புயல்: பாம்பன் பாலத்தில் சென்ற ரயிலுக்கு என்ன ஆனது தெரியுமா?

அண்மையில் ஒடிசாவில் நேர்ந்த ரயில் விபத்து, கடந்த காலங்களில் நாடு எதிர்கொண்ட சில மோசமான ரயில் விபத்துகளைப் பற்றி நாட்டு மக்களை சிந்திக்கவைத்துள்ளது.

பாம்பன் ரயில் விபத்து

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு ரயில் விபத்தில், அந்த ரயில் முழுவதும் கடலில் மூழ்கியது.

இந்த சோகமான நிகழ்வு மனித தவறுகளால் ஏற்பட்டது அல்ல, இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டது.

பாம்பன் பாலத்தில் ரயில் மூழ்கிய விபத்து
ஆங்கிலேயர்களால் 1854ல் 80 அடி அகலம், 14 அடி ஆழம், 4,400 அடி நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த வழியாக 200 டன் எடையுள்ள கப்பல்கள், சிறிய ரக போர் கப்பல்கள் சென்று வந்தன.

வங்காள விரிகுடா கடலில் உள்ள அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் அந்தமானுக்கு தெற்கே ஒரு புயல் தாக்கும் ஆபத்து இருந்ததாக 1964ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று வானிலை ஆய்வு மையம் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. அந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்தே பலத்த காற்று வீசத் தொடங்கியது மட்டுமல்லாமல் மழையும் பெய்யத் தொடங்கியது.

பின்னர், அந்த புயல் தென்னிந்தியாவை நோக்கி நகர்ந்தது. சரியாக ஏழாவது நாள் அதாவது டிசம்பர் 22 அன்று இலங்கையிலிருந்து மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இந்தியாவை அந்தப் புயல் நெருங்கியது.

இதைத் தொடர்ந்து தமிழகத்தின் பாம்பன் தீவை மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் தாக்கியது. பகல் முடிந்ததும் இரவு நேரத்தில் அப்புயல் தீவிரமடைந்தது.

ஆனால், புயல் தாக்கியதற்கு முன்னரே பாம்பன் தீவில் உள்ள தனுஷ்கோடி ரயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது.

புயல் எச்சரிக்கையை அடுத்து ஏராளமான பொதுமக்கள் பாம்பன் தீவை விட்டு வெளியேறி வேறு இடங்களில் உள்ள வீடுகளுக்கு செல்ல முயன்ற நிலையில், சிலர் பாம்பனில் உள்ள வீடுகளை விட்டுவிட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல முயன்றனர்.

அது 1964 ஆம் ஆண்டு. பாம்பன் தீவில் இருந்து பிற நகரங்களுக்கு செல்ல ரயிலைத் தவிர வேறு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது.

புயல் முன்னறிவிப்பைத் தொடர்ந்து ஏராளமான பொதுமக்கள் பகல் நேரத்தில் ரயில் மூலம் அங்கிருந்து வெளியேறினர்.

ஆனால் டிசம்பர் 22ம் தேதி இரவு கடைசி ரயிலில் ஏறியவர்களுக்கு சிறிது நேரத்தில் என்ன நடக்கும் என்று அப்போது தெரியாது.

பாம்பன் பாலத்தில் ரயில் மூழ்கிய விபத்து

பாம்பன் பால நிர்வாகி எச்சரிக்கை

பாம்பன் தீவை இந்தியாவின் நிலப்பரப்புடன் இணைக்கும் 2 கிமீ நீளமுள்ள “பாம்பன் பாலம்” கடல் பயணங்களை நேசிப்பவர்களால் இன்றும் விரும்பப்படுகிறது.

இந்த பாலம் பாம்பன் தீவை தமிழ்நாட்டின் மண்டபம் ரயில் நிலையத்துடன் இணைக்கிறது.

தனுஷ்கோடியில் இருந்து மண்டபம் ரயில் நிலையம் நோக்கி சென்ற பயணிகள் ரயிலை ஓட்டியவர், இரவு 8:30 மணிக்கு மண்டபம் கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தகவல் அனுப்பினார்.

தனுஷ்கோடி-ராமேஸ்வரம் ரயில் தண்டவாளத்தில் பெரும் புழுதி படிந்திருந்ததாகவும், அதனால் ரயிலை இயக்குவது சிரமமான செயல் என்றும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஒரு ஆய்வாளரும், ரயில்வே பணியாளர்களும் பாலத்தை ஆய்வு செய்யச் சென்றனர். பணியாளர்களின் உதவியுடன் ரயில் பாதை சுத்தம் செய்யப்பட்டது.

ஏனெனில் பாம்பன் – தனுஷ்கோடி பயணிகள் ரயில் அந்த வழியாகத்தான் இரவு நேரத்தில் செல்ல வேண்டும்.

பாம்பன் பாலத்தை நிர்வகித்து வந்தவர் இரவு 9 மணியளவில் கட்டுப்பாட்டு அறைக்கு மற்றொரு செய்தியை அனுப்பினார். அப்போது மணிக்கு 64 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வந்ததாகவும், அந்த நேரத்தில் பயணிகள் ரயிலை இயக்குவது பாதுகாப்பானது அல்ல என்றும் அவர் அந்த செய்தியில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, காற்றின் வேகம் மேலும் அதிகரித்து அங்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்நிலையில், இரவு 11:10 மணியளவில் பாம்பன் ரயில் நிலையத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு சுமார் 130 பயணிகளுடன் ஆறு பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில் புறப்பட்டுச் சென்றது. 18 ரயில்வே ஊழியர்களும் அந்த ரயிலில் இருந்தனர்.

அந்த ரயில் திட்டமிட்டபடி ராமேஸ்வரம் சாலை ரயில் நிலையத்தை அடைந்தது. ஆனால், சிக்னல் தாமதம் காரணமாக 15 நிமிடம் தாமதமாக அடுத்த ரயில் நிலையமான தனுஷ்கோடி ரயில் நிலையத்தை நோக்கிப் புறப்பட்டது.

பின்னர் அந்த ரயில் தனுஷ்கோடி ரயில் நிலையத்தை நள்ளிரவு 12:30 மணிக்கு சென்றடைந்திருக்க வேண்டும். தனுஷ்கோடி ரயில் நிலையத்தின் அருகே ஒரு கேபினில் ரயில்வே ஊழியர் ஒருவர் அந்த ரயிலின் வருகைக்காகக் காத்திருந்தார். ஆனால், ரயில் தனுஷ்கோடிக்கு வரவே இல்லை.

பாம்பன் பாலத்தில் ரயில் மூழ்கிய விபத்து

பலத்த மழை காரணமாக யாரும் வெளியில் செல்லவில்லை

அதன்பின் 12:30 மணியளவில் பலத்த காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், கட்டுப்பாட்டு அறைக்கும், ரயிலுக்கும் இடையேயான தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டது.

பின்னர் நிலைமை மிக மோசமடைந்தது. தனுஷ்கோடி ரயில் நிலையம் தண்ணீரில் மூழ்கியது.

மேலும், மோசமான வானிலை காரணமாக சரியான நேரத்தில் வர வேண்டிய ரயில் இன்னும் ரயில் நிலையத்திற்கு வரவில்லை என்றும், அல்லது அந்த ரயில் ராமேஸ்வரம் சாலை ஸ்டேஷனுக்கு திரும்பிச் சென்றிருக்கும் என்றும் தனுஷ்கோடி ரயில்வே ஊழியர்கள் நினைத்தனர். ஆனால் அந்த ரயில் எங்கும் வந்துசேரவில்லை.

அதே நேரம், பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் கூடிய மழை காரணமாக, இந்த இரண்டு ரயில் நிலையங்களின் ஊழியர்களும் ரயிலைக் கண்டுபிடிக்க வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை. அதுவும் வெளியில் பார்த்தால் கண்களுக்கு எதுவும் புலப்படவும் இல்லை.

அதற்கடுத்த நாள்- அதாவது டிசம்பர் 23ம் தேதி புயல் சற்று ஓய்ந்தது. ஆனால், தனுஷ்கோடி கிட்டத்தட்ட வெள்ளத்தில் உறைந்து போனது.

இதையடுத்து, ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி நிலைய ரயில்வே அதிகாரிகள் ஒரு அவசர ஆலோசனை நடத்தினர். அந்த ரயில் எங்கு சென்றது என்பது குறித்து அந்த ரயில் பாதை முழுவதும் அதிகாரிகள் தேடினர். ஆனால் ரயில் எங்கும் தென்படவில்லை.

அந்த ரயில் பாதையெங்கும் கடல் இருந்ததால், எந்த நவீன தொழில்நுட்ப வசதியும் இல்லாத அந்தக் காலத்தில், கடலில் மீட்புப் பணிகளை மேற்கொள்வது சாத்தியமில்லாதது என்ற நிலையில், ரயிலைக் கண்டுபிடிப்பதே பெரிய சவாலான பணியாக இருந்தது.

ஒரு நாள் முழுவதும் கழிந்தும் கூட ரயில் எங்காவது இருந்ததற்கான தடயமே இல்லை. 130 பயணிகளுடன் அந்த ரயில் எங்கு தான் சென்றது?

