மகனின் குழந்தையை தானே பெற்றெடுத்த தாய்

தன்பாலின ஈர்ப்பாளரான மகனுக்கு தானே குழந்தை பெற்றுக் கொடுத்த பெண்ணைப் பற்றிய கதை இது.

அமெரிக்காவின் ஒரு மாநிலம் நெப்ராஸ்கா. இந்த மாநிலத்தைச் சேர்ந்த செசிலி எலெட்ஜ் என்ற பெண்ணுக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 59 வயது. அவருடைய மகன் மேத்யூ எலெட்ஜ் ஒரு ஆசிரியராகப் பணியாற்றிவந்தார்.

அவர் ஒரு தன்பாலின ஈர்ப்பாளராகவும் இருந்த நிலையில், முடி அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்த இலியட் டாஃபெர்ட்டி என்பவருடன் நெருக்கமான பழக்கம் ஏற்படுகிறது.

இந்த பழக்கத்தின் தொடர்ச்சியாக இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து, அதன்படியே தங்களது மணவாழ்க்கையைத் தொடங்கினர்.

மகனின் குழந்தைக்குத் தாயான பெண்

புதிதாகப் பிறந்த உமா லூயிசுடன், பெற்றோர்கள் மேத்யூ எலெட்ஜ், இலியட் டாஃபெர்ட்டீ மற்றும் பாட்டி செசிலி எலெட்ஜ்

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம்

இந்த திருமணத்துக்குப் பின் சில மாதங்கள் கழித்து, “நமக்கு ஒரு குழந்தை வேண்டும்,” என இருவரும் விரும்பினர். இது தொடர்பாக பலவித ஆலோசனைகளை மேற்கொண்ட பின், கருத்தரிப்பு மையத்தில் பணியாற்றும் மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனை பெற்றனர்.

அந்த ஆலோசனையின் அடிப்படையில் ஒரு வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள மேத்யூவும், டாஃபெர்ட்டியும் முடிவெடுத்தனர். அவர்கள் இருவரும் ஒமாஹாவில் வசித்து வந்த நிலையில், ஒருமுறை அருகில் வசித்து வந்த மேத்யூவின் தாய் செசிலியைச் சந்திக்கச் சென்றனர். அவரிடமும் குழந்தை பற்றிப் பேசியுள்ளனர்.

இது போன்ற தொடர் ஆலோசனைகளில், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பதற்குப் பதிலாக தங்களது சொந்த குழந்தையைப் பெற்றுக்கொள்ளவே மேத்யூ மற்றும் டாஃபெர்ட்டி தம்பதியினர் விரும்பினர். ஆனால் அது போன்ற குழந்தையை எப்படிப் பெற்றெடுப்பது?

மகனின் குழந்தைக்குத் தாயான பெண்

மேத்யூவும், டாஃபெர்ட்டியும் தங்களது குழந்தை பிறந்த நாளில் மிகவும் சந்தோஷம் அடைந்தனர்

மகனுக்காக குழந்தையை பெற்றுத்தர விருப்பம்

இது குறித்து மேத்யூ, தனது தாய் செசிலியுடன் ஆலோசித்த போது, மகனுடைய குழந்தையை அவரே பெற்றுத்தர சம்மதம் தெரிவித்தார். இதைக் கேட்டதும் டாஃபெர்டிக்கு சிரிப்பு தான் வந்தது.

“உண்மையிலுமே அனைவரும் சிரித்தனர்,” என பிபிசியிடம் செசிலி தெரிவித்தார்.

“அவருடைய எண்ணம் உண்மையிலுமே உணர்வுப்பூர்வமான மிக அழகான எண்ணமாகத் தெரிந்தது,” என்கிறார் டாஃபெர்ட்டி. “அந்த வயதில், மகனுக்காக ஒரு குழந்தையைபெற்றுத்தர அவர் விரும்பினார் என்றால், அது எவ்வளவு பெரிய எண்ணம்? ஒரு சுயநலமற்ற போக்கு,” என அவர் ஆச்சரியப்பட்டார்.

