புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா

முக்கிய சாராம்சம்

  • 65000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் கட்டுமானம் 2021 ஜனவரியில் தொடங்கியது.
  • இது 971 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
  • மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமர முடியும்.
  • புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டு அமர்வில் 1272 உறுப்பினர்கள் அமர்வதற்கான ஏற்பாடு.
  • மக்களவையின் வடிவமைப்பு தேசிய பறவையான மயில் மற்றும் மாநிலங்களவையின் வடிவமைப்பு தேசிய மலர் தாமரையின் அடிப்படையிலும் அமைந்துள்ளது.

நாடாளுமன்றம் மோதி

மே 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரதமர் நரேந்திர மோதி இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்கிறார். அன்று விநாயக் தாமோதர் சாவர்க்கரின் 140வது பிறந்த ஆண்டு தினம். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் இறுதிச் சடங்கும் இந்த நாளில்தான் நடைபெற்றது.

சாவர்க்கரைச் சூழ்ந்துள்ள சர்ச்சைகள் காரணமாக, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறப்பதற்கு மத்திய அரசு அவரது பிறந்தநாளைத் தேர்ந்தெடுத்தது கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.

அந்தமான் செல்லுலர் சிறையில் கைதியாக இருந்தபோது பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்புக் கேட்டதற்காக சாவர்க்கர் விமர்சிக்கப்படுகிறார், அதே நேரத்தில் மகாத்மா காந்தியைக் கொல்லும் சதித்திட்டத்தில் சாவர்க்கரின் பங்கு இருப்பதாக எழுந்துள்ள கேள்விக்குறி முற்றிலுமாக இன்னும் தீர்க்கப்படவில்லை என்று பல வரலாற்றாசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கருதுகின்றனர்.

புதிய பார்லிமென்ட் கட்டட திறப்பு விழா பற்றிய செய்தி வெளியானதும் மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி, “வி.டி. சாவர்க்கரின் பிறந்தநாளான மே 28 அன்று புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். கட்டடத்திற்கு ‘சாவர்க்கர் சதன்’ என்றும் சென்ட்ரல் ஹாலுக்கு ’மன்னிப்பு அறை’ என்றும் அவர் பெயரிடவேண்டும்.”என்று டிவிட்டரில் பதிவிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ், இந்த பதவியேற்பு விழாவை “நமது எல்லா நிறுவக தந்தைகள் மற்றும் தாய்மார்களின் முழுமையான அவமதிப்பு” என்று கூறினார். மேலும், ”இது காந்தி, நேரு, படேல், போஸ், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் முழு மறுப்பு” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு தினம் என்பதால் 2023ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி புதிய பார்லிமென்டின் திறப்பு விழாவுக்கு ஏற்ற நாளாக இருந்திருக்கும் என்று திரிணமூல் காங்கிரஸ் எம்பி சுகேந்து சேகர் ராய் ட்வீட் செய்துள்ளார். “ஆனால் இது சாவர்க்கரின் பிறந்த நாளான மே 28 அன்று செய்யப்பட உள்ளது. இது எவ்வளவு பொருத்தமானது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்ப்புக் குரல்கள்

நாடாளுமன்ற செங்கோல்

நாடாளுமன்றத்தின் புதிய கட்டடத்தில் செங்கோல்

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைக்கப் போவது குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. அரசியலமைப்புச் சட்டத்தின்படி, புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் அல்லது இரு அவைகளின் தலைவர்களில் ஒருவரால் திறக்கப்பட வேண்டும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

“குடியரசுத்தலைவரை நாடாளுமன்றத்தை திறந்து வைக்க அழைக்காதது அல்லது விழாவிற்கு அழைக்காதது, நாட்டின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியை அவமதிக்கும் செயலாகும். நாடாளுமன்றம் ஆணவத்தின் செங்கற்களால் ஆனது அல்ல, அரசியலமைப்பு மதிப்புகளால் ஆனது,” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

