11 நிமிட நடைப்பயிற்சி அகால மரண ஆபத்தைக் குறைக்கும் – ஆய்வு

                                                                                               -பிலிப்பா ராக்ஸ்பி-

உடற் பயிற்சியின் பலன்களைப் பெறுவதற்கு நீங்கள் ஓட வேண்டும் என்பதோ, ஏதேனும் விளையாட்டில் ஈடுபடவேண்டும் என்பதோ இல்லை. தினசரி காலையில் கைகளை வீசி ஒரு நல்ல நடை நடந்தாலே அது போதுமானது என்கிறது பிரிட்டனில் நடந்த ஓர் ஆராய்ச்சி.

தினமும் குறைந்தது 11 நிமிடம் ஏதோ ஓர் உடல் சார்ந்த பயிற்சியில் ஈடுபடுவது பத்தில் ஒரு அகால மரணத்தை தடுக்கும் என்கிறது அந்த ஆய்வு.

குறைந்தபட்சமாக வாரத்துக்கு 150 நிமிட உடற் பயிற்சி பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால், பெரும்பாலானவர்கள் அதைக்கூட செய்வதில்லை.

ஆனால், ஏதோ கொஞ்சம் உடற்பயிற்சி செய்வது எதுவுமே செய்யாமல் இருப்பதைவிட சிறந்தது என்கிறார் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஓர் ஆய்வாளர்.

உடற்பயிற்சி

மிதமான உடற்பயிற்சி.

இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்யும் ஏதோ ஒரு உடல் சார்ந்த செயல்பாட்டில் வாரத்துக்கு 150 முதல் 300 நிமிடங்களுக்கு ஈடுபடுவது, அல்லது, வாரத்துக்கு 75 முதல் 150 நிமிடங்கள் கடுமையாக மூச்சு வாங்க வைக்கும் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது என்று பிரிட்டனின் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் பரிந்துரைக்கிறது.

உடல் சார்ந்த செயல்பாடுகள் அல்லது உடற்பயிற்சி குறித்த நூற்றுக்கணக்கான முந்தைய ஆய்வு முடிவுகளைப் பார்த்த ஆய்வுக் குழு, பரிந்துரைக்கப்பட்ட அளவில் பாதி உடற்பயிற்சி செய்தால்கூட இதய நோய் வருகிற 20 பேரில் ஒருவருக்கு அது தவிர்க்கப்படும் என்றும், புற்றுநோய் ஏற்படுகிற 30 பேரில் ஒருவருக்கு அந்நோய் ஏற்படுவது தவிர்க்கப்படும் என்றும் கண்டறிந்துள்ளது.

அந்த கணக்கீட்டின்படி வாரத்துக்கு 75 நிமிடம், அல்லது ஒரு நாளைக்கு 11 நிமிடம் சைக்கிள் ஓட்டுவது, வேகமாக நடப்பது, ஏறுவது, நடனமாடுவது, டென்னிஸ் விளையாடுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

“நீங்கள் நகர்ந்துகொண்டு இருக்கவேண்டும். இப்படி செய்தால், உங்கள் இதயம் வேகமாகத் துடிக்கும். ஆனால், உங்களுக்கு மூச்சும் வாங்காது,” என்கிறார் இந்த ஆய்வுக்கு தலைமை வகித்த டாக்டர் சோரன் ப்ரேஜ்.

தினசரி நடை

மேலே குறிப்பிட்ட அளவில் நீங்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவது இதய நோயோ, பக்கவாதமோ ஏற்படும் ஆபத்தை 17 சதவீதமும், புற்று நோய் ஏற்படும் ஆபத்தை 7 சதவீதமும் குறைக்க முடியும் என்கிறது ஆய்வு முடிவு.

தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடல் கொழுப்பையும், ரத்த அழுத்தத்தையும் குறைக்கும். அத்துடன் இதை நீண்ட காலம் செய்வது, உடற்தகுதி, தூக்கம், இதய நலம் ஆகியவற்றை மேம்படுத்தும்.

