கொரோனா வைத்தியர் கைவிரிப்பு! ஜனாதிபதிக்கு ஓர் பகிரங்கக் கடிதம்!

நஜீப் பின் கபூர்

ஒவ்வொரு வீடுட்குள்ளும்; கொரோனா புகுந்து விளையாடுகின்றது
கொரோனாவுடன் போராட தேசிய மட்டச் செயலணி அவசியம்
கொரோனா அரசுக்கோ எதிரணிக்கோ மந்திரத்துக்கு அடங்காது
சர்வ கட்சிக் கூட்டத்தை கூட்டுங்கள் எதிரணி கோசமிடுகிறது
மரணத்துக்கு பின்னரான கொரோனா சான்றிதழ் பெரும் சந்தேகம்

கொரொனாவை நாம் கட்டுப்படுத்தி விட்டோம் உலக நாடுகளுக்கே நாம் இது விடயத்தில் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கின்றோம் என்று நமது சுகாதார அமைச்சர் மார்தட்டிக் கொண்டிருந்த நாட்களில் நமது நாட்டில் கெரோனா கட்டுக்குள் இருப்பது கடவுள் பார்க்கும் புன்னியமா அல்லது ஜனாதிபதி ஜீ.ஆர். திறமையா என்று துவக்க காலத்தில் ஒரு கட்டுரையில் நாம் கேள்வி எழுப்பி இருந்தோம்.

இப்போது சுகாதார அமைச்சில் பணிபுரிகின்ற வைத்திய நிபுணர்கள் சொல்லி இருக்கின்ற சில கருத்துக்கள் கொரோனா விவகாரத்தில் யதார்த்தத்தை நமக்குக் கோடிட்டுக் காட்டி இருக்கின்றது. இதில் அரசாங்கமோ அல்லது வைத்தியத் துறையோ பார்க்கக் கூடிய எந்த காரியங்களுமில்லை என்பது வைத்தியத் துறை நிபுணர்கள் கருத்துதாக இருக்கின்றது.

அவர்களில் ஒருவர் தெரிவித்த வார்த்தைகளை நாம் அப்படியே இங்கு பதிகின்றோம். பொது மக்கள் யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். கொரோனா விடயத்தில் சொல்லப்படுவது போல் நாமோ வைத்தியத்துறையினரோ செய்வதற்கு பெரிதாக எதுவும் கிடையாது. இதற்கு மருந்தும் கிடையாது தடுப்பூசியும் கிடையாது. வைத்தியமும் கிடையாது நீங்கள் எந்தளவு உங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றீர்களோ இந்த நாட்களில் சமூகத்தில் இருந்த விலகி நிற்க்கின்றீர்களோ அதில் தான் உங்கள் பாதுகப்பு தங்கி இருக்கின்றது.

வைத்தியசாலைக்கு நீங்கள் கொரோனாவுடனோ அல்லது அந்த சந்தேகத்துடனோ வந்து விட்டீர்கள் என்பதற்காக உங்கள் உயிர்களுக்குப் பாதுகாப்பு என்று கருதிவிட வேண்டாம் என்பதுதான் அவர்கள் சமூகத்துக்கு சொல்லுகின்ற உபதேசமாக இருந்து வருகின்றது. எனவே உலகின் விஞ்ஞானத்தின் உச்சியில் இருக்கின்றோம் என்று சொல்லிக் கொள்கின்ற மேற்கத்திய நாடுகளிலேயே குறிப்பாக அமெரிக்காவிலே இந்தக் கொரோனா இன்றும் பெரும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது. அங்கு கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை நாளொன்றுக்கு ஒரு இலட்சத்துக்கும் மேலாக இருந்து வருகின்றது அதே நேரம் நாளொன்றுக்கு மரண எண்ணிக்கை 1000க்கு மேல்.

எனவே ஒரு சமயம் ஜே.ஆர். சொன்னது போல் எனக்கு எவரையும் பாதுகாக்க முடியாது அவர் அவரே உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தார் இன்றும் இந்த வார்த்தைகள் அரசியல் வட்டாரங்களில் அவ்வப்போது பேசப்பட்டு வருகின்றது. அந்த நிலைதான் இந்தக் கொரோனா விவகாரத்திலும் இருக்கின்றது. சுகாதார அமைச்சர் என்னதான் கொரோனா விவகாரத்தில் நாம் உலகுக்குப் பாடம் கற்றுக் கொடுத்து விட்டோம் என்று சொல்லிக் கொண்டாலும் இதில் அரசாங்கமோ வைத்தியத்துறையோ குறிப்பாக விஞ்ஞானமோ இந்த கொரோனா விவகாரத்தில் கையாளாகாத நிலையில்தான் இருக்கின்றது.

அன்று கடவுள் புன்னியத்தாலோ அல்லது ஜனாதிபதியின் நிருவாகத் திறமையாலோ நாட்டில் கொரோனா கட்டுக்குள் இருக்கின்றது என்று ஒரு முறை நாமும் சொல்லி இருந்தோம். இன்று கடவுளும் நம்மைக் கைவிட்டு விட்டார் இராணுவ நிருவாகியாக இருந்து ஜனாதிபதியான ஜீ. ஆராலும் ஏதுவுமே பண்ண முடியாத நிலையில் வைத்தியர்களும் நீங்களே உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று பகிரங்கமாகவும் யதார்த்தமாகவும் பேசி வருகின்றார்கள்.

இந்த நிலையில் நாம் எமது அறிவுக்கு எட்டியவாறு சில கருத்துக்களை சொல்ல விரும்புகின்றோம். அரசாங்கமும் கொரோனா விவகாரத்தில் சில தவறுகளைச் செய்து இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆனால் சுகாதார அமைச்சரோ பராளுமன்றத்தில் எவராவது கொரோனா என்று உச்சரித்து விட்டால் இருப்புக் கொள்ளாது துள்ளிக் குதித்துக் கொண்டு அடங்காப் பிடாறிபோல் பாய்ந்து பாய்ந்து பேசுகின்றார். இந்த சுகாதார தேவியின் சில கருத்துக்கள் இன்று நாட்டு மக்களிடத்தில் நகைச்சுவையாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது. வைத்தியர்கள்

இப்படிக் கை விரித்திருக்கின்ற சூழ்நிலையில் நமது சுகாதார அமைச்சர் இப்போது இந்தக் கொரோனாவை விரட்டியடிக்க மந்திரவாதிகள் பின்னால் ஓடித்திரிகின்ற நிலையும் நாட்டு மக்களுக்காக நான் கடலில் குதிப்பேன் என்று கூறுவதும் என்ன வேடிக்கையான கதைகள் என்று நாம் கேட்க்கின்றோம். பிரதமரும் மக்களை வழிபாடுகளில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள். எனவே அரசாங்கம் கொரோனா விவகாரத்தில் சுகாதாரத்துறையினர் மீது தனது நம்பிக்கையை இழந்து விட்டது என்பதனைத்தான் இந்தக் கதைகளில் இருந்து நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. எனவே கொரோனா விடயத்தில் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறுமளவுக்கு நிலமை மோசமாகி விட்டது.

கொரோன மரணங்கள் தினம் தோரும் நடக்கின்ற அளவுக்கு ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றது. எதிர்க் கட்சித் தலைவர் சஜித்தும் சுகாதார அமைச்சரும் இது விடயத்தில் பாராளுமன்றத்தில் வழக்கமாக முட்டி மோதிக் கொள்கின்றார்கள். அவர்களது வார்த்தைகளும் விவாதாங்களும் சிறு பிள்ளைத் தனமானதாக இருந்து வருகின்றன. கொரோனா தொடர்பில் ஆரோக்கியமான தீர்மானம் ஒன்றுக்கு இன்று வரை நமது பாராளுமன்றம் வரவில்லை என்று நாம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றோம். ஜேவிபி தலைவர் அணுர குமார திசாநாயக்க இந்த கொரோனா எதிர் காலத்தில் மிகப் பெரிய ஆபத்தை நாட்டில் ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கின்றார். இது ஒரு இனம் சமயம் சார்ந்த பிரச்சினை அல்ல

சிறுபான்மை சமூகங்களும் இதனை ஒரு பொதுவான பிரச்சினையாகத்தான் பார்க்கின்றது. எனவே எமது பார்வையில் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகள் இது விடயத்தில் உணர்வுபூர்வமாக இல்லை என்பது போல்தான் நடந்து வருகின்றன. இதனை அரசாங்கம் பார்க்கட்டும் என்பது போல் நமக்குத் தெரிகின்றது. உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் வாழ்வதற்கும் நாடும் மக்களும் இருக்க வேண்டும் எனவே கொரோனா நாட்டை அழித்துக் கொண்டு வருகின்றது. பொருளாதாரம் பாதாளத்தில் இடிந்து சரிந்து விட்டது.

ஆளும் தரப்பு எதிரணி என்று இந்தப் பிரச்சினையை பார்க்கக் கூடாது. இது ஒட்டு மொத்த சமூகப் பிரச்சினை, உலகப் பிரச்சினை என்றுதான் பார்க்க வேண்டும். ஆளும் தரப்பு எதிரணி சிறுபான்மை பெரும்பான்னை என்று கொரோனா விரட்டுவைதில்லை. அது உலக மக்களையே சாகடிப்பதற்காக தேடி மூளை முடுக் கெல்லாம் பாய்ந்து கொண்டிருக்கின்றது. அது நம் ஒவ்வொரு வீடுகளிவும் கதவைத்தட்டிக் கொண்டிருக்கின்றது அல்லது புகுந்து விட்டது. நாட்டில் எந்த ஒரு மனிதனாவது இந்தக் கொரோனாவை மறந்து வாழ முடியாத நிலை. எனவே இந்தப் பிரச்சினை விவகாரத்தில் ஒட்டுமொத்த மனித வர்க்கமும் ஓரணியில் திறள வேண்டும் என்பது எமது அழைப்பாகும்.

இந்த விவகாரம் தொடர்பாக நமது வார இதழ்லூடாக நமது ஜனாதிபதிக்கு ஒரு பகிரங்க கடிதத்தை வரைகின்றோம்.

மேன்மை தாங்கிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஸ அவர்களுக்கு!
அரசியல் விவகாரங்களுக்கு அப்பால் கொரோனா இன்று ஒட்டுமொத்த உலகத்தையும் நாசம் பண்ணிக் கொண்டிருக்கின்றது. நமது நாடுகூட இன்று பெரும் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றது தொற்றாளர்களின் எண்ணிக்கையும் மரணங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அரசியல் காரணங்களுக்காக இது விடயத்தில் தங்கள் மீதே அரசங்கத்தின் மீதே அதற்காக குற்றம் சாட்டுவது நியாயமனது என்று நாம் கருதவில்லை. என்றாலும் அரசாங்கத் தரப்பில் பல குறைபாடுகளும் கேலியான நடவடிக்கைகளும் நடந்து வருவதை தாங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள்.

எதிரணியினர் ஏதோ இது அரசங்கம் விட்ட தவறால் நடப்பது போல் ஒரு கருத்தை மக்கள் மத்தியில் சந்தைப்படுத்த சிலர் முனைகின்றார்கள். எனவே தேசம் மக்கள் என்று சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விவகாரம் இன்று அரசியல் காரணங்களுக்காக கொரோனா ஒரு உதைப்பந்தாட்டப் போட்டி போல் நமது அரசியல் அரங்கில் பார்க்கப்படுகின்றது. ஆனால் இதில் யாருக்கும் வெற்றி கிடைக்கப் போவதில்லை. அனைவருக்கும் அழிவு என்றுதான் இதன் முடிவு அமையும்.

எனவே கொரோ விவகாரத்தில் நீங்கள் இதனை ஒரு தேசியப் பிரச்சினையாக மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்ல அதற்கான ஒரு பொது வேலைத் திட்டத்தை வடிவமைக்க வேண்டும். அந்த வேலைத் திட்டம். இந்த நாட்டிலுள்ள அனைத்து பிரிவினரையும் உள்வாங்கியதான வேலைத் திட்டமாக அமைய வேண்டும் என்று நாம் தங்களுக்கு சிபார்சு செய்கின்றோம். முதலில் அப்படியான ஒரு வேiலைத் திட்டத்தில் நீங்கள் நாட்டமுள்ளவராக இருப்பீர்களானால் நீங்கள் தூய்மையாகவும் நடுநிலையாகவும் இருப்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது எமது கருத்து.

அதன் பின்னர் உங்கள் தலைமையில் பாராளுமன்றத்திலுள்ள அனைத்து தரப்பினரையும் உள்வாங்கிய ஒரு செயலணிக்கு நீங்கள் தலைமைத்துவம்; கொடுக்க வேண்டும். அங்கு அனைத்துத் தரப்பினரினதும் சம்மதத்துடன் இதற்கான ஒரு பொது வேலைத் திட்டத்தை துறைசார் நிபுணர்களின் துணையுடன் நீங்கள் அவசரமாக வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

கட்சிகளின் தனிப்பட்ட விருப்பு வெருப்புக்களுக்காப்பலான ஒரு பொது வேலைத் திட்டமாகவும் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் இது அமைய வேண்டும்.

