பறக்கும் தட்டு ஆய்வுக்கு மிரட்டல்கள் வருவது ஏன்?

கடந்த பல ஆண்டுகளில் அடையாளம் தெரியாத பறக்கும் தட்டுகள் குறித்துக் கிடைத்த 800-க்கும் மேற்பட்ட தகவல்களை அமெரிக்க அரசு ஆய்வு செய்துள்ளது. உண்மையில் அவற்றைப் பற்றிய பெரும்பாலான விவரங்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்ட நிலையில் மிகக் குறைந்த அளவிலான தகவல்கள் மட்டும் விளங்காத புதிர்களாகவே இதுவரை நீடிக்கின்றன என ஆராய்ச்சியாளர்களின் குழு ஒன்று தெரிவிக்கிறது.

பறக்கும் தட்டு

முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாத ரகசியங்களாக நீடிக்கும் இந்த பறக்கும் தட்டுகள் குறித்து ஆய்வு செய்வதற்காகவே அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 16 பேர் கொண்ட குழுவைக் கடந்த ஆண்டு அமைத்தது. இந்தக் குழுவில் விண்வெளி தொடர்பான பல துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த புரிந்துகொள்ளப்படாத பறக்கும் பொருட்கள் “ஒரு விமானமாகமோ, அறிவியில் பார்வையில் இயற்கையான நிகழ்வுகள் எனப் புரிந்துகொள்ளப்பட்ட விஷயங்களாகவோ இல்லாத” காட்சிகள் என வரையறுக்கப்படுகின்றன.

இந்தக் குழு தனது முதல் பொது விளக்கக் கூட்டத்தை புதன்கிழமையன்று நடத்தியது. குழுவின் முழு விசாரணை அறிக்கை இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் நமக்குக் கிடைத்த சில தகவல்களைக் காண்போம்.

பெரும்பாலான காட்சிகள் சாதாரணமானவை

“ஒவ்வொரு மாதமும் இதுபோல் 50 முதல் 100 தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கின்றன,” என்கிறார் அமெரிக்க பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான ஆல்-டொமைன் அனோமலி ரெசல்யூஷனின் இயக்குனர் சீன் கிர்க்பாட்ரிக்.

ஆனால், பறக்கும் தட்டுகள் குறித்து கிடைத்த தகவல்களில் வெறும் 2 முதல் 5 சதவிகிதம் அளவுக்கே “உண்மையிலுமே வழக்கத்துக்கு மாறான- விளங்காத புதிர்களாக” இருக்கின்றன.

புதன்கிழமையன்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அமெரிக்க கடற்படை விமானம் ஒன்று ஓர் இரவு நேரத்தில் அந்நாட்டின் மேற்கு பகுதியில் பதிவு செய்த காட்சிகளைப் பற்றி விவாதிக்கப்பட்டது.

அதில் வரிசையாக ஒளிப்புள்ளிகள் நகர்ந்து சென்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அந்த ஒளிப்புள்ளிகளை அமெரிக்க கடற்படை விமானம் இடைமறிக்க முடியவில்லை. ஆனால், அது ஒரு பெரிய விமான நிலையத்தை நோக்கிச் சென்ற சரக்கு விமானம் என்பது பின்னர் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் மற்ற பல காட்சிகள் மர்மமான விஷயங்களாகவே இருந்தன.

பறக்கும் மர்ம பொருட்கள்

அமெரிக்க பாதுகாப்புத் துறை 2021ஆம் ஆண்டு அளித்த அறிக்கையின் படி, கடந்த 2004ஆம் ஆண்டு முதல் அந்நாட்டு ராணுவ விமானிகள் இது போல் 144 காட்சிகளைக் கண்டதாகத் தெரிய வந்துள்ளது.