பாம்பன் பாலத்தில் ரயில் மூழ்கிய விபத்து

24 மணி நேரத்திற்குப் பிறகு கடலில் தென்பட்ட காட்சி

அதற்கு அடுத்த நாள்- அதாவது டிசம்பர் 24ம் தேதிக்குள் புயலின் தாக்கம் முற்றிலும் குறைந்திருந்தது. ஆனால், அந்தப் பகுதியைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும் புயல் தாக்கத்தினால் உருவான அழிவு காட்சிகள்தான் கண்களுக்குப் புலப்பட்டன. புயல் பாதிப்பில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்தனர். பல கோடி ரூபாய் நிதி இழப்பும் ஏற்பட்டிருந்தது. புயலால் அந்த நகரமே முழுவதுமாக அழிந்திருந்தது.

இந்நிலையில், ரயில்வே பணியாளர் ஒருவர் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான ஏதோ ஒன்றைக் கண்டார். புயல் காரணமாக பல பொருட்கள் தரையில் இருந்து பறந்து கடலுக்குள் சென்றிருந்தன. இதே போல் கடலுக்குள் இருந்தும் ஏராளமான பொருட்கள் கரைக்கு அடித்து வரப்பட்டிருந்தன. அந்த சந்தேகப் பொருளைப் பார்த்தவுடனே, அது என்னவென்று அவருக்கு முழுமையாகப் புரிந்திருந்தது.

தான் பார்த்ததை அந்த ரயில்வே பணியாளர் உடனடியாக மேலதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து ரயில்வே அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, ​​அது காணாமல் போன ரயிலின் ஒரு பகுதி எனத் தெரியவந்தது.

ஏற்கனவே 24 மணி நேரம் கடந்துள்ள நிலையில், அந்த ரயிலுக்கு என்ன ஆனது, ரயிலில் பயணம் செய்த 130 பயணிகளின் நிலை என்ன என்பது குறித்த விவரங்கள் யாரிடமும் இல்லை.

பின்னர் ரயிலின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்த அலுவலர்கள் சூறாவளியுடன் கூடிய பலத்த மழை காரணமாக ரயில் கடலில் கவிழ்ந்துவிட்டதாகவும், அதில் பயணம் செய்த 130 பயணிகளில் யாரும் உயிர் பிழைத்திருக்கவில்லை என்றும் உறுதிப்படுத்தினர்.பாம்பன் பாலத்தில் ரயில் மூழ்கிய விபத்து

பாம்பன் – தனுஷ்கோடி பயணிகள் ரயில் விபத்து குறித்து
ந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியான செய்தி

பயணிகளின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியுமா?

அன்று இரவு ரயில் புறப்பட்டபோது, அதில் பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிடும் பணி பாம்பன் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், “வழக்கமாக ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கையை நாங்கள் கணக்கிடுவதில்லை. இருப்பினும் அந்த வேலையை அன்று செய்யச் சொன்னார்கள்,” என்று ஸ்டேஷன் மாஸ்டர் விசாரணைக் குழுவிடம் கூறியிருந்தார்.

இந்த ரயில் விபத்து குறித்து விசாரணை நடத்த மத்திய ரயில் மற்றும் விமான போக்குவரத்து துறை ஒரு விசாரணை குழுவை அமைத்தது.

“ஏன் அன்று பயணிகளின் எண்ணிக்கையை கணக்கிட்டார்கள் என்ற கேள்வி எழுந்த போது, பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், ரயிலை ரத்து செய்ய நினைத்தார்கள்,” என்று ஸ்டேஷன் மாஸ்டர் பின்னர் தெரிவித்திருந்தார்.

ஆனால், அந்த ரயிலின் ஆறு பெட்டிகளில் போதிய எண்ணிக்கையிலான பயணிகள் இருந்ததால் ரயிலை இயக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

இந்த சோகமான விபத்தில் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை யாருக்கும் தெரியாது என்று விசாரணைக் குழு அறிக்கை கூறுகிறது. ரயிலில் பயணம் செய்த 110 பயணிகளும், 18 ரயில்வே ஊழியர்களும் உயிரிழந்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்த விசாரணையை நிறைவு செய்த அலுவலர்கள், “கடல் அலைகளில் ரயில் அடித்துச் செல்லப்பட்டது,” என்று முடித்துள்ளனர்.

இந்த விபத்துக்கு யாரும் பொறுப்பேற்கும் நிலை ஏற்படவில்லை. மாறாக அந்த விபத்து ஒரு இயற்கை பேரழிவு என்று அழைக்கப்படுகிறது.

Previous Story

மற்றுமோர் வடகொரியா உதயம்!

Next Story

 குறைக்கப்படும் மின்சார கட்டணம்!