அதே போன்று இந்த நாட்டிலுள்ள அனைத்து மதப் பெரியார்களையும் உள்ளடக்கிய சபையை இதற்காக உருவாக்கி அவர்களின் ஒத்துழைப்பையும் நீங்கள் பெற்றுக் கொள்வது சிறப்பாக இருக்கும்.

மேலும் அரசியல் சமயக் அமைப்புக்களுக்கு அப்பால் சிவில் அமைப்புக்களையும் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் பெற்றுக் கொள்ளாத கட்சிகளையும் உள்வாங்கிய அமைப்பொன்றையும் உருவாக்கிக் கொண்டு வைத்தியத் துறையினது ஒத்துழைப்புடன் இதற்கு முகம் கொடுக்கின்ற வேலைத் திட்டமொன்றை நீங்கள் உடனடியாக வடிவமைப்பது சிறப்பாக இருக்கும் என்று நாம் கருதுகின்றறோம்.

கொரோனா தவிர்ந்த ஏனைய விடயங்களில் அதன் போக்கு இயல்பாக இருக்கட்டும். இது விடயத்தில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் நாட்டு மக்களிடத்தில் இதற்கான பகிரங்க அழைப்பை நீங்கள் விடுக்கலாம்.

இது ஒரு அரசங்கத்தின் பிரச்சினையோ அல்லது எதிரணியின் பிரச்சினையோ அல்ல. உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனுடைய பிரச்சினையுமே இது. அது நமது நாட்டுக்கும் பெரும் பிரச்சினை. எனவே இதனை தேசிய பிரச்சினையாகப் பிரகடனப்படுத்துவதில் எந்தக் கௌரவப் பிரச்சினையும் யாருக்கும் ஏற்படப் போவதில்லை. எனவே கெரோனாவுக்கு எதிரான தேசிய செயலணியொன்றை அமைக்கின்ற விவகாரத்தில் நாட்டினதும் குடிகளினதும் நலன் கருதியே நாம் இந்தக் கட்டுரை ஊடாக உங்களுக்கு பகிரங்கமாக இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம். எதிர்த் தரப்பு சொல்வது போல் இது கட்சிகளின் பிரச்சினையல்ல.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் கூட தற்போது கோரோன தனிமைப்படுத்தலுக்கு இலக்காகி இருக்கின்றார். அவருக்குக் கூட தடுப்பூசியும் இல்லை மருந்தும் இல்லை பார்க்க எந்த வைத்தியமும் கிடையாது. அவர் நிலையே இப்படி இருக்கும் போது நாம் இது பற்றிப் பேசுவதற்கு என்ன இன்னும் எஞ்சி இருக்கின்றது. இதனைத்தான் நமது வைத்தியத் துறையினரும் கேட்க்கின்றார்கள். இதுதான் கொரோனா விவகாரத்தில் யதார்த்த நிலை. வைத்தியத்துறையினரின் பேச்சில் எந்தத் தப்பும் கிடையாது. உலகத்தின் நிலையும் இதுதான்.

எத்தனை முறை இன்று மருந்து தருகின்றோம் நாளை தருகின்றோம் என்று அபிவிருத்தி யடைந்த நாடுகள் நமக்குச் சொல்லி விட்டன. ஏன் நமது நாட்டில் கொரோனாவுக்கு ஆயுல் வேத மருந்து கண்டு பிடித்துவிட்டார்கள் என்றும் நமது அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் கொக்கரித்ததும் நமக்கு இன்னும் நன்றாக நினைவில் இருக்கின்றது. எனவே இன்று வரை கொரேனாவுக்கு மருந்து கிடையாது. நீங்களே உங்கள் உயிர்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் அதற்கான மார்க்கம் எவை என்பதுதான் இன்று நாம் முடிவு கட்டிக் கொள்ள வேண்டிய விவகாரமாக இருந்து கொண்டிருக்கின்றது.