மகனின் குழந்தைக்குத் தாயான பெண்

பெற்றெடுத்த பேரக்குழந்தை உமாவுடன் செசிலி எலிட்ஜ்

பின்னர் செசிலி எலெட்ஜ் பல்வேறு மருத்துவ ஆலோசனைகளில் பங்கேற்று, அவருக்கு ஏராளமான உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக, அவருடைய மகனின் குழந்தையை அவர் பெற்றுக்கொடுக்க மருத்துவர்கள் சம்மதித்தனர்.

“உடல் நலம் குறித்து எனக்கு அதிக அக்கறை உள்ளது,” என்றார் செசிலி. ஆனால், “ஒரு குழந்தையைப்பெற்றெடுக்க முடியுமா என சந்தேகப்படுவதற்கு எந்தக் காரணமும் இல்லை,” என்றார்.

இதையடுத்து செசிலியின் மகன் மேத்யூவிடம் இருந்து விந்தணு பெறப்பட்டு, அவருடைய கணவர் டாஃபெர்ட்டியின் சகோதரியிடம் இருந்து கருமுட்டை பெறப்பட்டு செயற்கை கருவூட்டல் மூலம் கரு உருவாக்கப்பட்டது. பின்னர் அந்த கரு, செசிலியின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது.

மகனின் குழந்தைக்குத் தாயான பெண்

புதிதாகப் பிறந்த உமா லூயிசுடன், பெற்றோர்கள் மேத்யூ எலெட்ஜ், இலியட் டாஃபெர்ட்டீ மற்றும் பாட்டி செசிலி எலெட்ஜ்

அவசரகதியில் பரிசோதனைகள்

செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டு ஒரு வாரம் கழித்து, கருத்தரிப்பு குறித்து வீட்டிலேயே பரிசோதனை செய்வதற்கான உபகரணங்களை மேத்யூவும், டாஃபெர்ட்டியும் வாங்கி வந்தனர். அது போன்ற பரிசோதனையை மேற்கொள்ளவேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்த போதும், அந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

“மருத்துவர்களின் ஆலோசனையை அந்த இருவராலும் பின்பற்ற முடியவில்லை. அவர்களுக்கு கொஞ்சமும் பொறுமையின்றி, அந்தப் பரிசோதனையை மேற்கொண்டனர்,” என்கிறார் சிசிலி.

ஆனால் அந்தப் பரிசோதனையின் போது, அவருடைய வயிற்றில் கரு எதுவும் இல்லை என்றே தெரியவந்தது. இதனால் செசிலி கடுமையாக அதிர்ந்துவிட்டார். இதையடுத்து, அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் மேத்யூ அன்று மாலை மீண்டும் அங்கே வந்தார். அப்போது தான் அவர்கள் அந்த பரிசோதனை முடிவை முழுமையாக பார்க்காமல் விட்டது தெரியவந்தது.

ஆம். செசிலியின் வயிற்றில் கரு வளர்ந்து கொண்டிருந்ததை அப்போது தான் அவர்கள் உறுதி செய்தனர்.

“அது உண்மையிலுமே ஒரு சந்தோஷமான நேரம்,” என்கிறார் செசிலி. காலையில் அந்தப் பரிசோதனை முடிவை முழுமையாகக் கவனிக்காதது குறித்து அவருக்கு அப்போது சிரிப்பு தான் வந்தது.

மகனின் குழந்தைக்குத் தாயான பெண்

உமா பிறந்த போது ஒன்று கூடிய மேத்யூ, டாஃபெர்ட்டி குடும்பத்தினர்

குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

இந்த கருத்தரித்தல் குறித்து அனைவரும் ஆதரவு கருத்துக்களையே கூறிய போதிலும், செசிலியின் மற்ற இரண்டு குழந்தைகளும் இது குறித்து கடுமையாக அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

“இருப்பினும், நான் எனது மகனுடைய குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்தேன் என்பதை அனைவரும் உணர்ந்த பின், எல்லோருமே எனக்கு முழு ஆதரவை அளித்தனர்,” என்கிறார் செசிலி.