அதில் ஒரு காட்சியைத் தவிர பிற அனைத்து காட்சிகளும் வழக்கமான சாதாரண நிகழ்வுகள் எனக் கண்டறியப்பட்டது. இருப்பினும், இது போன்று விண்ணில் பறக்கும் பொருட்கள் மர்மமானவையாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதை மறுக்க முடியாது என அந்நாட்டு பாதுகாப்புத் துறை ஒப்புக்கொண்டுள்ளது.

பறக்கும் தட்டுகள்: மாதிரிப் புகைப்படம்

தனியுரிமை காரணமாக மட்டுப்படும் விசாரணைகள்

பல நேரங்களில், பொதுமக்களின் தனியுரிமை காரணமாக, ஆழமாக எதையும் விசாரிக்கமுடியாத நிலை இருப்பதை கிர்க்பாட்ரிக் சுட்டிக்காட்டினார்.

“உலகம் முழுவதும் இதுபோல் கிடைத்த காட்சிகள் அடங்கிய கருவியை எப்போது வேண்டுமானாலும் எங்களால் காட்ட முடியும்,” என்றார் அவர்.

“அதில் பெரும்பாலான தகவல்கள் அமெரிக்க கண்டத்தைச் சுற்றிலும் இருந்து கிடைத்தவை,” என்ற அவர், “எங்களைச் சுற்றி நடப்பவற்றை மட்டுமே நாங்கள் காட்டினால் பெரும்பாலான மக்கள் அதை நம்பமாட்டார்கள்,” என்றார்.

மைக்ரோவேவ் அடுப்புகளும்

விஞ்ஞானிகளுக்குத் தென்பட்ட மாயைகளும்

இந்த அடையாளம் தெரியாத, வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகள் என்பவை எப்போதும் தெளிவற்ற விஷயங்களாகவே இருக்கின்றன.

இந்த நிகழ்வுகளைப் பற்றி ஆய்வு செய்யும் குழுவின் தலைவர் டேவிட் ஸ்பெர்கெல், ஆஸ்திரேலியாவில் மின்காந்த அலைகள் வெடித்துச் சிதறிய சம்பவம் ஒன்றைச் சுட்டிக்காட்டி பேசினார்.

பறக்கும் தட்டுகள்

அப்போது, “அவற்றின் உருவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. அது என்ன என அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பின், மதிய உணவு வேளையில் அதுபோன்ற மின்காந்த அலைகள் வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததைக் கண்டறிந்தனர்,” என்றார்.

ஆனால், உண்மையிலுமே அந்த மின்காந்த அலை வெடிப்பு என்பது என்ன எனத் தெரியவந்தபோது அது ஒரு மிகச் சாதாரண விஷயமாக மாறியது.

என்ன நடந்தது என்றால், அந்த விஞ்ஞானிகள் பயன்படுத்திய கருவிகள் மதிய வேளைகளில் பொதுமக்கள் உணவுப் பொருட்களை சூடுபடுத்துவதற்காக மைக்ரோவேவ் அடுப்புகளைப் பயன்படுத்திய போது, அவற்றிலிருந்து கிடைத்த சமிக்ஞைகளை தவறுதலாகப் பெற்று, அதுபோல் மின்காந்த அலைகள் வெடித்துச் சிதறியது போல் காட்டியுள்ளன.

இந்த மாயைக் காட்சியைப் பற்றி முன்னாள் விண்வெளி ஆராய்ச்சியாளரும், விமானியுமான ஸ்காட் கெல்லி என்பவரும் பழைய நிகழ்வு ஒன்றைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

அவரும், அவருடைய துணை விமானியும் ஒருமுறை விமானத்தில் பறந்துகொண்டிருந்தபோது, அவரது துணை விமானி, “ஓர் அடையாளம் தெரியாத பொருள் ஒன்று பறந்துகொண்டிருந்ததைக்” கண்டு அவரிடம் தெரிவித்திருக்கிறார்.

“ஆனால் எனக்கு எதுவும் தெரியவில்லை. நாங்கள் விமானத்தைத் திருப்பி அனைத்து திசைகளிலும் கவனித்தோம். கடைசியில் தான் அது ஒரு திரைப்பட விளம்பர பலூன் என்று தெரியவந்தது,” என்றார் அவர்.