மறுபுறம் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் புரி காங்கிரஸை குறிவைத்து,” 1975 ஆகஸ்டில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாடாளுமன்ற இணை கட்டடத்தை திறந்து வைத்தார். பின்னர் 1987 இல் பிரதமர் ராஜீவ் காந்தி நாடாளுமன்ற நூலகத்தை திறந்து வைத்தார். உங்கள் (காங்கிரஸ்) அரசின் தலைவர் திறந்து வைக்கலாம் என்றால், எங்கள் அரசின் தலைவர் ஏன் அதை செய்யக்கூடாது?” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவை காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

புறக்கணிப்புக்கான காரணங்களை கூட்டறிக்கையில் விளக்கிய எதிர்க்கட்சிகள், ”புதிய நடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோதி திறந்துவைப்பதாக எடுத்துள்ள முடிவும்,அந்த நிகழ்வில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவை முற்றிலுமாக ஒதுக்கி வைத்திருப்பதும் கடும் அவமானம் மட்டுமல்ல, நமது ஜனநாயகத்தின் மீதான நேரடித் தாக்குதல் என்றும் இதற்கு சரியான பதிலடி கொடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.

பிரதமர் திறந்து வைப்பது குறித்து சர்ச்சை

நாடாளுமன்றம்

காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 19 எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.

மூத்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான நீலாஞ்சன் முகோபாத்யாய் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பெரிய தலைவர்கள் பற்றி ‘ஆர்எஸ்எஸ்: ஐகான்ஸ் ஆஃப் தி இந்தியன் ரைட்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

”குடியரசுத் தலைவர் மற்றும் இரு அவைகளைக் கொண்டதாக நாடாளுமன்றம் இருக்கும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 79வது பிரிவில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திற்கும், பிரதமருக்கும் தனிப்பட்ட முறையில் நாடாளுமன்றத்தில் எந்தப் பங்கும் இல்லை,” என்று அவர் கூறினார்.

”எனவே பிரதமர் முதலில் புதிய பார்லிமென்ட்டின் பூமி பூஜையை செய்ததும், இப்போது அதை திறந்து வைப்பதும் ஏற்புடையது அல்ல. குடியரசுத் தலைவர் அதைத் திறந்து வைக்க வேண்டும். அவருக்கு வசதி இல்லையென்றால் குடியரசு துணைத் தலைவரோ அல்லது இரு அவைகளின் தலைவர்களின் ஒருவரோ அதை செய்திருக்கவேண்டும். அதுதான் அரசியலமைப்பை பொருத்தவரை சரியாக இருந்திருக்கும்.”

இந்தியாவில் சட்டம் இயற்றும் அமைப்புகள், நிர்வாகத்துறை மற்றும் நீதித்துறை ஆகிய மூன்றும் தனித்தனியானது என்று நிலஞ்சன் முகோபாத்யாய் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார். “நிர்வாகம், நாடாளுமன்ற அமைப்புகளை நடத்தவில்லை. அரசியலமைப்புச் சட்டம் அப்படித்தான் சொல்கிறது. எனவே இது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல்” என்றார் அவர்.

மேலும், கடந்த காலங்களில் சில அரசியல்வாதிகள் இதுபோன்ற செயல்களைச் செய்திருப்பதாக முகோபாத்யாய் கூறுகிறார்.

எமர்ஜென்சி காலத்தில் நாட்டில் ஜனநாயக உரிமைகள் இல்லாத நேரத்தில், இந்திரா காந்தி, நாடாளுமன்ற இணை கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார். அதேபோல், ராஜீவ் காந்தி தனது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது 1987-ல் நாடாளுமன்ற நூலகக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினார். நாடாளுமன்ற நூலக கட்டடத்தின் பூமி பூஜை அப்போதைய மக்களவை சபாநாயகர் சிவராஜ் பாட்டீலால் செய்யப்பட்டது. இது 2002 ஆம் ஆண்டில் குடியரசுத்தலைவர் கே.ஆர். நாராயணனால் திறந்து வைக்கப்பட்டது,” என்று முகோபாத்யாய் குறிப்பிட்டார்.