உடற்பயிற்சியில் ஈடுபடுவது கழுத்து, குடல், ரத்தப் புற்றுநோய், லுக்கீமியா ஆகியவை ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கு கூடுதலாகவும், நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், மார்பகப் புற்றுநோய்களில் இருந்து காத்துக் கொள்வதற்கு குறைவாகவும் உதவி செய்யும்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை பரிந்துரைத்தபடி உடற்பயிற்சி செய்வது அனைவருக்கும் எளிதாக இல்லை. வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி செய்வதாக மூன்றில் இரண்டு பங்கு பேர் கூறுகிறார்கள். 10ல் ஒருவருக்கும் குறைவானவர்களே வாரம் 300 நிமிடம் (5 மணி நேரம்) உடற்பயிற்சி செய்கிறார்கள்.

நடைபயிற்சி

“நீங்கள், வாரம் 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி செய்வது முடியாது என்று நினைப்பவராக இருந்தால், எங்கள் ஆய்வின் முடிவு உங்களுக்கு ஒரு நற்செய்தியை தருகிறது,” என்று கூறும் டாக்டர் ப்ரேஜ்,

“வாரம் 75 நிமிடம் உடற்பயிற்சி செய்ய உங்களால் முடியுமானால், உங்களால் அதை படிப்படியாக அதிகரித்து பரிந்துரைக்கப்படும் அளவுக்கு கொண்டுவர முடியும்,” என்கிறார் அவர்.

British Journal of Sports Medicine (BJSM)ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வை நடத்திய குழு உடற்பயிற்சியின் பலன்களைப் பற்றி முன்பே நடத்தப்பட்ட கிட்டத்தட்ட 100 பெரிய ஆய்வுகளையும், 200 சக ஆய்வாளர்களால் மதிப்பாய்வு செய்யப்பட்ட கட்டுரைகளையும் படித்து இதுகுறித்து ஒரு பரந்த பார்வையைப் பெற்றனர்.

இந்த ஆய்வில் ஈடுபட்ட அனைவரும் பரிந்துரைக்கப்பட்ட முழு அளவான வாரத்துக்கு 150 நிமிட உடற்பயிற்சியை செய்ய முடிந்தால் ஆறில் ஒரு அகால மரணத்தை தவிர்க்க முடியும். சில பழக்கவழக்கங்களை மாற்றியமைத்தாலே இதை செய்யப் போதுமானது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

சைக்கிள்

எடுத்துக்காட்டாக, கடைக்கோ, அலுவலகத்துக்கோ காரில் செல்வதற்குப் பதில் நடந்தோ, சைக்கிளிலோ செல்வது, குழந்தைகளோடு, பேரக்குழந்தைகளோடு உற்சாகமாக விளையாடுவது போன்றவை இந்த உடற்பயிற்சி நேரத்தை நிறைவு செய்வதற்கு உதவி செய்யும் என்கிறார்கள் அவர்கள்.

வாராவாரம் உங்கள் வழக்கமான செயல்பாடுகளில் மகிழ்ச்சியாக செய்யும் செயல்பாடுகளை சேர்த்துக்கொண்டாலே உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கான நேரம் அதிகரித்துவிடும் என்கிறார்கள் அவர்கள்.

பெரியவர்கள், தங்கள் தசைகளை வலுவூட்டும் உடற்பயிற்சிகளில் வாரம் இரண்டுமுறையாவது ஈடுபடவேண்டும் என்கிறது பிரிட்டனின் தேசிய சுகாதார சேவை. யோகா, பளுதூக்குதல், கடுமையான தோட்டவேலை, கடைக்குப் போய் வரும்போது வலுவான பைகளைத் தூக்குதல் போன்றவையும் இந்தக் கணக்கில் சேரும்.

Previous Story

சார்ள்ஸ் ஓர் உளவாளி!

Next Story

பிணைமுறிக் காசு எங்கே!