இது மட்டுமின்றி நெப்ராஸ்காவில் வசித்து வந்த தன்பாலின ஈர்ப்பாளர்களை எதிர்ப்பவர்களும் செசிலிக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர். 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, தன்பாலின திருமணம் சட்டப்படி செல்லும் என்ற போதிலும், இந்த எதிர்ப்புக்கள் எழுந்தன. ஆனால் அவர்களைத் தண்டிக்கப் போதுமான சட்டங்கள் இல்லை.

செசிலிக்கு மகப்பேறு காலத்திய மருத்துவ செலவினங்களை ஏற்க, அவரது மருத்துவ காப்பீட்டு நிறுவனம் மறுத்து விட்டதாகவும், எவ்வளவு போராடியும் அதற்கான செலவுகளைப் பெறமுடியவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பவர் தான் அக்குழந்தையின் தாய் என சட்டம் கூறும் நிலையில், உமா லூயிஸ் பிறந்த பின், அவளுக்காக பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழில், செசிலியின் பெயரும், அவருடைய மகன் மேத்யூவின் பெயரும் இடம்பெற்றிருந்தனவே ஒழிய, டாஃபெர்ட்டியின் பெயர் இடம்பெறவில்லை.

“நாங்கள் இருவரும் கணவன் – மனைவியாக வாழ்வதற்கு எதிரான வெறும் ஒரு சிறிய தடங்கலாகவே இதை உணர்கிறேன்,” என்கிறார் மேத்யூ.

6 ஆண்டுகளுக்கு முன்பு, டாஃபெர்ட்யைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாக மேத்யூ பணியாற்றிவந்த பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிவித்ததால் அவரை ‘ஸ்கட் கத்தோலிக்க உயர் நிலைப் பள்ளி’ நிர்வாகம் பணி நீக்கம் செய்தது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்திருந்தது.

மகனின் குழந்தைக்குத் தாயான பெண்

உமாவின் பிறப்புக்காக கருமுட்டை அளித்த லீ ரைப் (டாஃபெர்ட்டியின் சகோதரி), மேத்யூ, செசிலி மற்றும் டாஃபெர்ட்டி

வெறுப்புகளை நினைத்து மனம் வருந்தவில்லை

ஆனால் பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு அப்போது கடுமையான எதிர்ப்புக்கள் எழுந்தன. ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளராக உள்ளதாலேயே அவரைப் பணி நீக்கம் செய்தது தவறு எனச்சுட்டிக்காட்டி, பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக இணைய வழியில் எழுப்பப்பட்ட புகாரில் சுமார் 1,02,995 பேர் ஆதரவு கையொப்பமிட்டிருந்தனர்.

தன்பாலின ஈர்ப்பாளர்கள் மீது இச்சமூகம் காட்டும் வெறுப்புக்கு எதிரான ஒரு போராட்டமாகவே தன் குடும்பத்தைப் பற்றிய கதையை பலருக்கும் பகிர விரும்பியதாக செசிலி கூறுகிறார். தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு உண்மையில் நல்ல எதிர்காலம் உள்ளது என்பதை அனைவருக்கும் உணர்த்த விரும்பியதாகவும் அவர் கூறுகிறார்.

“நான் தனிப்பட்ட முறையில் அந்த வெறுப்புக்களை நினைத்து மனம் வருந்தவில்லை. எல்லாவற்றுக்கும் பின்னால் எனக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது, உறவினர்கள் – நண்பர்கள் இருக்கின்றனர், இந்த சமூகத்தில் பலர் இருக்கின்றனர்,” என்றார் மேத்யூ.

தற்போதைய நிலையில், “இந்தச் சின்னக் குழந்தையை நன்றாக வளர்த்துவருகிறோம். அன்பும், பாசமும் நிறைந்த குடும்பத்தில் அவள் வளர்ந்துவருகிறாள். இவளுடைய எதிர்காலத்தில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன்,” என்கிறார் மேத்யூ.

Previous Story

மாணவர்களுடன் ஒரு நிமிடம்

Next Story

அதிபர் தேர்தல்:மீண்டும் எர்டோகன் வென்றிருக்கிறார்.