“பிரதமர் ஒரு கட்டடத்திற்கு பூமி பூஜை செய்து திறந்து வைக்கப் போவது இதுவே முதல்முறை. தங்கள் பதவிக்காலத்தில் அவ்வளவு அதிகமாக ஜனநாயக முறையில் செயல்படாத பிரதமர்கள் என்று கூறப்படுபவர்கள் இதை முன்பு செய்திருக்கிறார்கள். அப்படியானால் மோதி தான் அவ்வளவு அதிக ஜனநாயகவாதி அல்ல என்பதையும், அரசியலமைப்பை மீறுவதாகவும் ஒப்புக்கொள்கிறார் என்று நாம் சொல்லலாமா?” என்று அவர் வினவினார்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணிக்கும் முடிவை 19 எதிர்க்கட்சிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி புதன்கிழமை வலியுறுத்தினார். கடந்த காலங்களில் பலமுறை நாடாளுமன்ற வளாகத்தில் கட்டடங்களை பிரதமர்கள் திறந்து வைத்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் பிரச்சனையை ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது என்றார் அவர்.

“பிரச்சனையே இல்லாத இடத்தில் பிரச்சனை எழுப்புவதும், விழாவை புறக்கணிக்கும் முடிவும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்து விழாவில் பங்கேற்குமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். மக்களவை சபாநாயகர் நாடாளுமன்றத்தின் இணை பாதுகாவலர். சபாநாயகர் பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளார்,” என்றும் அவர் கூறினார்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வு எனவும் ஒவ்வொரு நிகழ்வையும் அரசியலாக்குவது நல்லதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் இறுதிச் சடங்கும் மே 28 அன்று நடைபெற்றது.

“நேருவின் இறுதிச் சடங்கின் ஆண்டு நினைவு நாளில் புதிய பாராளுமன்றம் திறக்கப்படுவது ஒரு அடையாளமாக உள்ளது,” என்று நிலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்,

சாவர்க்கர் குறித்து கேள்வி

நாடாளுமன்றம்
படக்குறிப்பு,லோக்சபா சபாநாயகரும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சரும், கடந்த ஆண்டு மே 28ஆம் தேதி, நாடாளுமன்ற வளாகத்தில் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

சாவர்க்கருக்கு பல அம்சங்கள் உள்ளன. அவரவர் விரும்பும் அம்சத்தின் அடிப்படையில் அவரை வணங்கலாம் அல்லது இகழலாம் என்று சாவர்க்கர் தொடர்பான சர்ச்சைகள் குறித்து துஷார் காந்தி கூறினார்.

“ஆரம்பத்தில் சாவர்க்கர் ஒரு புரட்சிகர வடிவம் எடுத்தார். இங்கிலாந்தில் வாழ்ந்தபோது இந்தியாவில் புரட்சியை ஊக்குவித்தார் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். புரட்சியாளர் என்பதன் வரையறையின்படி சாவர்க்கரை அதிகபட்சமாக புரட்சியாளர்களின் ஆதரவாளர் என்று அழைக்கலாமேயன்றி ஒரு புரட்சியாளர் என்று அழைக்கமுடியாது,” என்று அவர் குறிப்பிட்டார்.

சாவர்க்கரைப் பற்றிய ஒரு முக்கிய விமர்சனம், காலாபானி சிறையில் இருந்தபோது பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் அவர் மன்னிப்புக் கேட்டு எழுதிய கடிதம்.

“காலாபானிக்கு சென்ற எல்லா கைதிகளும் ஒரே மாதிரியாக கொடூரமாகவே நடத்தப்பட்டனர். ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கேட்ட ஒரு சிலரில் சாவர்க்கரும் ஒருவர். பல சத்தியாகிரக, சுதந்திர போராட்டக்கைதிகள் சிரித்துக்கொண்டே கலாபானியின் தண்டனையை அனுபவித்தார்கள். உயிருடன் இருந்தவர்கள் சுதந்திரத்திற்குப் பிறகு விடுதலையாகி வெளியே வந்தார்கள். சாவர்க்கரை வீரர் என்று அழைப்பது அவர்கள் அனைவரையும் அவமதிக்கும் செயலாகும்,” என்று துஷார் காந்தி கூறுகிறார்.

மன்னிப்புக் கேட்டு விடுதலையாகி பின்னர் ஆங்கிலேயர்களுடன் போரிடலாம் என்பது அவரது உத்தி என்று சாவர்க்கரின் ஆதரவாளர்களும் அபிமானிகளும் கூறுகிறார்கள். இவை அனைத்தும் பின்னால் சிந்தித்துக்கூறப்படுபவை என்று துஷார் காந்தி தெரிவித்தார்.