பறக்கும் தட்டு

ஆராய்ச்சியை பெரிய அளவில் மேற்கொள்ள என்ன தடை?

பறக்கும் தட்டுகளைப் பற்றிய கட்டுக்கதைகள் ஏராளமாக இருப்பதால் தான் அவற்றைப் பற்றிய தகவல்களை அளிப்பதில் வணிகரீதியாகப் பணியாற்றும் விமானிகள் பெரும் தயக்கம் காட்டுகின்றனர் என்கிறார் ஸ்பெர்கெல்.

விண்ணில் பறக்கும் அடையாளம் தெரியாத பொருட்களைப் பார்க்கும் நபர்கள், உண்மையில் அதைப் பற்றி மற்றவர்களிடம் கூறினால் அவர்கள் நம்புவார்களா அல்லது கேலி செய்வார்களா என்றே தெரியாமல் தவிப்பவர்கள், அதுபோன்ற காட்சியைக் கண்டாலும் அதைப்பற்றி வெளிப்படையாகப் பேசுவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

மேலும் பேசிய ஸ்பெர்கெல், “இதுபோன்ற வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளைப் பற்றிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த தகவல்களைப் பெற வேண்டியுள்ளதால், அந்தத் தயக்கத்தைப் போக்குவதுதான் எங்களது முக்கியப் பணிகளில் ஒன்றாக இருக்கிறது,” என்றார்.

அதுமட்டுமல்லாமல், நாசா அமைத்துள்ள இந்த விசாரணைக்குழுவின் ஆராய்ச்சியாளர்களை ஆன்லைனில் பலர் கிண்டல் செய்வதாகவும், ஒரு சிலர் மிரட்டல் விடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோன்ற காரணிகளால் ஆராய்ச்சிப் பணிகள் தொய்வடைகின்றன.

“ஏற்கெனவே இதுகுறித்த விவரங்களைத் தெரிவிப்பதில் வணிக ரீதியான பைலட்டுகள் தயக்கம் காட்டும்போது, இதுபோன்ற இணையவழித் துன்புறுத்தல்கள், இந்த பிரச்னையை மேலும் மோசமாக்குகின்றன,” என்கிறார் நாசா அறிவியல் கழகத்தின் தலைவர் நிக்கோலா ஃபாக்ஸ்.

பறக்கும் தட்டு

வெளிப்படைத் தன்மையுடன் கூடிய புதிய சகாப்தம்

விண்ணில் பறக்கும் அடையாளம் தெரியாத பொருட்களைப் பற்றி தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, தற்போது ஒரு மாற்றத்தை நோக்கிப் பயணிக்கிறது என்பதே புதன்கிழமையன்று நடைபெற்ற பொதுவிளக்கக் கூட்டத்தில் தெளிவாகத் தெரியவந்த முக்கியத் தகவல்.

இதனால்தான் அந்தக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. அது என்னவென்றால் வெளிப்படைத் தன்மை. இதுகுறித்த தகவல்களை யார் வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்.

இந்நிலையில், இந்த பொதுவிளக்கக் கூட்டத்தின் இறுதியில் விசாரணைக் குழுவினர் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தனர். அதில், “நாசா எதை மறைக்கிறது?” என ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

பறக்கும் பொருட்களைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஒரு வெளிப்படைத் தன்மையைக் கடைபிடிக்க தற்போது நாசா முடிவெடுத்துள்ளது. “அதனால்தான் இப்போது வெளிப்படையாக நேரடி நிகழ்ச்சி ஒன்றை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கிறோம்,” என்றார் நாசாவில் பணியாற்றும் டேன் ஈவான்ஸ்.

Previous Story

கண்டியில் 8000 பேர் உயிர் ஆபத்தில்! 

Next Story

வருமையின் முதலிடம் நமக்கு!