0.4% வாக்குகளில் தவறவிட்ட எர்டோகன்

A poster of Turkish President and People's Alliance's presidential candidate Recep Tayyip Erdogan, left, on a truck near to an election poster of Turkish CHP party leader and Nation Alliance's presidential candidate Kemal Kilicdaroglu in Istanbul, Turkey, Monday, May 8, 2023. (AP Photo/Khalil Hamra)

அங்காரா: துருக்கி அதிபர் எர்டோகன் தனது அரசியல் பயணத்தில் மிகக் கடினமான தேர்தலை எதிர்நோக்கி இருக்கிறார். துருக்கி பொதுத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 50% வாக்குகள் தற்போதைய அதிபர் எர்டோகன் உட்பட யாருக்கும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து துருக்கியில் வரும் 28-ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படவுள்ளது.

69 வயதாகும் தய்யீப் எர்டோகன் கடந்த 2003-ஆம் ஆண்டு முதல் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார். 2003 முதல் 2014 வரை துருக்கியின் பிரதமராக இருந்த அவர், 2014-ஆம் ஆண்டு அப்பதவியை கலைத்து நாட்டின் உச்ச அதிகாரமாக அதிபர் பதவியை கொண்டு வந்தார். அதன்பிறகு தற்போது வரை துருக்கியின் அதிபராக அந்நாட்டை ஆட்சி செய்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி துருக்கி – சிரிய எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர பூகம்பங்களால் 50,000-க்கும் அதிகமானோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். இந்த பூகம்பத்தின்போது மீட்புப் பணிகளை சரிவர முடுக்கிவிடவில்லை என்று அதிபர் எர்டோகன் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். பொருளாதார ரீதியாகவும் எர்டோகன் மீது மக்களிடையே எதிர்ப்பு அலை இருந்தது.

இதையடுத்துதான், துருக்கி அதிபர் எர்டோகனுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்று திரண்டு துருக்கியின் காந்தி என்று அழைக்கப்படும் குடியரசு மக்கள் கட்சியை சேர்ந்த கெமல் கிளிக்டரோக்லுவை எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக தேர்ந்தெடுத்தனர்.

இந்தச் சூழலில் பெரும் பதற்றத்துக்கிடையே நேற்று (மே 15) துருக்கி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகளும், கெமல் கிலிக்டரோக்லு 44.7% வாக்குகளும், தேசியவாத வேட்பாளர் சின ஒகன் 5.2% வாக்குகளும் பெற்றுள்ளனர்.

துருக்கியின் அரசியல் வழக்கம்படி தேர்தலில் 50% வாக்குகளை பெற்றால்தான், அது பெரும்பான்மை. அந்த வகையில் 0.4% வாக்குகள் குறைவாக பெற்றதால், பெரும்பான்மையை எர்டோகன் தவறவிட்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தச் சுற்று தேர்தல் துருக்கியில் மே 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்தல் குறித்து எர்டோகன் கூறும்போது, “இந்த வாக்குகள் தேசம் என் மீது நம்பிக்கை வைத்துள்ளதைக் காண்பிக்கிறது. மே 28-ஆம் தேதி தேர்தலில் வெற்றி பெற்று வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியைப் பெறுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

Previous Story

இஸ்ரேல் @75: முரண் முகங்கள் கொண்ட இந்த நாடு

Next Story

ச்சிங் ஷி: பாலியல் தொழில், தகாத உறவுக்கு பேர் போன சீன கடல் கொள்ளை ராணியின் 200 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு