பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆண்கள் எங்கு, எப்படி புகார் தெரிவிப்பது?

-பிரமிளா கிருஷ்ணன்-

சென்னையில் உள்ள மத்திய அரசு நிறுவனமான கலாக்ஷேத்ரா நாட்டியப்பள்ளி மாணவர் சந்துரு(பெயர் மாற்றப்பட்டுள்ளது)நாட்டியம் கற்றுக்கொள்வதை தனது கனவாகக் கொண்டிருந்தார். கடந்த சில மாதங்களில் நாட்டியப்பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மூலம் அவருக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக தனக்கு விருப்பமான நாட்டியப்படிப்பில் ஆர்வம் மிகவும் குன்றிப்போனதாகச் சொல்கிறார்.

ஒரு கட்டத்தில் நாட்டியப்பள்ளியின் உள் புகார்கள் விசாரணைக் குழுவிடம் புகார் அளித்தபோது, அவரது புகாரை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், விசாரிக்க முடியாது என்றும் பதில் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

”பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து விசாரிக்கும் உள் புகார்கள் விசாரணைக் குழுவில்(Internal complaints committee) பெண்களின் புகார்தான் ஏற்றுக்கொள்ளப்படும், ஆண் மாணவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்று சொல்லிவிட்டார்கள். எங்களுக்கு யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லை,”என்று வருத்தத்துடன் பேசுகிறார் சந்துரு.

தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் எந்த வகையில் அமைந்தது என்றும் புகார் கொடுத்தபோது எப்படி மேலும் குழப்பம் அதிகரித்தது என்றும் கூறுகிறார் அவர்.

”ஒரு ஆசிரியர் நடு இரவில் எனக்கு மெசேஜ் அனுப்பினார், வீட்டுக்கு வரட்டுமா என்று என்னிடம் கேட்டார். எனக்குப் பதற்றமாக இருந்தது, உடனே சில நிமிடங்களில் வீடியோ காலில் வா உன்னை முழுமையாகப் பார்க்கவேண்டும் என்று பாலியல் ரீதியாகப் பேசத் தொடங்கிவிட்டார். எனக்கு காய்ச்சல் வந்துவிட்டது. எனக்கு நானே தைரியம் வரவழைத்துக் கொண்டு புகார் கொடுத்தபோது, மாணவிகளின் புகார்களைத்தான் நிர்வாகம் விசாரிக்கும், ஆண் மாணவர்கள் அளிக்கும் புகாரை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்கள். நான் என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை,”என்கிறார் சந்துரு.

ஆண்களின் புகாரை ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை?

முதலில், கலாக்ஷேத்ரா நாட்டியப்பள்ளியில் உள் புகார்கள் விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த உறுப்பினரான வழக்கறிஞர் அஜிதாவிடம் பேசினோம். கலாக்ஷேத்ராவில் உள்ள மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகப் புகார் அளித்தபோது அதனை உள் புகார்கள் விசாரணைக் குழு, விசாரிக்கமுடியாது என்று சொல்லப்பட்டது ஏன் என்று கேட்டோம்.

”பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் சட்டமாகத்தான் ‘ பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) சட்டம், 2013 செயல்படுத்தப்படுகிறது. இந்த சட்டத்தின்படி, பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்சனைகளை அந்தந்த நிறுவனத்தில் உள்ள உள் புகார்கள் விசாரணை குழு விசாரிக்கவேண்டும்.

இந்த சட்டத்தின் முழு நோக்கமே பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைக் களைவது என்பதுதான். இதில் ஆண்களுக்கு என்று தனிப்பட்ட முறையில் புகார் செய்வதற்கு வழி இல்லை. இதை’ ஜெண்டர் ஸ்பெசிபிக் ஆக்ட்’ (gender specific act)என்று சொல்வார்கள்-அதனால், ஆண்கள் புகார் தெரிவித்தபோது, அதனை விசாரிக்கமுடியவில்லை,” என்றார் அஜிதா.

பாதிக்கப்பட்ட ஆண்கள் புகார் செய்வது எப்படி?

பாலியல் புகார்

சந்துருவைப்போல இந்தியா முழுவதும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் ஆண்கள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகளை விசாரிப்பதற்குத் தனிப்பட்ட குழுக்கள் எதுவும் இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது. சந்துரு போன்றவர்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்? பாலியல் துன்புறுத்தலைச் சந்தித்த சந்துருவைப் போன்ற ஆண்கள் என்ன செய்யவேண்டும்? என்று சட்ட வல்லுநர்கள்,உயர்கல்வி நிறுவனங்களில் உள் புகார்கள் விசாரணைக் குழுவிலிருந்தவர்களிடம் கேட்டோம்.

பிபிசி தமிழிடம் பேசிய சென்னை சமூக பணிப்பள்ளியைச் சேர்ந்த பேராசிரியர் சக்தி ரேகா சமீப காலங்களில் பெண்கள் மட்டுமல்லாது திருநங்கை மாணவர்களின் புகார்களை உள் புகார்கள் விசாரணைக் குழு விசாரிக்கவேண்டும் என்ற அறிவுறுத்தல் உயர்கல்வி நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்கிறார். அவர் தற்போது அந்த பள்ளியின் உள் புகார்கள் விசாரணைக் குழுவின் உறுப்பினராக உள்ளார்.

1)பாதிக்கப்பட்டவர் ஆணாக இருந்தால், அந்த கல்வி நிறுவனம் அல்லது பணியிடங்களில் உள்ள குறைதீர்க்கும் குழு அல்லது ஒழுங்கு நடவடிக்கை குழுவில் புகார் தெரிவிக்கலாம்.

2)பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை எதிர்கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வை ஒவ்வொரு நிர்வாகமும் நடத்தவேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விழிப்புணர்வுக் குழுவில் உள்ள நபர்களிடம் ஆலோசித்து புகார் கொடுக்கலாம்.

3)நேரடியாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம்.

பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு பெண்கள் ஆணையம் காட்டிய வழி என்ன?

கலாக்ஷேத்ரா மாணவர்களின் புகார்களை தமிழ்நாடு பெண்கள் ஆணையமும் விசாரித்தது. ஆனால் அந்த ஆணையத்திலும் ஆண் மாணவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவி குமாரியிடம் பேசினோம். கலாக்ஷேத்ரா மாணவிகளைப் போல பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான ஆண் மாணவர்களின் புகார்களை பெண்கள் ஆணையமும் கையாளமுடியாது என்றபோது அவர்களுக்குச் சட்ட ரீதியாக எந்த வகையில் உதவ முடியும் என்று கேட்டோம்.

”பெண்கள் ஆணையத்தில் மாணவிகளின் புகார்களுடன் ஆண் மாணவர்களின் புகார்களும் வந்தன. அவர்களுக்கு நேரடியாக உதவ முடியவில்லை என்பதால், மாநில மனித உரிமை ஆணையத்திடம் விவரங்களைச் சொல்லி, அவர்களுக்குச் சட்ட ரீதியான உதவி கிடைக்க ஏற்பாடு செய்தோம். அதனால், கலாக்ஷேத்ரா போல பிற கல்வி நிறுவனங்களில் உள்ள மாணவர்கள் நேரடியாக மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கலாம், அதோடு காவல் நிலையத்திலும் புகார் தரலாம்,” என்று தெரிவித்தார்.

பாலியல் துன்புறுத்தலை கையாள்வதில் பாகுபாடு ஏன்?

கலாக்ஷேத்ரா

பாலியல் துன்புறுத்தல் என்பது பெண்களுக்கு மட்டும்தான் நடக்கும் என்ற கற்பிதம் சமூகத்தில் நிலவுவதாகக் கூறும் வழக்கறிஞர் சாந்தகுமாரி, மாணவர்களின் புகார்களைக் கல்லூரி நிர்வாகத்தில் உள்ள உள் புகார்கள் விசாரணைக் குழு விசாரிக்கவேண்டும் என்கிறார்.

2015ல் வெளியான பல்கலைக்கழக மானிய குழுவின் (University grants commission)வழிகாட்டுதலின்படி, பாலியல் துன்புறுத்தல் என்பதில் பெண்களுக்கு நேரும் நிகழ்வுகள் மட்டுமல்லாது, ஆண்கள் மற்றும் மாற்றுப் பாலினத்தவர்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை உள் புகார்கள் விசாரணைக்குழு விசாரிக்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது என்கிறார் சாந்தகுமாரி.

சென்னை பல்கலைக்கழகத்தின் உள் புகார்கள் விசாரணைக் குழுவின் உறுப்பினராக இருந்த சாந்தகுமாரி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்ற ஆய்வை நடத்தியதோடு, புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.

”புகார்களைப் பொறுத்தவரை பாதிக்கப்பட்ட நபர், அவர் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், மாற்றுப் பாலினத்தவராக இருந்தாலும் அந்தப் புகாரை விசாரிக்கவேண்டும் என்ற வழிகாட்டுதல் இருப்பதால், சட்டப்படி விசாரணை நடத்தமுடியும்.

பல்கலைக்கழக மானியக் குழு (உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் மீதான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுத்தல், தடை செய்தல் மற்றும் நிவர்த்தி செய்தல்) விதிமுறைகள், 2015ல், (3)(d) என்ற பிரிவில், பாலியல் பேதமின்றி பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகளைக் களையவேண்டியது உயர்கல்வி நிறுவனங்களின் பொறுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், உயர்கல்வி மாணவர்களுக்குச் சட்டத்தில் இடம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது,”என்கிறார்.

Previous Story

ஹைதராபாத் நிஜாமின் நீங்காத 'ஆசை'

Next Story

பூமிக்கு வருகிறது விண்வெளியில் விளைவிக்கப்பட்ட தக்காளி-நாசா