மாடுகளுக்கு தொற்று நோய் குர்பான் விவகாரத்தில் உலமா சபை பதில் என்ன?

“தயவு செய்து கடைசி நிமிடம் வரை இழுத்தடிக்க வேண்டாம்”

-ஜஹங்கீர்-

முஸ்லிம்களின் சமூக விவகாரங்களில் ஜம்மியதுல் உலமா சபையின் தீர்மானங்கள் செயல்பாடுகள் தொடர்பில் என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் இன்றும் அதன் வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் சமூகம் எதிர்பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டுக் குர்பான்-உல்ஹியா தொடர்பாக ஒரு குழப்பமான நிலை சமூகத்தில் தோன்றி இருக்கின்றது.

இது தொடர்பாக சமூக ஆர்வலரும் துறைசாந்தவருமான இர்சாட் கமால்  நேற்று (11.06.2023) சமூக ஊடகங்களில் வெளியிட்டிருந்த ஒரு (Audio) பதிவு மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. இது தொடர்பாக இர்சாட் கமால் தனது பதிவில் சில கேள்விகளை எழுப்பி இருக்கின்றார்.

இர்சாட் கமால் BSC. MSC.

(உதவி விரிவுரையாளர்,ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் UMA-ஊடகக் கூட்டமைப்பின் அழைப்பாளியும் சமூக ஆர்வலரும்)

1.விலங்குகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு தற்போது நாடுபூராவிலும் ஒரு கொடிய வைரல் ஏற்பட்டிருக்கின்றது. தற்போது 75 சதவீதமான மாடுகள் இந்த நோய்க்கு இலக்காகி இருக்கின்றது.

2.இந்த நோய்க்குத் தற்போது தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருகின்றது. அந்த தடுப்பூசிகள் குறிப்பிட்ட விலங்குகளின் உடலில் பல மாதங்கள் வருடங்கள் வரை செல்வாக்குச் செலுத்தும். அதனை மனிதர்கள் உணவுக்காகப் பாவிப்பது மிகவும் ஆபத்தானது.

3.நோய் பீடிக்கப்பட்டிருக்கின்ற மாடுகளை வியாபாரிகள்  எப்படியும் குர்பான் சந்தைக்கு எடுத்து வந்து விடுவார்கள். இது வியாபாரிகளின் சீசனாக இருப்பதால் அவர்கள் சமூகம் தொடர்பாக கவலை கொள்ள மாட்டார்கள்.

4.அரசாங்கம் இந்த மாடுகள் தொடர்பான நோய் பற்றி பகிரங்கமாக அறிவித்திருப்பதுடன்  மாவட்டங்களுக்கிடையில் இதனை எடுத்துவர தடையும் விதித்திருக்கின்றது.

5.மாடுகள் மட்டுமன்றி இன்னும் பல விலங்குகளும் இந்த வைரசால் பாதிக்கப்பட்டிருக்கின்றது என்று கண்டறிப்பட்டுள்ளது.

6.உல்ஹியா-குர்பான் வழங்குகின்ற சில பரோபகாரிகள் அந்த மாடுகளைக் காண்பது கூட இல்லை. சிலர் வெளி நாடுகளில் இருந்தும் இந்த புனிதமான காரியத்துக்குக் காசுகளை அனுப்பி வைக்கின்றார்கள்.

7.குர்பான்-உல்ஹியா விலங்குகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் கண்டிப்பாக கட்டளையிட்டிருக்கின்றது. இன்னும் பல மாடுகளில் இந்த நோய் வெளியில் தெரியாமல் இருக்கின்றது.

8.பாதிக்கபடும் மாடுகளை உண்பதால் சமூகத்தில் பாரிய பாதிப்புக்கள் ஏற்படுத்தும் என்று மிருக வைத்தியம் தொடர்பான பேராசிரியர்களின் ஒருமித்த அறிவுறுத்தலாகவும் எச்சரிக்கையாகவும் இருக்கின்றது.

இந்தப் பின்னணியில் குர்பான் தொடர்பாக ஜமியத்துல் உலமா சபை சமூகத்துக்கு என்ன வழிகாட்டல்களைச் சொல்லப் போகின்றது என்பது இப்போது பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகின்றது. இன்னும் சில நாட்களே குர்பான் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எஞ்சி இருக்கின்றது. எனவே இதற்கு ஜம்மியத்துல் உலமா சபை தரும் பதில் என்ன என்பதனை முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அத்துடன் கடைசி நிமிடம்வரை இழுத்தடித்து  நெருக்கடிகளையும் குழப்பங்களையும் உண்டுபண்ணாமல் அவசரமாக இதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்பது எமது கருத்து. இது தொடர்பாக இஸ்லாமிய அறிஞர்கள் குறிப்பாக ஜமியத்துல் உலமா சமூகத்தை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் இர்சாட் கமால் கேட்டுக் கொள்வதுடன்.

Tamil Nadu Dairy Farmers Worried Due to Growing Cases of Lumpy Skin Disease in Cattle

தேவையானால் ஜம்மியத்துல் உலமாசபை துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளை இது விடயத்தில் பெற்றுக் கொள்ள முடியும். கொரோனா காலத்தில் ஜூம்ஆத் தொழுகையைக் கூட சமூகம் தவிர்த்து வந்திருந்தது. வரலாற்றில் முதல் முறையாக பள்ளிகளுக்குப் பூட்டும் போடப்பட்டிருந்தது அனைவரும் அறிந்த செய்தி.

இஸ்லாம் சுத்தம்-சுகாதாரம் பற்றி தெளிவாக கருத்துக்களை சொல்லி இருக்கின்ற போது கொடிய நோய்களால் விலங்குகள் குறிப்பாக மாடுகள் நோய்வாய்ப்பட்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் அதனை உணவுக்காக எப்படி அங்கிகரிக்க முடியும்?

Previous Story

தேர்தலா தேசத் துரோகம்!

Next Story

சௌதி இளவரசர் சல்மான் அமெரிக்காவிடமிருந்து விலக நினைப்பது ஏன்?