இந்தக் கெரோனா பல உருவங்களில் நடமாடுகின்றது. இன்னும் பலருக்கு எந்த அறிகுறியும் இல்லாமலும் இருக்கின்றது. சிலருக்கு நோய் தொற்றித் தானாகவே அது அழிந்து போய் விடுகின்றது. இளவயதுக்காரர்களுக்கு தொற்றும் போது இது தானாக செயலிழக்கின்ற அதே நேரம், அவர்களுடன் இருக்கின்ற முதியவர்களுக்கும் மற்றும் பலயீனமானவர்களுக்கும் ஏனைய நோய்களால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் அது தொற்றி அவர்களது உயிர்களுக்கு உலை வைத்து விடுகின்றது. எனவே ஒவ்வொரு வீடுகளுக்குள்ளும் கொரோன புகுந்து விளையாடுகின்றது என்பதுதான் உண்மை. ஒட்டு மொத்த நாடும் உலகமும் கொரோனா மரணத்துக்கு அஞ்சிக் கொண்டிருக்கின்றது. கடவுள் கோட்பாடுகளைக் காதில் வாங்கிக் கொள்ளாதவர்கள் கூட கெரொனா தன்னை பீடித்து வீடுமே என்று அதக்கு அஞ்சுக்கின்ற ஒரு நிலை. இன்று தோன்றி இருக்கின்றது.

இப்போது நாட்டில் கொரோனா மரணங்கள் தினந்தோரும் அதிகரித்து விட்டன. ஒரே நாளில் 5 மரணங்கள் இந்தக் கட்டுரையைத் தயாரிக்கின்ற போது நடந்திருக்கின்றது. அதே வேளை மரணத்தின் பின்னர் வழங்கப்படுகின்ற கொரேனா சன்றிதழ்கள் தொடர்ப்பில் பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து கொள்வதற்கு குடிமக்களுக்கு எந்த மாற்று வழிகளும் இல்லை. ஏறக்குறைய மரணமானவர்களின் அரைப் பங்கினர் முஸ்லிம்களுடையதாக இருக்கின்றது. இது ஒரு பலி வாங்குகின்ற செயலா அல்லது அவர்களை கொச்சசைப்படுத்துவதற்கான அந்த மரணங்களுக்கு கொரோனா சன்றிதழ்கள் வழங்கப்படுக்கின்றதா என பலத்த சந்தேகம் முஸ்லிம்கள் மத்தியில் இன்று நிலவுகின்றது.

அதே நேரரம் உலகில் எங்குமில்லாதவாறு இங்கு கொரோனா முத்திரை குத்தப்பட்டு முஸ்லிம் சடலங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதற்கு விஞ்ஞான ரீதியில் எந்த நியாயங்களும் இல்லை என்பதுதான் சர்வதேசக் கருத்ததாக இருக்கின்றது. இப்போது முஸ்லிம் சமூகத்தில் ஆளுக்கால் இந்த மரணங்களை எறிக்க வேண்டாம் என்று குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது நான் சொல்லித்தான் மரணங்களை எறிப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டார்கள் என்று பரப்புரை செய்வதற்கான முன்னேற்பாடாகத்தான் இது நடக்கின்றது.

பாராளுமன்றத்தில் இது பற்றி பேசுகின்ற நீதி அமைச்சர் அலி சப்ரி இது பற்றி அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க ஒரு குழுவை அமைத்திருக்கின்றது. அந்தக் குழு இது விடயத்தில் ஒரு தீர்மானத்தை எடுத்து விரைவில் நமக்கு தனது முடிவைச் சொல்லும் என்று குறிப்பிட்டார். ஆனால் நமக்குத் தெரிந்தவரை இந்தக் குழு தொடர்பில் எந்தத் தகவல்களும் இல்லை. எனவே இப்படியான ஒரு குழு நியமிக்கப்பட்டிருக்கின்றதா என்பதில் கூட எமக்கு சந்தேகங்கள் இருக்கின்றன.

அப்படியானால் அந்தக் குழு தனது அறிக்கைளை எப்போது வழங்கும்? மேலும் இந்தக் குழு சதாகமான அறிக்கையை முஸ்லிம் சமூகத்துக்கு கொடுத்தாலும் கடும்போக்கு பௌத்த குழுக்கள் அதனை எதிர்ப்பதற்கு நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே முஸ்லிம்கள் இது விடயத்தில் பெரிய எதிர்பார்ப்புக்களை வைத்துக் கொள்வது எந்தளவுக்கு ஏற்புடையது என்று எமக்குப் புரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

பொம்பியோ ஓட்டமும் சீனாவினது சீற்றமும் அரசு தடுமாறுகின்றது!

Next Story

ட்ரம்ப் கதை கந்தல் பைடன் சாதிப்பாரா?