“இது அவருடைய உத்தி என்று ஒப்புக்கொண்டாலும் விடுதலையான பிறகு அவர் சுதந்திரப் போராட்டத்திற்கு என்ன பங்களிப்பு செய்தார்? இதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக விடுதலை ஆனபிறகு அவர், காங்கிரஸ் நடத்திய எல்லா சத்தியாக்கிரகங்களையும் எப்படி முறியடிப்பது என்று ஆங்கிலேயர்களுடன் இணைந்து பணியாற்றினார். எனவே மன்னிப்பு கேட்டதை உத்தி என்று கூறுவது ஒரு சிறுபிள்ளைத்தனமான சாக்குபோக்கு,” என்றார் அவர்.

ஏ.சூர்ய பிரகாஷ் பிரசார் பாரதியின் தலைவராக இருந்துள்ளார்.

“சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதத்தை பொருத்த வரையில், மகாத்மா காந்தி மற்றும் பல காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய மனுக்களைப் பார்த்தால் அவற்றுக்கும் சாவர்க்கரின் மனுக்களுக்கும் இடையில் வித்தியாசம் இருக்காது,” என்று தெரிவித்தார்.

“இந்தியாவின் மகத்தான மகனுக்கு எதிராக அவர்கள் இந்த மோசமான பிரச்சாரத்தை நடத்துகிறார்கள். 1910 இல் சாவர்க்கர் 1857 இன் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதியபோது ஆங்கிலேயர்கள் அதைத் தடைசெய்தனர். சாவர்க்கர் எவ்வளவு பெரிய தேசபக்தர் மற்றும் புரட்சியாளர் என்பதை புரிந்துகொள்ள அதை படிக்க வேண்டும். இந்தியாவை சுதந்திர நாடாக பார்ப்பதற்கு அவர் எதையும் செய்ய தயாராக இருந்தார்,” என்று சூர்ய பிரகாஷ் கூறினார்.

சாவர்க்கரைப் பற்றி மூன்று பெரிய கேள்விகள் உள்ளன என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் குறிப்பிட்டார். முதலாவதாக, வீர் என்ற அடைமொழியைப் பெறுவதற்கு அவர் தேசிய இயக்கத்தில் போதுமான வேலை செய்தாரா? இரண்டாவதாக, அவர் ஒரு கோழையா? மூன்றாவதாக, மகாத்மா காந்தியைக் கொல்லும் சதியில் அவர் ஈடுபட்டாரா?

“இந்த மூன்றிலுமே இன்னும் கேள்விக்குறிகள் உள்ளன. இந்தியா தேர்ந்தெடுத்த ஜனநாயக பாதையை ஆதரிக்காத ஒரு மனிதரின் 140 வது பிறந்தநாளில் நாம் உண்மையில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறக்க வேண்டுமா? நவம்பர் 26 ஆம் தேதி அதாவது இந்திய அரசியலமைப்பு தினத்தன்று இதை செய்திருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும்,” என்றார் அவர்.

மறுபுறம், சாவர்க்கர் இதுபோன்ற அங்கீகாரத்திற்கு தகுதியானவர் என்று அவரது ஆதரவாளர்கள் நம்புகிறார்கள். சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று தான் கருதுவதாக சூர்யபிரகாஷ் கூறுகிறார்.

”இந்தியாவில் நேரு-காந்தி குடும்பத்தின் அரசியல், சில பெரிய ஹீரோக்கள், நாட்டின் புரட்சியாளர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை ஓரங்கட்ட முயற்சித்துள்ளது. இந்த ஹீரோக்களில் வீர் சாவர்க்கர், பிஆர் அம்பேத்கர் மற்றும் சர்தார் வல்லபாய் படேல் ஆகியோர் அடங்குவர். இப்போது விஷயங்களை சரிசெய்யும் செயல்முறை நடந்து வருகிறது,”என்று அவர் தெரிவித்தார்.

சர்தார் படேல் மற்றும் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் ஆற்றிய பணிகளுக்காக எவ்வாறு பாராட்டப்படவில்லையோ, அதே விஷயம் வீர் சாவர்க்கருக்கும் பொருந்தும் என்று சூர்யபிரகாஷ் குறிப்பிட்டார்.

சாவர்க்கருக்கு எதிர்ப்பும் ஆதரவும்

திரேந்திர ஜா ஒரு பிரபலமான எழுத்தாளர். “காந்தீஸ் அஸாஸின்: தி மேக்கிங் ஆஃப் நாதுராம் கோட்சே அண்ட் ஹிஸ் ஐடியா ஆஃப் இந்தியா” மற்றும் “ஷாடோ ஆர்மீஸ்: ஃப்ரிஞ்ச் ஆர்கனைசேஷன்ஸ் அண்ட் ஃபுட் சோல்ஜர்ஸ் ஆஃப் ஹிந்துத்வா” போன்ற பிரபலமான புத்தகங்களை எழுதியுள்ளார். சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைப்பது ஜனநாயகத்தை கொலை செய்வது போன்றது என்கிறார் அவர்.

”இந்த மனிதரின் பிறந்தநாளில் ஜனநாயகக் கோவிலை திறப்பது ஒரு கேலிக்கூத்து என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை” என்கிறார் தீரேந்திர ஜா.

“20 ஆம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்தில் சாவர்க்கர் பிரிட்டனில் இருந்தபோது, அவர் பிரிட்டிஷ் எதிர்ப்பாளராக இருந்தார். ஆனால் அவர் சிறைக்குச் சென்றவுடன் கருணை மனுக்களை எழுதத் தொடங்கினார். பின்னர் அவர் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார்,” என்று அவர் கூறுகிறார்.

இதற்கு முன் சாவர்க்கர் ‘ஹிந்துத்வா: ஹூ இஸ் எ ஹிந்து’என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும் நோக்கில், ஆங்கிலேயர்கள் அல்ல முஸ்லிம்கள்தான் தங்களின் முக்கிய எதிரிகள் என்று இந்துக்களை நம்பவைக்க இந்த புத்தகம் ஒரு வரைபடத்தை முன்வைக்கிறது என்று திரேந்திர ஜா சுட்டிக்காட்டுகிறார்.

“சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, அவர் இந்த வரைபடத்தை மிகவும் கவனமாகப் பின்பற்றினார். அவர் பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராட்டத்தின் அருகில் கூட வரவில்லை. சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு, அவர் எப்போதும் ஆங்கிலேயர்களை ஆதரித்தார், “என்று அவர் மேலும் கூறினார்.

“அவர் உண்மையில் இந்தியாவில் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை தோற்றுவிக்கும் செயல்முறையை பலவீனப்படுத்த முயற்சித்தார். தேசியவாதிகள் எந்த மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்காக போராடிக்கொண்டிருந்தார்களோ அதற்கு எதிரான இந்து ராஷ்டிராவை நிறுவுவதே அவரது எண்ணம்.” என்றார் அவர்.

சாவர்க்கர் ஐரோப்பிய சர்வாதிகாரத்தால் ஈர்க்கப்பட்டவர் என்று தீரேந்திர ஜா கூறினார்.

“ஜெர்மனியில் நாஸிஸத்தையும் இத்தாலியில் பாஸிஸத்தையும் அவர் புகழ்ந்த நிகழ்வுகள் உள்ளன. இந்த பாஸிஸ சித்தாந்தங்கள் அடிப்படையில் ஜனநாயகத்திற்கு எதிரானவை. மேலும் அவர் காந்தி படுகொலை சம்பவத்திலும் குற்றம் சாட்டப்பட்டார், “என்று அவர் தெரிவித்தார்.

“அந்த நேரத்தில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் பின்னர் படுகொலையின் பின்னணியில் உள்ள சதித்திட்டத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கபூர் விசாரணை கமிஷன் ‘சாவர்க்கரும் அந்த சதியின் ஒரு பகுதி’ என்று தனது அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.”

“இந்த அரசு செயல்படும் முறையை பார்த்தால், அது சாவர்க்கர் மற்றும் கோல்வால்கர் வகுத்த கொள்கைகளின்படி இயங்குவதை நீங்கள் காணலாம். மேலும் அந்த கொள்கைகள் மதச்சார்பற்ற ஜனநாயகத்தின் கருத்துக்கு எதிரானவை. எனவே சாவர்க்கரின் பிறந்தநாளில் நாடாளுமன்றத்தை திறப்பதன் மூலம் ஜனநாயகக் கொள்கைகளை விட அந்தக் கொள்கைகளைத்தான் போற்றுகிறோம் என்ற செய்தியை அனுப்ப அரசு முயல்கிறது,” என்றார் ஜா.

பிரதமர் மோதி திறந்து வைக்கலாமா?

“புதிய நாடாளுமன்றத்தை குடியரசுத்தலைவர்தான் திறந்து வைக்கவேண்டும் என்று நான் கருதுகிறேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை.” என்று திரேந்திர ஜா கூறுகிறார்.

மறுபுறம், சாவர்க்கர் அசாதாரண புத்தி கூர்மை கொண்டவர் என்றும் அவர் மகாத்மா காந்தியிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் என்றும் ஏ. சூர்யபிரகாஷ் கூறுகிறார்.

“உதாரணமாக மகாத்மா காந்தி சாதி அமைப்புக்கு எதிரானவர் அல்ல. சாவர்க்கர் சாதி அமைப்பை கடுமையாக எதிர்த்தார். சாவர்க்கர் தீண்டாமைக்கு எதிராகவும், சாதி அமைப்பை ஒழிப்பதற்காகவும் குரல் கொடுத்தார். இந்து சமுதாயத்தில் இருக்கும் சடங்குகளை எதிர்த்தார். மிகவும் வலுவான மற்றும் நவீன தேசத்தை உருவாக்கவும், அறிவியலின் முன்னேற்றத்தையும் அவர் விரும்பினார். கூடவே நாட்டின் ராணுவமயமாக்கலையும் ஆதரித்தார்,” என்று அவர் குறிப்பிட்டார்.

மகாத்மா காந்தியின் சீடர்கள் சாவர்க்கரை முற்றிலுமாக எதிர்த்தார்கள் என்று சூர்யபிரகாஷ் கூறுகிறார். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்துவரும் சவாலைக் கருத்தில் கொண்டு, சாவர்க்கரின் சிந்தனைகளையும் அவரது அரசியல் சித்தாந்தத்தையும் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

“சாவர்க்கரின் அசாதாரண புத்திகூர்மையை ஒப்புக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பே அவர் பரிந்துரைத்த விஷயங்கள் இவை.” என்றார் அவர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி ஆகியோரும் சாவர்க்கரைப் புகழ்ந்து பல விஷயங்களை கூறியுள்ளனர். சாவர்க்கருக்கு லட்சக்கணக்கானவர்களை ஊக்குவிக்கும் திறன் இருந்தது என்று சூர்யபிரகாஷ் தெரிவித்தார். “நேருவின் தொண்டர்கள் மற்றும் காந்தியவாதிகள் தொடர்ந்து அவரது பாரம்பரியத்தை புதைக்க முயன்றனர்”. அவர் கூறுகிறார், “இதை எங்களால் அனுமதிக்க முடியாது. சாவர்க்கரின் பங்களிப்பை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.”என்று அவர் கூறினார்.

மகாத்மா காந்தியை கொலை செய்ய சதி செய்ததாக குற்றச்சாட்டு

நாடாளுமன்றம்

Caption- மகாத்மா காந்தியைக் கொல்லும் சதித்திட்டத்தில் சாவர்க்கர் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

மகாத்மா காந்தியைக் கொல்லும் சதித்திட்டத்தில் சாவர்க்கர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு, அவர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

ஆனால் இறுதியில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்பட்டார். நீதிமன்றம் சாவர்க்கரை குற்றமற்றவர் என்று கூறி விடுதலை செய்தது என்று இன்று சிலர் சொல்கிறார்கள். ஆனால் நீதிமன்றம் அவரை மரியாதையுடன் விடுவிக்கவில்லை என்கிறார் துஷார் காந்தி.

“குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பிறகும் அரசு தரப்பு ஏன் போதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம் என்று நீதிமன்றம் மிகவும் தெளிவாகக்கூறியது. சாவர்க்கருக்கு எதிராக அரசுத் தரப்பு முன்வைத்த இரண்டு சாட்சிகளும் மிகவும் பலவீனமாக இருந்ததால், எதிர் தரப்பினர் மிக எளிதாக அவர்கள் மீது சந்தேகத்தை எழுப்பிவிட்டனர்.”

“நீதிமன்றம் அவரை விடுவித்தது என்று சொல்கிறார்கள். ஆனால் போதுமான ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாததால் அவ்வாறு நடந்தது. ஒருவர் நிரபராதி என நிரூபிக்கப்படுவதற்கும், ஆதாரம் இல்லாததால் ஒருவர் விடுவிக்கப்படுவதற்கும் வித்தியாசம் உள்ளது,”என்று துஷார் காந்தி சுட்டிக்காட்டினார்.

டெல்லியின் ஒரு நீதிமன்றம் முழு விஷயத்தையும் விசாரித்ததாகவும், சாவர்க்கர் குற்றவாளி இல்லை என்று கூறியதாகவும் ஏ. சூர்ய பிரகாஷ் தெரிவித்தார்.

“நேருவின் தொண்டர்களும் காந்தியவாதிகளும் எப்படியாவது சாவர்க்கரை காந்தியின் கொலையில் சிக்க வைக்க விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மகாத்மா காந்தியைக் கொல்ல வேண்டும் என்று சாவர்க்கர் எங்கும் சொல்லவில்லை. உண்மையில் தனக்கு உடன்பாடு இல்லாதவர்கள் மீதான வன்முறைக்கு அவர் எதிராக இருந்தார்.”

“காந்தி படுகொலை வழக்கு விசாரணையில் எந்த ஆதாரமும் இல்லை என்பது நீதிபதியின் முடிவு. ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியாகிவிட்டால் அந்த வழக்கு முடிந்துவிட்டதாகவே பொருள். எனவே மகாத்மா காந்தியின் கொலையில் சாவர்க்கருக்குப் பங்கு உண்டு என்று யாரேனும் கூறுவது மிகவும் நியாயமற்றது.”

தற்செயல் நிகழ்வு அல்ல, நன்கு யோசித்து எடுத்த முடிவு

நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு சாவர்க்கரின் பிறந்த தேதியை அரசு தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை. அது எதிர்பார்த்ததுதான் என்கிறார் துஷார் காந்தி.

கேள்விக் குறிகளால் சூழப்பட்ட ஒருவரின் பிறந்தநாளை ஜனநாயகத்தின் பிரகாசமான உதாரணத்தின் திறப்பு விழாவுடன் இணைப்பது தற்செயல் நிகழ்வு அல்ல, அது திட்டமிட்டு செய்யப்பட்டது என்கிறார் அவர்.

“இந்த முழு அத்தியாயமும் முட்டாள்தனமானது. புதிய நாடாளுமன்றத்தை கட்டுவதற்கு இவ்வளவு பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. தான் பெருமை கொள்ளக்கூடிய ஒரு நினைவுச்சின்னம் வேண்டும் என்பது பிரதமரின் மெகாலோமேனியா” என்று அவர் கூறினார்.

புதிய நாடாளுமன்றக் கட்டட திறப்பு விழா ”இந்தியாவைப் பற்றிய அவரது கண்ணோட்டத்தை முன்னிறுத்தும் முயற்சி” என்கிறார் துஷார் காந்தி.

“புதிய நாடாளுமன்றத்தில் கட்டப்பட்டுள்ள சாரநாத்தின் அசோகா தூணில் இருக்கும் சிங்கங்கள், மனிதனை உண்ணும் சிங்கங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. அசல் நினைவுச்சின்னத்தில் சிங்கங்கள், சக்தியின் சின்னங்களாக இருந்தன, அவை பயமுறுத்துவது போல இல்லை. ஆனால் ஒரு தவறான ஆண்மை உருவத்தை வெளிப்படுத்தும் ஆசை காரணமாக அதுவும் மாற்றப்பட்டது. எனவே எல்லாவற்றிலும் மாற்றத்தை கொண்டு வர வேண்டியதன் அவசியத்தின் பிரதியாகவே இந்த புதிய நாடாளுமன்றம் உள்ளது.”

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கான தேதி தற்செயலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அது சாவர்க்கரின் பிறந்தநாள் என்பது பிறகுதான் தெரியவந்தது என்பது ஒப்புக்கொள்ளமுடியாதது என்று துஷார் காந்தி கருதுகிறார். ”இந்து தேசத்தின் அடையாளமாக இருக்கப் போகிறது என்று ஒரு செய்தி வரும் வகையில் அந்தத் தேதியில் வேண்டுமென்றே நாடாளுமன்றம் திறக்கப்படுகிறது. இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்குமா அல்லது இந்து நாடாக மாறுமா என்பதன் அடிப்படையில் 2024-ம் ஆண்டின் தேர்தல் போட்டியிடப்படும். அதன் ஆரம்பம் இந்த வழியில் செய்யப்படுகிறது.” என்று அவர் குறிப்பிட்டார்.

இதில் இருக்கும் அரசியல் என்ன?

நாடாளுமன்றம்
,சாவர்க்கர் தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே பாஜக அதை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்த விரும்புகிறது.

சாவர்க்கரை தேசிய அடையாளமாக உருவெடுப்பதை ஊக்குவிக்க அரசு முயற்சிக்கிறது. ஒரு சில காரணங்களால் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சாவர்க்கருக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது என்று நீலாஞ்சன் முகோபாத்யாய் கூறினார்.

சாவர்க்கர் தொடர்பாக எதிர்க்கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதால், அதை பாஜக தனது சொந்த நலனுக்காக பயன்படுத்த விரும்புவதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மக்களவையில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு ராகுல் காந்தி தனது முதல் செய்தியாளர் சந்திப்பில், “என் பெயர் சாவர்க்கர் அல்ல. என் பெயர் காந்தி. காந்தி மன்னிப்பு கேட்கமாட்டார்” என்று கூறினார்.

சாவர்க்கரை அவமதிப்பதை தங்கள் கட்சி பொறுத்துக்கொள்ளாது என்று இந்த அறிக்கைக்குப் பிறகு உத்தவ் தாக்கரே கூறினார். என்சிபி தலைவர் ஷரத் பவாரும் இது குறித்து ராகுல் காந்தியிடம் பேசியதாகவும், இதுபோன்ற கருத்துகளை கூற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகின.

தேர்தல் அரசியல் தொடர்பான காரணங்களுக்காக சாவர்க்கர் பெரும்பாலும் ஆதரிக்கப்படுகிறார் என்று. நீலாஞ்சன் முகோபாத்யாய் கூறுகிறார்.

“புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை எதிர்ப்பவர்களை சாவர்க்கருக்கு எதிரானவர்கள் என்று கூற பாஜக முயற்சிக்கும். ஆனால் எதிர்க்கட்சிகளும் ஒரு தந்திரம் செய்துள்ளன. இதை பிரதமர் திறந்து வைக்கிறார் என்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அவர்கள் வலியுறுத்துகிறார்கள். சாவர்க்கரின் பிறந்தநாள் ஒரு தற்செயல் நிகழ்வு என்பது தொடர்பாக அவர்கள் மௌனம் காக்கிறார்கள்.”

இந்த முழு விஷயத்திலும் அரசியல் தலையீடு இருப்பதை திரேந்திர ஜா மறுக்கவில்லை.

“உத்தவ் தாக்கரே அல்லது சிவசேனையை மீண்டும் தனது பக்கம் கொண்டு வருவது அரசின் நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால் வரலாற்றின் பார்வையில் பார்த்தால், செய்யப்படும் அனைத்துமே, சாவர்க்கரும் கோல்வால்கரும் அளித்த, மோதி பின்பற்றுகின்ற அந்த பாஸிஸக் கொள்கைகளை நிறுவும் நோக்கத்தைக்கொண்டது என்பது தெரியவருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

Previous Story

சரத் பாபு மறைவு

Next Story

சாத்தான் கோவில்: பைபிளை கிழிக்கும் இவர்கள் யார்?