.ஆர். ரஹ்மான் இசை

”தி கேரளா ஸ்டோரி” திரைப்பட சர்ச்சையின்போது, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மசூதியில் நடைபெற்ற இந்து தம்பதிகளின் திருமண காணொளி ஒன்றினை மத நல்லிணக்கத்தினை வலியுறுத்தும் விதமாக பகிர்ந்தார். தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவருடைய டிவிட்டர் பகிர்வு இருந்தது.

பெரும் விவாதத்தை உருவாக்கிய “தி கேரளா ஸ்டோரி” இயக்குநர் எடுத்துக் கொண்ட அடுத்த திரைப்படத்தின் கதைகளமும் இந்தியாவையே ஊழல் வழக்கால் திரும்பி பார்க்க வைத்த, சஹாரா ஸ்ரீ சுப்ரத்ராயினைப் பற்றியது என்பதாலும், நாடே தூற்றிய ஊழல் மன்னன் சுப்ரத்ரா பற்றி மிகவும் நேர்மறையாக சுதிப்டோ சென் ட்வீட் செய்திருந்ததாலும் இது குறித்து திரைக்கதை ஆலோசகரும், திரைக்கதை ஆசிரியருமான கருந்தேள் ராஜேஷிடம் பிபிசி தமிழ் சார்பாக கலந்துரையாடினோம்.

கருந்தேள் ராஜேஷ் கூறும்போது, “தற்போது சினிமாவில் மிகப் பெரிய கதைப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அதனால், உண்மையாக வாழ்ந்த ஆளுமைகளைப் பற்றி படமாக்குகிறார்கள். மணிரத்னம் அம்பானியின் வாழ்க்கையை வைத்து குரு திரைப்படத்தை இயக்கியது போல, எம். ஜி. ஆர் மற்றும் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை வைத்து இருவர் திரைப்படத்தை எடுத்தது போல, தற்போது பலரும் இம்மாதிரி முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். இயக்குனர் சுதிப்தோ சென்னின் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் இஸ்லாமியர்களைப் பற்றி தவறான கருத்துக்களை மக்கள் மனதில் விதைக்கும் மிகவும் மோசமான திரைப்படம்.” என்றார்.

“இஸ்லாமியர்களை மிகவும் மோசமாக சித்தரித்த சுதிப்தோ சென்னின் சஹாரா ஸ்ரீ சுப்ரதா ராய் திரைப்படத்தில் மத உணர்வுகளுக்கும், மனிதத்திற்கும் எப்பொழுதும் மதிப்பளிக்கும் ஏ. ஆர். ரஹ்மான் இசையமைப்பார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை” எனக் கூறினார் கருந்தேள் ராஜேஷ்.

Previous Story

சௌதி இளவரசர் சல்மான் அமெரிக்காவிடமிருந்து விலக நினைப்பது ஏன்?

Next Story

சகல பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு